top of page

கொரோனா நாட்குறிப்புகள்...

11 1-04-2020


தொற்று நோயின் வலதுசாரி கற்பனை!


ஒரு நோயை எவ்வாறு கற்பனை செய்கிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது எல்லாம்.


ஒரு உதாரணத்திற்கு, அயோத்திதாசரின் 'அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த அவ்வை' கதையை எடுத்துக் கொள்ளுங்கள்.


அம்மை மட்டுமல்ல, வாந்தி, பேதி, காலரா என்று பல்வேறு நோய்களையும் அந்தக் கதை பேசுகிறது. மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். தொற்று நோய். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்று ஊர் ஊராய் பரவிக் கொண்டிருக்கிறது.


அன்றைக்கிருந்த மருத்துவ அறிவும் ஞான மரபும், இந்த நோய்களுக்கான காரணம் 'நோயுற்ற அடுத்த மனிதர்' என்று எந்தக் கட்டத்திலும் சொல்லவில்லை. நோயுற்ற மனிதரை தனித்திருக்கச் செய்வதோடு, அவருக்கான மருத்துவத்தையும் சொல்லித் தருகிறது. ஒரு வகையில், அந்த நபரை 'தீண்டத்தகாதவராகக்' கூட பாவிக்கச் சொல்கிறது. 'தற்காலிகத் தீண்டா மெய்.'


எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நோயின் மூல காரணம் 'ஏற்கனவே நோயுற்றவர்கள்' என்று நமது பாரம்பரியம் சொல்லியிருக்கவில்லை. ஒட்டுமொத்த பழியையும் 'ஆடி மாதப் புதுப்புனலின்' மீது போட்டு விடுகிறோம். அது ஒரு வகையில் வசதியானதும் கூட. ஆடி மாத புதுப்புனல் என்பது ஒரு 'தற்காலிகத் திணை'.


அந்த ஆடி மாதத்தை வெற்றிகரமாகக் கடந்து விட்டால், நோய்மையிலிருந்து விடுபட்டு விடலாம். அதற்காக, ஆடி மாதங்களில் இயற்கையின் மீது வன்மம் கொள்வது என்று அர்த்தமும் அல்ல. மனிதர்களுக்கு வைத்தியம் பார்ப்பது போல திணைக்கும் வைத்தியம் பார்க்கச் சொல்கிறது பெளத்த மரபு.


இதில், மருத்துவ மரபு, ஞான மரபு, பெளத்த மரபு என்ற வம்புகளுக்கெல்லாம் போவதற்கு முன் வேறு சில விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

1. தொற்று நோய் குறித்த பயத்தை 'நோயாளி' மீதான பயமாக மாற்றுவது நமது வழக்கம் இல்லை.

2. மனிதர்கள் மீதோ, பிற உயிர்கள் மீதோ நோய்க்கான காரணத்தை சுமத்துவதை விட மோசமான பாசிசம் எதுவும் இல்லை.

3. நோயின் காரணத்தை இயற்கையில் தேடி, சீர் செய்வதே அறிவு.

4. நோய்க்குப் பயந்து ஆரோக்கியமானவர்கள் வீடுகளுக்குள் ஒளிந்து கொள்வதை விட கீழ்மையான செய்கை இவ்வுலகில் எதுவும் இல்லை.


'நோய்த் தொற்றுள்ள பிறர்' என்ற கற்பனை ஒரு மோசமான வலதுசாரி சிந்தனை. நாம் உருவாக்கி வைத்துள்ள நவீன மருத்துவம் இதைத் தான் சொல்லித் தருகிறது என்றால், வெட்கக்கேடு!


ஆனால், உலகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்து இத்தகைய பாசிச நடவடிக்கைகள் தான் தொடர்கின்றன என்றால்,


பொதுவுடமை மருத்துவம் என்பது என்ன என்றே நாம் யோசிக்க வேண்டும்.

ஒரு தொற்று நோயை, பொதுவுடமையாளன் எவ்வாறு கற்பனை செய்வான்?


12 3-04-2020


‘தனித்திருத்தல்’ மாபெரும் மூடநம்பிக்கையாக மாறி வருவதைப் பார்க்கிறேன்.


இன்றைக்கெல்லாம் தெருவில் மக்கள் கூட்டம் அதிகம். மளிகைக்கடைகள், இறைச்சிக் கடைகள், மருந்துக் கடைகள் திறந்திருக்கின்றன. எல்லா கடைகளிலும் மக்கள் இடைவெளி விட்டு வரிசையில் நிற்கிறார்கள். முகமூடி அணிந்திருக்கிறார்கள். இதற்கு நடுவே காவல் வாகனமும் நிற்கிறது. காவலொருவர் ஒலிபெருக்கியில் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு ‘போயிரு, இல்ல அடிப்பேன்!’ என்று கதறிக் கொண்டிருக்கிறார். நேற்றெல்லாம் இப்படி இல்லை.


‘ஏனின்று இப்படி ஒரு அவசரம், எல்லோருக்கும்?’ என்று கேட்டால்,


‘மோடி, ஒன்பது மணிக்கு ஏதோ பேசப் போகிறாராம். அதற்குள் சாமான் செட்டெல்லாம் வாங்கி வைக்க மக்கள் அல்லாடுகிறார்கள்’ என்றனர்.

13 03-04-2020


1. ஆரோக்கியம், நலம் இரண்டும் வேறு வேறானவை. ஆரோக்கியத்தை மருத்துவம் அளவிடுகிறது. நலத்தை அப்படி முடிவது இல்லை. ஆனால், உளப்பகுப்பாய்வில் அதற்கும் கூட முயற்சிக்கிறார்கள். ஆனால், முடிந்தபாடில்லை.


