(பாடகர் SPBயின் மரணத்திற்கு தமிழகம் அடைந்த கிளர்ச்சி கண்டு சாரு நிவேதிதா வருத்தப்பட்டிருந்தார். அதன் பின், வழக்கம் போல், சாரு குறித்து நிறைய பேர் வருத்தப்பட ஆரம்பித்தனர். எழுத்தாளர்கள் ஏன் மரணம் குறித்து அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பது நீண்ட நாள் கேள்வி. ஏனெனில், எழுத்தே மரணம் தான் என்பது நீண்ட நாள் பதில்.) எழுத்தாளராவது தான் எனது முதல் கனவாக இருந்தது. அப்பொழுதே, எப்படி இறந்து போக வேண்டும் என்றும் கற்பனை செய்திருந்தேன். இதுவொரு இரட்டைக் கனவு. எழுத்தாளராக விரும்புகிற ஒவ்வொருவருக்கும் பிரத்யோகமான மரண ஆசையும் இருக்கிறது. என்னவொன்று, மரண ஆசையை மட்டும் கடைசி வரை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். மரண ஆசை என்றதும், தற்கொலைக்கான வேட்கை என்றெல்லாம் நினைத்து விசனம் கொள்ள வேண்டாம். தற்கொலையைத் தவிர்ப்பதற்காகத் தானே எழுதவே ஆரம்பிக்கிறார்கள். அப்படித் தவிர்த்த பின்பும் மரணம் அவர்களை விடுவதாய் இல்லை. தங்களைப் பற்றி கிளுகிளுப்பாக எதையாவது கற்பனை செய்யச் சொல்கிறது. இதைத் தான் மரண ஆசை என்று சொல்கிறேன். கிளுகிளுப்பான மரண ஆசை என்றும் சொல்லலாம். கொஞ்சம் அந்தரங்கமாக நெருங்கி, ‘உங்களது மரணம் எப்படி சம்பவிக்க வேண்டும் என்று ஆசை?’ என்று மட்டும் எழுத்தாளர்களிடம் கேட்டுப் பாருங்கள். வண்டி வண்டியாய் சொல்வார்கள். இதில் அவர்களைக் குற்றம் சொல்லி பயனில்லை. எழுத்து ஒரு ஜடப்பொருள். அந்த வகையில், எல்லா எழுத்தும் உயில் தான். எனது மரண ஆசைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. இப்படித்தான் எல்லா எழுத்தாளர்களும் சொல்வார்கள். ஆனாலும், இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எனது ஆசைகள் கரடுமுரடானவை. மரணத்தோடு எனக்கு நீண்ட உறவு இருக்கிறது. எனது பெயரில் அப்பாவுக்கு ஒரு தம்பி இருந்தார். தம்புராஜ், தம்பி தருமராஜ். எஸ். ரா. ராமசாமிகள் குறித்து எழுதியதைப் போல இந்த ‘ராஜ்கள்’ குறித்து யாராவது எழுதலாம். உலகத்தில் அவ்வளவு ராஜ்கள் உண்டு. பழைய தருமராஜ் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர். பதினெட்டு வயதில், பாய்ந்து வந்த கால்பந்து மார்பில் மோதி, சவேரியார் பள்ளிக்கூட மைதானத்திலேயே இறந்து போனார். அதற்கு இரண்டு வருடம் கழித்து நான் பிறந்தேன். ஞாபகார்த்தமாய் நான் தருமராஜ் ஆனேன். விபரம் தெரிந்த வயதில் நான் கேட்ட முதல் கதை தருமராஜ் இறந்த கதை தான். மரணம், நான் பிறக்கும் முன்னே எனக்காகக் காத்திருந்தது. சின்ன வயதில் என்னை யார் பார்த்தாலும் அந்த உரையாடல் இப்படித்தான் நடக்கும்: ‘பேரென்ன?’ ‘தருமராஜ்’ ‘அப்படியே அவுக சித்தப்பா மாதிரியே இருக்கானே!’ பழைய தருமராஜின் மங்கலான புகைப்படத்தை நானும் பார்த்திருக்கிறேன். நிச்சயமாக அப்படியே எல்லாம் இல்லை. அவர்களுக்கும் கூட இது தெரிந்திருக்கும். ஆனால், இப்படி பேசுவது தான் வழக்கம். ‘நடை கூட அப்படித்தான் இல்ல. சைடு வாக்குல அவன் தானோனு இருக்கு!’ இப்படியே கேட்டுக் கேட்டு ஒரு கட்டத்தில் நானே கூட அதை நம்ப ஆரம்பித்திருந்தேன். நான் பதினெட்டு வயதில் இறந்து போய், இப்பொழுது பிறந்திருக்கிறேன். சரியாகச் சொன்னால் எனக்கு வயது 18+. இந்தப் பிரம்மை விலகக் கொஞ்சம் வருடங்கள் பிடித்தன. ஏற்கனவே இறந்த தருமராஜ் நான் இல்லை என்று தெளிந்து கொஞ்ச நாட்கள் தான் நிம்மதியாக இருந்தது. அதன்பின் மீண்டும் பிரம்மை பிடித்து ஆட்டத்தொடங்கியது. இந்த முறை வேறொரு பிரம்மை. ‘தருமராஜ்’ என்ற பெயருள்ளவர்கள் பதினெட்டு வயதில் இறந்து போவார்கள் என்ற சாபமோ அல்லது சாங்கியமோ இருக்ககூடுமோ? இது விதண்டாவாதம் என்று தெரியும். ஆனால், விதண்டாவாதம் பயத்தைத் தரும் பொழுது எழுத்தாளனாக ஆசைப்படுபவன் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?
