top of page

கொரோனா நாட்குறிப்புகள்...

(கொரோனா முதல் அலையின் போது எழுதப்பட்ட நாட்குறிப்புகள் இவை. வாழ்க்கையில் முதன்முறையாக 'ஆரோக்கிய ஊரடங்கை' எதிர்கொண்ட அனுபவம் இது. அவ்வூரடங்கின் அபத்தம் அப்பொழுது பெரிதாகத் தெரிந்தது. மற்றபடி, கொரோனாவையும் அதன் ஊரடங்கையும் லாவகமாய் கையாண்டது இதைப் படிக்கும் பொழுது விளங்குகிறது!)

1 21-03-2020


கொரோனோ நுண்கிருமி பரவுகிறது என்ற கிலியில் உலகம் உறைந்து கிடக்கிறது. இந்தக் கிருமி, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. அதனால், நோயுற்றவர் பரிதாபமானவர் என்பதை விடவும் ஆபத்தானவர் என்று சொல்லப்படுகிறது. உடனடியாய் அவரைத் தனிமைப்படுத்துங்கள் என்பது தான் முதல் அறிவுரை. ஆனால், அந்த நோயுற்றவரை, இன்னார் என்று கண்டுபிடிப்பதற்குள் அவர் பலருக்கும் அதைப் பரப்பி விடுகிறார் என்பது தான். யாரைத் தனிமைப்படுத்துவது என்று தெரியாமல் போகிறது. எல்லோரும் அவரவரைத் தனிமைப்படுத்திக் கொள்வோம் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள். மனிதர்கள் மூலமே நோய் பரவுகிறது என்று சொல்லப்பட்டதும் விவாதத்திற்கு வந்த முக்கியமான விஷயம் - தனிமைப்படுத்திக் கொள்ளுதல்.


தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பதைத் தனது கதவுகளைத் தானே அடைத்துக் கொள்ளுதல் என்று சொல்லலாம். வீடு, பாதுகாப்பான இடம் என்ற ஆதாரமற்ற நம்பிக்கையிலிருந்தே இது சொல்லப்படுகிறது. அதாவது, ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நோயைப் பரப்புவது இல்லை என்பதெல்லாம் இல்லை. ஆனால், ஒரு சிறிய பாதுகாப்பான இடத்தினுள் அடைந்து கொள்வது என்று யோசிக்கும் பொழுது, நமக்குக் கிடைப்பது குடும்பம் / வீடு.


வீட்டுக் கதவை அடைத்து விடுங்கள். வெளியே வராதீர்கள் என்று அறிவிக்கிறார்கள். ஊரடங்குவதற்காக உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.


கொரோனா வைரஸ் யார் மீதான அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது?


குடும்ப உறுப்பினர்களை நம்புகிறோம். அத்தியாவசிய பணிகளைச் செய்பவர்களை நம்புகிறோம். ஆனால், பொது வெளியில் நாம் நன்கு அறிந்திருக்கிற, முகப்பரிச்சயம் உள்ள, தெரிந்தே இராத நபர்களை சந்தேகிக்க ஆரம்பிக்கிறோம். அவர்கள் உயிர்க்கொல்லி நோய்க்கிருமிகளுடன் இருக்க முடியும் என்று சந்தேகப்படுகிறோம்.


அதே போல், பொது வெளியிலுள்ள அனைத்தும் வைரஸ்களால் நிரம்பியுள்ளன என்றும் சந்தேகம் வருகிறது. எதையும் கைகளால் தொடுவதற்கு தயங்குகிறோம். எல்லோரும் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்த மறுக்கிறோம். ‘பொது’ என்ற விஷயம் களங்கப்பட்டிருப்பதாய் நம்புகிறோம்.


‘பொது இடங்களை’ அவநம்பிக்கையோடு பார்க்கிற பழக்கத்தை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. ‘தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்பது தான் நமக்கு சொல்லப்பட்ட பாதுகாப்பு முறை. முதல் கட்டமாக ‘பொது இடங்களை’ மட்டும் தவிர்த்திருக்கிறோம். குடும்பம் குடும்பமாக வீட்டுக்குள் தனிமைப்பட்டிருக்கிறோம்.


ஆனால், அந்த் வைரஸ் பரவுகிற முறையைக் கேள்விப்பட்டால், அது சக மனிதர் அனைவரையும் சந்தேகிக்கச் சொல்கிறது. அவர்கள் உங்களது குடும்பத்தவர்களாகவே இருந்தாலும்.


