top of page

‘எதிர்த்தரவு’ – காட்டுக்கதைகள்!

Updated: Sep 26, 2023



முதல் பத்து நாட்களுக்கு எனக்கு எந்த வழக்காறுகளும் கிடைக்கவில்லை. நாட்டுப்புறவியலில் ஒரு மூட நம்பிக்கை உண்டு என்று சொன்னேன் அல்லவா? அது மூடநம்பிக்கை அல்ல, நிஜம்.


நானோ கதைகளைச் சேகரிக்க கிராமங்களுக்குப் போயிருந்தேன். என்னால் ஒரு கதையைக்கூடச் சேகரிக்க முடியவில்லை. ஆனால், அந்த சமயம், கி.ரா., பாரததேவி போன்றவர்கள் ஏராளமான கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருந்தனர். அதனால், தமிழகக் கிராமங்களில் கதை சொல்லும் வழக்கம் அழிந்துவிட்டது என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், எங்கே சொல்கிறார்கள் என்பதைத்தான் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. யாரிடம் கேட்டாலும் தெரியாது என்றார்கள்.


‘ஒரு பாட்டி சொல்லும், ஆனால், ஊர்ல இல்லயே! மகன் கூட சென்னைக்கிப் போயிருச்சி’.


‘நீங்க ஒண்ணு செய்ங்க. ராமர் கோவில்ல பண்டாரம் இருப்பாரு. அவர்ட்ட கேளுங்க. அவர்தான் கதைகள சொல்வாரு’.


ராமர் கோவிலில் பண்டாரம் இருந்தார். விஷயத்தைச் சொன்னதும் உற்சாகமாய் பேசத்தொடங்கினார். ‘உங்களுக்கு ராமர் கதை வேணுமா, பாரதக் கதை வேணுமா?’


‘இல்ல, நான் தேடி வந்தது…’


‘புஸ்தகமா வேணும்னாலும் சொல்லுங்க, வாசிக்கிறேன். இல்ல, கதையா வேணும்னாலும் சொல்றேன். பதிஞ்சிக்கங்க.’


‘இல்ல, எனக்கு சின்னப்புள்ளைகளுக்குச் சொல்ற ராஜாராணி கதை மாதிரி வேணும்’.


‘அத நான் சொல்றதில்லைங்க. நீங்க ஊருக்குள்ள விசாரிங்க’.


ஊருக்குள், இந்த முறை சிறுவர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டேன். அவர்களுக்கு என்னிடமிருந்த ஒலிப்பதிவுக் கருவிமீது ஆர்வம். அதனால், கும்பலாய் என்னோடு சுற்ற ஆரம்பித்தார்கள். அப்படித்தான் கருப்பாயி என்ற பாட்டியிடம் என்னை அழைத்துச் சென்றார்கள். அந்தப் பாட்டி அவர்களுக்கு அவ்வப்போது கதை சொல்லியிருக்கிறது. ‘காட்டுக்குப் போய்ட்டு, இருட்டுனதும்தான் வரும். அப்ப போகலாம்.’


இரவு ஏழு மணி வாக்கில், கருப்பாயியை அவரது வீட்டில் போய் சந்தித்தேன். சின்ன குச்சில் தனியே வசித்து வந்தது. நாங்கள் போனபோது, யார் குச்சிலோ என்பது போல, ஒரு ஓரமாய் ஒடுங்கி உட்கார்ந்திருந்தது. விஷயத்தைச் சொன்னேன்.


‘இந்தச் சில்வண்டுக கூட்டு வந்துச்சாக்கும்!’


‘பகலு முழுக்க, காட்டுலயே தான் இருந்தேன். உடம்புக்கு முடியல. கஞ்சி காய்ச்சலாம்னு அடுப்புல போட்டுட்டு உக்காந்திருக்கேன். ஒரு மாதிரி குதுகுதுனு வருதுய்யா.’


‘ஏன், என்ன ஆச்சி, பாட்டி?’


‘நேத்து காட்டுக்குப் போய்ட்டு வார வழியில ஒரு நாயி காலுக்குள்ள ஓடிருச்சி. சனியன். பக்கத்தில சுடுகாடு பாத்துக்கோ. அங்கன எதையாவது தின்னுச்சோ என்னவோ? அதுலர்ந்து குதுகுதுனே வருது. சுடுகாட்டு வாட புடிச்ச நாயின்னா இப்படித்தான் பண்ணும்.’


எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘உடம்ப பாத்துக்கங்க பாட்டி. ஆஸ்பத்திரிக்கி போலாம்ல’.


‘சுடுகாட்டு நாயி மோந்த காச்சலுக்கு ஆஸ்பத்திரில என்ன மருந்து இருக்கு?’


கருப்பாயி பாட்டியிடமும் வழக்காறுகள் சேகரிக்க முடியவில்லை என்று ஆனதும், எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. எனக்குத் தெரிந்த மொத்த வித்தையையும் நான் இறக்கிப் பார்த்தும் கதைக்கு ஆகவில்லை.


‘இப்பல்லாம், சின்னக் குழந்தைகளுக்கு யாரு கதை சொல்றா?’


‘பெருசகல்லாம் போய்ச் சேந்துருச்சி.’


‘ஏ, மேலத்தெருல வடிவு நல்லா கத போடுவால்ல’.


‘அவள வேணா வரச்சொல்லலாமா?’


‘வருவாளோ என்னமோ?’


‘நாம வேணா அங்க போலாமே!’


‘அவுக வீட்ல ஒத்துக்க மாட்டாக’.


‘அவள வரச்சொல்லுட்டி, அவன்னா தொடந்து கத போடுவா. இன்னைக்கிக் கூட நடுவைல கத போட்டுட்டு கிடந்தாளுக.’


‘நடுவைன்னா?’


‘காட்டுல பொம்பளைக வேல செய்யப் போவம்லா? நடுவைக்கு, கள பொறுக்க. அப்ப கதை போடுவாக.’


‘வேலை நடக்கும் போதா? நாத்து நடும்போது பாட்டு தான பாடுவாங்க. கதை சொல்வாங்களா?’


‘பாட்டெல்லாம் சும்மா சாங்கியத்துக்கு. சாமியக் கும்பிடும் போது பாடுவாக. அப்புறம் கதைகதான்.’


‘காட்டுல வேல செய்யும்போது கதை சொல்வீங்களா? யாருக்கு சொல்வீங்க?’


‘ஏன் வேல செய்றவங்களுக்கு தான்!’


‘என்ன கதைங்க?’


‘ராசா கதை. நேத்துகூட பாம்பு ராசா கதைனு ஒண்ணு போட்டா. ஏட்டி, வடிவுட்ட கேளுங்கட்டி, வாராளானு. அவள சும்மானாத்துக்கும், கதை சொல்ல மட்டுமே நடுவைக்கி கூட்டிட்டுப் போவாக’.


எனக்கு இது புதிய தகவல். தேவதைக் கதைகளின் தமிழக வடிவமே ராசா கதைகள் என்பதைப் படித்திருக்கிறேன். ஏனெனில், தமிழகக் கதைகளில் அல்லது நம்பிக்கைகளில் தேவதை என்ற கதாபாத்திரமே இல்லை. ஆனால், சப்தகன்னிகள் உண்டு. அவையும் நாட்டுப்புறக் கதைகளில் வருவது இல்லை. புராணத்தோடு நின்று விடுகின்றன. புராணங்களில் அவை, உச்சபட்ச மோகப்பொருள். யாருக்கும் உபகாரம் செய்வதாகத் தெரியவில்லை; வம்படியாய் அவற்றைப் பிடித்து வைத்து உதவிகளைக் கறந்து கொண்டிருப்பார்கள்.


ஆனால், ஐரோப்பிய தேவதைகள் உபகாரம் செய்யும் இயல்புடையவை. அப்படியானால், தமிழக தேவதைக்(?) கதைகளில் உபகாரம் செய்வது யார் என்ற கேள்வி எழக்கூடும். தமிழில் அதற்கொரு ஏற்பாடு இருக்கிறது. தமிழ்க் கதைகளில் எப்படியாவது ஒரு நந்தவனமும், அதைப் பராமரிக்கும் ஒரு கிழவியும் வந்து விடுகிறார்கள். இந்த மூதாட்டிகளே தமிழ்த் தேவதைகள். துவண்டு நிற்கும் தமிழ்க் கதாபாத்திரங்களுக்கு அடைக்கலம் தருவது இவர்களின் வேலை.