நலம், ஒரு மனநிலை. எனவே, மருத்துவம், நல்ல ஆரோக்கியமான உடல், நல்ல மனநிலையைத் தரும் என்று நாம் நம்ப வேண்டும் என்கிறது. இது, நம்புவதற்கு எளிதானதும், வசதியானதும் கூட.


நாம் இப்படி நம்புவது மருத்துவத்திற்கும் நல்லது; ஏனெனில், இயல்பாக, ஆரோக்கியத்தை மட்டுமே பேணுகிற மருத்துவம், நலத்தைப் பேணுவதாகவும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள இது உதவுகிறது.

2. இந்த ‘நல’ விஷயங்களை ஆன்மீகமே பேசி வந்திருக்கிறது. அதனிடமுள்ள மிகப் பெரிய நலத் திட்டம் ‘கடவுள்’. இந்தக் கடவுள் ஏற்பாட்டின் வயதும் கொஞ்சம் அதிகம். அறிவியல் இந்த நலத்தை மருத்துவத்தின் மூலம் தர முடியும் என்று வெளிவந்த போது, கடவுளும் ஆன்மீக நிறுவனங்களுமே முதலில் பயந்தன. எனவே, பல மருத்துவ அறிஞர்களும், அவர்களை நம்புகிற நோயாளிகளும், ஆரோக்கியமானவர்களும் நாத்திகர்களாகத் தங்களை உணர்வதும் எளிதாக இருந்தது.


3. நவீன மருத்துவம், நாமெல்லாம் கருதுவது போல வணிக நோக்கத்தினால் மட்டுமே சீரழிந்தது என்பது உண்மையல்ல; ஆன்மீகத்தோடு அது மேற்கொண்ட கருத்தியல் சமராலும் சீரழிந்தது. இந்தச் சமருக்காக அது தன்னை முழுதாக வெளிக்காட்டத் தொடங்கிய பொழுதே, தன்னால் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நலத்தையும் தர முடியும் என்று வீராப்பு பேச வேண்டி வந்தது.


4. ’அறிவியல் - மருத்துவம் - ஆன்மீகம் - அரசியல்’ கூட்டணி ஏராளமான கோபங்களும் தாபங்களும் நிறைந்தது. இதில் நாம் ஓரளவு நம்பக்கூடியது அறிவியலும் அரசியலும். மருத்துவமும் ஆன்மீகமும் வெகுஜன ஆதரவிற்காக எந்தப் பொய்யையும் செல்லக்கூடியவை. அதனால், இவற்றிலிருந்து ‘உண்மை’ என்று எதையும் நம்மால் கற்றுக் கொள்ள முடிவதில்லை.


5. ஆனால் அறிவியலோ தொடர்ந்து உண்மைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை அது ஆரோக்கியம் குறித்த உண்மைகளைக் கண்டறியும் பொழுதெல்லாம், மருத்துவத்தின் மூலமே வெளியுலகத்திற்கு வந்து சேர்கிறது.


எப்பொழுதெல்லாம், அறிவியலால் திட்டவட்டமான உண்மையைச் சொல்ல முடியாமல் போகிறதோ அப்பொழுதெல்லாம் மருத்துவம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, சடங்குகளைக் கைக்கொள்ளத் தொடங்குகிறது. ஏனெனில் அதற்கு நன்றாகத் தெரியும், தான் தயங்குகிற இடைவெளிகளில் ஆன்மீகம் பாய்ந்து செல்லத் தயாராக இருக்கிறது.


6. நிறைய இக்கட்டான நேரங்களில் அறிவியலின் குழந்தையாகக் கருதப்படும் மருத்துவம் மூடநம்பிக்கைகளைச் சார்ந்து இயங்குவது இதனால் தான். ஏனெனில், அது தொடர்ச்சியாக ஆன்மீகத்துடன் சமரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. வேறு வகையில் சொல்வது என்றால், அறிவியலற்ற மருத்துவம், இன்னொரு ஆன்மீகம்.


7. பாரம்பரியத்தில் இந்த விஷயம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அங்கே, அறிவியலும் மருத்துவமும் தனித்தனியே இல்லை. இரண்டையும் இணைத்து வைத்தியம் / பண்டுவம் என்று அழைத்து வந்தோம்.


இதற்கு ஒரு முக்கியமானக் காரணம் இருந்தது. வைத்தியம் மனித உடலைத் தனியான உயிரியாகப் பார்ப்பது இல்லை. மனித உடல், வாழும் இடத்தோடும் அங்குள்ள ஜீவராசிகளாலும் தீர்மானிக்கப்படுவதாக வைத்திய மரபு சொல்கிறது. இதையே, ‘உணவே மருந்து’ என்ற கோஷமாகவும் சொல்வது உண்டு.


8. பாரம்பரிய உடலறிவியலின் திணைத்தன்மையே அறிவைத் தனியாகவும் (அறிவியல்) பயன்பாட்டைத் தனியாகவும் (மருத்துவம்) யோசிக்க அனுமதிக்கவில்லை. அந்த வகையில், உலகப்பொதுவான நோயும் இல்லை, உலகப்பொதுவான மருந்தும் இல்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, உலகப்பொதுவான உடலும் இல்லை. ஒவ்வொரு உடலும் விசேஷமானது.


9. இந்தத் ‘தனிவிசேஷத்தை’, நவீன அறிவியல் ஒத்துக் கொண்டாலும், நவீன மருத்துவம் நிச்சயமாக ஒத்துக் கொள்ளாது. ஏனெனில், அது பெருவாரியான மக்கள் என்ற சுழலுக்குள் ஆன்மீகத்தோடு போரிட்டுக் கொண்டிருக்கிறது.