பத்தொன்பது வயது வரை நான் பயந்து கொண்டுதான் இருந்தேன். இந்த பயமே என் வாழ்க்கையைத் தீர்மானித்தது. பழைய தருமராஜ் கால்பந்து வீரர் என்றால் நான் ஹாக்கி விளையாடுகிறவன். மிகச் சரியாக பதினேழாவது வயதில் திடுதிப்பென்று விளையாடுவதை நிறுத்தினேன். ஏன் என்ற ரகசியம் என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், ஏதோவொரு மைதானத்தில், ’இதோ இப்பொழுது இறக்கப் போகிறேன், இப்பொழுது இறக்கப் போகிறேன்’ என்றே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நடுக்கத்தோடு. போதாக்குறைக்கு பாளையங்கோட்டையில் எங்கு திரும்பினாலும் மைதானங்கள் வேறு. இந்த மரண பயத்தை எழுதியது தான் ஆரம்பகால இரண்டு சிறுகதைகள் - சவேரியார் கல்லூரி ஆண்டு மலரில் வெளிவந்த ‘பாத்திரம்’ என்ற கதையும், அஸ்வமேதாவில் வெளிவந்த ‘பதினொரு வளைகோல்களும் ஒரு பந்தும்’ என்ற சிறுகதையும்.
பதினெட்டு வயதில் நான் சாகவில்லையே தவிர, அதற்குக் கொஞ்சமும் சளைக்காத பயம் இருந்தது. ஒரு வழியாய் அதைக் கடந்து வந்த போது தான், எனக்குள் மரண ஆசைகள் உருவாகத் தொடங்கின. சாகவில்லை என்று தெரிந்ததும், ’இயற்கையான சாவு நமக்கு இல்லை!’ என்று நம்ப ஆரம்பித்தேனா என்பது தெளிவில்லை. ஒரு வேளை இருக்கலாம். சாகாவரத்தை விரும்பாத எழுத்தாளன் யார்? இருக்கலாம். அதனால் கூட எனக்கு மரண ஆசைகள் வர ஆரம்பித்திருக்கலாம்.
போதாக்குறைக்கு, நான் தான் எழுத்தாளன் ஆவது என்று சங்கல்பம் எடுத்திருக்கிறேனே? இரண்டு, மூன்று சிறுகதைகள் வேறு எழுதி அச்சில் பார்த்தாயிற்று. இனியும் சாதாரணமாக செத்துப் போவது எப்படி சரியாக இருக்கும்? அப்பொழுது தான், மகோன்னத சாவொன்றைக் கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
அந்தக் கனவின்படி, நான் இறந்த சேதி கேட்டு உலகமே ஸ்தம்பித்து நிற்க வேண்டும்; மக்கள் அனைவரும் மீளாத் துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள். நிறைய பேருக்கு உறக்கம் கெடும். ‘எப்படி, எப்படி? எப்படி தருமராஜ் இறந்து போகலாம்?’ என்றே எல்லோரும் புலம்பிக் கொண்டிருப்பர். யாராலும் யாரையும் சமாதானப்படுத்த முடிந்திருக்காது. எல்லா சமாதானங்களையும், தத்துவ விசாரங்களையும் கடந்த மரணமாக அது நிகழும். விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட மரணம்!
இப்படியொரு கனவைக் கண்டது குறித்து எனக்கு திருப்தியாக இருந்தது. என்னை நானே பாராட்டிக் கொண்டேன். இந்த மரண ஆசைக்கு ஒரே ஒரு வரலாற்று முன்மாதிரி தான் இருந்தது. பாளையங்கோட்டையின் கிறிஸ்தவனான எனக்கு எது முன்மாதிரியாக இருந்திருக்க முடியும் என்று உங்களில் சிலர் யூகித்திருக்க முடியும். நீங்கள் நினைத்தது, சரி.
