1
எர்னெஸ்டோ லாக்லவ் (Ernesto Laclau) அர்ஜென்டினாவைச் சார்ந்தவர். இருபதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த மிக முக்கியமான நவமார்க்சிய சிந்தனையாளர். இவருடைய எமான்ஸிபேஷன் Emancipation(s), என்ற நூலில், Why do Empty Signifiers Matter to Politics? என்றொரு கட்டுரை உள்ளது. அதை மட்டுமே நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரையில்தான், ‘காலிக் குறிப்பான்’ என்ற கருத்தாக்கத்தை லாக்லவ் பயன்படுத்தத் தொடங்குகிறார். இப்புதியக் கருத்தாக்கம் வெகுஜன அரசியல் ஆய்வுகளில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதை நாம் அறிவோம். அதனால் தான் ‘காலிக்குறிப்பான்’ என்றால் என்ன என்றும் கேட்கிறோம்.
காலிக் குறிப்பானை முழுமையாக விளங்கிக்கொள்ள சில அடிப்படையான சிந்தனைத்தடங்களை அறிந்து வைத்திருப்பது அவசியம். முதலில், இருபதாம் நூற்றாண்டு மொழியியலாளரான பெர்டிணன் டி சசூர் (Ferdinand de Saussure), ‘குறிப்பான்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்திய பின்புலங்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, அமைப்பியல் மானுடவியலாளரான கிளாட் லெவிஸ்ட்ராஸ் முன்மொழிந்த ‘மிதக்கும் குறிப்பானை’ நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக உளவியலாளர் லெக்கான் பயன்படுத்திய ‘தலைமைக்குறிப்பான்’ என்ற கருத்தாக்கமும் நமக்குத் தேவைப்படும். இவற்றின் தொடர்ச்சியாகவே லாக்லவின் ‘காலிக்குறிப்பானை’ நாம் அணுகவிருக்கிறோம். கொஞ்சம் மொழியியல், கொஞ்சம் மானிடவியல், கொஞ்சம் உளவியல் வழியாகப் பயணித்து நவமார்க்சியத்தை வந்தடைவதே நமது நோக்கம்.
எமான்ஸிபேஷன் என்ற புத்தகத்தின் மையப்புள்ளி இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையைப் புரிந்து கொண்டால் மட்டுமே அந்தப் புத்தகத்தைப் புரிந்து கொண்டதாக அர்த்தம். அதே போல, இப்புத்தகம் விளங்கினால் மட்டுமே எர்னஸ்டோ லாக்லவின் சிந்தனைப் போக்கும் நமக்கு விளங்கும். அந்த வகையில், இக்கட்டுரையை ‘லாக்லவ் நுழைவாயில்’ என்று தாராளமாகச் சொல்லலாம்.
2
காலிக்குறிப்பான் என்றால் என்ன என்ற கேள்வியை நமது வசதிக்காக மேலும் சிறு சிறு கேள்விகளாகப் பகுத்துக் கொள்ளலாம்.
முதலில், ‘குறிப்பான்கள் என்றால் என்ன?’ என்று நாம் கேட்டுப்பார்க்கலாம்; அதன் பின், ‘குறிப்பான்களை தலைகீழாக்குவது என்றால் என்ன?’ தொடர்ந்து, ‘சொற்களை தலைகீழாக்குதல் சாத்தியமா?’ என்று நம் கேள்விகள் தொடர்கின்றன.