நிலைமை அத்தனை மோசமாயிருக்கவில்லை. ஆனால், அந்த நாட்கள் தூரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். அப்படியானச் சூழல் ஏற்படும் பொழுது, குடும்ப உறவுகளுக்குள் வினோதமான சிக்கல்கள் உருவாகும். அன்றைக்கு மனிதர்கள் எவ்வாறு வெளிப்படப் போகிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது.


பொது இடங்களை சந்தேகித்து, வீட்டுக்குள் முடங்கிய பொழுது, கைகளை உரக்கத் தட்டி சமூகவயமாதலை நினைவூட்டிக் கொண்டது போல, சக குடும்ப உறவுகளை சந்தேகிக்க ஆரம்பிக்கும் பொழுது என்ன செய்து குடும்பத்தைக் கட்டிக் காப்போம் என்று தெரியவில்லை.


கொரோனா வைரஸ் நமது சமூக உறவுகளையே முதலில் சிதைக்கத் தொடங்குகிறது. ஊரடங்கு அறிவிப்பிற்கு முன்பே, முகநூல், ட்விட்டர் மாதிரியான சமூக ஊடகங்கள் கொரோனாவினால் முடங்கிக் கிடப்பதைக் கவனியுங்கள். அது நம்மை ஏற்கனவே அழித்துக் கொண்டிருக்கிறது.


2 24-03-2020


கொரோனா நுண்மி தொற்று ஏன் பயமுறுத்துகிறது?

1. அது பரவும் வேகம். அம்மையை விடவும் நூறு மடங்கு அதிகம்.

2. கொரோனாவிற்கு கண்ணால் காணமுடிகிற அறிகுறிகள் இல்லை. எனவே, யார் மூலம் எப்படிப் பரவும் என்று தெரியவில்லை. ஒரு அரூப நோய்.

3. மருத்துவரீதியாய் நாம் வெகுதூரம் வளர்ந்து விட்டோம் என்பதை கொரோனா தொற்று மறுக்கிறது. அதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே பெரிய கிலியை ஏற்படுத்துகிறது.

4. கொரோனா, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களை நோயாளிகளாக மாற்றுவதால், அத்தனை விரிவான மருத்துவ வசதிகள் இல்லை என்பது இன்னொரு காரணம். பெரும் மக்கள்தொகையின் சுமையை நீங்கள் உணரத் தொடங்குகிறீர்கள். இந்தியா மாதிரியான நாடுகளில் கொரோனா பரவினால் தடுக்க முடியாமல் போகலாம் என்று சொல்லப்படுவது இதனால் தான். அதாவது, மக்கள்தொகை ஆபத்து.

5. கொரோனா, கறாரான சுயதூய்மையை வழியுறுத்துகிறது. உதடுகளைத் தேய்த்துவிடாமல், நகம் கடிக்காமல், மூக்கைச் சொறியாமல், கண்களைக் கசக்காமல் யாராலும் வாழ்ந்து விடமுடியாது என்பது தான் யதார்த்தம். இந்தச் சுயதூய்மை விதிகளை நினைத்தே நீங்கள் அதிகம் பயப்படுகிறீர்கள்.

6. கொரோனா, எல்லாவற்றையும் சந்தேகிக்க வலியுறுத்துகிறது. உங்களது மடிக்கணிணி, செல்போன், இயர்போன், எழுதும் மேஜை, புத்தகங்கள், உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர், தெரியாதவர், கடவுள்கள், அரசாங்கம், பன்னாட்டு கம்பெனிகள், உலகமயமாதல், முதலீட்டியம்… எல்லோரையும், எல்லாவற்றையும்.


3 25-03-2020


கொரோனா - பீதி வரும் முன்னே, நோய் வரும் பின்னே!


சிலர், அலோபதியில் இதற்கு மருந்துகள் இல்லை என்பதே காரணம் என்கின்றனர். உண்மை.


ஆனால், கொரோனா தொற்று பரவிய நபரின் உயிரை தங்களால் இன்னமும் காப்பாற்ற முடியும் என்றே அலோபதி சொல்லிக் கொண்டிருக்கிறது. அது, ஓரளவு உண்மையும் கூட. அவர்களது உபகரணங்களைக் கொண்டு கொரோனா விளைவிக்கும் ஆபத்துகளை சரி செய்ய முடியும். ஆனால், கொரோனா கிளப்பியுள்ள பீதி அது குறித்தது அல்ல. கொரோனா தொற்று எனக்கு ஏற்படாமல் இருக்க அலோபதியில் ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதே எல்லா மனிதர்களின் கேள்வியும்.