ஐரோப்பியக் கதைகளின் தலைகீழ் வடிவம் இது. ஐரோப்பியத் தேவதைக் கதைகளில், இப்படித் தனித்து ஒதுக்குப்புறமாய் வாழும் கிழவிகளுக்கு ‘சூனியக்காரிகள்’ என்று பெயர். தமிழில் தேவதைகள் இல்லாததால் சூனியக்காரிகளும் இல்லை. உபகாரம் செய்வது நந்தவனக்கிழவிகள் என்றால், உபத்திரம் செய்வது வணிகச் செட்டிகளும் சித்திகளும் மந்திரவாதிகளும்.


*


தேவதைக் கதைகள் / மாயமந்திரக் கதைகள் / தந்திரக் கதைகள், பெரும்பாலும் குழந்தைகளுக்குச் சொல்லப்படுபவை என்பதே உலகளாவிய நம்பிக்கை. பண்பாட்டு விழுமியங்களைச் சொல்லித் தரும் கருவிகள் இவை என்றே ஆய்வுகள் சொல்கின்றன. (The Forms of Folklore: Folk Narratives – William Bascom, The Journal of American Folklore, Vol 78, No. 307, 1965) கூடுதலாக, நீதி போதனையும் சொல்லப்படும். இரவுகளில் தூக்கம் வராத குழந்தைகளை சுற்றிலும் அமர்த்திக் கொண்டு இக்கதைகள் சொல்லப்படுவதாய் ஒரு சித்திரம் புழக்கத்தில் உள்ளது. இன்னும் ரசனையோடு சொல்ல வேண்டும் என்றால், பொறி பறக்கும் நெருப்பைச் சுற்றி குழந்தைகளை உட்கார வைத்து கொண்டு, நிலவொளியின் கீழ் தாத்தாக்களும் பாட்டிகளும் சொல்லக்கூடிய கதைகள்.


எனக்கு முதல் பத்து நாட்களில் கதைகள்தான் கிடைக்கவில்லையே தவிர, கதைகளைச் சொல்லும் முறை பற்றிய தகவல்கள் கொட்டிக் கொண்டிருந்தன. எங்கும் இல்லாத பழக்கமாய், பெண்கள் தங்களுக்குள் தேவதைக் கதைகளைச் சொல்லிக் கொள்கிறார்கள் என்பதை நான் என் குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொண்டேன்.


அதிலும், வயல் வெளிகளில் உடலுழைப்பில் ஈடுபடும்போது இப்படியான கதைகளைச் சொல்கிறார்கள் என்ற தகவலை நான் முதன்முறையாக எதிர்கொள்கிறேன். இத்தகைய தருணங்களில் உழைப்பின் அலுப்பு தெரியாதிருக்க பாடல்களைப் பாடுவார்கள் என்றே பல்வேறு கள ஆய்வுகள் சொல்கின்றன (நா. வானமாமலை, தமிழர் நாட்டுப் பாடல்கள்). கதைகளோ ஆற அமர உட்கார்ந்து சொல்லப்படுபவை என்பதுதான் பொது அபிப்பிராயம். இவ்விரண்டு முன்முடிவுகளும் தவறு என்பது என் கள ஆய்வில் நிரூபணமானது.


*


‘தேவதைக் கதைகளைச் சொல்லிக் கொள்ளும் பெண்கள்’ என்ற சித்திரம் எனக்குக் கிளர்ச்சியூட்டியது. பண்பாட்டு விழுமியங்களைக் கடந்து அவை வேறு வேறு சங்கதிகளையெல்லாம் விவரிக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. உதாரணமாக, தேவதைக் கதைகளின் பிரதான கவலை, ஏழை இளம் பெண்களுக்கும், விளிம்பு நிலை ஆண்களுக்கும் நல்லபடியாகத் திருமணம் நடக்க வேண்டும் என்பதுதான். பல்வேறு கஷ்ட நஷ்டங்களுக்குப் பின் அப்படியொரு திருமணம் நடந்ததாகவே எல்லாக் கதைகளின் முடிவுகளும் தெரிவிக்கும். அந்த வகையில், குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதைகளில் எப்பாடு பட்டாவது நிகழ வேண்டிய காரியம் ‘திருமணம்’ என்பதே செய்தி (Vladimir Propp, Morhphology of the Folktales).