இந்த இடத்திலேயே மார்க்சீயர்கள் நவீன மருத்துவம் குறித்து ஏமாந்து போகிறார்கள். தனித்துவம் - பொதுமைத்துவம் சர்ச்சையில், நவீன மருத்துவம் பொதுமைகளின் பக்கம் இருப்பதாய் கருதிக் கொண்டு அதைப் பாதுகாப்பது தங்களது தார்மீகக் கடமை என்று நினைத்துக் கொள்கிறார்கள். வெகுஜனம் என்பதும் பொதுவுடமை என்பதும் பாரதூரமானது என்று மார்க்சியம் விளங்கிக் கொள்ளவில்லை.

10. அறிவியலின் வேலைகளையும் மருத்துவத்தின் வேலைகளையும் ஒரு சேர செய்து கொண்டிருந்த வைத்தியத்தின் அடையாளச் சிக்கல்கள் இன்னும் நிலைமையைச் சீர்குலைக்கத் தொடங்கின. நவீன மருத்துவத்தின் வளர்ச்சி, அதன் செயல்பாடுகளில் தென்பட்ட ஜனநாயகத்தன்மை, அது ஆன்மீகத்தோடு கொண்ட வாதப்பிரதிவாதங்கள் போன்ற அனைத்தும் வைத்தியத்தின் சமூகப் பாத்திரத்தை நிர்மூலமாக்கின.


இதனால் தளர்ந்து போயிருந்த ஒரு தருணத்தில், பாரம்பரிய வைத்தியத்தில் அறிவியல் என்று எதுவும் இல்லை; அதில் மிச்சமிருப்பதெல்லாம் என்றைக்கோ எழுதப்பட்ட அறிவியல் புத்தகங்களும் அவற்றை விளங்காமல் திகைத்து நிற்கும் தற்கால வைத்தியர்களுமே என்று அறிவியலும் மருத்துவமும் தொடுத்த கணைகளுக்கு வைத்தியர்களிடம் பதில் இல்லை.


11. வேடிக்கையிலும் வேடிக்கையாக, அறிவியலையும் மருத்துவத்தையும் உற்றுக் கவனித்த வைத்தியர்கள் உண்மையில் தங்களிடம் அறிவியல் அழிந்து போனது என்றே ரகசியமாய் கழிவிரக்கம் கொள்ள ஆரம்பித்தனர். இந்தக் கழிவிரக்கம் வைத்தியத்தில் மட்டுமல்ல, எல்லா பாரம்பரிய அறிவுத்துறைகளிலும் தென்பட்டது.


12. எந்தப் பாரம்பரியத்திலும் அறிவியல் என்றொரு வஸ்து தனியாக இல்லை என்பதை உணர்ந்தவர்களுக்கு இந்தக் கழிவிரக்கம் தோன்றுவது இல்லை. மரபான எந்தவொரு பழக்கமும் முதற்ப் பொருளோடு (‘நிலம், பொழுது’ என்று அர்த்தம் கொள்ளுங்கள்) பின்னிப் பிணைந்தது.


எனவே, அதுவே அறிவாகவும் அதுவே பழக்கமாகவும் விளங்குகிறது. எனவே, அவற்றின் வரலாறு, ‘ஞாபகம்’ மட்டுமே. தமிழ் வைத்திய அறிவின் வரலாற்று ஞாபகங்களை அகத்தியர், ராவணன், போகர் என்ற வடிவங்களில் காண முடியும்.


ஒவ்வொரு வைத்தியரும் மருந்தைத் தயாரிக்கும் பொழுது இந்தக் கதாபாத்திரங்கள் வரலாற்றில் செய்ததைத் திருப்பிச் செய்வதாகவே கருதிக் கொள்கிறார். ‘என்மனார் புலவர்!’ என்ற சூத்திரம் இதை இன்னும் தெளிவாக்கும். அதாவது, பாரம்பரியத்தின் அறிவியல் வரலாறு அரூபமான ஞாபகங்கள் மட்டுமே. அந்த ஞாபகங்களிலிருந்து ஒவ்வொரு வைத்தியரும் தற்கால மருந்தை உருவாக்கத் தொடங்குகிறார்.


நவீன மருத்துவத்தின் வருகையின் போது, வைத்தியம் தவற விட்ட மிக முக்கியமான கண்ணி இது. இதனால் அது தன்னைத்தானே வரலாற்றவனாகக் கருதிக் கொண்டது. தன்னைத்தானே அனாதையாகக் கற்பனை செய்து கொண்டது.


13. எல்லா பாரம்பரியக் கலைஞர்களும் (வைத்தியமும் கலை தான்!) மறந்த ஒரே விஷயம் - அவர்களது சமூகச் சூழலில் ‘அனாதை’ என்ற கதாபாத்திரம் இல்லை.


14 03-04-2020


இந்திய கேளிக்கை அறிவியல்!


நான் சொல்வதை மோடி தான் மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.


அறிவியலுக்கும் வெகுஜன மனவோட்டத்திற்கும் என்றைக்குமே ஒட்டுதலும் இல்லை உறவும் இல்லை. அதாவது, அறிவியலுக்கும்!!!


இன்றைய வணிகமயமாகி நமக்கு வழங்கப்படும் மருத்துவம் நிச்சயம் அறிவியல் இல்லை என்பதை இப்பொழுதாவது உணருங்கள். இது வெகுஜனப்படுத்தப்பட்ட கேளிக்கை அறிவியல்.


'கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள' என்று அறிவியல்பூர்வமாக சொல்லப்பட்ட எந்தவொரு தடுப்பு நடவடிக்கையிலும் அறிவியல் இல்லை என்று நான் சொல்லி வருவதை நிறைய பேர் நம்பவில்லை. தனித்திருத்தல், கைகளைக் கழுவிக் கொண்டே இருத்தல், முகமூடிகளை அணிந்திருத்தல், ஒரு அடி இடைவெளி விட்டு அடுத்தவரிடம் பேசுதல், பொது இடங்களைப் புறக்கணித்தல்... போன்றவற்றில் அறிவியலை விடவும் மூடத்தனங்களே அதிகம். அதிலும், இந்தியா மாதிரியான 'தனித்திருக்கும்' வசதியற்ற சமூகச் சூழலில், மூடத்தனத்தின் சதவீதம் அதிகம்.


அறிவியலைத் தானே மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதில் மோடிக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. இந்த மனப்பான்மையை நாம் ஆன்மீகத் தலைவர்களிடமே பார்த்திருக்கிறோம். அறிவியல் கண்டுபிடித்துச் சொல்லும் எதையும், வெகுஜனத்திடம் எடுத்துச் செல்லும் வேலையை மதங்களே செய்து வந்த காலத்திலிருந்து இது தொடர்கிறது.


'அயோத்திதாசர்' நூலில், அம்மை நோய்க்கு வேப்பிலையே மருந்து என்று கண்டுபிடித்த பெளத்தமும் கூட (அயோத்திதாசரின் நம்பிக்கையின் படி) அதை, அம்மன் என்றும், பத்து நாள் சடங்கு என்றும் சொல்லியே வெகுஜனத்திற்குக் கொண்டு சென்றது ஏன் என்பதை விலாவரியாய் எழுதியிருக்கிறேன்.


மோடி, இந்திய வெகுஜனத்திற்கான கேளிக்கை அறிவியலையே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார். கைதட்டுவது, விளக்கேற்றுவது (இதையெல்லாம் கார்த்திகைதீபத் திருவிழாவிலேயே பார்த்து விட்டோம்!) எல்லாம் கேளிக்கையாக மட்டுமே தோன்றலாம். ஆனால், அது, இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிற அறிவியல் கண்டுபிடிப்புகளை கபளீகரம் செய்யக் காத்திருக்கும் அரசியல் என்பதை தயவு செய்து உணருங்கள்.


மோடியோ, ரஜினியோ கோமாளிகள் இல்லை என்பதை மட்டும் தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள். இந்தக் கேளிக்கைகள் விளைவிக்கப்போகிற ஆபத்துகள் அதிகம்.



15 04-04-2020


கொரோனா ‘தனித்திருத்தல்’ எனக்கு ஒவ்வாமையைத் தருகிறது.


‘தனித்திருத்தல்’ எனக்குப் புதிது அல்ல. எனக்கு மட்டும் அல்ல. என்னைப் போல ஒரு சிறுபான்மைக் கூட்டம் இப்படி உண்டு. விடுமுறை நாட்களிலும் பல்கலைக்கழகம் செல்கிற கூட்டம். அன்றைக்குத் தான் யாருடைய தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாய் எழுதவும் படிக்கவும் முடியும் என்பது அனுபவம். வீட்டில் இருந்தாலும் நானொன்றும் பிரம்மாதமான பேச்சுக்காரன் கிடையாது. ஒரு நாளில், மொத்தமாய், அரை மணி நேரம் பேசினாலேயே அதிகம். அதனால், தனித்திருத்தலில் எனக்கு என்றுமே பிரச்சினை இல்லை.


என்னுடைய ஒவ்வாமை வேறு. அது, தனித்திருத்தலால் உருவானது அல்ல; அதிலுள்ள பாசாங்கால் ஏற்பட்டது.


ஆமாம், அதிலொரு கபடம் இருந்தது. இது எல்லோருக்குமே தெரியும். தெரிந்து செய்வது தானே பாசாங்கும் கபடமும்!


*


இந்தியாவில் தனித்திருப்பதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் அரிதினும் அரிது. அது தான் சொன்னேனே, சிறுபான்மை ஆட்களுக்கு மட்டுமே இது சாத்தியப்பட்டிருக்கிறது. அவர்கள், நத்தைகள்.


மற்றபடி, பெரும்பான்மையினருக்கு - வர்க்க பேதம், சாதி பேதம் இன்றி - தனித்திருத்தல் செளந்தர்யம். எளிதில் கிட்டாது என்று அர்த்தம். ஆனாலும், இந்தியா தனித்திருப்பதாகச் சொல்கிறது.


*


இந்தியத் தனித்திருத்தலை மக்கள் குடும்பம் குடும்பமாகச் சேர்ந்து செய்தனர். இதில் வேடிக்கை ஒன்றும் இல்லை. குடும்பம் தான், இங்கு, ஒவ்வொருவரின் அந்தரங்க வெளியும் கூட. தாய், தகப்பன், குழந்தைகள் என்பது ஒரே உடல். தனித்திருக்கச் சொன்னால், இந்த மூன்று பேரும் ஓர் ஜீவராசியாய் தனித்திருப்பார்கள். அதே போல, ஏதாவது ஒன்றை இழந்தாலும், உடலுறுப்பையே இழந்தது போல அழுது புரளுவார்கள்.


இதற்கு அடுத்த நிலையில், ஒரு வளவு, ஒரு தெரு, ஒரு புரம், ஒரு கிராமம் கூட நிறைய பேருக்கு தனித்திருக்கும் வெளி தான். ஊரடங்கு என்று அறிவித்ததும், அன்றைய இரவே கோயம்பேட்டில் பேருந்து ஏறி கிளம்பிப் போன தமிழர்கள், இந்த வகைத் தனித்திருத்தலைத் தான் இன்றும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் கூட்டமாகத் தனித்திருத்தல்!

