top of page

கிழக்கின் தொடர்பை முறித்துக் கொள்கிறேன்!
யாதும் காடே, யாவரும் மிருகம் - 35 வது கட்டுரை, மணிப்பூரில் பா.ஜ. க. தூண்டுதலில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக எழுதப்பட்டது. ‘உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!’ என்பதே கட்டுரைத் தலைப்பு. பா.ஜ.க. ஆரம்ப முதலே வெகுஜன வன்முறையைத் துண்டுவதன் மூலமும், அவதூறுகளை கூச்சம் நாச்சமில்லாமல் பரப்புவதன் மூலமுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறது என்பதே என் விமர்சனம். அதே நேரம், மிக நேர்மையாகவும், அதீத ஒழுக்கத்துடனும் நடைபெற்றத் திராவிட வெகுஜன அரசியலிலிருந்து பா.ஜ. க. கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அக்கட்டுரையில் வெளிப்படுத்திய கோரிக்கை.


இக்கட்டுரையை, இந்துத்துவ அடையாளத்தைப் பெருமையாக நினைக்கும் ‘கிழக்கு டுடே’ இதழில் வெளியானது பலருக்கும் ஆச்சரியம். இவ்வளவு தீர்க்கமான ஜனநாயக உணர்வு கொண்டவர்களா ‘கிழக்கு’ என்பதே எல்லோரின் கேள்வியும். ஆனால், அக்கட்டுரை எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லாமல் வெளியிடப்பட்டது.


பலரும் அக்கட்டுரையை வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். பிறருக்கும் பரிந்துரைக்க ஆரம்பித்தார்கள். அதன் பின்பே மிக வெட்கக்கேடான ஒரு சம்பவம் நடந்தது.


கிழக்கில் பணிபுரியும் பி. ஆர். மகாதேவன் என்ற மிகத் தீவிர இந்துத்துவர், முகநூலில் எனது கட்டுரையைக் கேலி செய்து, ‘எண்டர்’ தட்டிக்கவிதையொன்றை வெளியிட்டார். அக்கவிதை, இந்துத்துவர்களின் பாரம்பரிய வசவுகளின் தொகுப்பாக இருந்தது. அந்நியக் கைக்கூலி, தேச விரோதி, என்.ஜி.ஓ.வின் கையாள், திராவிட அடிவருடி, பார்ப்பன விரோதி, சந்தர்ப்பவாதி என்று என் மீது வரிசையாக அவதூறுகள். இதே மகாதேவன், ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ புத்தகத்திற்கும், ‘அயோத்திதாசர்’ புத்தகத்திற்கும் இதே போன்ற மலினமான விமர்சனங்களை எழுதியவர் தான்.


நான் வழக்கமாக இது போன்ற சில்லரைகளைப் பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்தாததற்கு இரண்டு காரணங்கள், ஒன்று, அவை பதில் சொல்வதற்கான தகுதியற்றவை; இரண்டு, எனது ஜனநாயகத்தில் அவர்களுக்கும் கருத்துரிமை உண்டு. அதனால், அவர்கள் எவ்வளவு பெரிய அபத்தத்தையும் வெளிப்படுத்த நான் தடை சொன்னதில்லை. இந்த வகையிலேயே பத்ரி சேஷாத்திரியின் அயோத்திதாசர் பற்றிய கருத்துகளையும் நான் பொருட்படுத்தாமல் இருந்து வந்திருக்கிறேன்.


ஆனால், இப்பொழுது மகாதேவன் பெயரில் செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட அவதூறு. ஜனநாயகத்தில் அவதூறுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லை. அதனால், கிழக்கின் ஊழியர் செய்த இந்தத் தகாத செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதன் விளைவாக, கிழக்கு டுடேயில் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘யாதும் காடே, யாவரும் மிருகம்’ தொடரை உடனடியாக நிறுத்திக் கொள்கிறேன். படிப்படியாக கிழக்குடன் எனது முந்தையத் தொடர்புகளையும் அறுத்துக் கொள்வேன். எனது எழுத்து வேறு தளங்களில் வெளிவரும்.


