மாமன்னன் பார்த்தேன். மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள். என் கவனத்தை ஈர்த்த சில விஷயங்கள் இவை.
1. ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல், கலை வெளிப்பாடுகளிலிருந்து வெளியேறி அதிகாரத்தை அடைதல் நோக்கி நகர வேண்டிய அவசியத்தைப் படம் பேசுகிறது.
2. அந்த வகையில், வைகைப் புயல் வடிவேலுவின் உருமாற்றமே படத்தின் மையக் குறியீடு. ஒட்டுமொத்த தமிழர்களின் மனதிலும் கோமாளியெனப் பதிந்திருக்கும் பிம்பத்தை அரசாண்மையாக உணர வைத்ததே படம் பேசும் அரசியல்.
3. தலித் என்பது இனிமேலும் சபால்டர்ன் அல்ல என்று மாரி செல்வராஜ் சொல்ல விரும்புகிறார். ஜனநாயக அமைப்பு வழங்கும் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சூட்சும் தலித் அரசியலின் எதிர்காலம் என்று படம் சொல்கிறது.
4. அதனாலேயே முதல் பாதி படம் உணர்ச்சிகரமாகவும், பிற்பாதி ஆவணப்படத் தொனியிலும் காணப்படுகிறது என்று நினைக்கிறேன்.
5. பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர்மகன்’ படத்தை மாரி செல்வராஜ் தொட்டுக் காட்டியிருந்தார். மாமன்னன், அதன் இன்னொரு வடிவமாக இருக்குமோ என்றுகூட நான் எதிர்பார்த்தேன். ஆனால், உண்மையில் அந்தப் படம் மட்டுமல்ல, வடிவேலு நடித்த ஒட்டுமொத்த படக்காட்சிகளையும் மறுவிசாரணைக்கு உட்படுத்தும் படம் இது. வடிவேலுவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், அவர் குறித்து இது நாள் வரை தமிழகம் கொண்டாடி வந்த ‘கோமாளி’ சித்திரம் உடைந்து நொறுங்குவதைப் படம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. கோமாளி, கோமானாக மாறுவதுதான் கதை.
6. எம்.ஜி.ஆர் தொடங்கி கமலஹாசன் வரை அத்தனை தமிழ்க் கதாநாயகர்களும் திரைப்படப் பிம்பம் தந்த வெகுமதிகளை அரசியல் லாபத்த்திற்காக முதலீடு செய்வதையே நாம் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக, திரைப்பட பிம்பத்தை, அரசியல் லாபத்திற்காக அழித்தொழிக்கும் கதையை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
7. வழக்கம்போல, மாரியின் படத்தில் ஏராளமான விலங்குகள் இடம் பெறுகின்றன. ஆனால், முந்தைய படங்களில் காணப்பட்ட பன்முகம் அவ்விலங்குகளில் இல்லை. கெட்டி தட்டி, பன்றி என்றால் இது, நாய் என்றால் இது, குதிரை என்றால் இது தான் என இறுகிப் போயிருக்கிறது. அதே போல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உறவு படத்தில் வெளிப்படவில்லை. விலங்குகளை மிக எளிய குறியீடுகளாக மாற்றுவது, பஞ்சதந்திரக் கதை காலத்து சமாச்சாரம். அதைத் தவிர்த்திருக்கலாம். உதாரனத்திற்கு, பன்றி அவ்வளவு சாதுவானதும் அல்ல; நாய் அவ்வளவு மூர்க்கமானதும் அல்ல.
8. மெய்நிகர் உலக நாயக பிம்பத்தை யதார்த்த உலக அரசியலில் முதலீடு செய்வதையே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். இதற்கு, அதிமுக, திமுக, மய்யம் என்று எதுவும் விதிவிலக்கில்லை. ஆனால், வடிவேலுவின் மெய்நிகர் பிம்பத்தை (கோமாளி), மெய்நிகர் உலகிலேயே மாமன்னன் நிர்மூலமாக்க நினைக்கிறது.
9. சொல்லப்போனால், மாமன்னன் திரைப்படம் ‘கோமாளியின் மரணத்தை’ பேசுகிறது. இனி நீங்கள், இஷ்டம் போல (கவுண்டமணி, சந்தானம் இதில் உச்சம்) அடுத்தவரை கேலிப் பொருளாக்க முடியாது என்பதைப் போல, வடிவேலு பாணியில் உதிரிகளையும் தற்கேலிக்கு உட்படுத்த முடியாது. ஒடுக்கப்பட்டவன் ஆயுதத்தை எடுக்கும்பொழுது, சமூகம் தனது சிரிப்பையே முதலில் இழக்கிறது.