பாளையங்கோட்டை ஈஸ்டர் கொண்டாட்டங்கள் மீதான பொறாமை தான் என்னை அப்படி நினைக்க வைத்தது. ‘இறந்தா, இந்த மனிதனைப்போல இறக்க வேண்டுமய்யா! என்னவொரு சாவு!’
நானும் இயேசு கிறிஸ்துவைப் போல இறந்து போக விரும்பினேன்.
இது உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால், அதற்கு முன், ஒரு எழுத்தாளனாக எனது பிரச்சினையையும் மனதில் இருத்தி நிதானமாக யோசியுங்கள். ஒரு மகோன்னத சாவைக் கற்பனை செய்ய வேண்டிய இக்கட்டில் நான் இருக்கிறேன். ஒரு எழுத்தாளனாக நான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில், நான் வேறு எப்படி யோசித்திருக்க முடியும், சொல்லுங்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, உலகம் முச்சூடும், நாற்பது நாட்கள் போல அழுது அரற்றும் மரணத்தை விடவும் உன்னத மரணம் வேறு என்ன இருக்க முடியும்?
இயேசு கிறிஸ்துவாக இறந்து போவதில் பன்முக லாபங்கள் இருப்பதையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு நல்ல கிறிஸ்தவன் இயேசு போல வாழ வேண்டும் என்றே வேதம் சொல்கிறது, நானோ இயேசு போல சாகவும் விரும்புகிறேன்! இது எவ்வளவு புனிதமான காரியம்! இந்தியாவிலிருந்து முதல் புனிதர் உருவாகப் போகிறார் என்பதும், அவரொரு தமிழ் எழுத்தாளர் என்பதும் இந்த மண்ணுக்கே பெருமை சேர்க்காதா?
இரண்டாவதாக, இயேசு கிறிஸ்துவின் மரணம் ஒரு படுகொலை என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. அரச பயங்கரவாதம் என்றும் சொல்லலாம். அப்படியொரு மரணத்தை நான் விரும்புகிறேன் என்றால் நான் வன்கொலை செய்யப்பட விரும்புகிறேன் என்றே பொருள். இது எழுத்தாளர்களுக்கே வரக்கூடிய துணிச்சல் என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். அப்படியானால் நான் இயந்திரத் துப்பாக்கியாலோ அல்லது ஏவுகணையாலோ அல்லது கனரக வாகனம் ஒன்றினாலோ கொல்லப்பட வேண்டும் என்று யோசித்து வைத்தேன். இதில் நான் அடையக்கூடிய வேதனை ஒரு பக்கம் இருக்கட்டும். அதை நினைத்து எனக்குக் கொஞ்சமும் கவலை இல்லை. எனது ஒரே நோக்கம், உங்களையெல்லாம் நிலைகுலைய வைக்கும் வகையில் மரணத்தைத் தழுவ வேண்டும் என்பது தான். இதற்காக ஒரு எழுத்தாளனாக நான் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தேன்.
இயேசுவின் மரணத்தைப் போல என் மரணமும் மானுடத்தை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டதில் ஒரு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. இதுவெல்லாமே எனது இருபதுகளில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பதினெட்டு வயதில் குடும்ப சாபத்தை வென்று வந்தவன், என்னை அறியாமலேயே இன்னொரு சாபத்திற்கு ஆட்பட்டுக் கொண்டேன்.
இயேசு கிறிஸ்து தனது முப்பத்து மூன்றாவது வயதில் இறந்து போனார். அப்படியானால் நானும் முப்பத்து மூன்றில் இறந்த போக வேண்டும். அந்தக் காவிய மரணத்தில் வயதிற்கும் முக்கிய பங்கு இருந்தது. இயேசு கிறிஸ்து எழுபது வயது போல வாழ்ந்திருந்து சிலுவையில் அறையப்பட்டார் என்று யோசித்துப் பாருங்கள். துக்கமானி சரசரவென கீழிறங்குவது தெரியும். அந்த மரணத்தில் மகோன்னதத்தைக் கொண்டு வந்ததில் வயதிற்கும் பங்கிருந்தது. அப்படியானால் நானும் முப்பத்து மூன்றில் அரச பயங்கரவாதத்திற்குப் பலியாக வேண்டும். அதற்கு நான் தயாராகவே இருந்தேன்.