முதலில், இங்கு தனித்திருப்பதற்கான உள்கட்டுமான வசதிகள் எதுவும் இல்லை. இதற்குப் பொருளியல் காரணங்களைச் சொல்லி தப்பித்து விட முடியாது. வாழ்க்கை முறையே இவர்களின் அந்தரங்க வெளிகளைத் தீர்மானிக்கிறது.


தமிழர்களின் அந்தரங்கம் பலதரப்பானது. அதன் மிகச் சிறிய அலகு, குடும்பம். அதையும் கடந்த தனி நபர் அந்தரங்கம் மிகச் சொற்பமான நத்தை மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனாவிற்கு சொல்லப்பட்ட தனித்திருத்தலை பெரும்பான்மை தமிழர்கள் இப்படி மொத்த மொதமாகவே கடைபிடித்தனர்.


*


கொரோனா தப்பித்தலுக்குச் சொல்லப்பட்ட தனித்திருத்தலின் இரண்டாவது விதி - ஒவ்வொரு முறை பகிர் வெளிக்குச் சென்று மீளும் போதும் கைகளைச் சுத்தப்படுத்துதல்!


தமிழகத்தின் சகல பகுதிகளிலும் இதற்கொரு உத்தியைக் கடைபிடித்தனர். அதன் படி, அண்டா அண்டாவாக மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை சுற்றுப் புறமெங்கும் தெளிக்கத் தொடங்கினார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை மேனியெங்கும் தடவிக் கொண்டனர். இதை விடவும், சிறந்த கிருமிநாசினியா சோப்பும், சானிட்டைஸரும்?


கொஞ்சம் பேர் மருந்துக் கடைகளில் இருந்த கிருமி நாசினிகளை அள்ளி எடுத்துப் போய் தத்தம் வீடுகளில் பதுக்கிக் கொண்டனர். நிலைமை இன்னும் மோசமாகும் பொழுது அவை தேவைப்படலாம்!


தனித்திருத்தலும், கிருமிநாசினி பயன்படும் இத்தனை வேடிக்கையோடு தான் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இதில் விசேஷம் என்னவென்றால், இதிலுள்ள நகைச்சுவை யாருக்கும் உரைக்காத படி எல்லோரும் பயந்து போயிருந்தனர். எல்லோரும், தாங்கள் கொரோனா விதிகளைத் தீவிரமாகக் கடைபிடித்துக் கொண்டிருப்பதாக பாசாங்கு செய்தனர்.


இதுவொரு சிக்கலான மனநிலை. செய்வது பாசாங்கு. ஆனால், பாசாங்கு செய்யாதது போலவும் பாசாங்கு செய்வது. பொய் பற்றி பொய் சொல்வது. நடிப்பது போல நடிப்பது. இந்தப் பாசாங்கின் பாசாங்கே, கடைவீதிகளில் குவியும் சகமனிதர்களைப் ‘பொறுப்பற்றவர்கள்’ என்று வசைபாட வைக்கிறது; அவர்களைக் காவல்துறையினர் வன்மையாய் நடத்தும் பொழுது குதூகலிக்கச் சொல்கிறது; இஸ்லாமியர்கள் மீது பழிசுமத்த வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அவசர அவசரமாய் பயன்படுத்திக் கொள்வது.


இந்தப் பாசாங்கின் பாசாங்கையே மோடியும், கைதட்டுங்கள் என்றும் விளக்கேற்றுங்கள் என்றும் தொடர்ச்சியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.


*


இந்த நிமிடம் வரைக்கும், கொரோனா தொற்று பெரிய அளவில், அதாவது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் போல, இந்தியாவில் வீசத் தொடங்காத காரணத்தால், எந்த வித இடையூறும் இல்லை.


பாசாங்கு செய்கிறோம் என்பதை மறைக்க விரும்பாத ஒரு சிலர், தொற்று வேகமெடுக்கவில்லை என்பதை விளக்க முயல்கிறார்கள். அதற்காக, இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும், தட்ப வெட்ப நிலையையும், மரபான மருத்துவ பழக்கத்தையும் காரணம் காட்டுகிறார்கள்.


இந்த நிமிடம் வரைக்கும் இந்த கபட நாடகத்தால் எந்தச் சிக்கலும் இல்லை. ஒரு வேளை, தொற்று பெருமளவில் படர்ந்தது என்றால் இந்தப் ‘பாசாங்கின் பாசாங்கு’ என்ன செய்யும்?


16 05-04-2020


கொரோனா விஷயத்தில் தமிழ் மருத்துவம் பற்றி பேசப் போக அது விதவிதமான ஆட்களை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.


நேற்று ஒரு பெரியவர் என்னிடம் இப்படிக் கேட்டார்: ‘நம்ம மரபிலேயே கொரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கிற சாத்தியங்கள் இருக்கா?’

‘இருக்கு’ என்றதும் எங்கே கிளம்பிப் போய் அப்படியொன்றைக் கண்டுபிடித்து விடுவாரோ என்று கொஞ்சம் ஜெர்க் ஆனது. அதனால், தமிழின் பிரபலமான பதிலை அவருக்குச் சொன்னேன்:


‘இருக்கு, ஆனா இல்ல!’

‘அப்படின்னா?’


‘அப்படியும் இருக்கு, இப்படியும் இருக்கு’


‘நமக்குத் தெரியலன்னு எடுத்துக்கலாமா?’ அவர் என்னை விடுவதாக இல்லை!