10. கோமாளி, மன்னனாக உருமாறுவதற்கு மூன்று லட்சியவாதங்களின் ஆதரவு தேவைப்படுகின்றன. முதலில், மேலிருந்தோ, அருகிலிருந்தோ நெருக்கடிகள் வராத சுயாதீன அதிகாரத்தின் ஆதரவு. மாமன்னன் படத்தில் அப்படியொரு மாநில முதல்வர் கிடைக்கிறார். இரண்டாவதாக, எதற்கும் அடிபணியாத அதே நேரம் அரசியல் தெளிவும் பெற்ற ஒரு வாரிசு தேவை. மாமன்னனுக்கு அதிவீரன் போல. மூன்றாவதாக, முற்றிலும் நவீனமடைந்த, கல்வியின் மூலமே மேம்பாடு என்பதை உணர்ந்த ஒரு இளைய தலைமுறை. போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மைய மாணவர்கள் போல. இந்த மூன்று, லட்சியவாதக் கதாபாத்திரங்களும் வாய்க்கிறபட்சத்தில் கோமாளி, மன்னனாக மாற முடிகிறது.
11. சமூகப் பிரச்சினைகளில் கலைஞனின் எல்லை எது என்று கேட்டுப் பார்க்கலாம். இதையே இன்னொரு வகையில், கலைக்கும் கணிதத்திற்குமான வேறுபாடு என்ன என்றும் கேட்கலாம். கணிதம், மிகப் பரந்த அளவில் சிக்கல்களைத் தீர்க்கிறது. புதிர்களை விடுவிப்பதுதான் கணித சூத்திரங்களின் அன்றாடம். இதனாலேயே, கணிதத்தை தத்துவத்திலிருந்தும் கலையிலிருந்தும் விலக்கி வைத்திருக்கிறோம். கணிதம், பெருமளவில் தற்செயல்களை அனுமதிப்பதில்லை. அது எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் முழுமையாக்கிக் கொள்கிறது. பின்னங்களை ஒதுக்கித் தள்ளுகிறது.
கலை, இதற்கு நேரெதிர். அது முழுமைகளைக்கூட பின்னங்களாகவே பார்க்கிறது. பிசிர்கள் அதற்கு முக்கியம். அதனாலேயே கலையால் விடைகளையோ ஈவுகளையோ சொல்ல முடிவதில்லை. இன்னும் எளிமையாகச் சொன்னால், கணிதத்தில் வழிமுறைக்கும் விடைக்கும் மரியாதை உண்டு; கலையில் வழிமுறைக்கு மட்டும்.
கலைப் படைப்பு விடையைச் சொல்லத் தொடங்குவதே அதன் வீழ்ச்சி. ஏனெனில், அது ஒரு சுபமான முடிவிற்கான சுலப வழிகளை யோசிக்க ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். ஓர் உதாரணத்திற்கு, ‘கோமாளி அப்பாவை மன்னனாக மாற்ற விரும்பும் மகன்’ என்ற சிக்கலை எடுத்துக் கொள்ளுங்கள். இதைத் தீர்ப்பதற்கு கணிதம் சொல்லும் வழிமுறையை ஒரு கலைஞன் நிச்சயமாய் எடுத்துக் கொள்ள மாட்டான். அப்படிச் செய்யும் போது, நீங்கள் நவீனத்தை இழந்து, ஒரு நீதிக் கதையை மட்டுமே உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
என்னைப் பொருத்தவரை, ‘கோமாளி மன்னனாக மாற விரும்பிய கதை’ என்ற அளவில் சரியானது. அதற்காக, வடிவேலு என்ற ஏற்கனவே நிர்மாணம் செய்யப்பட்ட கோமாளியைத் தேர்ந்தெடுத்ததும் மிகச் சரி. ஆனால், ஒரு கலைஞனாக அந்த உருமாற்றத்தில் நிகழும் அவமானங்கள், ஆற்றாமைகள், தடுமாற்றங்கள், அவநம்பிக்கைகள், அநீதிகள், சமாதானங்கள், இழிவுகள் என்று அதன் வழிமுறையை முன்வைத்திருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். மாமன்னனில் நமக்குக் கிடைப்பது ஒரு பழைய மாயதந்திரக் கதை. மாரி செல்வராஜ் தனது நவீனத்தை ஏன் இழந்தார் என்று தெரியவில்லை.
Comments