அலோபதி மருத்துவ முறைகளால் நிச்சயமாய் உலகிலுள்ள அனைவரையும் காப்பாற்றி விட முடியாது, ஏனெனில், அப்படியொரு கட்டுமான வசதி எந்த நாட்டிலும் இல்லை.


அப்படியென்றால், பிரச்சினை அலோபதியின் அறிவியல் தன்மையில் இல்லை, அதன் வார்ப்பில் இருக்கிறது. அலோபதி கடந்து ஒரு நூற்றாண்டு காலமாக தன்னை முதலீட்டியத்தின் செல்லப்பிள்ளையாக நினைத்தே வளர்ந்திருக்கிறது. அதன் கறாரான நிறுவனக் கட்டமைப்பு, சொற்பமான செல்வந்தர்களின் உயிர்காப்பானாக மட்டுமே அதனை மாற்றியமைத்திருக்கிறது.


அலோபதியின் சிகிச்சை முறைகளுக்கும், நோய்த்தடுப்பு முறைகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. அதன் சிகிச்சை முறைகள் கொடூர மேட்டிமைவாதம் பேசுபவை (இந்தியச் சூழலில் ‘பார்ப்பனியம்’ என்று சொல்லலாம்). அதன், நோய்த்தடுப்பு முறைகள் மட்டுமே ஜனநாயகக் குணமுடையவை. அம்மை நோய்க்கான தடுப்பூசி ஒரு சிறந்த உதாரணம். தற்போதைய கொரோனா பீதிக்குக் காரணம், அலோபதியில் தடுப்பூசிகள் இல்லை என்பதே.


இதுவொரு சிக்கலான அரசியல் சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. நவீனத்துவம் முன்மொழிந்த நம்பிக்கைகளில் ஒன்றான அலோபதி மருத்துவம் வீழ்ந்து கொண்டிருப்பதை நாம் கடந்த இருபது வருடங்களாகவே அனுபவித்து வருகிறோம். முதல் வீழ்ச்சியை முதலீட்டியம் மீதான அதன் காமம் கொண்டு வந்தது என்றால் இரண்டாவது வீழ்ச்சியை அதன் நடைமுறைத் தோல்விகள் எழுதத் தொடங்கின.


அலோபதி வீழ்ந்த கதையில் அது ஏற்படுத்தும் பின்விளைவுகள் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதே போல், அது தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள பிரம்மாண்ட பொய்யும் இன்னொரு காரணம். புதிய நோய்களின் வருகையின் போது அந்தப் பொய் வெலவெலத்துப் போகிறது.


நவீனத்துவத்தின் இந்த வீழ்ச்சியின் வெளிப்பாடாகவே, மாற்று மருத்துவத்திற்கு ஆதரவானக் குரல்களை கடந்த இருபது முப்பது வருடங்களாக நாம் கேட்டுக் கொண்டிருப்பது.

நோய் மனித இனத்திற்குப் புதிது அல்ல. கொத்து கொத்தாய் செத்து மடிந்த வரலாற்றுப் பதிவுகள் உண்டு. ஆனால், ஒவ்வொரு முறையும், நோயின் உடல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே மருத்துவத்தால் தீர்க்க முடிந்திருக்கிறது. அது அலோபதி என்றாலும் சரி, அல்லது வேறு மாற்று மருத்துவங்கள் என்றாலும் சரி. ஆனால், நோய் உருவாக்குகிற சமூகப் பதட்டம் என்று ஒன்றிருக்கிறது. அதை காலம்காலமாக ‘மூடநம்பிக்கைகள்’ மட்டுமே தணித்திருக்கின்றன.


இன்றைக்கு, கொரோனா தொற்று நோயை முன்னிட்டு நாமொரு வித்தியாசமான சூழலை சந்திக்கிறோம். இந்தச் சூழலில் நம்மை சமூகப் பதட்டமே முதலில் தாக்குகிறது; உடல் ரீதியிலான பிரச்சினைகள் வந்து விடக்கூடும் என்ற அச்சுறுத்தலை மட்டுமே நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.