ஆனால், இருபதுகளில் யோசிக்கும் பொழுது வயோதீகமாகத் தெரிந்த முப்பத்து மூன்று அவ்வளவு சீக்கிரம் வந்து விடுமென்று தான் நான் நினைக்கவில்லை. முப்பதுகளை நெருங்க நெருங்க நான் பதட்டமடைய ஆரம்பித்தேன். அப்பொழுது தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்பதை அந்தந்த வயதை அடையும் போது தான் மனிதர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். எழுத்தாளர்களும் இதில் விதிவிலக்கில்லை.
முப்பத்து மூன்று வயதில் இறந்து விடப் போகிறேன் என்பதைத் தீவிரமாக நம்பினேன். அந்த வருடங்களில் நான் எழுதிய நாட்குறிப்புகள் அனைத்தும் மரணத்தை சுற்றியே அமைந்திருந்தன. சுற்றியே என்ன சுற்றியே, அத்தனையும் இறப்பு குறித்த தத்துவார்த்த அலசல்கள். ஒரு வகையில் பய உளறல் கூட. நிறைய தத்துவங்கள் அப்படித்தான்.
இத்தருணத்தில், ஒரு எழுத்தாளராக நான் அடைந்த வேதனைகளை நீங்கள் கருணையோடு அணுக வேண்டும் என்று நினைக்கிறேன். இப்படியொரு பதட்டத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று யாரிடமும் சொல்ல முடியாது. சொன்ன உடனேயே ‘தேவ தூஷணம்’ என்று கண்டுபிடித்துவிடுவார்கள். அல்லது, ஏதோவொரு கிறுக்கு என்பதாக நினைக்கத் தொடங்கலாம். அல்லது, அவதாரம் என்று சொல்லி ஏமாற்றுகிறவன் என்று அவப்பெயர் கிடைக்கும். எழுத்தாளனாக ஆசைப்பட்டு, கிறுக்கனென்றும் ஏமாற்றுப் பேர்வழி என்றும் பெயரெடுப்பது எவ்வளவு கொடுமை! அதனால் நான் இந்த விஷயங்களை யாரிடமும் சொல்லவில்லை.
தன்னந்தனியே பயந்து கொண்டிருந்தேன். உலகிலுள்ள அத்தனை எழுத்தாளர்களுக்கும் இது தான் பிரச்சினையே. அவரவர், அவரவர் சக்திக்கு ஏற்ப இப்படி பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள். யாரிடமும் சொல்ல பகிர முடியாத பயம். குறிப்பாக வாசகர்களிடம்.
ஆசைப்பட்டது போல, முப்பத்து மூன்றாவது வயதில் நான் இறந்து போகவில்லை என்பதை இந்நேரம் நீங்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும். அது பெரிய விஷயம் இல்லை. ஆனால், அந்த ஆசையைக் கடந்து வருவதற்குள் நான் அடைந்த விசாரத்தைத் தான் எழுத்தில் கூட வடிக்க இயலாது.
ஒவ்வொரு எழுத்தாளனும், உன்னத மரணத்திற்காக ஏன் ஏங்குகிறான் என்பதை வாசகர்களாகிய நீங்கள் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்கையான மரணமோ அல்லது துக்கிரமான மரணமோ, அந்த மரணம் பேசப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே எழுத்தாளனின் அவா. துக்கிரமான மரணத்திற்கு சமகால உதாரணங்களே நிறைய சொல்ல முடியும். சுப்பிரமணிய பாரதியின் ஈமச்சடங்கு ஈயாடியது; ஜி. நாகராஜன் அனாதரவாக இறந்தார்; பிரம்மிளின் கல்லறை அடையாளமின்றி கிடக்கிறது; கோபிகிருஷ்ணன் இன்னும் மோஷம். இதுவெல்லாமும் கூட உன்னத மரண வகைகள் தான். என்ன ஒன்று, எதிர் உன்னதங்கள்.
கொண்டாட்ட மரணங்கள் அரசியலாளர்களுக்கும் கேளிக்கையாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகின்றன. அந்த சமயங்களிலேயே எழுத்தாளன் உணர்ச்சிவசப்பட ஆரம்பிக்கிறான். சதா காலமும் மரணத்தோடு மட்டுமே சமர் செய்து கொண்டிருக்கிற தனக்கு ஏன் இந்தக் கொண்டாட்டங்கள் மறுக்கப்படுகின்றன என்று நியாயம் கேட்கக் கிளம்புகிறான்.
‘எழுத்தாளன் இறந்து போனான்’ என்று ரோலாண் பார்த் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகும் கூட வாசகர்களாகிய உங்களில் யாரும் அழுது புலம்பக் காணோம் என்றால், அவன் என்ன தான் செய்வான்? சொல்லுங்கள்.
Comments