‘அப்படி தான் எடுத்துக்கனும். உதாரணத்திற்கு, நான் களஆய்விற்காக கிராமங்களில் சுற்றிக் கொண்டிருந்த போது பார்த்த விஷயத்தை சொல்றேன். அது ஒரு தண்ணியில்லாக் காடு. தண்ணியை பாட்டில்களில் கொண்டு போகாத காலம். அதனால், எங்கே, என்ன தண்ணி கிடைக்கிறதோ அதைக் குடித்தே உயிர் வாழ வேண்டும். எனக்கோ, ‘என்ன தண்ணியோ ஏதோ?’ என்று அசூசையாக இருக்கும். குடிக்கத் தயங்குவேன்.


‘ஒரு சிறுமி தான் எனக்கு அழுக்குத் தண்ணியை சுத்தமாக்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தாள். அது, மிக எளிய தந்திரம். குட்டைகளில், ஓடைகளில், தொட்டிகளில் தண்ணீரைக் கண்டதும் எடுத்த எடுப்பில் குடித்து விடக்கூடாது. முதலில், இரு கைகளால் அந்தத் தண்ணீரை அள்ளி நம் முகத்தைக் கழுவ வேண்டும். நீரால் துடைத்துக் கொண்டால் கூட போதும். அதன் பின் அந்தத் தண்ணீரை நீங்கள் தாராளமாய் குடிக்கலாம். ஒன்றும் செய்யாது. அழுக்குத் தண்ணீரை சுத்தமாக்குவதற்கு இதுவொரு வெற்றிகரமான ஃபார்முலா. அதன் பின் எந்தத் தண்ணீரையும் என்னால் குடிக்க முடிந்தது என்பதற்கு நானே சாட்சி. இது தண்ணியில்லாக் காடுகளில் மரபாகக் கடைபிடித்து வரும் ஒரு பழக்கம். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது, ஆனால் என்னென்ன என்று தான் நமக்குத் தெரியவில்லை’.


இதைக் கேட்ட அந்தப் பெரியவர் உடனே உற்சாகமானார்.


‘நல்லா நினைவிருக்கு ஐயா. எங்க வீட்டு ஆச்சியும் சொல்லிருக்கா! தலையில் தெளிச்சுட்டு குடிம்பா’ என்று சொல்லி விட்டு, அடுத்து அவர் கேட்டது தான் முக்கியம்.


‘அப்ப, இப்பவும் நாம, முனுசிபாலிட்டிகாரன் குழாய்ல விடுற தண்ணிய எடுத்து முகத்தை கழுவிக்கிட்டா அந்தத் தண்ணி சுத்தமாயிராதா?’


இந்தத் தமிழ்ப் பெரியவர்களால் இது தான் பிரச்சினை. உலகத்திற்கு பயனுள்ள எதையாவது உடனே கண்டுபிடித்துவிடுகிற உத்வேகம் அவர்களிடம் பொங்கி வழிகிறது.


என் வாழ்க்கையில் இப்படி நிறைய பேரிடமிருந்து நான் வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறேன். இந்தப் பெரியவரிடம் எப்படி வெற்றி பெற்றேன் என்று தானே கேட்கிறீர்கள்!


‘இல்ல, இதுல ஒரு சிக்கல் இருக்கு. அந்தத் தண்ணியில்லாக் காட்டுல, தேங்கிக் கிடக்கிற தண்ணிய அள்ளி முகத்தை கழுவிக்கிட்ட போது, அந்தத் தண்ணியில பெரிய வானம், கொஞ்சம் வெண்ணிற மேகம், ஒரு ஓரமா சூரியன், அள்ளக் குனிந்த என் முகம் எல்லாமும் இருந்தது. அப்படியொரு அழுக்குத் தண்ணிக்கிட்ட தான் இந்தத் தந்திரம் பலிக்குமோ என்னவோ? முனிசிபாலிட்டி தண்ணில வானத்துக்கு எங்க போக, சொல்லுங்க?’

17 07-04-2020


தொற்று நோய் மனித உயிரைக் கொல்லும் முன், சமூக வாழ்க்கை மீதான நம்பகத்தன்மையைக் கொல்லத் தொடங்குகிறது. அரிவாளால் வெட்டப்பட்ட வாழை, அவசர அவசரமாய் குலை தள்ளுவதைப் போல அரசாங்கங்கள் ஊரடங்கை பிறப்பித்துக் கொள்கின்றன. இது நாள் வரையிலான ஆணவச் செயல்களுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளும் மனநிலை.


இந்த நூற்றாண்டின் மாபெரும் குற்றவுணர்வு, இயற்கையை சீரழித்த பாவத்திலிருந்து உருவாகுகிறது. விலக்கப்பட்டக் கனியைத் தின்றதைப் போன்ற சாவான பாவம். ஊரடங்கு ஒரு பரிகாரம். தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்ளும் நேர்ச்சை.


யாராலும் எதிர்க்க முடியாத, ஆனால் நல்லுள்ளம் கொண்ட ஆகிருதிகள், தங்களைத் தாங்களே சவுக்கால் அடித்து தண்டனை தந்து கொள்ளும் திரைப்படக் காட்சிகளை ஒத்திருக்கிறது இது. ஊரடங்கு நாட்களில் இயற்கை தன்னை மீட்டெடுக்க ஆரம்பித்தது போன்ற செய்திகளை நீங்கள் அடிக்கடிக் கேட்கிறீர்கள்.


அதாவது, ‘மானுடத்தின் பாவமன்னிப்பை இயற்கை ஏற்றுக் கொண்டது’ என்ற நம்பிக்கை வார்த்தைகள் இவை. முதலீட்டியத்தின் கோர முகத்தை பார்க்கத் தொடங்கியிருக்கிறோம் என்று மேற்கத்திய நாடுகளில் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா தொற்று, ஐரோப்பிய நாடுகளில் ஒரு அரசியல் தருணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை கொஞ்சம் வேறு மாதிரியானது. நமக்கு இது, அரசியலை விடவும் தத்துவார்த்த தருணம் என்று சொல்வேன்.