30-07-2023


பத்ரி சேஷாத்திரி கைதுக்கு வாழ்த்துகள். அவர் ஏதாவதொரு மாநிலத்தின் ஆளுநராக உயர்ந்து வாழ்வில் சிறப்பார் என்பது என் கணிப்பு.


மற்றபடி இந்த விவகாரத்தில் ‘கருத்துச் சுதந்திரப் பறிப்பு’ என்று சொல்லப்படும் எல்லாவற்றையும் நான் குப்பையில் தூக்கிப் போடுவேன். ஏனெனில், இந்த தேசத்தில் பிராமணர்களின் கருத்துச் சுதந்திரத்தை எந்தக் கொம்பனாலும் பறித்து விட முடியாது என்பதே வரலாறு. அவர்கள் என்றைக்குமே கருத்தை வெளிப்படுத்துவதோடு நின்று விடுவதில்லை, அதைத் திணிக்கவே முயற்சி செய்வார்கள். பத்ரியின் ‘மணிப்பூர் இந்துத்துவ வெறியாட்ட’ ஆதரவுப் பேச்சையும் கவனித்துப் பார்த்தால் தெரியும், அது சாதுர்யமான கருத்துத் திணிப்பு!


பிராமணர்களின் கருத்துத் திணிப்பிற்கு எதிரான நடவடிக்கை எது என்று இன்று வரையிலும் நம்மால் முடிவு செய்ய இயலவில்லை. சட்டரீதியான கைது என்பது ‘நாகரீக ஜனநாயக நாட்டில்’ மட்டுமே மதிப்பிற்குரியது. இந்தியா போன்ற ‘அநாகரீக சாதிய நாட்டில்’ இத்தகையக் கைதுகளை தற்பெருமைகளாக மாற்றிக் கொள்ளப் பிராமணர்களுக்குத் தெரியும். காந்தியையே மகாத்மாவாக நம் தலையில் கட்டியவர்கள் அவர்கள்.


1990களிலிருந்து (அதாவது மண்டல் கமிஷன் பரிந்துரை நாட்களிலிருந்து) நடைபெற்று வரும் இந்துத்துவ கலவரங்களை இன்னொரு விடுதலைப் போராக அவர்கள் எழுதி வைத்திருக்கும் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கு விளங்கும்.


31-07-2023


கேள்வி: கிழக்கில் இனி எழுத மாட்டேன் என்ற அறிவிப்பு கொள்கை சார்ந்த அதிகபட்ச முடிவு இல்லையா? அவசரத்தில் எடுத்தது போல் இருக்கிறதே!


பதில்: கொள்கை சார்ந்த முடிவு எதுவும் இதில் இல்லை. ஆனால், உறவை முறித்துக் கொண்ட அறிவிப்பை நிறைய பேர் அப்படியே விளங்கிக் கொள்கிறார்கள். இந்த முடிவு முழுக்க முழுக்க எனது சுயமரியாதை சார்ந்தது. அதனால், உடனடியாக எடுக்கப்பட்ட முடிவு என்று சொல்வேனே தவிர, அவசரத்தில் எடுத்த முடிவு என்று சொல்ல மாட்டேன்.


கேள்வி: கொள்கை சார்ந்த முடிவு இல்லை என்பது ஆச்சரியத்தைத் தருகிறது. கிழக்கின் இந்துத்துவ சார்புக்கு எதிராக நீங்கள் இந்த முடிவை எடுக்கவில்லையா?


