top of page

காதல் அகோரம்!

இருபது வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின், ஒரு நல்ல நாளில், மனைவி, கணவன் பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறாள். அம்பலமேறுகிறது என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கலாம். நிஜமாகவே, கணவன் பற்றிய உண்மை இங்கே அம்பலம் தான் ஏறுகிறது.   அவன் இத்தனை வருடங்களும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த பாலீர்ப்புத் தன்மையை அவள் எல்லோருக்கும் முன்னிலையில் வெட்ட வெளிச்சமாக்க விரும்புகிறாள்.  காதல் - The Core என்ற திரைப்படத்தின் கவர்ச்சிகரமான அம்சம் இது. ஒரு தனி மனிதனின் அந்தரங்கம் பகிரங்கமாக வெளிப்படுகிறது!



மேத்யூ தேவசி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. எந்தவொரு தன்பாலீர்ப்பாளராவது (homosexual) இப்படியானச் சூழலில் ரகசியம் வெளிப்படுவதை ஏற்றுக்கொண்டிருப்பாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், பொதுச்சமூகம் இதை ஏற்றுக் கொள்வதாகத் திரைப்படத்தில் காட்டுகிறார்கள். அந்த ரகசியத்தை, அதாவது அவரொரு தன்பாலீர்ப்பாளர் என்பதை அவரது மனைவி மட்டுமல்ல, இன்னும் நிறைய பேர் ஏற்கனவே தெரியும் என்கிறார்கள்.


தன்பாலீர்ப்பாளர் மட்டுமே தன்னுடைய அந்தரங்கம் குறித்து அசூசையும், தயக்கமும் கொண்டிருக்கிறார்.  மற்ற அத்தனை பேரும் அதை மெளனமாக ஏற்றுக் கொள்கிறார்கள்; சில இடங்களில் வெளிப்படையாகவே ஆதரித்தும் பேசுகிறார்கள்.  அவரது இளவயது மகள், அப்பாவின் தன்பாலீர்ர்ப்பு பற்றி தனக்கு ஆட்சேபணை ஒன்றும் இல்லை என்கிறாள்.  ஏற்கனவே அறிந்தவர்கள் மட்டுமல்ல, புதிதாய் தெரிந்து கொண்டவர்களும் கூட தன்பாலீர்ப்பாளரை மரியாதையாகவே நடத்துகிறார்கள்.


ஆனாலும், அந்தத் தன்பாலீர்ப்பாளர் தனது ரகசியத்தை வெளிப்படுத்த மறுக்கிறார். வேறு வேறு காரணங்களைச் சொல்லி அவ்வழக்கிலிருந்து வெளியேற நினைக்கிறார். மனைவியும் சரி, மற்றவர்களும் சரி அவர் பற்றிய உண்மையை நிரூபித்து அவருக்கு நல்லதொரு சுதந்திர வாழ்க்கையை அமைத்துத் தரவே போராடுகிறார்கள்.  அவர் மட்டும் அந்த உண்மை உண்மையில்லை எனவும், அந்தச் சுதந்திரம் சுதந்திரமல்ல எனவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூகத்தின் கருணையை அவரால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.


*



இதுவொன்றும் அத்தனைப் பிரம்மாண்டமானச் சிக்கல் இல்லை.  காலம் காலமாக, தனிமனிதர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், புறக்கணிக்கப்பட்டவர்களும், உண்மை, சுதந்திரம், கருணை என்று எதைக் கருதுகிறார்களோ அதற்கும் மற்றவர்கள் உண்மை, சுதந்திரம், கருணை என்று நம்புவதற்கும் பாரதூரமான இடைவெளிகள் இருந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வது என்றால், விலக்கப்பட்டவர்களின் உள்ளக்கிடக்கையை சமூகம் என்றைக்கும் ஒரு பொருட்டாக நினைத்ததில்லை.  அதிலும் குறிப்பாக, அச்சமூகம் புரட்சிகர மனநிலையில் செயல்படும் போது (இது எப்பொழுதாவது தான் நடக்கும்!) விஷயம் இன்னும் மோசமாகிறது. ஏனெனில், அத்தகைய தருணங்களில் சமூகம் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாக மாறி விடுகிறது.


