அன்புள்ள தர்மராஜ்,
நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியராக மட்டுமே அறிந்திருந்த உங்களின் அரங்கக் கலை ஈடுபாடு வியப்பிற்குரியது. அகாஸ்டோ போயலின் தாக்கத்தால் உருவான பாதல் சர்க்காரின் வீதி நாடகப் பயிற்சியில் கலந்து கொண்டவன் என்பதால் நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
போயலின் அரங்கம் குறித்து தமிழில் பெரிதாய் எதுவும் எழுதப்படவில்லை என்று என் அனுமானம். இல்லை, எழுதியிருக்கிறார்களா? அதைவிடவும் அந்தப் பெண் கொலம்பியா பல்கலைக்கழகப் பெண்ணின் துணிச்சலும் மனவுறுதியும் என்னைக் கவர்ந்தது. இது அரங்கக் கலையில் ஈடுபாடு கொண்ட நபருக்கே உரித்தான கர்வத்தைக் காட்டுகிறது.
உங்களது கட்டுரையில் அப்பெண்ணின் சக்தியை என்னால் பார்க்க முடிந்தது. எனக்கு உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். இதே போன்ற பாலியல் வன்முறையை அனுபவித்த கோவில்பட்டி நாடகக் கலைஞர்களின் சார்பாக நான் கேட்கிறேன். நீங்கள் இது பற்றி வெளிப்படையாய் எழுதவில்லையே ஏன்? அரங்கம் பற்றி அக்கறை உள்ளவர் என்பதால் இதைக் கேட்கிறேன். இப்பொழுது எழும்பியுள்ள பிரச்சினை நமது நவீனநாடக அரங்கையே காலாவதியாக்கி விடக்கூடும் ஆபத்து இருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று அறிய விருப்பம்.
பாஸ்கர சந்திரகுமார், அழகுநாச்சியார் புரம்.
*
அன்புள்ள சந்திரகுமார்,
‘இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலக்கூடாதா?’
என் வாழ்நாள் முழுக்க, ஒவ்வொரு பிரச்சினையின் போதும், நான் சொல்லிக் கொள்ளும் வாசகம் இது. இதனால் எந்தப் பிரச்சினையும் என்னை விட்டு அகன்றதில்லை என்பது வேறு விஷயம்.
சமீபத்தில் இந்த வாசகத்தை நான் மீண்டும் எதிர்கொண்டேன்.
ஏனெனில், கோணங்கி, என் நண்பன்; கார்த்திக், என் மாணவன்.
அதிகாலையில் யாரோ எழுதிய ஒரு மின்னஞ்சலை கார்த்திக் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார். அது கோணங்கி மீதான பாலியல் குற்றச்சாட்டு. கார்த்திக், கோணங்கி மீது மரியாதை கொண்டவர்; மணல்மகுடி நாடகக் குழுவோடு பணியாற்றியவர். அவரே அம்மின்னஞ்சலைப் பகிர்ந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொலைபேசியில் கூப்பிட்டேன்.
‘என்ன கார்த்திக் இது?’
‘சார், நான் நேர்ல வரவா?’
அடுத்த ஐந்தாவது நிமிடம் என் அலுவலகம் வந்தார். அவரது கருத்தின் படி, இந்த விவகாரம் மணல்மகுடிக் குழுவிலிருந்த அனைவருக்கும் தெரியும். ஏன், முருகபூபதிக்கே தெரியும். கோணங்கி பலரிடமும் இந்தப் பலாத்காரத்தை நிகழ்த்தியிருக்கிறார் செய்திருக்கிறார். அவர்களில் சிலர் முருகபூபதியிடம் பல்வேறு தருணங்களில் புகாராகவே இதைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும், ஒவ்வொருவரிடமும் ‘அப்படியா?’ என்று முதல் முறை கேட்பது போலவே அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கோணங்கி, எல்லோரிடமும் நெருக்கமாகப் பழகக்கூடியவர். கலை, இலக்கியத்தை நோக்கி நகரும் இளைஞர்களை எப்பொழுதும் உற்சாகப்படுத்தக்கூடியவர். தயக்கமின்றி உரிமை எடுத்துக் கொள்கிறவர். அவரது சுபாவம் அது.
‘கார்த்திக், கோணங்கி பழகுகிற முறை ஊருக்கேத் தெரியும். அவர் சகஜமாக தோளில் கை போட்டு பேசக்கூடியவர்; பிறரைப் பாராட்டும் முகமாகக் கட்டிப்பிடிப்பது அவர் வழக்கம்; நாடகக் கலைஞர்களை உற்சாகப்படுத்த முத்தமிடக் கூடச் செய்திருக்கலாம். இதையெல்லாம் யாரும் கூட தவறாக நினைக்க முடியும். ஆனால், இதில் குற்றம் எதுவும் இல்லையே! இந்த வகைத் தீண்டல் சிலருக்கு ஒவ்வாமையைத் தருகிறது என்றால், அவர்கள் தெளிவாகச் சொல்லி விட்டு விலகி நிற்கலாமே! நீங்கள் சொல்வது அந்த வகையா?’
