top of page

சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும்நான் சொல்லப் போகிற இந்தக் கதை பாளையங்கோட்டையில் நடந்ததா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. நான் இந்தக் கதையை நிறைய பேரிடம் சொன்னபோது, கதை நடக்கும் காலகட்டத்தில் பாளையங்கோட்டை என்றொரு ஊர் இருக்கவில்லை என்றும் அதற்குப் பதிலாய் அங்கே ஒரு பெரிய மைதானமே இருந்தது என்றுமே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், வரலாற்றின் படி ஹாக்கி விளையாடப்படுவதற்கு முன்பே பாளையங்கோட்டை என்றொரு ஊர் இருந்தது. விதி எவ்வளவு தூரம் வலியது என்றால், ஆவணக்காப்பகங்களில்கூட இதை நீரூபிக்கச் சான்றுகள் இல்லை.


ஆனாலும் பாளையங்கோட்டையில் மைதானங்களுக்குப் பஞ்சமேயில்லை என்றுதான் நான் தொடங்குவேன். ஏனென்றால், அதுதான் உண்மையும் கூட! திரும்பின புறமெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிற மைதானங்களை நீங்கள் பார்க்க முடியும்.


அதும் ஹாக்கியைத் தவிர வேறெதுவுமே இங்கு விளையாடப்படுவதில்லை. கதையின் போக்கிற்கு தேவையில்லாத செய்திதான் என்றாலும், ஹாக்கி இங்கு அதிகமாய் விளையாடப்படுவதற்கு பாடசாலைகளை நடத்தும் கிறிஸ்தவப் பாதிரிமார்களே காரணம் என்பதைச் சொல்லியாக வேண்டும். பாடசாலைகள் இருந்தால் விளையாடப்படும் மைதானங்கள் கட்டாயம் இருக்கும் எனும் எளிய தொடர்பை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும்.


அத்தனையுமே நல்ல பரந்து விரிந்த மைதானங்கள். சுற்றிலும் உடை மரங்களை வேலியாகக் கொண்டவை. மாலை நாலு மணியானால் சரி, பையன்கள் விளையாடிக் கொண்டிராத மைதானத்தைப் பார்க்க முடியாது. பாத்திமா மைதானம், ஜோதிபுர மைதானம், அய்யாமார் மட மைதானம், ஜான்ஸ் காலேஜ் மைதானம், சேவியர்ஸ் மைதானம் என்று பெயருள்ளவை சிலவும், இன்னும் பெயரில்லாத பலவும் உண்டு. மேலும் ஹாக்கி ஒரு நல்ல விளையாட்டு. அதன் சுகமே தனி. விளையாடினாலன்றி அதன் மகத்துவம் புரியாது என்று பலரும் சொல்கின்றனர், ஆனால் யார் விளையாடினாலும் எப்படி விளையாடினாலும் ரசிக்கக்கூடிய விளையாட்டு எனும் கருத்தும் உண்டு.


ஹாக்கி விளையாடுவதற்கென்று நீங்கள் ஏகப்பட்ட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமென்கிற அவசியமில்லை அம்சமாகச் செதுக்கப்பட்ட விறகுக்கட்டையோ அல்லது கருவேலங்கட்டையோ கொண்டு வந்தால் போதுமானது. நான் விளையாடத் தொடங்குகையில் நல்லதொரு விறகுக்கட்டை மட்டுமே வைத்திருந்தேன். விறகுக்கட்டையைச் சுமந்து கொண்டு, வெயில் சாயத்துவங்கியதும் மைதானம் நோக்கி ஓடும் சந்தோஷம், இருள் பற்றிக்கொண்டு, பந்தும் எதிராளியும் மறைந்து போகிறவரை தீரவே தீராது.


ஹாக்கியை இலக்கண சுத்தமாய் விளையாட வேண்டுமென்றால் அதற்குக் கட்டாயம் அப்பாஸ் வேண்டும். அப்பாஸ் எங்களுக்குக் காற்றிலிருந்து வந்தான். அப்பொழுதுதான் நாங்கள் விறகுக் கட்டைகள் பிடித்து ஆடத்தொடங்கியிருந்தோம். அப்பாஸ் பற்றி கேள்விப்பட்டிருந்தோமே தவிர அதுவரை அவனை நாங்கள் யாருமே பார்த்ததில்லை.