பதில்: கிழக்கிற்கு கொள்கை இருக்கிறது என்று எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள் என்று தெரியவில்லை. பதிப்பகத்திற்கென்று அரசியல் நிலைப்பாடு எப்படி இருக்க முடியும்? பதிப்பகம் ஒரு வணிக நிறுவனம். கிழக்கும் தன்னை அப்படியே தான் முன்னிறுத்தியும் வந்திருக்கிறது. பத்ரி சேஷாத்திரியின் இந்துத்துவ சார்பு கிழக்கின் இந்துத்துவ சார்பாகப் பார்க்கப்படுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. கிழக்கில் பல்வேறு சித்தாந்தங்களைப் பேசும் நூற்கள் வெளியாகியுள்ளன. அதில், வலதுசாரி, இடதுசாரி, நடுநிலை, ஒடுக்கப்பட்டோர் அரசியல் என்று பல்வேறு தலைப்புகள் உண்டு.


கேள்வி: அப்படியானால், கிழக்கில் புத்தகங்களை வெளியிட்டது குறித்து உங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லையா?


பதில்: நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? எனது நிலைப்பாட்டில் நான் என்றைக்குமே தெளிவாக இருக்கிறேன். கிழக்கிற்கு முன்பும் சரி, பின்பும் சரி, எனது அரசியலில் வேறுபாடுகள் இல்லை. கிழக்கு தான் என்னை இழந்தது குறித்து வருத்தப்பட வேண்டும். தன் மீது விழுந்துள்ள பாசிச நிழலிருந்து அது தான் வெளிவர வேண்டும். என்னைப் பொறுத்தவரை, என் எழுத்துகள் இனி வேறொரு தளத்தில் வெளிவரும் அவ்வளவு தான்.


கேள்வி: கிழக்கிலிருந்து நீங்கள் வெளியேறுவது தனிப்பட்ட சுயமரியாதை சார்ந்த விஷயம் என்றால், கிழக்கு என்ற பதிப்பகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?


பதில்: நான் ஆதியோடந்தமாய் உங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும். கிழக்கில் என் புத்தகங்களை வெளியிட ஒப்புக்கொண்டது ஒரு பரிட்சார்த்த முயற்சி. நான் ஒரு உரையாடலுக்கு முயற்சி செய்தேன். தமிழில் ஒரு மோசமான பழக்கம் இருக்கிறது. ‘லேபிள்’ என்று கொச்சையாகச் சொல்லப்படும் முத்திரை குத்துதல். நீங்கள் யாரோடு பழகுகிறீர்கள், எதில் எழுதுகிறீர்கள், எந்தப் பதிப்பகத்தில் வெளியிடுகிறீர்கள், யார் உங்கள் எழுத்தைக் கொண்டாடுகிறார்கள், யாரெல்லாம் உங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது தான் உங்கள் எழுத்தின் சாராம்சம் என்று நம்பப்படுகிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் ‘லேபிள்’ என்ன என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ‘காலச்சுவடு’ தொடங்கி ‘எதிர்’ வரைக்கும் இது தான் இங்கு விமர்சனக் கலாச்சாரம். இது, ஒரு எழுத்தாளனாக, சிந்தனையாளனாக என்னை அவமரியாதை செய்கிறது என்று நான் நினைக்கிறேன். என் புத்தகங்கள் அதில் எழுதப்பட்டவைகளுக்காக விமர்சிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால், பதிப்பகங்கள் தங்களைக் கொள்கைக் குன்றுகளாகக் காட்டிக் கொண்டிருப்பதை நான் தகர்க்க விரும்பினேன். என் புத்தகங்கள் கிழக்கில் வெளியானதன் மூலம் அதை நான் செய்தும் காட்டினேன். பதிப்பகங்கள் அல்ல, எழுத்தாளனே முக்கியம் என்று என்னால் நிரூபிக்க முடிந்தது. அந்த சோதனை முயற்சியில் எனக்கு வெற்றி தான்.


கேள்வி: இன்றைக்கு விலகுவதாக முடிவு செய்வதற்கு என்ன அர்த்தம்? சோதனை தோற்றுப் போனதா?


