/பொதுப்புத்திக்குத் தோதான பலியாடுகளாக தலித்துகளை உருவாக்கியளித்த இந்த செயல்திட்டத்தின் விஷத்தில்தான் இன்று திரெளபதி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என நான் சந்தேகிக்கிறேன். லும்பத்தனமாக மட்டுமே காதலைத் துவக்குவது தமிழ் நிலத்தின் அனைத்து ஜாதி ஆடவர்களின் வழக்கம். அன்றும் இன்றும். கருத்தியல் தளத்தில் இந்தமாதிரி விஷத்தைக் கக்கி வைப்பவர்களை எப்படி எதிர்கொள்வது?/
செல்வேந்திரன்.
*
அன்புள்ள செல்வேந்திரன்,
இப்படி கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பொதுப்புத்திக்குத் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், பொதுப்புத்தி கட்டுரைகளைத் தன்னருகே சேர்த்துக் கொள்வது இல்லை.
ஆனாலும், கட்டுரையைப் பற்றித் தெரியாமல், அதே தொனியில் பொதுப்புத்தியும் யோசித்திருக்கிறது என்பதே இப்பொழுது ஆச்சரியம். இந்த ஆச்சரியத்திலிருந்து நான் இப்படியொரு கேள்வியையே கேட்டுக் கொள்கிறேன்: பொதுப்புத்தி போலவே தானா ஆய்வுப்புத்தியும்?
ராமதாஸ் வகையறாக்கள் இப்படியான ஆய்வுகளிலிருந்து அரசியலைக் கற்றுக் கொள்வது இல்லை. ஒரு வேளை தலைகீழாக நடக்கக் கூட வாய்ப்புகள் உண்டு. அதாவது, ராமதாஸ்களிடமிருந்து இந்த ‘ஆய்வாளர்கள்’ எதையாவது கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் தலித்துகளைப் பற்றிய பார்வையில் இந்த ஆய்வாளர்களுக்கும் ராமதாசுக்கும் வித்தியாசம் இல்லை.
இப்படியானக் கட்டுரைகளின் சந்தை உலகளாவியது. அதன் நிதி மூலங்கள் பன்னாட்டு நிறுவனங்களாலும் உலக வங்கியாலும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த ஆய்வுச் சந்தை, உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொரு கச்சாப்பொருளை இறக்குமதி செய்கிறது. இந்தியக் கச்சாப்பொருள் 'சாதி'. அவை பிராமணியம் மற்றும் தலித் என்ற பண்டங்களாக உருமாற்றப்பட்டு தொடர்ந்து விநியோகிக்கப்படுகின்றன.
பிராமணர்களைப் பற்றியும் தலித்துகளைப் பற்றியும் நீங்கள் புதிதாக எதையாவது சொல்கிறீர்கள் என்றால் உங்கள் பொருளின் விற்பனைக்கு உத்தரவாதம் உண்டு. அந்த வகையில், பிராமண எதிர்ப்பு இயக்கம், தலித் விடுதலை இயக்கம் போன்றவை மிகச் சிறந்த பிராண்டுகள். இந்தச் சந்தையை ஆங்கில அறிவுலகம் தனது ‘கறாரான’, ‘அறிவியல்பூர்வ ‘முறையியல் மூலமாகக் கட்டுப்படுத்துகிறது. பிராமண எதிர்ப்பு இயக்கதையும் தலித் விடுதலை இயக்கத்தையும் கூட அந்த முறையியலின் படி நீங்கள் வெட்டியும் ஒட்டியும் தைத்துத் தர வேண்டியிருக்கும்.
தலித்துகள் பற்றி ஓர் உலகப் பொதுச் சித்திரத்தை இவர்கள் உருவாக்குவார்கள். தலித்துகள், உலகின் வேறெந்த ஒடுக்கப்பட்டவரையும் போல நலிந்தவர்கள், பிற்போக்குத்தனமானவர்கள், அரசியல்படுத்த வேண்டியவர்கள், ஏதிலிகள், காட்டுமிராண்டிகள், ஆணாதிக்கம் நிறைந்தவர்கள் …. இப்படி நிறைய. இந்தச் சித்திரத்தை தலித்துகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தலித் விடுதலைக்கு ஆதரவாக நிதியுதவியிலிருந்து சிந்தனையுதவி வரைக்கும் கூட செய்வார்கள். இந்த ஆய்வாளர்களும் தலித் ஆதரவாளர்களே, திராவிட ஆதரவாளர்களே என்ற கூற்றிற்கான நியாயம் இது.