நாங்களெல்லாம் கோவில்தெரு ஆட்டக்காரர்கள். இன்னும் சமாதானபுர டீம், கோனார் தெரு டீம், ஜோதிபுர டீம் என்று ஏகப்பட்ட பிரிவுகள் உண்டு. எங்களில் எவனுக்குமே ஹாக்கி மட்டை இருந்ததில்லை. நல்லவொரு பந்தும் கிடையாது. காலேஜ் ஆட்டக்காரர்கள் கருவேலப் புதர்களுக்குள் அடித்துவிட்டு, அகப்படவில்லை என்று கைவிட்ட பந்துகளைக் கொண்டு நாங்கள் விளையாடி வந்தோம். அப்பொழுதுதான் அப்பாஸ் வந்தான்.


முதலில் அவனை எங்களுக்கு அப்பாஸ் என்று தெரிந்திருக்கவில்லை. நாங்கள் விளையாடுவதையே ரொம்ப நேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். யாரோ தெருவில் போகிறவனாக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம், யாராவது சும்மா பார்க்கிறார்கள் என்றால் எங்களுக்கு தலை, கால் புரியாது. குறுக்கு மறுக்காய் ஓடுவோம். வீணாய் சப்தம் போடுவோம். அன்றைக்கும் அப்படித்தான், பந்தை மறந்து மைதானத்தின் நீள, அகலவாக்கில் தறி கெட்டு ஓடிக்கொண்டிருந்தோம்.


உண்மையில், ஒரு வினோதம் எங்களுக்குள் புகுந்து, எங்களை தேவதைக் கதைகளின் தேவதைகளாய் மாற்றியது. ஒருவன் தன்னுடைய விறகுக்கட்டையை எறிந்துவிட்டு கோல்போஸ்டின் கம்பத்தில் தொங்கத் தொடங்கினான். மறுநொடி, நாங்கள் அத்தனை பேரும் அக்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தோம். ஹாக்கியைவிட கிளுகிளுப்பானது, அது. அந்நேரம், அவன் மைதானத்திற்குள் இறங்கி வந்து தன்னை ‘அப்பாஸ்’ என்றான்.


இப்படியே அப்பாஸ் எங்களிடம் வந்து சேர்ந்தான். மறுநாள் முதல் எங்களுடனேயே விளையாடத் தொடங்கினான். அப்பாஸிடம் அழகான ஹாக்கி ஸ்டிக் இருந்தது. வேம்பயர் ஸ்டிக். அந்நாட்களில் அதன் மேல் எங்களுக்கு மானசீகக் காதல் உண்டு. மந்திரவாதி ஒருவனது மந்திரக்கோல்! அது செய்யாத அற்புதங்களே இல்லை. அதன் பார்வையில் கட்டுண்டது போல் மைதானத்தில் அத்தனையும் ஒரு மாயக்கிறக்கத்தில் அமிழ்ந்திருக்கும். அதன் முன்னிலையில் காற்றுகூடப் புழுதியைக் கிளப்ப மறுக்கும். இதனாலேயே நாங்களெல்லாம் அப்பாஸ் காற்றிலிருந்து வந்தவன் என்று சொல்லி வந்தோம். அப்பாஸ் நல்ல, தேயாத பந்தொன்றும் கொண்டு வருவான். எங்களுக்கு விளையாட்டின் மீதான பக்தியை உருவாக்கியதே இவன்தான். அதன் நெளிவு, சுழிவுகளை தாராளமாய்ச் சொல்லித் தந்தான்.


மறுநாள் அப்பாஸ் எங்களை முழுவதுமாய் மாற்றிவிட்டான். நாங்கள் மைதானத்தில் இறங்கியதுமே எங்களைத் தடுத்து நிறுத்தினான். மைதானத்தில் நுழையுமுன் அதனைத் தொட்டு முத்திக்கொள்ளச் சொன்னான். அதன் பிறகுதான் மைதானங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்ல ஆரம்பித்தான்: மைதானங்கள் தாராளமானவை; மன்னிக்கிற மனம் கொண்டவை; அதன் அருள்பாலிக்கும் தன்மை கடல் போன்றது. மைதானம் எத்தனையோ விளையாட்டுக்காரர்களைப் பார்த்திருக்கிறது. பார்த்துப் பார்த்துப் பொறுமை சாதிக்கிற கடவுள் அது. நீங்கள் ஆட்டக்காரனாக வேண்டுமென்று விருப்பப்பட்டால் முதலில் மைதானம் மனது வைக்க வேண்டும். அதுவே சகலமும். அதைத் தொட்டு வணங்கிக் கொள்ளுதலே மரியாதை. மைதானத்தை நம்பு. உன் நம்பிக்கை உன்னைக் கைவிடாது.