நாம் முதலில் பிராமணர்களையும் அதன் பின்னே ஷத்திரியர்களையும் எதிர்கொள்கிறோம். அதாவது, முதலில் குழப்பம், பின் அடக்குமுறை.


18 08-04-2020


பாசாங்கு என்றாலும் ஒடுங்குதல் என்றாலும் ஒன்று. பயந்து ஒடுங்கும் நாய் வாலை புட்டத்தில் ஒடுக்கிக் கொள்வது போல. ஆமை ஓட்டிற்குள் சுருண்டு கொள்வது போல. எல்லாமே, உயிர் பிழைக்கும் தந்திரம். வலியவனை ஏமாற்றுவது. வலிய / எளிய என்ற பாகுபாடின்றி எல்லா உயிர்களிடமும் இந்தத் தந்திரம் உண்டு. புலி கூட பாசாங்கு செய்யும். பதுங்குதல், ஒரு வகையான பாசாங்கே. பாய்ந்தால் மட்டுமே, பதுங்கியது ராஜதந்திரம். இல்லையென்றால், பதுங்கியது ஒடுங்கியது தான்.


பாசாங்கு, கையறுநிலையில் வெளிப்படும் இயல்பு. கிராம்சி subaltern இயல்பு என்று இதைப் பற்றி யோசித்திருக்கிறார். வலியதை எதிர்ப்பதற்கான சூழல் கனியாத பொழுது அடித்தளத்தினர் பாசாங்கு செய்யத் தொடங்குகிறார்கள். அத்தருணத்தில், வலிய புலி கூட தன் ஆகிருதியை ஒடுக்கிக் கொள்ளத் தொடங்குகிறது. ஜேம்ஸ் ஸ்காட், பாசாங்கை ஒரு ஆயுதமாகக் கற்பனை செய்கிறார். அடக்குமுறைக்கு எதிரான ஆயுதம். எளியவர்களின் ஆயுதம். அடிக்கக் கையோங்கும் உங்களை நினைத்து நாய் தன் வாலை ஒடுக்கிக் கொள்வது கூட ஒரு யுத்தம் தான். ‘யுத்த தந்திரம்’ என்று சொன்னால் உங்களுக்கு விளங்கி விடும்.


பாசாங்கு, பொய், ஏமாற்றுதல் என்பதனைத்தும் உயிர்களின் இயல்பு. அச்சம் மட்டுமல்ல, அதீத காதலில் கூட உயிர்கள் பாசாங்கு செய்யும். விலங்குகளிடம் இந்தக் காதல் பாசாங்கை அடிக்கடி பார்க்கலாம். ஒன்றோடொன்று கட்டிப் புரண்டு விளையாடிக் கொள்ளும் விலங்குகளைப் பார்த்திருக்கிறீர்களா? அடித்தும், பிடித்தும், கடித்தும் விளையாடும். ஆனால் எல்லாமே பொய்க்கடி. பாசாங்கு. ஊடல். நாடகம்.

மனிதன் மட்டும் இந்த நாடகத்தின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறான் என்கிறார்கள் ஃப்ராய்டும், லெக்கனும். கபடம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பாசாங்கு, நாடகம், ஊடல், பதுங்குதல் என்று சொல்லப்பட்ட அனைத்து பொய்மைகளுக்கும் வரையறுக்கப்பட்ட காலவரம்பு இருக்கிறது. அந்த வரம்பை கடக்கும் பொழுது அவை கபடமாக மாறத் தொடங்குகின்றன.


ஃப்ராய்டு சொல்லி புகழ்பெற்ற ஒரு யூத நகைச்சுவை இருக்கிறது. ஒரு முறை இரண்டு யூதர்கள் புகைவண்டி நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். மதுரை என்று கூட வைத்துக் கொள்ளுங்களேன். ஒருவர், இன்னொருவரைப் பார்த்து, ‘எந்த ஊருக்கு? நாகர்கோவிலா சென்னையா?’ என்று கேட்டாராம்.


‘நாகர்கோவில் வரைக்கும், ஒரு வேலை இருக்கு’.


‘அடப்பாவி, ஏன் இப்படி பொய் சொல்ற? நீ நாகர்கோவில் போறதா சொன்னா, சென்னைக்குப் போறேன்னு நினைப்பேன்னு தானே, நாகர்கோவில் போறத என்ட்டருந்து மறைக்கிற? ஏன்டா நாகர்கோவில் போறேன்னு பொய் சொல்ற? நாகர்கோவில் தானே போற?’


பொய் பற்றிய பொய்களைச் சொல்வது மானுட இயல்பு என்கிறார் லெக்கன். இது விலங்குகளுக்குச் சாத்தியமில்லை என்பது அவருடைய முடிவு. அதாவது, விலங்குகள் நடிக்கும், அதன் பின் வேஷத்தைக் கலைத்து விடும். மனிதர்கள் மட்டுமே பொய்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள். பொய்மையும் வாய்மையிடத்து என்ற விளக்கத்தையும் மீறி, வாய்மையும் பொய்மையிடத்து! இதனால் தான், பாசாங்கின் பாசாங்கு தத்துவார்த்த தருணங்களை உருவாக்குகிறது என்று சொல்கிறேன். எது வாய்மை, எது பொய்மை என்ற போதம்.


வாய்மை - பொய்மை குறித்து விளக்கும் திருவள்ளுவர் ‘தன்னெஞ்சறிவது’ என்றொரு விஷயத்தைச் சொல்கிறார். இந்த நெஞ்சு தான், பிற உயிர்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது.