நோய் பற்றிய கற்பனைகள் மட்டுமே நமக்கு வழங்கப்படுகின்றன. அதன் கொடூரத்தை நீங்கள் உங்கள் வசதிப்படி கற்பனை செய்து கொள்ளலாம். அதாவது, நோய் கட்புலன் சார்ந்து வருவதற்கு முன் கற்பனையாய் உங்களைத் தாக்கத் தொடங்குகிறது. ‘மெய்நிகர் நோயுற்ற’ உலகமொன்றினுள் நாம் வாழ ஆரம்பிக்கிறோம்.


இந்தக் கற்பனை உலகை நிர்மாணிக்க நமக்குத் திரைப்படங்களே பெரிதும் துணை செய்கின்றன. இரண்டு உலகப்போர்கள் பற்றிய திரைப்படங்களும், வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய திரைப்படங்களும். போர்ச் சூழல் இல்லையே தவிர, வேற்றுக்கிரகவாசிகள் வரவில்லையே தவிர ஊரடங்கு உத்தரவு, எல்லைகளை மூடல், தீவிரமான கண்காணிப்பிற்கு உட்படுதல் என்று மற்ற சமாச்சாரங்கள் அனைத்தும் உண்மை. அதாவது, அத்திரைப்படங்களில் வரக்கூடிய வில்லன் கதாபாத்திரம் மட்டும் இன்னும் வரவில்லை. ஆனால், அது அழிவை ஏற்படுத்தப்போவதாக நம்பி நாம் அடுத்தடுத்த காட்சிகளை வாழத் தொடங்கிவிட்டோம்.


எல்லா வில்லத்தனங்களும் ஏதாவது ஒரு அழிவை ஏற்படுத்துவதன் மூலமே தன்னை ஸ்தாபித்துக் கொள்கிறது. நமது கொரோனா கதையில், அந்த அழிவு வருவதற்கு முன்பே அது வந்ததைப் போல வாழத் தொடங்கி விட்டோம். வில்லன் நிஜ அழிவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லாத வகையில், அப்படியொரு கற்பனை அழிவை நாமே நிர்மாணித்துக் கொண்டோம்.


வேறெந்த சமயத்தில் சொல்லியிருந்தாலும் நாம் பிடிவாதமாய் மறுத்திருக்கக்கூடிய ஊரடங்கு உத்தரவு, கருத்துச் சுதந்திர தணிக்கை, தனித்திருத்தல், ராணுவக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு அடக்குமுறைகளை இன்றைக்கு நாமே எல்லோருக்கும் பரிந்துரைக்கிறோம்.


இதை மேலும் சிக்கலாக்குவது என்ன என்றால், இத்தனையையும் நாம் ‘வரும்முன்’ காக்கும் நடவடிக்கையாகச் செய்கிறோம் என்பது தான்.


4 26-03-2020


கொரோனா ’நோயுற்ற நிலப்பரப்பு’


‘கொரோனா தொற்று நோய்’ மனித உடலைத் தாக்கும் முன், தேசத்தையே பிரதானமாகத் தாக்குகிறது. கொள்ளை நோய்களின் இயல்பு இது. வழக்கமான நோய்கள் மனிதர்களை நோயாளிகளாக மாற்றுகின்றன.


ஆனால், கொள்ளை நோய்கள் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் நோயாளியாக சித்தரிக்கின்றன. இதிலிருந்தே அனைத்தும் தொடங்குகின்றன.


இந்த ‘நோயுற்ற நிலப்பரப்பு’ என்ற யோசனை முழுக்க முழுக்க மனிதர்களின் கற்பனை. அந்த நிலப்பரப்பில் மனிதர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிற வேறு எந்தவொரு உயிருக்கும் இந்தக் கொள்ளை நோய்களால் தொந்திரவு இல்லை என்பதைக் கவனித்தால், இது ‘மானுட நிலப்பரப்பு’ மட்டுமே, ‘பெளதீக நிலப்பரப்பு’ என்பது விளங்கும்.


நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவம், ஒவ்வொரு மனிதரையும் நோயாளிகளாக சித்தரித்து வந்திருப்பதை நாம் அறிவோம். அதாவது, உயிர் பிழைத்திருப்பதன் சூட்சுமம், ‘நோயாளி - மருந்துகள் - மருத்துவர்’ என்ற முப்பரிமாணத்திற்குள் ஒளிந்திருப்பதாய் அறிவியல் நம்மை நம்ப வைத்திருக்கிறது.