இதையெல்லாம் கேட்டதும் யாருக்குத்தான் அதிசயமாக இருக்காது அதுவரையிலும் மைதானம் என்றிருந்தவொரு சித்திரம் சுக்கல் சுக்கலாய் சிதறிப்போனது. மைதானம் பெரிய படுதா ஒன்றினைப் போல் காற்றின் திசைக்கு அலையடித்துக்கொண்டிருந்தது. அதன் மௌனம், புற்களின் நுனியில் நீராய் கோர்த்துக்கொண்டது. மைதான ஓரத்து மரங்கள் கனவுகளில் வரக்கூடிய நீண்ட, நீண்ட ஏறி முடிக்க முடியாத படிக்கட்டுகளைப் போன்றிருந்தன. மைதானத்தின் வல்லமைக்குள் நாங்கள் முழுமையாய் வந்து நின்றோம். மானசீகமாய் மைதானத்தைத் தொட்டு வணங்கினோம்.


மைதானங்களில் ஏகப்பட்ட வகைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மைதானம், அவரவர்க்கு அவரவர் மைதானம் பிடிக்கிறது. ஆட்டக்காரர்களுக்கு அவரவர் மைதானமே உசத்தி.


ஆட்டக்காரர்களுக்கு இடையே போட்டி, பொறாமைகளெல்லாம் உண்டு. உன் மைதானம் பெருசா, என் மைதானம் பெருசா என்று சண்டைகளெல்லாம் நடக்கும். பிற எந்த மைதானத்தைக் காட்டிலும் எங்களுடைய மைதானமே சக்தி வாய்ந்தது என்றும், ஏராளமான ஆட்டக்காரர்களை உருவாக்கிய பெருமை அதற்கு உண்டு என்றும் என்னால் விலாவரியாய் சொல்லிவிட முடியும். என்றாலும் நாம் பேசுவதற்கு எடுத்துக்கொண்ட விஷயம் வேறு.


நான் சொல்ல வந்த கதைக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் தர்க்கரீதியாய் இல்லை என்கிற காரணத்தால், ‘மைதானங்களுக்குள் எது பெரிது?’ என்கிற தகராறு இருக்கிறது என்னும் சிறிய செய்தியோடு நான் மேற்கொண்டு செல்கிறேன்.


அப்பறமாய் அப்பாஸ் எங்களைப் பயிற்றுவித்தான். விளையாடுவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வது என்பது பற்றிய அறிவு எங்களுக்குள் கொஞ்சமும் இருந்ததில்லை. ஆடுவதற்கென்றே பிறந்தவர்கள் வேறென்ன பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்பது எங்கள் நினைப்பு. அப்பாஸ் எங்களைக் கட்டாயமாய் உடற்பயிற்சி செய்யச் சொன்னான். யாருமே உடற்பயிற்சி செய்யாமல் விளையாடக் கூடாதென்று கண்டிப்புப் போட்டான்.