இரண்டாவதாக, ‘வேறுபாடுகளே அடையாளங்களை உருவாக்குகின்றன; வேறுபாடுகளே அர்த்தங்களை உருவாக்குகின்றன’ என்பது நமக்குத் தெரியும். ‘வேற்றுமைகள்தான் அர்த்தங்களை உருவாக்குகின்றன’ என்பது சசூரின் முத்திரை வாக்கியம். வேற்றுமைகளின் அர்த்தம் (differential meaning) என்ற சொற்றொடரை அவர் தொடர்ந்து பயன்படுத்துகிறார். ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்குமான வேறுபாடே அந்தந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்களை உருவாக்குகின்றன. இரு வார்த்தைகளுக்கிடையே உங்களால் வேற்றுமைகளை உணர இயலவில்லை என்றால் அர்த்தங்களையும் உணர இயலாது என்பது இதன் பொருள். மொழியியல் போதிக்கும் அடிப்படைச் சூத்திரம் இது. இந்த இடத்தில், வேற்றுமைகளை உணர இயலாதவர்களால் ஏன் அர்த்தங்களையும் உணர முடிவதில்லை என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஃபூக்கோ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். அவரது துணையோடு இதற்கான பதிலைக் கண்டடைய நாம் முயற்சிக்கலாம்.
மூன்றாவது, காலிக்குறிப்பான் என்ற வார்த்தையில் உள்ள ‘காலி’ என்றால் என்ன? ஒரு சொல்லை காலியாக வைத்திருப்பது எப்படி? அல்லது நிரப்புவது எப்படி? என்றெல்லாம் நாம் பார்க்கவிருக்கிறோம்.
3
சசூர், ‘குறிப்பான்’ பற்றிய மிக அடிப்படையான விஷயங்களை விளக்கியவர். ஒவ்வொரு சொல்லிற்கும் இரண்டு பகுதிகள் உள்ளன என்றும், அவற்றுள் ஒன்று அச்சொல்லை உச்சரிக்கும் பகுதி என்றும், மற்றொன்று அதன் அர்த்தம் என்பதிலிருந்து அவர் ஆரம்பிக்கிறார். உச்சரிப்பு, அர்த்தத்தைச் சுட்டுகிறது. உச்சரிப்பை சசூர் signifier என்று அழைக்கிறார். நாம் தமிழில் ‘குறிப்பான்’ என்கிறோம். குறிப்பான் வெளிப்படுத்தும் அர்த்தத்தை சசூர் signified என்றார். தமிழில் அது, குறிப்பீடு என்று வழங்குகிறது. ஒவ்வொரு சொல்லும் குறிப்பான், குறிப்பீடு என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது. இதனை சசூரின் வார்த்தைகளில் இரட்டை அல்லது இருமைத் தன்மை என்று சொல்லலாம். சசூர் அறிமுகப்படுத்தும் பெரும்பான்மைக் கருத்தாக்கங்கள் இரட்டைத் தன்மை கொண்டவையே. அவற்றுள் பிரதானமானது, குறிப்பான் – குறிப்பீடு என்ற இரட்டைத்தன்மை.
ஒரு சொல்லின் இரு பகுதிகள் இந்த இரட்டைகள் என்று குறிப்பிட்டு, பின் கூடுதலாக இன்னொன்றையும் அவர் குறிப்பிடுகிறார். அதாவது, இந்த இரட்டையர்களுக்கு நேரடியான பேச்சுவார்த்தை இல்லை என்பது அவரது கணிப்பு. குறிப்பானிற்கும் குறிப்பீட்டிற்கும் இடையே ஒட்டுமில்லை உறவுமில்லை. வார்த்தையின் உச்சரிப்பிற்கும் அர்த்தத்திற்கும் நேரடியான தொடர்புகள் இல்லை; காரண காரிய விளக்கங்கள் இல்லை என்று பொருள். ஏன் இந்த உச்சரிப்பு இந்த அர்த்தத்தை சுட்டுகிறது என்று யாராலும் விளக்கிச் சொல்ல முடியவில்லை. கேட்பதற்கு அதிர்ச்சியாகத் தோன்றும் இந்தக் கருத்தாக்கம், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தர்க்கரீதியானது என்று நமக்கு விளங்கும்.