தன்னெஞ்சு போலவே பிறனெஞ்சும் உண்டு. ‘தன்னெஞ்சு அறிவது பொய்யற்க…’ என்று சொல்வதைக் கவனியுங்கள். ‘உன் மனதிற்குப் பொய் என்று தோன்றுவதை சொல்லாதே, பொய் அம்பலமானது என்றால் உன் மனமே உன்னைத் தண்டிக்கும்’ என்றால், என் மனதையும் மீறி எனக்குள் எதுவோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா? என் மனம் சொல்வதை மீறி நான் பொய் சொல்கிறேன்; அக்குட்டு வெளிப்பட்டவுடன், என் மனம் என்னைத் தண்டிக்கிறது. அப்படியானால், என் மனம் என்பது என்ன? நான் என்பது என்ன? பொய் சொல்வதும், தண்டனை பெறுவதும் ஒரே ‘நான்’ இல்லையா?


இல்லை, என்கிறார் திருவள்ளுவர். பொய் என்று அறிவது, சுடுவது எல்லாம் நெஞ்சின் வேலை. பொய் சொல்வது, சூடு படுவது எல்லாம் ‘நானின்’ வேலை. அதாவது, நெஞ்சு, பூரண வெள்ளை. நான், சந்தர்ப்பவாதி. கலைஞர் கருணாநிதி இந்த இருமையை ‘மனசாட்சி’, ‘மனிதன்’ என்று வகிர்ந்து கொள்கிறார்.

எப்பொழுதும் வாய்மையையே போதித்துக் கொண்டிருக்கும் (திருவள்ளுவரின் கணிப்புப் படி!) என் நெஞ்சிற்கு, இந்த உலகில் தூய வாய்மையும் இல்லை, தூய பொய்மையும் இல்லை என்பது விளங்கிவிட்டால் என்னவாகும்? அப்பொழுதும் நெஞ்சு வேறு நான் வேறாக இருப்போமா அல்லது இருவரும் ஒருவராகி விடுவோமா? நான் என்ன சொல்கிறேனோ அதையே என் மனசாட்சியும் சொல்கிறது என்றால், மனசாட்சிக்கு அங்கு என்ன வேலை?


‘வாய்மை எப்பொழுதும் ஒன்றே' என்று நம்பிக் கொண்டிருந்த வரையில் பன்மையாக இருந்த மனிதன், ‘வாய்மை பல’ என்று நம்பத்தொடங்கியதும், ஒருவனாகி விட்டானா என்றால், இல்லை. வாய்மை பல என்று உணர்ந்ததும், நான் சிறு சிறு தீவுகளாக விலகத் தொடங்குகிறது. ஏனெனில், அது நாள் வரையில் துண்டு துண்டாக இருந்த நானை, மொத்தமாய், ஒன்று என்று தோன்றக்கூடிய வகையில் பிணைத்திருந்தது நெஞ்சு / மனசாட்சி / வாய்மை என்ற அறம் மட்டுமே. அந்த அறத்தின் ஒருமை வீழும் பொழுது, நான் துண்டுகளாக பிரியத்தொடங்குகிறது.


பொய்யின் பொய், பொய்மையிடத்து வாய்மை, பாசாங்கின் பாசாங்கு, ஊடலின் ஊடல், கபட நாடகம் என்ற அனைத்தும் தத்துவார்த்த சிக்கலை உருவாக்குகிறது என்று சொல்வதன் அடிப்படை இது தான். கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா கடைபிடிக்கும் தனித்திருத்தல் ‘பாசாங்கின் பாசாங்கு’ என்று சொல்வதும் இதனால் தான். இந்தப் பொய்மையிடத்து வாய்மை, முதலில் அறத்தை வீழ்த்துகிறது; அதன் பின், சமூகத்தின் ஒருமையைச் சிதைத்து தனித்தனி தீவுகளாகத் துண்டாடுகிறது.

இந்தப் பாசாங்கின் பாசாங்கு இந்தியர்களின் புதிய வழக்கம் இல்லை. அதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதன் சமீபத்திய உதாரணம், இருபதாம் நூற்றாண்டு நவீனத்துவம். நாம் நவீனம் என்று கொண்டாடும் அனைத்தும் பாசாங்கின் பாசாங்கு தவிர்த்து வேறு எதுவும் இல்லை. இலக்கியம் முதற்கொண்டு. நவீன இலக்கியம் என்று சொல்லப்படுபவை, எழுதப்படுபவை அனைத்தும் பொய்மையிடத்து வாய்மை.


வரலாற்றாசிரியர்கள் கருதுவது போல, காலனிய ஆட்சி காலத்தின் போது மட்டுமல்ல, பதிவு செய்யப்பட்ட நமது முதல் பாசாங்கின் பாசாங்கு, மிளகு தேடி யவனர்கள் தமிழகத்திற்கு வந்த பொழுது நிகழ்ந்தது. அனுபவக் காரணகாரியம் எதுவுமின்றி, மிளகை மாபெரும் விற்பனைப் பண்டமாகக் கருதத் தொடங்கியதில் ஆரம்பித்த பாசாங்கு இது.

Recent Posts

See All

கொரோனா நாட்குறிப்புகள்...

9 10-04-2020 பாசாங்கு என்றால் நடிப்பு என்றும் பொருள். போலச் செய்தல். புனைதல். masquerade. குலசையில் வருடாவருடம்...

கொரோனா நாட்குறிப்புகள்...

(கொரோனா முதல் அலையின் போது எழுதப்பட்ட நாட்குறிப்புகள் இவை. வாழ்க்கையில் முதன்முறையாக 'ஆரோக்கிய ஊரடங்கை' எதிர்கொண்ட அனுபவம் இது. ...

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
WhatsApp Image 2023-08-01 at 3.07_edited
bottom of page