பாலியலைப் (sexuality) பொறுத்தவரையில் அதுவொரு விலக்கப்பட்ட சொல்லாடல் (prohibited discourse).  பேசக்கூடாத பொருள்.  இன்னும் ஒரு படி மேலேறி, நிகழ்த்தக்கூடிய செயல்கள், நிகழ்த்தக்கூடாத செயல்கள் என்றொரு வகைமையும் அதில் உண்டு. எதிர்பாலீர்ப்பு (heterosexual) நிகழ்த்தக்கூடிய செயல் என்றால், தன்பாலீர்ப்பு நிகழ்த்தக்கூடாத செயல்.  தன்பாலீர்ப்பை பேசவும் கூடாது, நிகழ்த்தவும் கூடாது. இது பொதுவான சமூக விதி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்பாலீர்ப்பை வெளிப்படையாய் பேச அனுமதியில்லை. ஆனால், அவ்வெதிரெதிர் பாலினர் திருமணம் செய்து கொள்ளலாம்; பாலுறவில் ஈடுபடலாம்; குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்; குடும்பமாக வாழலாம். அது பேசக்கூடாத பொருள், ஆனால், அதே நேரம் நிகழ்த்தவேண்டிய பொருள்.  தன்பாலீர்ப்பு, பேசக்கூடாத நிகழ்த்தக்கூடாத சொல்லாடல்!


எது தடை செய்யப்படுகிறதோ அதை ரகசியமாக செய்து கொண்டிருப்பதே  பண்பாட்டின் கோலம். தடைசெய்யப்பட்ட பாலியல் சொல்லாடல்கள், மிக ரகசியமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  அந்த வகையில் தடையே ரகசியத்தை உருவாக்குகிறது. ஒரு தன்பாலீர்ப்பாளர் தனது ஈர்ப்பை அந்தரங்கமாகப் பாதுகாத்து வைக்கிறார் என்றால், அதற்கு அடிப்படையானக் காரணம் அதை சமூகம் தடைசெய்திருக்கிறது என்பது தான். இங்கு சமூகம் என்பது, சட்டப்புத்தகங்களோ அல்லது அதைப் பரிபாலனம் செய்யும் அமைப்புகளோ மட்டும் அல்ல; அன்றாட வாழ்க்கை என்று ஒன்று சொல்லப்படுகிறதே அது தான் ஆகப்பெரிய சமூகம். ஏனெனில், அத்தனைத் தடைகளும் அங்கீகாரங்களும் அன்றாட வாழ்க்கையை முன்னிட்டு தான்!


மேற்கத்திய சமூகங்களின் பாலியல் வரலாற்றை எழுதுகின்ற மிஷல் ஃபூக்கோ (Michael Foucault) ஒவ்வொரு காலகட்டத்திலும் விலக்கப்பட்ட பாலியல் சொல்லாடல்கள் மாறி வந்திருக்கின்றன என்கிறார்.  பதினாறாம் நூற்றாண்டிற்கு முந்தைய மேற்கத்திய சமூகத்தில் எது பாலியல் வெளிப்பாடு என்று கருதப்பட்டதோ அது இப்பொழுது அப்படி இல்லை; மாறாக, எது இயல்பானது என்று கருதப்பட்டதோ அதற்கு இன்று பாலியல் விளக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன (பியானோவின் கால்கள் கவர்ச்சிகரமானவை என்று சொல்லி அதற்கும் கவுன் மாட்டி விட்ட ஐரோப்பியர்கள் கதை சுவராஸ்யமானது).