மொழிக்கு ‘மொழி’ என்று பெயரிட்டது ஏன்? அந்த அர்த்தத்தைச் சுட்ட, இந்த உச்சரிப்பை தேர்ந்தெடுத்ததன் காரனம் என்ன என்ற எதுவும் நமக்குத் தெரிவதில்லை. ஒரு சப்தம் ஏன் குறிப்பிட்டவொரு அர்த்தத்துடன் இணைந்துள்ளது என்பதை நமக்கு விளக்கத் தெரியவில்லை. இது சசூர் குறிப்பிட்ட மிக முக்கியமான ‘இடைவெளி’. அதாவது, உச்சரிப்பிற்கும் அர்த்தத்திற்கும் பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை Arbitrary (இடுகுறித்தன்மை) என்று அழைக்கிறார், சசூர். காரண காரிய விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று பொருள். பகுத்தறிவிற்கும் அப்பாற்பட்டது. எந்த வகை வியாக்கியானங்களுக்கும் அப்பாற்பட்டது.
இந்த உச்சரிப்புக்கு ஏன் இந்த அர்த்தம் என்பதை யாராலும் விளக்க முடிவதில்லை. யோசித்துப் பார்த்தால் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஏன் மொழியை ‘மொழி’ என்று அழைக்கிறோம் என்பது தெரிந்தால் தானா நமக்கு அதன் அர்த்தம் விளங்குகிறது? அப்படியெல்லாம் இல்லை. அந்த உச்சரிப்பே விளங்கிக் கொள்ள போதுமானதாக உள்ளது.
‘மரம்’ என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளலாம். அதை உச்சரித்த மறுகணமே, மிக இயல்பாக அதன் அர்த்தத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். அவரவர், அவரவருக்குத் தோதான வகையில் ‘மரம்’ என்ற கற்பனையை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறது. அப்படி என்றால், மொழி, காரண காரியங்களின் அடிப்படையில் அர்த்தங்களை உருவாக்குகிறது என்பது நிஜம் இல்லை. நாம் கற்பனை செய்வதற்கு மாறாக, உச்சரிப்பிற்கும் அர்த்தத்திற்கும் இடையே பெரும் வெற்றிடம் உள்ளது.
கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு மொழியிலும் மிகக்குறைவான உச்சரிப்புகளே உள்ளன. இலக்கணம் ஒவ்வொரு மொழியின் அடிப்படை உச்சரிப்புகளையும் முறையாக வகைப்படுத்துகிறது: பன்னிரண்டு உயிர் உச்சரிப்புகளும், பதினெட்டு மெய் உச்சரிப்புகளுமே தமிழ். இந்த உச்சரிப்புகளை விதவிதமாக இணைப்பதன்மூலம் நாம் வார்த்தைகளை உருவாக்குகிறோம்.
உச்சரிப்புகளைப் போலவே, மொழியில் வார்த்தைகளும் குறைவு. ஏன் ஒரு மொழியில் குறைவான வார்த்தைகளே உருவாகியுள்ளன என்பதற்கு ஒரே ஒரு பதில்தான் இருக்கமுடியும் – மொழி, சாதாரண மனிதர்களின் சாதனம்.
மொழி, என்றைக்குமே சிக்கலான தொழில்நுட்ப அறிவாக இருந்ததில்லை. ஒரு குழந்தைகூடக் கற்றுக்கொள்ளக்கூடிய தன்மையிலேயே மொழி உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய வார்த்தைகளையும், நிறைய கோட்பாடுகளையும், நிறைய சட்ட திட்டங்களையும் மற்றும் நிறைய விதிமுறைகளையும் கொண்டிருக்கும் மொழி பயன்படும் மொழியாக இருக்க முடிவதில்லை. ஏராளமான வார்த்தைகளைக் கொண்ட மொழி, கற்பதற்குக் கடினமான மொழியாக மாறிவிடுகிறது.
குறைந்த வார்த்தைகளைக் கொண்டு நிறைய அர்த்தங்களைச் சொல்ல விரும்புவதே மொழியின் சூட்சுமம். குறைந்த வார்த்தைகளையே, பெரிய மெனக்கெடலின்றி நம்மால் நினைவு வைத்திருக்க இயலும். அந்த வகையில், உச்சரிப்புகள் குறைவாக இருப்பது ஒரு மொழியின் பலம். அதே நேரம், உச்சரிப்புகளை வரையறுப்பதும் மிக முக்கியம். அந்த வகையில் எந்தவொரு மொழியிலும் ‘உபரி உச்சரிப்பு’ என்று எதுவும் இல்லை. போதாததற்கு, எல்லா மொழிகளிலும் உச்சரிப்பு பற்றாக்குறையே சொல்லப்படுகிறது.