பதில்: இல்லை. தன்னை ஒரு வணிக நிறுவனமாக முன்னிறுத்தி வந்த கிழக்கு, சமீப காலமாக தன்னை ஒரு ஆகிருதியாக மாற்ற முனைவதையே என் விலகல் உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறது. கிழக்கின் அடிப்படை வசதிகளை பத்ரி சேஷாத்திரி தனது ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வர விரும்புகிறார் என்பதையே நான் வெளிப்படுத்த விரும்புகிறேன். தனது சொந்த அரசியல் லாபங்களுக்காக இதை அவர் செய்ய முனைவது கிழக்கின் அஸ்தமனம் என்பதே என் கணிப்பு. அயோத்திதாசர் ஆய்வுகளில் இன்றைய பிராமணர்களை ‘வேஷ பிராமணர்கள்’ என்று நிறுவிய போதெல்லாம் வராத கோபம், இன்றைக்கு மணிப்பூர் இந்துத்துவ கலவரத்தில் வருகிறது என்றால் அதற்கு முக்கியமானக் காரணம், கிழக்கை பத்ரி தனது அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார் என்பதே. அதனாலேயே, என் மீது அவதூறுகள் செய்யப்பட்டன. சேறு வாரி இறைக்கப்பட்டது. என் எழுத்துக்களை நக்கல் செய்வதையோ அல்லது நையாண்டி செய்வதையோ நான் பெரும்பாலும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், என் சிந்தனைகளை மறுப்பதற்காக, என் சாதியையும், மதத்தையும் அடையாளப்படுத்துவது; நேர்மையை சந்தேகிப்பது; ஒழுக்கத்தைக் கேள்வி கேட்பது என்றெல்லாம் ஆரம்பிக்கும் போது, எனக்கு வேறு வழி இருக்கவில்லை. கிழக்கு இனியும் ஒரு வணிக நிறுவனம் அல்ல என்பதாலே நான் அதிலிருந்து விலக ஆரம்பிக்கிறேன். கிழக்கு தான் தோற்றுப்போனது.


கேள்வி: இது கிழக்கில் பணிபுரியும் அனைவருக்கும் தெரிந்து தானே நடக்கிறது. பத்ரி அதை இந்துத்துவ அரசியல் நோக்கி நகர்த்துவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் தானே! அப்படி இருக்கும் போது, உங்கள் பரிசோதனை தோல்வி என்று தானே சொல்ல வேண்டும்.


பதில்: கிழக்கு என்றால் பத்ரி மட்டும் அல்ல. அதைக் கட்டி எழுப்பியதில் இன்னும் நிறைய பேருக்குப் பங்கு உண்டு. மிக முக்கியமாக பல்வேறு வகையான சிந்தனைப் போக்குகளைக் கொண்ட புத்தகங்களைக் கிழக்கில் கொண்டு வந்ததில் மருதனின் பங்கு அளப்பரியது. பத்ரியோ மகாதேவனோ மட்டுமே கிழக்கை உருவாக்கி விடவில்லை. இன்றைக்கு, ஓரிருவர் அந்த நிறுவனத்தை தங்களது லாபத்திற்காக திசைதிருப்பும் போது, நேர்மையாளர்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று, என்னைப் போல கிழக்கிலிருந்து வெளியேறி விடுவது; அல்லது, கிழக்கை வணிக நிறுவனமாக மீட்டெடுப்பது.


கேள்வி: பதிப்பகங்கள் வணிக நிறுவனமாக மட்டுமே செயல்படும் போது, பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று நம்புகிறீர்களா?


பதில்: கொள்கை, கோட்பாடு, அரசியல், நிலைப்பாடு போன்ற விஷயங்களையெல்லாம் புத்தகங்களிடம் விட்டு விடுங்கள் என்றே நான் சொல்கிறேன். பதிப்பகம், அச்சு ஊடகத்தின் அடிப்படைக் கட்டுமான வசதிகளைக் கொண்ட நிறுவனமாக மட்டுமே இருக்கட்டும். மற்ற விஷயங்களையெல்லாம் எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் விட்டு விடுங்கள் என்பதே என் கருத்து.


11 views0 comments

Comments


bottom of page