அதே கதைகளை, திருமணமான பெண்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள் என்றால்,அங்கு வெளிப்படும் உணர்வுகள் என்ன என்பதை நான் கண்டறிய விரும்பினேன். குழந்தைகளின் கதைகள், பெரியவர்கள் உலகத்திற்குள் செல்லும்போது விபரீதம் நிகழ்வதற்கு நூறு சதவீத சாத்தியங்கள் உள்ளன.


இப்படி யோசிப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில், ஜெர்மானிய தேவதைக் கதைகளை கிரிம் சகோதரர்கள் தொகுத்து வெளியிட்டபோது, அக்கதைகளில் வெளிப்பட்ட குரூரம் எல்லோருக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது (Jacob and Wilhelm Grimm, Childrens’ and Household Tales, 1812). ஒரு உதாரணத்திற்கு, கிரிம் தொகுத்த சிண்ட்ரெல்லா கதையில், அவளது சகோதரிகள் இளவரசன் கொண்டு வந்த செருப்பிற்குள் கால்களைப் பொருந்த வைப்பதற்காக, தத்தம் விரல்களைக்கூட வெட்டிக் கொண்டார்கள் என்றே சொல்லப்பட்டிருந்தது. இந்த ரத்தக் களேபரங்களுக்குப் பின் தான், சிண்ட்ரெல்லா முறையாக அடையாளம் காணப்பட்டாள். அதே போல, கொடுமைக்கார சித்திக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை இன்னும் கொடூரமானது. அவளுக்கு, நெருப்புக் குழம்பாகக் கொதிக்கும் இரும்புச் செருப்பைக் கொடுத்து, சாகும் வரை நடனமாடச் செய்தார்கள்.


இத்தேவதைக் கதைகளை குழந்தைகளின் உலகத்திற்குள் எழுத்து வடிவில் கொண்டு வரும் முன், இந்தக் குரூரங்களெல்லாம் கவனமாகத் தணிக்கை செய்யப்பட்டன. அந்த வடிவங்களே அச்சிடப்பட்டன; திரைப்படங்களாகச் செய்யப்பட்டன. ‘மார்ச்சென்’ என்று அழைக்கப்பட்ட இக்கதைகளை முதன் முதலில் சேகரித்த பொழுது, இவற்றையெல்லாம் வயதானவர்களே தங்களுக்குள் சொல்லிக் கொண்டிருந்தனர். இதனாலேயே கிரிம் சகோதரர்கள் இவ்வகை வாய்மொழி இலக்கியங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று கவலை தெரிவித்தனர். ஏனெனில், வயதானவர்கள் சொல்லக்கூடிய இக்கதைகளைக் கேட்பதற்கான ஐரோப்பியக் குழந்தைகள் கிராமங்களில் இருக்கவில்லை.


கள ஆய்வில் நான் கேள்விப்பட்ட, ‘வயல்வெளிகளில் பெரியவர்கள் சொல்லிக் கொள்ளும் தேவதைக் கதைகள்’ என்ற தகவல் என்னை உற்சாகப்படுத்திய காரணம் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். தேவதைக் கதைகள் என்று புத்தகங்களில் உலாவரும் கதைகள் உண்மையில் ‘காயடிக்கப்பட்ட வழக்காறுகள்’. இது ஆங்கிலத்தில் வெளியாகும் கதைகளின் குணம் மட்டுமல்ல, தமிழிலும் அன்னகாமு, கி. ரா. என்று பலரும் வெளியிட்ட தேவதைக் கதைகளும் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட கதைகளே. அவற்றின் இயல்பான ‘குரூரம்’ நீக்கப்பட்டே எழுத்தாக்கம் நடைபெற்றது. அந்தக் குரூர இயல்பை நேரடியாய் பார்த்து விடுவதற்கு எனக்கொரு வாய்ப்பு கிடைக்கிறது என்று நான் நம்பினேன். நடவு நடும் பெண்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளும்போது, தணிக்கை ஏதும் இருக்க முடியாது என்பது என் நம்பிக்கை.