இந்தப் பற்றாக்குறையே, ஓர் உச்சரிப்பிற்கு பல அர்த்தங்கள் என்ற உத்தியை மொழியில் கண்டுபிடிக்கிறது. ஒவ்வொரு அர்த்தத்திற்கும் ஒவ்வொரு உச்சரிப்பு என்று முடிவு செய்திருந்தால் இந்நேரம் தமிழில் எத்தனை வார்த்தைகள் இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். அத்தனை வார்த்தைகளையும் ஞாபகத்தில் கொண்டு யாராலும் மொழியில் புழங்கிவிட முடியாது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அது பயன்படாத மொழியாகவும் மாறிவிடும். அதனாலேயே, ஒரு சொல்லிற்கு பல அர்த்தங்கள் உருவாகத் தொடங்குகின்றன.
இதனால், மொழி துல்லியத்தை இழக்க ஆரம்பிக்கிறது. நான் ‘மரம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கிறேன் என்றால், மரம் என்ற தாவரத்தை நினைத்துக் கொள்வீர்களா; இல்லை, ‘மரம் மாதிரி நிற்கிறான்’ என்ற உவமை தரும் சடத்தன்மையை நினைத்துக் கொள்வீர்களா? நான் ‘மரம்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உச்சரித்தேன் என்றால், எந்த மரத்தைச் சொல்கிறேன் என்று குழப்பமே மேலோங்கும். எதற்கும் இருக்கட்டும் என்று, சந்தேகத்தோடு, மரம் என்ற தாவரத்தை நினைத்துக் கொள்வீர்கள். பின்னர் நான், வேறு வேறு விளக்கங்களைச் சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, அந்த ஒற்றை வார்த்தையின் பின்னே விரியும் பல்வேறு அர்த்தங்கள் உங்களை மேலும் மேலும் குழப்பமடையவே செய்யும். தேவதேவனின் ‘ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை’ கவிதையை நினைத்துப் பாருங்கள்.
‘ஒரு மரத்தடி நிழல் போதும் உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப் போவேன்…’
‘தைரியம்’ என்ற வார்த்தை மரத்தின் அர்த்தத்தை மாற்றி விடுகிறது. நாமறிந்த மரமல்ல தேவதேவனின் மரம் என்றும் நமக்கு விளங்கி விடுகிறது.
‘மரத்தடியில் நிற்கையில் தான் நீ அழகாயிருக்கிறாய் கர்ப்பிணிப் பெண்ணை அவள் தாயிடம் சேர்ப்பது போல உன்னை ஒரு மரநிழலில் விட்டுப் போக விழைகிறேன்…’
என்று அவர் தொடர்ந்து எழுதும்போது, நாமும் அவரும் வார்த்தைகளைக் கொண்டு கண்ணாமூச்சி விளையாட ஆரம்பித்து விடுகிறோம். குறிப்பீடுகளில் மயக்கமில்லையென்றால் கவிதையே சாத்தியமில்லை.
அதனால்தான் எந்தவொரு வார்த்தையும் துல்லியமான வார்த்தை அல்ல என்று சொல்கிறோம். மொழியும் துல்லியமானது அல்ல. ஒவ்வொரு வார்த்தைக்கும் தனது அர்த்தங்களின் மீது ரகசிய சந்தேகங்கள் உள்ளன. ஒரு குறிப்பானின் மீது நிறைய அர்த்தங்கள் ஏற்றப்படும்பொழுது இந்தச் சந்தேகங்களும் உருவாக ஆரம்பிக்கின்றன. ‘மரம்’ என்ற சொல்லுக்கு ஏராளமான அர்த்தங்கள். அதனால் நிறைய சந்தேகங்கள். ஏறக்குறைய ஒவ்வொரு வார்த்தையும் இப்படித்தான். சந்தேகத்தில் ஊசலாடுகின்றன.