மிக முக்கியமாக, நவீன மேற்கத்தியவுலகில் உளவியல் என்ற அறிவியலும், பாவமன்னிப்பு என்ற சமய நடவடிக்கையும் பாலியலை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளும் தருணங்களைத் தோற்றுவித்ததை அவர் விளக்குகிறார்.  அதற்கு முன்பு வரை ஜனன உறுப்புகளை சுட்டி எழுத முடியாத, பேச முடியாதிருந்த சூழலை உளப்பகுப்பாய்வியலே (psychoanalysis) மாற்றியமைக்கிறது.  ஆண்குறி (phallus), பெண்குறி (Vagina) என்றெல்லாம் பொதுவில் பேசிக்கொள்ள எழுதிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில், சாராம்சம் அல்ல, ஒரு பொருளின் மீது விதிக்கப்படும் தடையும் விலக்குமே அதை அந்தரங்கமாக்குகிறது அல்லது பகிரங்கமாக்குகிறது.


தன்பாலின ஈர்ப்பாளர்களும் சரி, சமூகத்தின் பிற விலக்கப்பட்ட விஷயங்களை தங்களின் ஈர்ப்பாகக் கொண்டிருப்பவர்களும் சரி, மிகக் கொடூரமான ரகசிய வாழ்க்கையை வாழும்படியே நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களது அன்றாடம் பெரும்பாலும் இருளில் நடக்கிறது. மேத்யூ தேவசியாவுக்குள் நிகழும் மனப்போராட்டத்தின் ஊற்றுக்கண் இது. விலக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தனது பாலியல் ஈர்ப்பிற்காக ரகசிய வாழ்க்கையை மேற்கொண்டு வரும் அவர், ஒரு அற்புத விடியலில் உலகம் அந்தத் தடையை விலக்கிக் கொண்டதாய் பாவனை செய்வதை சட்டென விளங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார். (இந்த இடத்தில், பாலியல் வன்முறையை நினைத்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது.  அத்தகையை வன்முறையில் ஈடுபடும் நபர்களும் இதே போன்று ரகசிய வாழ்க்கை அம்பலமாவதை மறுக்கிறார்கள் என்றாலும், பரஸ்பர தன்பாலீர்ப்பு என்பது வேறு, வன்முறை வேறு.)


தனது ரகசியம் என்பது தனக்கு மட்டுமே சொந்தமானது இல்லை என்பதை எல்லா விலக்கப்பட்டவர்களையும் போல் அவரும் உணர்ந்திருக்க வேண்டும். அப்படியான ரகசியத்தை அம்பலப்படுத்துவதன் மூலம், ஏற்கனவே உண்மை என்று சொல்லப்படுகிற அனைத்தும் பாழாகும் என்பதை அவர் யூகித்திருக்க வேண்டும். அதாவது, ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள சமூக அடையாளங்களைத் துறந்து விட்டு, சமூகம் தரக்கூடியப் புதிய அடையாளத்தை (தன்பாலீர்ப்பாளர்) வரிந்து கொள்ள அவர் தயங்குவதில் நியாயம் இருக்கிறது. அந்த அடையாளத்தை நிகழ்த்துவதற்கான அன்றாட வாழ்க்கை திகைந்து விட்டது என்பதற்கு இந்திய சமூகங்களில் உத்தரவாதம் இல்லை.