இதே உயிர் பிழைத்திருக்கும் சூட்சுமத்தை சமயநம்பிக்கைகள் ‘பக்தன் - சடங்குகள் - கடவுள்’ என்று சொல்லி வந்திருப்பதும் நமக்குத் தெரியும். அறிவியல் மிகச் சாதுர்யமாக, நமது பக்தன் என்ற அடையாளத்தை நோயாளி என்று மாற்றியமைத்திருக்கிறது.


பக்தனாக இருப்பதற்கும் நோயாளியாக இருப்பதற்கும் வித்தியாசங்கள் இல்லை என்று நீங்கள் கருதினால், அறிவியலுக்கும் மூடநம்பிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


மனிதனை நோயாளியாகச் சித்தரிப்பது நவீனத்துவத்தின் (அறிவியலின்) வேலை என்றால், நிலப்பரப்பை நோயுற்றதாகச் சித்தரிப்பது உலகமயமாதலில் சித்து வேலை.


அந்த வகையில், கொரோனா கிளப்பியிருக்கும் பீதி வெறும் ‘உயிர் வாழ்தல்’ குறித்த பீதி இல்லை என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். அது நமது தனித்துவம் பறிபோவது குறித்த பதட்டம்.

கொரோனா குறித்து அங்கும் இங்கும் பலகீனமாய் ஒலிக்கும் வாதங்களை நினைத்துப் பாருங்கள்:

இந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு கொரோனா பரவாது!

இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்!

இது போன்ற அத்தனையும் உலகமய முதலீட்டியம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் ‘நோயுற்ற நிலப்பரப்பு’ என்ற வாதத்திற்கு எதிரான முனகல்கள்.


இந்தச் சூழலில் புத்திசாலித்தனமாய் நான் என்ன செய்ய முடியும் என்பதே எனது கேள்வி.


5 27-03-2020


இன்றைய தமிழ் இந்து பேப்பரில் ‘குளுமை கும்பிடு’ என்ற சடங்கு பற்றி எழுதியிருக்கிறார்கள். எழுதியிருப்பவர், கே. கே, மகேஷ். நண்பர் தான். இது போன்ற வினோதமான நாட்டுப்புற வழக்கங்களை எழுதுவதில் மயக்கம் கொண்டவர். இதுவொரு போதை மாதிரி. ஊரில் எல்லோரும் ஆடை உடுத்தியிருக்கும் போது, ஒருவன் மட்டும் நிர்வாணமாய் திரிந்தால், அது செய்தி தானே! அந்தச் செய்தியை வெளியுலகத்திற்கு சொல்வது தான் உங்களுக்கு வேலை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது என்ன செய்வீர்கள்? எவனெவன் எந்தெந்த பகுதிகளில் நிர்வாணமாய் திரிகிறான் என்று தேடி அலைய மாட்டீர்களா? அப்பொழுது ஒரு கிறுக்கு பிடிக்குமே! அதனால் உங்களுக்கு ஒரு உற்சாகம் பிறக்குமே! அந்த உணர்விற்கான போதை. எனக்குத் தெரிந்து நிறைய பத்திரிகையாளர்களுக்கு சாப்பாடே இந்தப் போதை தான். என்னிடம் நாட்டுப்புறவியல் படிக்க வருகிற மாணவர்களுக்கு நான் முதலில் சொல்லித் தருவது ‘இந்தப் போதையை விட்டுத் தள்ளுங்கள்!’ என்பது தான்.


சரி, அந்த செய்திக்கு வரலாம். ‘குளுமை கும்பிடு’ என்றொரு பூஜை. தொற்று நோய்கள் வந்தால் செய்யும் சடங்கு போல. கொரோனா வருகிறது என்று கேள்விப்பட்டதும் தேனி பக்கம் ஒரு கிராமத்தில் இந்தச் சடங்கை செய்திருக்கிறார்கள். அந்தச் சடங்கே ஒரு கார்ட்டூன் மாதிரி தான் இருக்கிறது. கொரோனா வில்லனுக்கு எதிராக ஏதாவதொரு வடிவேலு கதாபாத்திரம் சண்டைக்கு போனால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படி இருக்கிறது.


‘நோய்’ எப்படி ஒரு விற்பனைச் சரக்கோ அது போல ‘ஆரோக்கியமும்’ ஒரு சரக்கு. நீங்கள் ஆரோக்கியமானவர் என்ற நம்பிக்கையை கொரோனா பீதி கேள்விக்குள்ளாக்குகிறது.