பல நூற்றாண்டுகளாக தலித்துகளுக்கு இந்த உதவி தேவைப்பட்டிருந்தது என்பதே உண்மை. ஏனெனில், இந்திய சாதிப் பொருளாதாரம் அத்தனைக் கோரமாக இருந்தது. ஆனால், அம்பேத்கர் எதிர்பார்த்தது போல, இடவொதுக்கீட்டின் பயனாக இந்நிலை கணிசமாக மாறியும் வந்திருக்கிறது. 90களில் அம்பேத்கர் நூற்றாண்டு ஏற்படுத்திய உற்சாகத்திற்கு அதுவே காரணம். ‘தலித்’ விடுதலைக் குரல்கள் கேட்க ஆரம்பித்ததும் இப்படியே. இந்தச் சூழலிலேயே, சாதி விடுதலைக்கான சுயாதீனக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
இந்தக் கட்டுரை வெளிவந்த காலத்தைக் கவனித்துப் பாருங்கள். அப்பொழுது தான் தமிழக தலித் இயக்க வரலாற்றில், தமிழ்ச் சிந்தனையாளராக அயோத்திதாசர் அறிமுகமாகிறார். அவரது வருகை, தலித் தன்னிலை உருவாக்கத்தில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கியது. அவரது சிந்தனையிலிருந்தே தலித்துகளுக்கான சுயாதீன தன்னிலை தோற்றம் கொள்கிறது.
உலகப் பொதுவான 'தலித்' பண்டத்திற்கு எதிரான புதிய பார்வை இது. அயோத்திதாசர் என்ற பெயரே இதை ஏற்படுத்துகிறது. முற்றிலும் வேறு பாணியில் ‘ஒடுக்கப்பட்ட’ பண்பாடும், வரலாறும், விடுதலையும் யோசிக்கப்படுகிறது. அதன் விளைவாக, உலக ஆய்வுச் சந்தையின் 'தலித்' பண்டத்தின் பொய்மை அம்பலப்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாகவே, அயோத்திதாசரின் முறையியல் என்ன? அவர் சொல்வது அறிவியல் பூர்வமானதா? அவர் ஆய்வுத்துறையில் பயின்றவரா? அல்லது கதைவிடுகிறாரா என்றெல்லாம் உலகச் சந்தை சந்தேகத்தை எழுப்புகிறது. அதை இங்குள்ளவர்களும் பிரதிபலிக்கிறார்கள்.
அயோத்திதாசர் அறிவியலுக்குப் புறம்பானவர் என்று நிரூபிப்பது மட்டுமே அவர்கள் நோக்கமில்லை. அவர் பற்றி எழுதக்கூடிய யாரும் அறிவியலுக்குப் புறம்பானவர்கள் என்று நிரூபிக்க விரும்புகிறார்கள். எனது ‘அயோத்திதாசர்’ புத்தகம் பற்றி சொல்லப்படும் 'கப்ஸா, பீலா' போன்ற அவதூறுகளும் இந்த வகையைச் சார்ந்தவையே.
ஏனெனில் அவர்கள் இந்தப் புதிய சுயாதீன தலித் தன்னிலை பொய்யானது என்றே நிரூபிக்க விரும்புகிறார்கள். அதாவது, தலித்துகள் மத்தியிலிருந்து சிந்தனைகள் உருவாக முடியாது என்ற நிற / சாதி வெறி யோசனைகளிலிருந்து இது உருவாகி வருகிறது. அந்தக் கட்டுரை இந்த மனநிலையையே அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது.
எனது முந்தைய நூலின் வழியாக, 'நான் ஏன் தலித்தும் அல்ல?' என்று சொல்வதற்கும் இதுவே முக்கியமானக் காரணம். 2015 - 2016 வருடங்களின் பெரும்பகுதியை ஐரோப்பாவில் கழித்து விட்டு, ஒரு அதிகாலையில் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, தோன்றிய வாக்கியம் அது.
அந்த வாக்கியம் - நான் ஏன் தலித்தும் அல்ல? - மனதினுள் உருவான கணம் என்னை ஒரு இறகைப் போல நான் உணர்ந்தேன். ஏனெனில், அந்த இரண்டு வருடங்களும், ஆய்வுகளின் உலகச் சந்தை இயங்கும் முறைகளை நான் நேரடியாகக் கண்டிருந்தேன். அது எனக்குள் பெரும் சுமையாக மாறியிருந்தது.
அந்த இரண்டு வருடங்களும் என்னுள் ஏற்பட்டிருந்த தன்னிலை நெருக்கடியிலிருந்து இரண்டு விஷயங்களே என்னைக் காப்பாற்றின - ஒன்று, அயோத்திதாசர், இன்னொன்று இளையராஜா. இருவருக்கும் ஆழமான தொடர்புகள் இருந்தன. அதை நான் அங்கேயே விளங்கிக் கொண்டேன். அப்பொழுதே 'நான் ஏன் தலித்தும் அல்ல?' என்று உணரத் தொடங்கினேன்.
அந்த நிமிடமே ‘அயோத்திதாசர்’ நூல் யாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும் என்பதையும் நான் முடிவு செய்து விட்டேன். அப்படி முடிவு செய்த நேரம், இப்புத்தகத்தின் இறுதி நூறு பக்கங்கள் எழுதப்படவே இல்லை.
Comments