‘இல்லை சார். இது பாலுறவு தொடர்பானது…’
அவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை. நான் தலையைக் குனிந்து கொண்டேன்.
கார்த்திக், 2017ல் என்னிடம் மாணவராக வந்து சேர்ந்தார். இளங்கலை இயற்பியல் பட்டதாரி. முதுகலை இயற்பியலைத் தொடர முடியாமல் விட்டு விட்டார். நாடகத்தில் ஈடுபாடு. இலக்கியத்தில் ஆர்வம். எங்கள் துறையில் நாட்டுப்புறவியலில் முதுகலை, அதன் பின் இளமுனைவர் படித்து முடித்தார். இப்பொழுது என்னிடமே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறவர். ‘நிகழ்த்துக்கலைகளில் மெய்’ (அதாவது ‘நடிகர்களின் உடல்’) என்பதுதான் அவரது ஆய்வுப் பொருள். இதற்காக, கூத்தில் பெண் வேஷம் கட்டுகிற கலைஞர்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். சாமி கொண்டாடிகளைத் தனியே சந்தித்து வருகிறார். நவீன நாடகக் கலைஞர்களைச் சந்திப்பதும் இதில் அடங்கும்.
‘மணல்மகுடி நடிகர்கர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, இந்தப் பாலியல் வன்முறையை நிறைய பேர் பேசுவதைக் கேட்டேன். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொண்டும், புழுங்கிக் கொண்டும் இருந்த விஷயம் இப்பொழுது வெளியே வந்திருக்கிறது. எனக்கும் 2013ல் இப்படித்தான் நடந்தது.’
நான் அவரைக் கை உயர்த்தி நிறுத்தினேன். இதைத் தொடர்ந்து கேட்க எனக்கு விருப்பமில்லை.
‘இல்லை, இதை நான் சொல்லியே ஆக வேண்டும். பத்து வருஷங்களுக்கு முன்னாடி… அன்னைக்கு அத எப்படி எடுத்துக்கறதுனு எனக்குத் தெரியல. கோணங்கி கூப்பிட்டா போகாம இருக்க என்னென்ன பண்ணணுமோ அத்தனையும் பண்ணி பாத்தேன். என்னால முடியல. ‘கலைப்பயணத்தில் இதுவும் ஒரு அங்கம்னு’ அவர் சொல்லியிருக்கார். அதத் தான் நான் நம்புனேன். ஆனா, இன்னொரு பக்கம் அருவருப்பு. எனக்கு என்ன பண்றதுனு தெரியல.
‘நான் பதட்டமாவே இருப்பதை பாத்துட்டு வீட்டுல, ‘நாடகம் வேண்டாம்னு’ சொல்லிட்டாங்க. நாடகம் தான் இதுக்குக் காரணம்னு சொன்னாங்க. எனக்கும் அப்படித்தான் தோணுச்சு.
கோணங்கியும் அதைத் தான் சொன்னார்: ‘கலைஞர்களைப் பாத்து, பாமரர்கள் பைத்தியம்னு சொல்வாங்க.’ வீட்டுல, மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணாங்க. ‘இனி நாடகத்துக்குப் போக வேண்டாம்னே’ சொல்லிட்டாங்க. நானும் நாடகம் தான் நமக்கு மனச்சிதைவைக் கொண்டு வந்துச்சினு நம்பிட்டிருந்தேன்.
பத்து வருஷத்துக்கு பெறவு இப்பதான் எனக்கு உண்மை தெரியுது. ஆய்வுக்காக மணல்மகுடி நடிகர்கள்ட்ட பேசிட்டிருந்தப்போ அவுங்க இந்தப் பிரச்சினையப் பத்தி பேசிட்டிருந்தாங்க. அவுங்க சொல்ற கதயக் கேக்கிறப்போ ‘எனக்கும் தானனு’ எனக்குத் தோண ஆரம்பிச்சுது. அவுங்க சொல்ற மனக்குழப்பம், என்னோட மனக்குழப்பம். அவுங்க சொல்ற பதட்டம் என்னோடது. அவுங்க சொல்ற அசிங்கம், என்னோட அசிங்கம். ‘அப்படின்னா நான் மனச்சிதைவுக்கு உள்ளானது நாடகத்தால இல்ல, கோணங்கி தான் பிரச்சினை’ங்கற தெளிவு எனக்கு ஏற்பட்டுச்சு. போலியா ஒரு கலை அனுபவத்தைக் காட்டி எங்கள ஏமாத்திருக்காங்க.’