*


விலக்கப்பட்டவர்களின் விடுதலையில் நிகழும் இந்தக் குழப்பம் நமக்குப் பரிச்சயமானது. தீண்டத்தகாதவர்களின் விடுதலை குறித்த விவாதத்தில் காந்தியின் அணுகுமுறைகள் பொய்யான வாக்குறுதிகளாகக் கருதப்பட்டதற்கு  அவையனைத்தும் ‘சந்தர்ப்பவாதங்களாக’ இருந்தன என்பது தான் காரணம். சமயங்களுக்கிடையிலான உரையாடல், சமபந்தி போஜனம், தன் அழுக்கைத் தானே தூய்மை செய்தல் போன்ற காந்தியின் அன்றாட வாழ்க்கை நாடகங்களை இந்த நாட்டின் தீண்டத்தகாதவர்கள் நம்ப வேண்டும் என்று அவர் விரும்பினார்.  அவ்வாறு நம்புவதன் மூலம் அவர்கள் கடவுளின் குழந்தைகள் (அரிஜனம் - Harijan) என்ற புதிய அடையாளத்திற்குள் சுதந்திரமாய் வாழலாம் என்று ஆசை காட்டினார்.  அத்திரைப்படம் சித்தரிப்பது போன்ற சந்தர்ப்பவாத நடத்தைகள் கொண்ட மற்றவர்களையே காந்தி போன்ற அரசியல் தலைவர்களும் தொடந்து வழிமொழிகின்றனர். ஏனெனில், அவர்கள் சமூகம் ஒற்றை அதிகாரத்தின் கீழ் இயங்குவதாக நினைக்கிறார்கள். சமயங்கள் அதைக் கடவுள் என்று கற்பிக்கின்றன; சமூகங்கள் தலைவன் என்று சொல்கின்றன.


மனித இனத்தின் தோற்றம் பற்றி விவரிக்கும் போது விவிலியம் இப்படியொரு கதையைச் சொல்கிறது. தடைசெய்யப்பட்ட காரியத்தை மனிதன் செய்வதும் அதன் பின் கடவுள் அவனுக்கு அளிக்கும் புதிய அடையாளமுமே இந்த வாழ்க்கை என்கிறது கிறிஸ்தவம்.  அதாவது, ஒற்றை அதிகாரம் வழங்கிய அன்றாட வாழ்க்கை தான் இந்த பூமியும் அதன் துயரங்களும்!  மனித உயிர்களின் மீது நிகழ்த்தப்பட்ட முதல் வன்முறை இது என்று சொல்லப்படுகிறது.  கடவுள்களுக்கு மனித உடலின் மீதிருந்த அதிகாரம் (Biopower).


ஆதாமும் ஏவாளும் விலக்கப்பட்டக் கனியைத் தின்றதும் அடையும் உள்ளக்கிளர்ச்சி ஆதியாகமத்தில் இப்படி விவரிக்கப்படுகிறது.  ‘அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டன. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் தைத்து தங்களுக்கு அரைக்கச்சைகளைத் தயார் பண்னினார்கள்’ (ஆதியாகமம் - 3:5).  கிறிஸ்தவத்தின் படி, தன்னுணர்வை அடைந்த மனிதன் வெளிப்படுத்திய முதல் உணர்ச்சி, வெட்கம்.  தனது உடல் குறித்த வெட்கம். அது மறைக்கப்படாமல் இருக்கிறது என்பதை அறிந்த வெட்கம்.


இலை தழைகளைக் கொண்டு நிர்வாணத்தை மறைக்க முயன்றது தான் மனிதன் அறிந்து செய்த முதல் நடவடிக்கை. இன்னொரு வகையில், அவர்கள் தங்களை ஆணாகவும் பெண்ணாகவும் உணர்ந்ததால் வெட்கம் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். விலக்கப்பட்டக் கனி, அவர்களுக்குப் பால் அடையாளங்களை உணர்த்துகிறது. அந்த அடையாளங்கள் நாணத்தை ஏற்படுத்துகின்றன.  இதன் பின் அவ்விருவரும் கடவுளைச் சந்திக்கும் காட்சியில் அவர்களின் வெட்கம் அடுத்த கட்டத்தை அடைகிறது.


‘பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்திலே உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.  அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளிந்து கொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன் நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்தில் கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளிந்து கொண்டேன் என்றான்’ (ஆதியாகமம் - 3:8-10).