6 29/03/2020


தொற்று நோய் வராமலிருக்க நடத்தப்படும் கெடுபிடிகள்,

திரும்பத்த் திரும்ப கைகளைக் கழுவுங்கள் என்ற யோசனை,

ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றியவர்கள் மீதான விமர்சனங்கள், இரவோடு இரவாய் கோயம்பேட்டில் குவிந்தவர்களின் பொறுப்பின்மை குறித்த கோபம், போலீஸ் அடக்குமுறையை நியாயப்படுத்தும் குரல்கள், நமது நாட்டில் மருத்துவ உபகரணங்கள் எண்ணிக்கையளவில் குறைவு என்ற செய்தி, கொரோனாவிற்கு மருந்து இல்லை என்ற உண்மை, டெல்லியிலிருந்து கால்நடையாய் சொந்த ஊர்களுக்கு விரட்டப்பட்டவர்கள் மீதான கருணை, அமைச்சர்களின் வேண்டுகோள், விண்ணப்பம், மன்னிப்பு...

இவ்வளவும்,

ஒரு வேளை, எனக்கு அந்தத் தொற்று நோய் வந்துவிட்டால் அடுத்த நிமிடமே,

என்னைக் கை கழுவி விடுவதற்குத் தான் இல்லையா?

அன்றைக்கு நான் - எனக்கு ஏன் இது வந்தது? - என்று கேட்கிற தார்மீகத்தைக் கூட இழந்திருப்பேன்.


7 30-03-2020


சில தினங்களாக இந்த இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்து....


1.) சமூகத் தொடர்புகளை விலக்கி, தனிமைப்படுத்திக் கொள்ளும் தருணம், சில பேர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெளிப்பட்டு கைகளைத் தட்டிக் கொள்கிறார்கள். என்றால், இன்னும் சில பேர், மனித மாண்புகளையும் கீழ்மைகளையும் சரிசமமாகச் சித்தரிக்கும் (என்று சொல்லப்படும்!) உலக இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆல்பெர் காம்யு, டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி, செகாவ் மாதிரியான இலக்கியங்களில் தஞ்சமடைவது ஆசுவாசமாய் இருக்கிறது என்றாலும் ....


நெருக்கடியான இந்த நேரத்தில் வாழ்வது எந்தவொரு உன்னத இலக்கியத்தையும் விட குழப்பமாக இருப்பதையும் கொஞ்சம் கவனியுங்கள். இந்தக் குழப்ப மனநிலையை எந்த இலக்கியமாவது பதிவு செய்திருக்கிறதா என்றால், இல்லை!


இலக்கியமும், வரலாற்றைப் போலவே தான். எல்லாம் நடந்தேறியதும் சாவகாசமாக மானுட உளவியலை அலசத் தொடங்குகிறது. வரலாறு கண்ணுக்குத் தெரிந்ததை அலசுகிறது என்றால், இலக்கியம் கண்ணுக்குத் தெரியாததை. ஆனால், இரண்டுமே, மரணத்திற்குப் பின் எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்புகள்.


இன்றைக்கு, பக்கத்திலுள்ள கண்ணன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்குப் பொருட்கள் வாங்கப் போயிருந்தேன். பயம் ஒரு பக்கம். கடைக்காரர்கள், 'சீக்கிரம், சார். சீக்கிரம், சார்' என்று பதட்டத்தைக் கூட்டினார்கள். கணிசமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். எல்லோரும் விதவிதமான முகமூடிகளோடு. இடையே ஒரு பணியாளர், மூகமூடி அணியாதவர்களையும் அணியும் படி சொல்லிப் போனார். கர்ச்சீப்பையாவது கட்டிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வெளியே அனுப்பி விடுவோம். உடனே, அணியாதவர்கள் கூட அணிந்து கொண்டனர். பரபரவென்று தேவையான பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, பணத்தை செலுத்தி விட்டு வெளியேறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. டிவியில் காட்டப்படும் ஷாப்பிங் சேலஞ்ச் மாதிரியிருந்தது. ஒரு மரண பயம், அதை ஒட்டியே ஒரு கேளிக்கை மனம்.