‘நீங்க கதை சொல்ற இடத்துக்கே வந்து பதிவு செய்துக்கவா?’


‘எங்க, நடவு நடக்கிற இடத்திலயா?’


‘ஆங்!’


‘சரியாப் போச்சு, இவுளுக போடுற சத்தத்துல நீங்க பதிஞ்ச மாதிரிதான்’.


நடவு நடுகிற இடத்தில் நிகழும் கதை சொல்லல் ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது. ஒரு வேளை, அது முழுக்க முழுக்க பெண்களின் ரகசியப் பேச்சுகளாகக் கூட இருக்கலாம். ஒரு ஆண், அது ஆய்வாளரே என்றாலும், தங்கள் எல்லைக்குள் நுழைவதை விரும்பவில்லை என்று எனக்கு உடனடியாய் விளங்கியது. இருந்தாலும், நாசுக்காய் இன்னொரு தரம் கூட அதே கோரிக்கையை முன் வைத்தேன்.


‘ஒரே சேறும், சகதியுமா இருகும்யா. படிச்ச புள்ளைக அங்கன வந்து நிக்கப்புடாது. நாங்க வேணா கத சொல்ற ஆளக் கூட்டிட்டு வாரோம். இங்கன இருந்து பதிஞ்சுக்கங்க’.


இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு பெண், ‘ஏன்த்தா, காட்டுக் கதய வீட்டுல உக்காந்து கேக்கச் சொல்தீகளாக்கும்!’ என்றார்.


‘என்னது, காட்டுக் கதையா?’ – இது நான்.


‘ஆமாய்யா, காட்டுல சொல்றது தானே’.


*


தேவதைக் கதைகளுக்கு தமிழ் மக்கள் வைத்திருக்கும் பெயர், காட்டுக்கதை என்பதை அன்றைக்குத்தான் நான் தெரிந்து கொண்டேன். இந்தப் பெயர்தான் எத்தனை அழகாய்ப் பொருந்துகிறது! உலகமெங்கும் தேவதைக் கதைகள் என்று சொல்லப்பட்டாலும், தமிழில் அப்படி அழைப்பதில் சிக்கல் இருந்தது. தேவதைகளே இல்லாத கதைகளை ‘தேவதைக் கதைகள்’ என்று சொல்வதா?


அவற்றில் ராஜாக்களும் ராணிக்களும் வருவதால் ராஜாராணிக் கதைகள் என்று கூட சிலர் எழுதுகிறார்கள். வேறு சிலர், தாத்தா-பாட்டிக் கதைகள் என்று அழைக்கின்றனர். ‘மந்திர தந்திரக் கதைகள்’ என்று கூட சில சமயம் சொல்லப்பட்டது. இவை அனைத்தையும் விட, ‘காட்டுக்கதை’ என்ற பெயர் அட்சரசுத்தமாய் பொருந்துவதாய் எனக்குத் தோன்றியது.


இப்படி மக்கள் வைக்கும் பெயர்களை, நாட்டுப்புறவியலில் ‘இனக்குழு வகைமை’ என்று அழைக்கிறோம். எல்லா வழக்காறுகளுக்கும் குறைந்தபட்சம் இரண்டு பெயர்கள் இருக்கின்றன. ஒன்று, ஆய்வாளர்களாகிய நாங்கள் வைக்கிற பெயர் (ஆய்வு வகை, analytical category); மற்றொன்று, மக்கள் சூட்டும் பெயர் (இனக்குழு வகைமை, ethnic genre) (Dan Ben Amos, 1976, Analytical categories and Ethnic genres in Folklore Genres, University of Texas Press, 1976).