ஒரு மனிதன் பாலியல் அடையாளத்தை உணரும் முறையைக் கிறிஸ்தவம் இப்படியே வரையறுக்கிறது. பால் அடையாளங்கள் கடவுளுக்கு விரோதமானவை; எனவே, அது குறித்து வெட்கம் கொள்வதே மனித இயல்பு; அந்த வெட்கம் மனிதனுக்கு ரகசியங்களைக் கற்றுத் தருகிறது. இலை தழைகளால் தனது நிர்வாணத்தை மறைக்க முயல்வதே ரகசியத்தின் முதற்படி.  அதன் பின் கடவுளைக் கண்டு ஒளிந்து கொள்கிறான்.  உண்மையை அம்பலப்படுத்தும் கடவுள், அவனைப் புதிய உலகத்திற்குள் புதிய அடையாளங்களுடன் புதிய அன்றாட வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கிறார். வெட்கம், அச்சம், ரகசியம், உண்மை, புதிய அடையாளங்களுடன் புதிய வாழ்க்கை என்ற சுதந்திரம் இதுவே  ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் விடுதலைக்கான வழிமுறை.


தீண்டத்தகாதவர்களின் விடுதலையில் காந்தி ‘கிறிஸ்தவக் கடவுள்’ பாத்திரத்தை ஏற்கத் துடித்தார் என்பது தான் அம்பேத்கரின் குற்றச்சாட்டாக இருந்தது.  முதலில், தீண்டத்தகாதவர்கள் தங்களது உண்மை நிலையை உணர வேண்டும் என்பது காந்தியின் வேண்டுகோள். அதாவது, நலிவுற்றிருக்கிறார்கள், ஏதிலிகளாக வாழ்கிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் (தன்னுணர்வடைதல் என்று பெயராம்!). இதில் அம்பேகருக்கு பெரிய மாற்றுக்கருத்துகள் இல்லை. (ஆனால், அயோத்திதாசருக்கு இருந்தது. அது வேறு கதை!)

அதன் பின், தீண்டத்தகாதவர்கள் சமூகம் வழங்கும் (இங்கு காந்தி வழங்கும்) புதிய அடையாளங்களுக்குள் தங்களைப் பொருத்திக் கொண்டு புதிய அன்றாடத்தைத் தொடங்க வேண்டும். அதாவது, இனி அவர்கள் அரிஜனர்களாக இந்திய தேசத்தில் பலுகிப் பெருகலாம்!  காந்தி தீண்டத்தகாதவர்கள் மீது நிகழ்த்த விரும்பிய உடலரசியலுக்கான் முதற்படி இது.


இந்த விஷயத்தில் அம்பேத்கர் காந்தியிலிருந்து முற்றிலும் மாறுபட்டார். புதிய அடையாளத்தைத் தீண்டத்தகாதவர்களான நாங்களே உருவாக்கிக் கொள்வோம் என்றார்; வெறும் இந்திய அன்றாடம் அல்ல, சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட இந்திய அன்றாடத்தில் வாழ்வோம் என்றார். சட்டப்பாதுகாப்பு கொண்ட இந்திய அன்றாடம் என்றால், வாய்ப்புக்ளைப் பகிர்ந்து கொள்ளும் இடவொதுக்கீட்டு முறையும், தீண்டாமைக்கு எதிரான சட்டங்களும் செல்லுபடியாகும் அன்றாட வாழ்க்கை என்று பொருள்.


*


அடையாளங்கள் உருவாகும் முறை குறித்து எழுதும் ஃபூக்கோ,  கடவுட்கதைகளை முற்றிலும் மறுத்து விடுகிறார். அதே நேரம், அவை பிறப்பாலும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.  சாதி மட்டுமல்ல, பால் அடையாளங்கள் கூட பிறப்பில் தீர்மானிக்கப்படுவதில்லை. மனிதர்கள் தங்களுக்குள் ஊருவதாக (பலவிதமாகச் சொல்லப்படும் harmone கதைகள்) நினைத்துக் கொள்ளும் பாலுணர்வு, உண்மையில்  தன்னிச்சையாகப் பெருகுவதில்லை; அது, தொடர்ச்சியான அதிகாரச் செயல்பாடுகளால் கச்சிதமாக வடிவமைக்கப்படுகிறது.