அப்பாஸிடம் கேட்டால் உடற் பயிற்சியின் மூலம் உடல் வசப்படும் என்பான். இதில் ஆச்சரியமான விஷயம், ஹாக்கி ஸ்டிக் போலத்தான் உடலும் என்றால் யாராவது நம்புவார்களா? மைதானத்தில் நீங்கள் நம்ப வேண்டும். ஹாக்கி ஸ்டிக்கை உன் கை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறதோ அது போல் உன் உடலையும் பயன்படுத்து. வளைய வேண்டும். சுலபமாக வேண்டும். எப்பக்கமும் திரும்புகிற எளிமை வேண்டும், மனித உடல் ஏன் கல் போலில்லை என்றால் இதனால்தான். உடலைச் சுருட்டி, வளையமாக்கி உருட்டி விடவேண்டும். எதற்குமே தயாராக வேண்டும். எங்குமே இறுக்கம் கொள்ளக் கூடாது. தளர்த்திவிட வேண்டும். இதெல்லாம் விளையாட வந்தவனுக்கு தேவையான அடிப்படை விஷயங்கள். இந்த விளையாட்டில் எதுவும் நிகழலாம். இதை இப்படித்தான் என்று சொல்ல முடியாது. உன் நாற்புறமிருந்தும் நெருக்கம் தோன்றும். உன் எதிராளிகள் எமகாதகர்கள். கல் போல இருந்தால் தகர்ந்து போவாய். பெரும் காற்று வீசிய பொழுதில் நாணலானது தலைசாய்த்து, வளைந்து தப்பித்ததோடு, முறிந்து போன பெரிய மரத்தை வெற்றியும் கொண்டது என்பதை மறந்து விடாதே!


இது எல்லாமும் சரிதான். ஆனால், ஒரு விஷயத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பொதுவாகவே பாளையங்கோட்டை மைதானங்களில் நெருடலான சங்கதி என்னவென்றால் அதில் பெருகும் நெருஞ்சி முட்கள்தான்.


விளையாடத் தொடங்கிய புதிதில் இது எங்களுக்கு கோபத்தையும், ஆக்ரோஷத்தையுமே உருவாக்கியது. விளையாடத் தொடங்கும் முன்பு, நெரிஞ்சு முட்களையெல்லாம் பொறுக்கி வெளித்தள்ளுவதுதான் எங்கள் முதல் வேலை. எங்கிருந்துதான் வருமோ? தினம் தினம் மைதானங்களில் நெருஞ்சி விளையும்.


ஆனால் அப்பாஸோ எங்களைச் சுத்தமாய் மறுத்தான். நெருஞ்சியிலேயே விளையாடச் சொன்னான். அவனும் அதிலேயே வெற்றுக்கால்களுடன் விளையாடினான்.


‘பழகுங்கள்’ என்றான். ‘இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் வலிகளைத் தாங்கிக் கொண்டால் கால்கள் மரத்துப் போகும். எதையும் தாங்கும் சக்தி வரும். மரத்துப் போவதிலிருக்கிற சுகம் வேறெதில் இருக்க முடியும்? மரத்துப்போதல் விளையாட்டில் அவசியம். மைதானத்தில் ஆயிரம் நெருடல்கள் உண்டு; மரத்துப் போயிற்று என்றால் கவலையே இல்லை. மைதானத்திலிருக்கக்கூடிய நெருஞ்சியை யாராலாவது ஒழித்துவிட முடியுமா என்ன? இந்த மழைக்கு முளைத்ததை ஒழித்தால், மறுமழைக்கு புதுசு முளைக்கும். மழையை உன்னால் நிறுத்த முடியுமா? மைதானம் என்றால் நெருஞ்சியும் இருக்கும். விளையாட வந்தவன் நீதான், மைதானமல்ல. விளையாட விருப்பமென்றால் மர. இல்லையென்றால் போய்க்கொண்டேயிரு – விளையாட வராதே. இந்த மைதான அமைப்பு அப்படி’.


ஹாக்கி விளையாடுவதில் வேறெந்த விளையாட்டிலும் இல்லாத விதமாய் சிக்கலுக்கும், சிரமத்திற்கும் உரியது கடைவதுதான். ஒரு ஆட்டக்காரன் கடையத் தெரிந்துவிட்டானென்றால் போதும் அவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது. அப்பாஸிடம் ரசிக்கக்கூடிய விஷயமே இதுதான். நிறைய பேர் அப்பாஸின் வல்லமை அவனது காற்று போன்றதான வேகத்தில் இருப்பதாய் சொல்வார்கள். ஆனால், அவனது முழு திறமையும் பந்தைக் கைக்குள்ளேயே வைத்து கடைவதில் இருந்தது.