விழுவதற்கு முன் உருண்டு கொண்டிருக்கும் தாயக்கட்டை போல இருக்கிறது இந்த கணம். இந்தக் கொரோனா காலம் பேரழிவைத் தந்தது என்றால், இந்த நிமிடத்தின் மரண பயமே ஞாபகத்தில் எஞ்சியிருக்கப் போகிறது. இல்லை, பெரிதாக எல்லோரும் நம்புவது போல் கொரோனா காலம் வந்தது போலவே சென்று விட்டால், கேளிக்கை மனமே மேலோங்கப் போகிறது. நிச்சயமாய், இந்த நிமிட அலைபாய்ச்சலை இலக்கியத்தால் வெளிப்படுத்திவிட முடியும் என்று நான் நம்பவில்லை. இலக்கியம், ஒட்டுமொத்த விளையாட்டும் முடிந்த பின்பே தனது கமென்ட்ரியை ஆரம்பிக்க்கிறது.


அதனால், இந்த நெருக்கடியான நேரத்தில் இலக்கியம் நமக்கு எந்த வெளிச்சத்தையும் தந்து விடாது என்றே நான் நினைக்கிறேன். மானுடம் கீழ்மை, மாண்பு என்ற பண்புகளுக்குள் இல்லை. அப்படியென்றால் என்னவென்று வரையறுக்க முடியாத சிக்கலில் உளன்று கொண்டிருக்கிறது.8 30-03-2020


இன்றைய தனித்திருத்தலை விடவும் தொந்திரவு செய்யக்கூடிய இலக்கியப் பிரதி ஏதும் இருக்கிறதா?


கலை, மாற்றுப் பார்வையை / கோணத்தை வழங்ககூடும் என்பது நம்பிக்கை. எல்லாமும் தலைகீழாகியிருக்கும் கொரோனா காலத்தில் கலை மீதான நம்பிக்கையையே நான் முதலில் இழக்கிறேன்.


கடவுளை நம்பியவர்களுக்குக் கூட பெரிய சிக்கல்கள் இல்லை. கடவுள்களால் செய்ய முடியாத காரியங்கள் உண்டு என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

கலையை நம்பியவர்கள் பாடு தான் பெரும்பாடு. அது உங்களது கடைசி ஆயுதத்தையும் பிடுங்கிக் கொள்கிறது.


9 31-03-2020


'பொது' அழியும் போது...


நான் பேச நினைத்த அந்த இரண்டாவது விஷயம்...


கொரோனா தொற்றுத் தகவல்கள் ஏற்படுத்தும் பதட்டத்திற்கு இணையான பதட்டத்தைத் தரும் 'கொரோனா படங்கள்' இல்லாததை யாரும் கவனித்தீர்களா? இதற்கு முன்பு நாம் பெரிதும் பயந்திருந்த அம்மை நோய்ப் படங்களின் கால் தூசிக்கு வராது இந்தக் கொரோனா படங்கள்.


நமக்குக் கிடைக்கும் கொரோனா வைரஸ் படங்கள் அனைத்தும் அழகாய் இருக்கின்றன. நோய் விளைவிக்கும் பீதிக்கும் அந்த அழகிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


இதுவொரு இக்கட்டான நிலை. வழக்கமாய் காட்சிகளின் மூலமே கிலியை அனுபவித்த நமக்கு, முதல் முறையாக காட்சிகளற்ற பயங்கரத்துடன் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு வேளை, கொரோனா ஏற்படுத்தும் பதட்டத்திற்கு இணையான விஷுவல் ஒன்று கிடைத்து விட்டால் இந்தப் பயம் குறையக் கூட செய்யலாம். கண்ணுக்குத் தெரிகிற பயங்கரத்தை எதிர்கொள்வது எளிது தானே!


கொரோனா தொற்றின் பதட்டம் குறையாமல் இருப்பதற்குக் காரணம், அது கட்புலனுக்கு அப்பால் இருக்கிறது என்பதும் தான்.

கண்ணுக்குத் தெரியாத வைரஸை சோப் / சானிடைஸர் கொண்டு கொல்லச் சொல்வதை யோசித்துப் பாருங்கள். நாம் கண்ணுக்குத் தெரியாத பயங்கரத்துடன் போரிட்டுக் கொண்டிருக்கிறோம்.


கட்புலனுக்கு எட்டாத பயங்கரத்திற்கு ஒட்டுமொத்த மனிதகுலமே பழகுவது நாளடைவில் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும். அதாவது, ஒரு சர்வாதிகாரியை ஆதரிப்பதை விடவும், சர்வாதிகார சிந்தனையை ஆதரிப்பது ஆகக் கொடூரமானது. கொரோனாவிற்குப் பயப்படுவது சர்வாதிகாரச் சிந்தனையை ஆதரிப்பது போல.