‘எனக்குப் புரியுது, கார்த்திக். என்ன செய்யலாம்னு முடிவு பண்ணிருக்கீங்க?’
‘இப்பதான் நிறைய பேர் பேச ஆரம்பிச்சிருக்காங்க. இத, பொதுவெளிக்குக் கொண்டு போகனும்.’
‘பொதுவெளின்னா… ஊடகமா?’
‘பத்து வருஷமா எனக்கு நடந்தத வெளியே சொல்ல முடியாம மருகிக்கிட்டிருந்தேன். இப்ப, அதுவே எனக்கு பதட்டமா இருக்கு. நான் தப்பு பண்ணலனு எனக்கு நானே நம்ப ஆரம்பிக்கனும். இப்ப நிறைய பேர் பேசும்போது, இதுல என் தப்பு ஒண்ணும் இல்லனு விளங்குது. பொதுவெளிக்கு வரும் போது நாங்க சுத்தமா அதிலருந்து வெளிய வந்துருவோம். இப்படி இன்னும் நிறைய பேர் அந்தக் களங்கத்திலிருந்து வெளிய வருவாங்க. எங்களுக்கு இருக்கிற Social anxietyய நாங்க வெற்றி கொள்ளனும்.’
‘சமூக ஊடகத்தில் நிச்சயம் இது நடக்கும்; கூடவே, இன்னும் பல விஷயங்களும் நடக்கும் தெரியுமா?’
‘தெரியும், சார்.’
அப்புறம்தான் நான் அவரிடம் இப்படிச் சொன்னேன்.
‘நீங்கள் மூன்று விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். முதலில், சமூக ஊடகங்கள் மூலமாக இதைப் பேசுவது, மனச் சிக்கல்களிலிருந்து வெளிவரவே என்பதை எந்தக் கணத்திலும் மறந்து விட வேண்டாம். அதாவது, சமூக ஊடகம் நீதிமன்றம் அல்ல.
இரண்டாவது, சமூக ஊடகம் வெகுஜன வெளி என்பதால், ஒட்டுமொத்த விவகாரமும் பாதிக்கப்பட்ட உங்களின் கைகளிலிருந்து வேறு வேறு மாயக்கைகளுக்குச் சென்றுவிடும். அப்பொழுது, பழைய வன்மம், குரோதம், வெறுப்பு, நீண்ட கால நட்பு, சாதி அபிமானம் என்று பலரும் பல மாதிரி பேச ஆரம்பிப்பார்கள். அது உங்களை எந்த வகையிலும் பாதித்து விடாமல் தனித்தே இருங்கள்.
மூன்றாவது, இந்த ஒட்டுமொத்த பிரச்சினையையும் உங்களது ஆய்வின் ஒரு பகுதியாக நினைத்துக் கொள்ளுங்கள். இப்படியான பாலியல் வன்முறைகளின் அடிப்படைகளையும், கருத்தியல்களையும் விவாதிக்க ஆரம்பியுங்கள். அதை எழுத முடியுமா என்று பாருங்கள்.’
சரி என்று சொல்லிவிட்டுப் போன கார்த்திக் அன்று மதியமே தனது தரப்பை மிக விரிவாக எழுதி, பொதுவெளியில் பதிவு செய்தார். அதன் பின் அந்த விவகாரம் பல ரூபம் எடுக்க ஆரம்பித்தது.
*
கோணங்கியை எனக்கு 1987லிலிருந்து தெரியும். மிகச்சிறந்த கதைசொல்லி. அதைவிடவும் சிறந்த மக்கள் தொடர்பாளர். பாரம்பரியத்தின் மீதும் குடும்ப சாதி உறவுகள் மீதும் அளவுகடந்த நம்பிக்கை உடையவர். ஒரு நன்னாளில், அவர், பின்னை நவீனக் கலைஞனாகத் தன்னை வரித்துக் கொண்ட போது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், தமிழில் பின்னை நவீனத்துவத்தை விளங்கிக் கொண்ட லட்சணத்தை நினைத்து, ஆச்சரியத்தைக் குறைத்துக் கொண்டேன். அவர் தனது எழுத்து முறையை முற்றிலுமாக மாற்றிக் கொண்டார். சோதனை முயற்சியில் இருக்கிறார் என்றும் அதிலிருந்து அவர் எதையாவது கற்றுக் கொண்டு வெளிவரக் கூடும் என்றும் நான் காத்திருந்தேன்.