ஒவ்வொருவரும் உணரும் ஆண்மை / பெண்மை என்ற வகைப்பாடு மிகத் தெளிவான ஒழுங்குவிதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும், அது எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியாதவகையில் அது குறித்த எந்தப் பேச்சும் தடை செய்யப்பட்டிருக்கிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிகாரமே அடையாளங்களை உருவாக்கவும், மறுக்கவும், மீட்டுருவாக்கவும் செய்கிறது என்பதே ஃபூக்கோவின் வாதம்.


அதிகாரமே அடையாளங்களை உருவாக்குகிறது என்றால், அடையாள மறுப்பே அதிகாரத்தை எதிர்க்கும் வழிமுறையா என்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. அரிஜனம் என்று சொல்லப்பட்ட வேளையில், தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்வது அதிகார எதிர்ப்பு நிலையா?  அல்லது, நான் தலித்தும் அல்ல என்று மறுப்பது அதிகார எதிர்ப்பு நிலையா?  இதே போல், தன்னை ஆண் அல்லது பெண் என்ற இரட்டை எதிர்மறைக்குள் அடக்க நினைக்கும் போது, தன்பாலீர்ப்பாளராகவும், பால்மாறிய (transgender) நபராகவும் அறிவிப்பது அடக்குமுறைக்கு எதிரான செயல்பாடாக இருக்க முடியுமா என்று கேட்டவர்களுக்கு, ஜூடித் பட்லர் (Judith Butler) வேறு மாதிரியானப் பதிலை வழங்கினார்.



தன்னிலைகளைத் தீர்மானிப்பதில் அதிகாரத்திற்கு (power) எத்தனைப் பங்கிருக்கிறதோ அதே அளவிற்கானப் பங்கு எதிர்ப்புணர்விற்கும் (resistance) இருக்கிறது.  அதிகாரம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று ஃபூக்கோ சொல்லும் போது, அப்படியானால் எதிர்ப்புணர்வு எங்கே இருக்கிறது என்றொரு கேள்வியும் நமக்கு எழுகிறது.  எல்லா இடத்திலும் அதிகாரமே இருக்கிறபட்சத்தில் அதற்கு ‘அதிகாரம்’ என்ற பெயர் தேவைப்படுவதே இல்லையே.  எதிர்ப்புணர்வு என்று ஒன்று இருந்தால் மட்டுமே அதிகாரத்தை நம்மால் உணர முடியும்.  அப்படியானால், அதிகாரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் எதிர்ப்புணர்வும் இருக்கிறது என்று அர்த்தம்.


எங்கெல்லாம் ஆண் / பெண் என்று பால் அடையாளங்கள் வலியுறுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் அதைத் தொடர்ச்சியாக எதிர்க்கிற அடையாளங்களும் இருந்து கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் - ஒரேயொரு வேறுபாட்டோடு, அதிகாரம் வெளிப்படையாய் செயல்படுகிறது என்றால், எதிர்ப்புணர்வு ரகசியமாகவே செயல்படுகிறது. மாத்யூ தேவசியாவின் தன்பாலீர்ப்பு வாழ்க்கையைப் போல அது இருளுக்குள் ஒளிந்திருக்கிறது. அதை நீங்கள் அன்றாட வாழ்வின் வெளிச்சத்திற்குள் கொண்டு வரும் போது, அதிகாரம் திடுக்கிடுகிறது.


எதிர்பாலீர்ப்பாளர்களின் காதல் வாழ்க்கைக்கானக் குறிப்புகள் வகைதொகையில்லாமல் நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாய், மாத்யூ தேவசியின் மனைவி, ஓமணா பிலிப், இருபது வருடத் திருமண வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று, தனது பழைய எதிர்பாலினக் காதலைத் தேடிச் செல்லும் போது, ஒரு சராசரித் திரைப்படப் பார்வையாளரால் அதை விலாவரியாய் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, 96 திரைப்படத்தின் ஜானு கடைசியில் ராமுடன் இணைவதற்கானக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டாள் என்று சொன்னவர்கள் நிறைய பேர்.