மைதானத்தின் ஓரமாகவோ அல்லது மையமாகவோ ஓரிடத்தைத் தேர்ந்து கொள்ள வேண்டும். பின் நீளவாக்கில் வருகிறார் போல் ஏழு அல்லது எட்டு கற்கள், ரொம்பவும் சிறியதாகவும் இல்லாமல் பெரியதாகவும் இல்லாத நடுத்தரக் கற்கள். மைதானத்தில் கற்களுக்காய் அலைய வேண்டிய அவசியமிருக்காது தானே? எடுத்துக் கொண்ட கற்களை முன்பே சொல்லியபடி ஓரடி இடைவெளி விட்டு வைக்க வேண்டும். இப்பொழுது முதல் ஆட்டக்காரன் முதலிரண்டு கற்களின் இடை வழியாய் புகுந்து, இரண்டாவது மூன்றாவது கற்களின் இடைவழியே வந்து, வந்து… எட்டாவது கல்லை அடையவேண்டும்.


இவ்வாறு செல்கையில் மட்டையால் பந்தை வலப்புறமாகவும், இடப்புறமாகவும் தட்டிக்கொண்டே செல்ல வேண்டும். இடையில் பந்தை நழுவவிடக் கூடாது. இப்படியே மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இது முடிந்ததும் ஆட்டக்காரன் மைதானத்தில் தன்னைச்சுற்றி ஹாக்கியால் ஓர் வட்டம் இட்டுக்கொள்ள வேண்டும். இட்டுக்கொண்டதும், வட்டத்துக்குள் நின்று கொண்டு பந்தை வலப்புறமும் இடப்புறமும் மட்டையால் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பந்து வட்டத்தைவிட்டு வெளியே சென்றுவிடக் கூடாது; நிறுத்தவும் கூடாது.


‘ஏமாற்று’ என்றான். பந்து உன் கைகளிலிருந்து எந்நேரமும் தவறிப் போகும் என்று பாசாங்கு செய்; வேஷம் போடு. விளையாட்டில் வேஷம் போடுவது அவசியம். நல்ல வேஷமாய் போட்டு ஏமாற்ற வேண்டும். திறமையான வேஷக்காரனே விளையாட்டில் ஜெயிக்கிறான். வெற்றி எப்படியாவது கிடைக்க வேண்டும், ஏதாவது செய்து. ஏனெனில், விளையாட முடிவது ஒருமுறைதான்.


கோவில்தெரு ஆட்டக்காரர்களான நாங்கள் எல்லாருமே இதற்குள் அப்படி இப்படியென்று ஆளுக்கொரு ஹாக்கி மட்டை வாங்கிக் கொண் டோம். சிலர் புதுசும், சிலர் பெரிய ஆட்டக்காரர்களின் பழைய மட்டைகளையும் வாங்கினோம். எல்லோருமாய் துட்டு போட்டு காரக் பந்தொன்றும் வாங்கினோம் நங்கள் விளையாடத் தொடங்கிய புதிதில் பதினெட்டு அவுன்ஸ் மட்டைகளிலேயே தொடங்கினோம்.


அப்பாஸ் இல்லையென்றால் ஹாக்கி பற்றிய ஆரம்ப அறிவுகளே இல்லாது போயிருப்போம் என்றால் அது மிகையில்லைதான். உடற்ப் பயிற்சிகளெல்லாம் முடிந்து விளையாடத் தொடங்குகையில் சைடு பிரிக்கிற வைபவம் சுவாராஸ்யமானது. அப்பாஸ் சைடு பிரிப்பதில் எங்களுக்கொரு புதுமுறையைச் சொல்லித்தந்தான். காலங்காலமாய் மைதானங்களில் இப்படியே சைடு பிரிக்கிறார்கள் என்றான். அவன் சொல்லித்தந்த பொழுது எல்லாமே புதுசாய் தெரிந்தாலும், எல்லா மைதானங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என்று பின்னாளில் தெரிந்து கொண்டோம்.


சைடு பிரிக்கிற சடங்கு வினோதமானது. முதலில் அத்தனை பேரும் தங்கள் தங்கள் ஹாக்கி மட்டைகளை ஓரிடத்தில் குவித்துப் போட்டுவிட வேண்டும். இப்பொழுது ஆட்டக்காரர்களிலேயே சிறுவன் எவனோ அவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தச் சிறுவன் மட்டைக் குவியலின் முன் உட்கார வேண்டும். ஒரு ஆள் சிறுவனின் பின்புறமாகச் சென்று அவனது கண்களைப் பொத்திக்கொள்ளட்டும். கண் தெரியாத சிறுவன், இப்பொழுது குவியலிலிருந்து இரு மட்டைகளை கைகளுக்கொன்றாக எடுக்க வேண்டும்.