அதனால், அவரது மொழிச் சோதனைகள் குறித்து என்னிடம் சாதகமான பார்வைகளே இருந்தன. ‘பாழி’ என்ற நாவலோடு அவர் வெளிப்பட்டபோது, அதை வெளியிடுவதற்காக ‘மதுரை – போடி’ ரயிலில் நானும் பயணம் செய்தேன். அவரது எழுத்து முறை, நாம் பழகியிருந்த வாசிப்பு முறையை எள்ளி நகையாடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதனால், கோணங்கியின் எழுத்தை வாசிப்பதற்கு விசேஷமான முறையென்று எதுவும் இருக்க முடியுமா என்று நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அப்படி எதுவும் இல்லை என்ற முடிவிற்கு வர சில வருடங்கள் பிடித்தன.
அவரது எழுத்து பிரம்மையை உருவாக்கும் வகையில் எழுதப்படுவது. நமக்குப் புரியாத ஏதோ ஒன்று இருக்கிறது என்ற பிரம்மை. பாரம்பரிய தமிழ் இலக்கியத்தின் தந்திரம் இது. அன்றைக்குப் படைப்பாளிகள் இறையனாராகவும் இறை அடியார்களாகவும் இருந்ததால் அந்தத் தந்திரம் செல்லுபடியானது.
இந்தப் பிரமிப்பைப் புத்தகத்தால் மட்டுமே உருவாக்க முடியாது. அதற்கு வலுவான நிறுவன பலம் தேவை. அந்தக் காலத்தில் மதங்கள், மற்றும் மடங்கள் இதே வேலையாக இருந்தன. அப்பிரதியை அபூர்வப் பிரதியாக மாற்றுவது ஒரு வழி. எங்காவது ஒரு சில இடத்தில் மட்டுமே அச்சுவடிகள் இருக்கும். அதையும் பூஜைப் பொருளைப் போலப் பேணிப் பாதுகாப்பார். அதாவது, அந்தப் பிரதி அரிதானது என்ற யோசனையை விதைக்கும் முறை இது. உவேசா தமிழிலக்கியப் பிரதிகளை அச்சுக்குக் கொண்டு வருவதற்குப் பட்ட பாடுகள் இதை நமக்கு நன்கு உணர்த்தும்.
அச்சு இயந்திரங்களின் வருகையின் மூலம் நவீன இலக்கியச் சூழலில் இந்த ‘அரிது’ என்ற விஷயம் காலாவதியானது. எழுத்து, பிரக்ஞை, லயம் என்று விதவிதமான இதழ்கள். புதியப, புதிய புத்தகங்கள். ஒட்டுமொத்த சூழலும் தலைகீழாய் மாறியிருந்தது. அதன் பின், அச்சிட்ட நூற்களை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை என்பதே இலக்கியத்தின் கவலையாக இருந்தது.
இந்தச் சமயமே பலரும் பின்னை நவீனம் தமிழின் சாபக்கேடாக, பின்னை நவீனம் என்றாலே ‘மரபை மீட்டெடுத்தல்’ என்றாகிப் போனதால், கோணங்கி தனது நூற்களையும் அரிதாக்கிக் கொண்டார். அவரது நாவல்கள் விலைக்குக் கிடைப்பது அரிது; கிடைத்தாலும், படிக்க முடிவது அரிது. அது போலவே கல்குதிரையும்.
வாசகனுக்குத் தர வேண்டிய அபரிதமான வாய்ப்புகளை விட்டு விடலாம், நவீனத்துவம் வாக்களித்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கொன்றொழித்த இந்தக் ‘கோணங்கி மாடலுக்கு’ பின்னை நவீனத்துவம் என்ற பெயர் வைத்த கூத்து தமிழில் மட்டுமே நடந்தது. படைப்புகளைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்தப் பிரம்மையே ஏராளமான இளைஞர்களை இவர்கள் நோக்கி ஈர்க்கிறது.
இந்தப் பூடகத்தையே கோணங்கி தனது குற்றங்களுக்கு மூலதனமாகக் கொண்டிருந்தார். அவரால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் யாரும் அவரது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. கோணங்கி கட்டி எழுப்பிய பிரமிப்பு மட்டுமே அவர்களை எதிர்த்துப் பேசா மடந்தைகளாக்கியிருக்கிறது. அவரது நிழலாகச் செயல்பட்ட மணல்மகுடி நாடகக்குழு ஒட்டுமொத்த குற்றமும் நிகழும் களமாக மாற்றப்பட்டிருக்கிறது.
*
என் திட்டமெல்லாம், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான வெகுஜனப் பிரக்ஞை உருவாகும் வரை நீங்களும் நானும் இதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும். மீண்டும் மீண்டும். அதை நான் தொடர்ந்து செய்வேன்.
இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு தந்ததற்கு, உங்களுக்கே நன்றி சொல்ல வேண்டும்.
டி. தருமராஜ்.
Comments