கொரோனா தொற்று ஏற்படுத்திய உயிர் பயம் கண்ணுக்குத் தெரியாத சர்வாதிகாரத்திற்கு அடிபணியும் பழக்கத்தை நம்மிடம் ஏற்படுத்தியிருக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், நீதி, நியாயம், தர்மம் போன்ற மானுட விழுமியங்கள் கோலோச்சும் பொதுவெளிகளைப் பயன்படுத்துவதிலிருந்து நாம் நிம்மதியாய் விலகி நிற்கிறோம். அந்த வெளிகள் களங்கமடைந்திருப்பதாய் நாம் நம்பத் தொடங்கியிருக்கிறோம்.

மாறாக, குறுங்குழுவாதங்களும், தனிநபருடமையும், இரத்த சம்பந்தமும் மேலோங்கிய குடும்ப வெளிகள் நமக்குப் பாதுகாப்பானதாக மாறத் தொடங்கியுள்ளன. குடும்பம் வழங்கும் பெளதீக லாபங்களை அனுபவித்த படி, ஆனால் அதன் கருத்தியல் நெருக்கடிகளைச் சகிக்க முடியாத, 'பொது' என்ற சிந்தனையை மறக்க விரும்பாத பலரும் இலக்கியம், சினிமா என்று தங்களை ஏதாவதொரு வழியில் சமூக மனிதனாகக் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள்.

அப்படியொரு நிம்மதியான குடும்ப வெளியோ, அமைப்போ வாய்க்கப் பெறாத பலரும் உதிரிகளாக பொது வெளிக்கு ஓடி வந்து காவலர்களிடம் அடி வாங்குகிறார்கள், கெஞ்சுகிறார்கள், தோப்புக்கரணம் போடுகிறார்கள். இந்தியா முழுவதும், நகரங்களில் பிழைக்கப் போன லட்சோப லட்சம் மக்கள் கிராமங்களை நோக்கி ஓடிப்போவது இந்தப் 'பொது' சீர்குலைக்கப்பட்டதனால் மட்டுமே.

கண்ணுக்குத் தெரியாத சர்வாதிகாரத்திற்குப் பழகுவதும், 'பொது' வெளியை புறக்கணித்து குடும்பத்திற்குள் பதுங்குவதும் அரசியல் தளத்தில் கோரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. நமது விழுமியங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம். அதை, உயிர் வாழும் வேட்கை தூண்டுவது தான் ஆபத்து.


10 31-03-2020


தமிழகத்தில் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலப்பாளையம் அதில் ஒன்று. 'பேரழிவின் விளிம்பில்' என்ற மனநிலைக்கு ஒட்டுமொத்த சமூகமும் வந்த பின்பு, அரசு தனது காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.

எதை எதிர்த்தோமோ அதை ஆதரிக்கவும், எதை ஆதரித்தோமோ அதை எதிர்க்கவும் தயாராகிறது ஜனம்.


'காலி' சர்வாதிகாரத்திற்குப் பணிந்து செல்வதை உயிர் வாழும் உத்தியாக வெகுஜனம் நம்புவது கொடூரம் என்று நான் மீண்டும் சொல்ல விரும்புவேன்.

இதனிடையே இலக்கியச் சண்டை, பண்பாட்டு அடையாளச் சண்டை, பால் அடையாளச் சண்டை போடுகிறவர்களைப் பார்த்து சிரிக்கத் தான் தோன்றுகிறது.


நிறைய கேள்விகளையும் அமைதியிழக்கும் பதில்களையும் வைத்திருப்பது சாபம்.3 views0 comments

Recent Posts

See All

கொரோனா நாட்குறிப்புகள்...

9 10-04-2020 பாசாங்கு என்றால் நடிப்பு என்றும் பொருள். போலச் செய்தல். புனைதல். masquerade. குலசையில் வருடாவருடம் முகமூடித்திருவிழா நடைபெறும். அதில் உங்களால் அம்மனுக்கு நேர்ந்து கொள்ள மு

கொரோனா நாட்குறிப்புகள்...

11 1-04-2020 தொற்று நோயின் வலதுசாரி கற்பனை! ஒரு நோயை எவ்வாறு கற்பனை செய்கிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது எல்லாம். ஒரு உதாரணத்திற்கு, அயோத்திதாசரின் 'அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த

Kommentare


bottom of page