வலது கையிலுள்ள மட்டையை வலதுபுறமாகவும், இடது கை மட்டையை இடப்புறமாகவும் வீச வேண்டும். இவவாறு கடைசி மட்டை வரை செய்ய வேண்டும். இப்பொழுது மட்டை இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதில் வலக்கை குவியலை வலங்கை என்றும், இடக்கை குவியலை இடங்கை என்றும் அழைக்க வேண்டும். கண் தெரியாத சிறுவன், மட்டைகளை வீசும்போது, இடக்கை மட்டையை இடப்புறத்திலும் வலக்கை மட்டையை வலப்புறத்திலும் தான் வீசவேண்டுமென்று விதியில்லை. மாற்றியும் போடலாம். ஆனால் நேராய் போட ஆரம்பித்தால் நேராகவும், மாற்றிப்போட ஆரம்பித்தால் மாற்றியுமே அந்த முறை போட வேண்டும்.


இதில் இன்னுமொரு சிக்கலும் உண்டு. சில நேரங்களில் கடைசியில் ஒரேயொரு மட்டை மட்டும் மிச்சமிருந்து விடும். இப்படியான நேரங்களில் கண்தெரியாச் சிறுவன் மட்டையை இரு கைகளாலும், மட்டை நிலத்தில் ஊன்றியிருக்க, இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும். மட்டை நேராக நின்று கொண்டிருக்கும் சமயத்தில், மட்டைக்குத் தெரியாமல் சிறுவன் கைகளைச் சடாரென்று எடுத்து விட வேண்டும். மட்டை எந்தப்புறமாக விழுகின்றது என்று கவனியுங்கள். வலப்பக்கம் விழுந்தால் அது வலங்கை; இடப்பக்கம் விழுந்தால், இடங்கை. எல்லாவற்றையும் விளக்கிய பின், அப்பாஸ் இப்படியும் சொன்னான்: ‘இவ்வாறு மைதானம் பிரித்துத் தந்ததை ஆட்டக்காரர்கள் குழப்பாதிருக்கட்டும்’.


விளையாட்டென்றால் போட்டி வேண்டுமே? நாங்கள் விளையாட ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே மேட்ச் விளையாட அழைப்பு வந்தது. அழைத்தவர்கள் சமாதானபுரம் ஆட்டக்காரர்கள். ஏற்கனவே அவர்களுக்கும் எங்களுக்கும் மைதானம் சம்பந்தமாய் சின்ன மனஸ்தாபம் ஒன்றுண்டு. எங்களைவிட சீக்கிரமே விளையாடத் தொடங்கியவர்கள். மேட்ச் என்று அழைத்தபொழுது, நாங்கள் கண்களைத் திறக்கவே முடியாபடிக்கு இறுக மூடிக்கொண்டு ‘சரி’ என்றது அப்பாஸ் இருக்கிற தைரியத்தால். காளிமார்க் கடலைமிட்டாய் பாக்கெட்டுக்குப் போட்டி நிச்சயமானது.


அதன் பின், அப்பாஸ் எங்களை காலேஜ் டீம்கள் ஆடுகிற மேட்சுக்கெல்லாம் கூட்டிப்போனான். பந்தையும், மட்டையையுமே கவனி என்றான். ஒவ்வொரு தரம் பந்து அடிக்கப்படுகையிலும் அது போக வேண்டிய இடம் போய்ச் சேரும் ரகசியத்தை சொல்லித் தந்தான். பந்தை அடிக்கையில் திசை எது என்று எதிராளியைக் குழப்பு. உன் பந்து போக வேண்டிய தூரத்தை அள. ஒவ்வொரு அடியும் தடையில்லாமல் போக எதிராளியின் கவனத்தை சிதறடி. உன் திசையை என்றைக்கும் அவனுக்குக் காட்டித்தராதே. அது போக, எதிராளியைக் குழப்பும் ஒவ்வொரு கணமும், அவனை உன் கவனிப்பிலேயே வை. அது உனது அடுத்த செயலுக்கு வலுவைத் தரும்.