பயன்படுத்துகிற சூழலைப் பொறுத்தும், பயன்படுத்துகிற முறையைப் பொருத்தும், பயன்படுத்துகிற நபரைப் பொறுத்தும் அர்த்தங்கள் மாறக்கூடும். அதனால்தான், மொழி துல்லியமானது அல்ல என்று சொல்கிறோம். துல்லியமின்மையே கவித்துவத்தை தோற்றுவிக்கிறது.
இன்னொரு வகையில், இதை, மொழியின் ஜனநாயகத்தன்மை என்றும் சொல்ல முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் மொழியைப் பயன்படுத்த இயலும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என்று எந்தப் பாரபட்சமும் மொழிக்கு இல்லை. ஒவ்வொருவரும் எவ்வளவு தெரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவே மொழி!
குழந்தைகளால்கூட மனதில் உள்ளதை மொழியின் துணையோடு வெளிப்படுத்திவிட இயலும். புத்தகம் படித்திராத பாமரராலும் மனதிலுள்ளதைப் பேசிவிட இயலும். இதனால் மட்டுமே மொழியை ‘தீவிர ஜனநாயக அமைப்பு’ என்று அழைக்கிறோம்.
மொழியின் அடிப்படை தார்மிகங்கள் என மேற்கண்ட அனைத்தையும் சசூர் குறிப்பிடும்போது நமக்கொரு சந்தேகம் தோன்றுகிறது. உச்சரிப்பிற்கும் அர்த்தத்திற்கும் நேரடியான சம்பந்தமில்லை; ஓர் உச்சரிப்பு ஓர் அர்த்தத்துடன் மட்டுமே இல்லை, அது நிறைய அர்த்தங்களுக்கு இசைந்து தருகிறது என்று சொல்லும்போதும், இவ்விரண்டிற்கும் நேரடியான தொடர்புகள் இல்லை என்று சொல்லும்போதும் ‘உச்சரிப்புகள் தனியே வேறொரு உலகத்தில் வசிக்கின்றனவோ?’ என்றொரு சந்தேகம் நமக்கு எழுகிறது. ‘அதே போல, அர்த்தங்கள் இன்னொரு உலகிலா?’
ஓர் உச்சரிப்பிற்கு ஓர் அர்த்தம் இல்லை என்பதால் உச்சரிப்புகள் நிஜமாகவே தனித்திருக்க ஆரம்பிக்கின்றன. அதனால், உச்சரிப்புகளை நம்மால் கண்காணிக்க இயலவில்லை. தனித்திருப்பதால், அவை தமக்கே தமக்கான ரகசிய வாழ்க்கையையும் உருவாக்கிக் கொள்கின்றன. ஓர் உச்சரிப்பிற்கு ஓர் அர்த்தம் என்ற கட்டுப்பாடுகள் இல்லை என்பதால், அவற்றின் பொருள்கோளியலை நம்மால் வரையறுக்க முடிவதில்லை.
இன்னொரு கோணத்தில், ஓர் உச்சரிப்பு ‘தனக்கே உரித்தான அர்த்தம் இது’ என்று எதையும் சொந்தம் கொண்டாடவும் முடிவதில்லை. ஏனெனில் ஒரு உச்சரிப்பிற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கமுடியும். அதனால், உச்சரிப்பிற்கும் அர்த்தத்திற்குமான பிணைப்பு நெகிழத் தொடங்குகிறது. ஏறக்குறைய ‘உறவில்லை’ என்றுகூடச் சொல்லிவிடலாம். அவற்றிற்கிடையே மனிதன் மட்டும் தலையிடவில்லை என்றால், உச்சரிப்பு ஒரு மூலையிலும், அர்த்தம் இன்னொரு மூலையிலுமாகத்தான் தூங்கிக் கொண்டிருக்கும்.