ஆனால், தன்பாலீர்ப்பாளர்களின் காதல் கதை எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.  ‘அண்ணலும் நோக்கினான்; அவனும் நோக்கினான்’ என்ற கர்ண கொடூர காட்சியை மட்டுமே திரைப்படத்தாலும் நமக்குக் காட்ட முடிகிறது.  பால்புதுமையினர் (Queer) தங்களை வெளிப்படையாய் அறிவித்துக் கொண்டு வலம் வரும் அன்றாட இந்திய வாழ்க்கையை நாம் அறிந்திருக்கவில்லை.  அப்படி அவர்கள் பொதுவெளியில் தங்களை நிகழ்த்திக் காட்டும் போது, பிற இந்தியர்கள் ‘எங்களுக்கொன்றும் பிரச்சினை இல்லை’ என்று நிச்சயம் சொல்ல மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.   ஏனெனில், அவ்வாறு பெருந்தன்மையாக நடந்து கொள்வதற்கான முன் தயாரிப்புகள் இந்திய சமூகங்களில் நடைபெறவில்லை. 


தன்பாலீர்ப்பாளர்களின், பால் மாறியவர்களின், பால் புதுமையினரின் தத்தம் அடையாள நிகழ்த்துதல்கள் இந்தியப் பொதுவெளிகளில் நடந்து, அதனால் வெகுஜனம் அரண்டு, முரண்டு, பின் தெளிந்து வந்ததல்ல இந்தப் பெருந்தன்மை.  இன்னும் சொல்லப்போனால், பால் புதுமையினரை எதிர் கொண்ட வரலாறு நமக்கு இல்லை.


எல்லா காலனிய நாடுகளிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.  எந்தவொரு நவீனத்துவச் செயல்பாட்டிற்கும் நம்மிடம் வரலாறுகள் இல்லை. நமக்கு முடிவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.  அதை அடைந்த வழிமுறைகளை அனுபவிக்கும் வாய்ப்புகள் நமக்கு இல்லை.  அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்கட்டும் அல்லது ஒரு அரசியல் கருத்தாக்கமாக இருக்கட்டும் அல்லது ஒரு தத்துவ நிலைப்பாடாக இருக்கட்டும், அதைக் கருவுற்று சுமக்கிற வாய்ப்பை நமது சமூகங்கள் இழந்து விட்டன.  காதலை இழந்து கலவியில் மட்டுமே திளைக்கிற சமூகம்.  இதன் காரணமாகவே, எந்தவொரு புதிய சிந்தனை ஐரோப்பிய சமூகங்களிலிருந்து அறிமுகம் ஆகும் போதும், ‘இது அந்தக் காலத்திலேயே இந்தியாவில் இருந்தது’ என்று சொல்லி நம்மை நாமே வேடிக்கைப் பொருட்களாக்கிக் கொள்கிறோம்.  இப்போது கூட பால்புதுமையினர் பிரச்சினை விவாதிக்கப்படும் போது, ‘இந்திய சமூகங்கள் பால் புதுமையினரை காலம்காலமாக மரியாதையோடே நடத்தி வந்திருக்கின்றன’ என்று பழம் பிரதிகளையும் தொன்மங்களையும் ஆதாரங்களாகத் தூக்கி வருவதற்கு நம்மில் ஏராளம் பேர் உண்டு.  ஆனால், நாம் தொடர்ந்து சிலாகிப்பது போல நமக்குப் பாரம்பரியமான வேர்களோ, வலிமையான வரலாறோ இல்லை என்பது தான் உண்மை.

34 views0 comments

Comments


bottom of page