இனக்குழு வகைமைப் பெயர்கள், அவ்வழக்காறுகளின் சாராம்சத்தையோ அல்லது இயல்பையோ அல்லது செயல்படும் விதத்தையோ கருத்தில் கொண்டு அமைந்திருக்கும். அமெரிக்க நாட்டுப்புறவியலாளர் ஆலன் டண்டிஸ் இத்தகைய பெயர்களையும் கூட நாம் இன்னுமொரு வழக்காறாகக் கருதலாம் என்று தெரிவித்தார். அதாவது, ஆய்வாளர்கள் தங்களது ஆய்வின் முடிவாக ஒரு வழக்காறின் வகையைத் தீர்மானிப்பது போல, மக்களும் தங்களது அனுபவம் சார்ந்து ஒரு வழக்காறின் வகையைத் தீர்மானிக்கிறார்கள். தீர்மானித்து அதற்கொரு பெயரையும் சூட்டுகிறார்கள். இவ்வாறு சூட்டப்படும் பெயர்களை ‘வழக்காறு குறித்து உருவாக்கப்படும் இன்னொரு வழக்காறு’ என்றே கருத வேண்டும். ஆங்கிலத்தில் ‘meta folklore’; ‘வழக்காறு பற்றிய வழக்காறு’. அப்படியானால், தேவதைக் கதைகள் அல்லது marchen என்று சொல்லப்படும் ஆய்வு வகைக்கான தமிழக இனக்குழுப் வகைமைப் பெயர், ‘காட்டுக்கதை’ என்று சொல்ல வேண்டும். (Alan Dundes, 2007, ‘Meta Folklore and Oral Literary Criticism’ in Meaning of Folklore: The Analytic Essays of Alan Dundes.)


*


நடவு நடும் சமயங்களில் கதைகளைச் சொல்லிக் கொள்கிறார்கள் என்ற செய்தி எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்து கொண்டிருந்தது.


நடவு, களையெடுத்தல் போன்ற வேலைகளுக்குச் செல்லும் பெண்களுக்குள் ‘கொத்து’ என்றொரு அமைப்பு உண்டு. ஓர் ஊரிலேயே பல்வேறு கொத்துகள் இருக்கும். ஒவ்வொரு கொத்திற்கும் ‘கொத்தன்’ அல்லது ‘கொத்தி’ என்றழைக்கப்படும் தலைமை இருக்கிறது. களை எடுக்கவும் நாற்று நடவும் ஆட்களைத் தேடுகிற நிலச் சொந்தக்காரர்கள் இந்தக் கொத்தன்/த்தியையே அணுகுகிறார்கள். வயற் பரப்பளவு, பயிரின் தன்மை, வேலைக்காகும் கால அளவு போன்றவற்றைக் கணக்கிட்டு கொத்தன்/த்தி வேலை நாட்களையும், வேலை செய்யும் நபர்களையும் தீர்மானிக்கிறார்கள்.


கொத்து என்பது வயல்வெளிகளில் வேலை செய்யும் பெண்களுக்கான பிரத்தியேக அமைப்பு. இது அவர்களுக்குள் இயல்பாகவே ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது. இக்கொத்துகளில் தலைமைப் பொறுப்பிலோ அல்லது உறுப்பினராகவோ ஒன்றிரண்டு ஆன்களும் இருக்கலாம் என்றாலும், பெரும்பான்மை உழைப்பாளிகள் பெண்களே.


நிலத்தில் உழைக்கும் இத்தகைய பெண்களைப் பற்றி தமிழில் காணப்படும் பொது அபிப்பிராயம் அவதூறு மட்டுமே. மரபான இலக்கியங்களிலிருந்து இன்றைய திரைப்படங்கள் வரைக்கும், வயல்களில் பெண்கள் வேலை செய்யும் காட்சியில் பாலியல் சீண்டல்கள் மட்டுமே சித்தரிக்கப்படுகின்றன. தினைப்புனங்களில் காவலுக்குச் செல்லும் பெண்களைத் தனியே சந்திக்கவும், சாடை பேசவும் சங்க இலக்கியம் நெடுக ஆண்கள் அலைகிறார்கள். இதைவிட மோசம், பள்ளு இலக்கியங்களில் காட்டப்படும் வயல்வெளி நிகழ்ச்சிகள். முக்கூடற்பள்ளுவில் நாற்றுநடும் அழகு இப்படித்தான் விவரிக்கப்படுகிறது:


‘தெற்கு வெள்ளூர்ப் பள்ளி வெயிலியும், உளக்குடிப் பள்ளி உடைச்சியும், மேலக் களக்குடிப் பள்ளி சடைச்சியும், வயலில் தள்ளாடித் தள்ளாடி நடவு செய்கின்றனர். கள் குடித்திருந்த பெரியான், தையலி மகள் பொய்யலியிடம் வம்பு செய்கிறான். அவள் கையிலுள்ள நாற்றுக் கட்டை பிடிக்கப் போவது போல அவள் கையைப் பிடித்து இழுக்கிறான்.