இந்த விஷயங்களைக் குறிப்பிடும் சசூர், மொழி தீவிர ஜனநாயகத் தன்மையைப் பேணுவதற்காகச் சலம்பத் தொடங்குகிறது என்கிறார். அதாவது, தடுமாறுகிறது. தரையில் கால் பாவி பேச முடியாமல், எப்போதும் தடுமாறிக்கொண்டும், தடுக்கி விழுந்து கொண்டும், தவழ்ந்து கொண்டும் இருக்கிறது. பல நேரங்களில் போதையுற்ற நபரைப் போல மொழி உளறுவதை நீங்கள் கேட்டிருக்க முடியும். அந்நேரங்களில், என்ன பேசுகிறோம் என்பதில் மொழிக்கே குழப்பங்கள் உண்டு.
இன்னொரு திசையில், குறிப்பான் தீரா சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கிறது. மரம் என்று ஒருவர் உச்சரித்தால் அது ஆளா தாவரமா என்ற சந்தேகம் என்றைக்கும் அகல்வதில்லை.
உச்சரிப்புகள் தனியே திரிவதை சிக்மன்ட் பிராய்டு போன்ற உளவியலாளர்கள் நாப்பிறழ்ச்சி என்றனர். ஒரு சத்தத்தை உச்சரிப்பதற்கு பதிலாக வேறு ஒரு சத்தத்தை அல்லது இரண்டையும் சேர்த்து உச்சரித்துவிடுவது. ‘அல்லது’, ‘இல்லை’ இரண்டையும் குழப்பி எப்பொழுதும் ‘இல்லது’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் pun என்று அழைக்கிறார்கள். ஒன்றை உச்சரிக்க உத்தேசித்து வேறு ஒன்றை உச்சரிப்பது. இது சர்வசாதாரணமாய் நடக்கிறது. ஏனென்றால், உச்சரிப்புகள் அர்த்தங்களுடன்தான் நெருக்கமாக இல்லையே தவிர, சக உச்சரிப்புகளுடன் நெருக்கமாகவே வாழ்ந்து வருகின்றன. பேருந்துகளில் எழுதியுள்ளதை கவனித்திருப்பீர்கள், ‘கரம், சிரம், புறம் நீட்டாதீர்’. இது மொழியின் இயல்பு. குறிப்பான்கள் குறிப்பீடுகளுடன்தான் இணக்கமாக இல்லையே தவிர சக குறிப்பான்களுடன் செல்லம் கொஞ்சுகின்றன.
குறிப்பான்களுக்கென்று காலனி வாழ்க்கை ஒன்று உண்டு. அவற்றுக்கு இடையே தோழமை உறவு உண்டு; நல்ல புரிதலும்கூட. உச்சரிப்புகளுக்கும் அர்த்தங்களுக்கும்தான் புரிதல் இல்லையே தவிர, உச்சரிப்புகளுக்குள் அப்படி இல்லை. ஒரே வகையான உச்சரிப்புகள் தோளோடு தோள் உரசி நிற்கின்றன. நாம் mat எனச் சொல்ல நினைத்து, rat என்று உச்சரித்துவிடுகிற அளவிற்கு ஒன்றோடு ஒன்று உரசி நிற்கின்றன. இதனைத்தான் ‘வாய் தவறி’ என்று சொல்கிறோம். இதில் நம் தவறைக் காட்டிலும், உச்சரிப்புகள் செய்யும் குழப்பங்களே அதிகம். ஏனெனில் ஓர் உச்சரிப்பு அதன் சக உச்சரிப்புகளுடன் கைகோர்த்தே நிற்கிறது. குறிப்பான் குறிப்பீட்டிற்கு இடையிலான நெருக்கத்தைவிட, குறிப்பான்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் நெருக்கம் அதிகம். கிட்டத்தட்ட ஒருபால் கவர்ச்சி போல. இவை எல்லாம் சசூரிடமிருந்து நாம் தருவித்துக் கொள்ளும் மொழியியல் சிந்தனைகள்.
(தொடரும்)
Commenti