அப்பாஸ் சொன்ன எல்லாவற்றிற்கும் நாங்கள் வளைந்தோம். உடலை சுருட்டி மைதானத்தில் வளையமாய் உருண்டோம். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் எங்களைப் படாதபாடு படுத்தியது. விளையாடுகையில் பந்து எங்கள் கால்களிலோ அல்லது மட்டையின் பின்புறமோ பட்டுவிட்டதென்றால், அந்தந்த இடத்திலேயே நின்று விடுகிறோம். பெளல். யாருமே பார்க்காவிட்டாலும் ‘காலில் பட்டுவிட்டது, மட்டையில் பட்டுவிட்டது’ என்று சொல்வோம். அப்பாஸ் இதற்கு எங்களைக் கெட்ட வார்த்தையால் திட்டினான்.


அப்பாஸ் சொல்லியது போல் பாளையங்கோட்டையிலுள்ள அத்தனை யோக்கியங்களும் எங்களிடம்தான் இருந்தன. ‘சோத்த திங்குறீங்களா, இல்ல வேறெதையும் திங்குறீங்களா?’ என்றான். இது முதலில் எங்களுக்கு நெருடலாக இருந்தாலும், நிஜமாகவே சோறு தின்கிற எந்த மனிதனும் எங்களைப் போல் இருக்கவில்லை என்பதையும் சீக்கிரமாகவே கண்டு கொண்டோம். அன்றிலிருந்து, எங்கள் தவறுகளை யாராவது நிரூபிக்கும் வரை ‘இல்லவே இல்லை’ என்று அடம்பிடிக்கக் கற்றுக் கொண்டோம்.


பந்தயத்திற்கு முந்தின தினம் அப்பாஸ் எங்களுக்கு மைதானத்தின் உச்ச ரகசியத்தை சொல்லித்தந்தான். புராணங்களில் வருவதைப் போல் அப்பாஸ் இருட்டிய நேரத்தில் மைதானத்தில் வைத்து அதை எங்களிடம் சொன்னான். பந்தயம் என்று வருகையில் மிக மிக முக்கியமான விஷயமொன்றைச் செய்ய வேண்டும். ஒரு பத்து சிறுவர்கள் போதும், விளையாட்டில் வெற்றி பெற்றுவிடலாம். பத்து பேரையும் மைதானத்திற்கு வெளியே நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பத்து பேருக்கும் சத்தம் போடவும், கத்தவும் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து சத்தம் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தால் போதும். வெற்றி நிச்சயம்.


மைதானத்திற்குள் நுழைகையில் அப்பாஸ் மறுபடியும் இப்படிச் சொன்னான்: ‘நீ வெளாடுறது ரெண்டாம் பட்சம், முதல் காரியம் மைதானம் மனசு வைக்கணும். வணங்கு, விழுந்து வணங்கு. உன்னை ஆட்டக்காரனாக்கும் சர்வவல்லமை மைதானத்திற்கே உண்டு. நாங்கள் அனைவரும் அப்பாஸ் சொன்னது போலவே மைதானத்தில் விழுந்தோம். விழுந்து, ஆட்டக்காரர்களாக எழுந்தோம்.


இப்பொழுது கூட, பிரம்மச்சாரி என்றால் பீர் குடித்துக் கொண்டும், திருணமானவர் என்றால் டீ குடித்துக்கொண்டும் அரசாங்க அலுவலகங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவிலும், அல்லது தனியார் நிறுவனங்களில் கூட்டல், கழித்தல் பார்த்துக் கொண்டிருக்கும் எந்தவொரு குண்டு மனிதரிடமும் சென்று ‘மைதானம்’ என்று சொல்லிப்பார்க்கலாம்.


படாரென்று திரும்பிப் பார்த்து, மலங்க மலங்க விழித்தாரென்றால் அவர் நிச்சயமாய் ஆட்டக்காரர். அதும் தன் பால்யத்தில் ஹாக்கி விளையாடியவர்.*(1988ல் எழுதி வெளியான எனது சிறுகதை) ஓவியம் : ரஞ்சித் பரஞ்சோதி1 view0 comments

Comments


bottom of page