‘…வெள்ளூர்ப் பள்ளி வெயிலியும் உளக்குடிப் பள்ளி உடைச்சியும் – மேலக் களக்குடிப் பள்ளி சடைச்சியும் தள்ளாடிக் கொண்டு நடச் செய்தே – பள்ளர் துள்ளாடிக் கூட்ட மிடச் செய்தே தையலி மகள் பொய்யலி கிட்டச் சாடிப் பெரியான் ஓடிப்போய் கள்ளா லுற்றது மீறியே – நிலை கொள்ளா மல்தடு மாறியே காப்பைக் காட்டென்று கையைப் பிடிக்குங் கோப்பைப் பாரும் பள்ளீரே’.


‘இது போதாதென்று இன்னொரு பக்கம், சருவக் குடும்பன், தனது மச்சினி கூழைப்பிச்சியை ‘வா, வா’ என்று கூப்பிட்டபடியே இருக்கிறான். அவளோ, ‘போ, போ’ என்று அவனை விரட்டுகிறாள். ஒரு கட்டத்தில், சருவன் பிச்சியை மறித்து நின்று வழிவிடமாட்டேன் என்கிறான். அவனிடமிருந்து விலகிச் செல்வது போல் அவள் வேகமாகத் திரும்புகிறாள். திரும்பிய வேகத்தில் தடுமாறி கீழே விழுகிறாள். விழுகிறவளைத் தாங்கிப் பிடிக்கிற சாக்கில், சருவன் அவள் முலைகளைப் பிடிக்கிறான்.’


‘மறுகி மறுகிச் சருவக் குடும்பன் மச்சினி கூழைப் பிச்சியை வாவென் றான் அவள் போவென்றாள் இவன் மறித்தான் அவள்பின் பிரித்துப்போய் தறுகி அறுகங்க் கொடியிலே அடி தட்டி விழுந்த மட்டிலே தலையைத் தாங்குறாப் போலவே குத்து முலையைத் தாங்குறான் பள்ளீரே’


‘மறுதிசையில், கறுப்பியின் மார்பழகையும் சிரிப்பழகையும் பாராட்டி, அவளைவிட இளையவனான நூவிதன் அவளிடமே சாடைமாடையாய் பேசுகிறான். அதைக் கேட்டு கறுப்பியும் வெட்கத்தில் சிரிக்கிறாள். இதைக் கண்டு நூவிதனுக்கு மேலும் துணிச்சல் பிறக்கிறது. நேரடியாகக் கறுப்பியிடமே போய் வழிய ஆரம்பிக்கிறான்.’


‘மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக் கிளைய நூவிதன் குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்தச் சிறுக்கியும் கூசிப் பார்க்கிறாள் அதற்கவன் மெல்லப் பேசிப் பார்க்கும் ஆசையால் எத்தத் துணிந்தே அதட்டிட் டவள்முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறாப் போலே கிட்டப் கிட்டப் போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே.’


‘இதனிடையே, ஈச்சக் குடும்பன் கால் தடுக்கி விழுவது போலத் தன் கொழுந்தியாள் மேலேயே விழுந்தான். இதைப் பார்த்து விட்ட அண்ணன்காரன், ஈச்சக் குடும்பன் கொண்டை மயிரை இழுத்து சண்டைக்குப் போகிறான்.’


‘இருவக் குடும்பன் மருமகன் ஈச்சக் குடும்பன் பாச்சக் காலை எட்டி முட்டித் தட்டியே கொழுந்தி பக்கத்தில் விழுந்த தற்கவள் கூடப் பிறந்த மாடன் போய் கொண்டை யைப்பிடித் திழுக்கிறான் வம்புச் சண்டையைப் பாரும் பள்ளீரே’


இந்தப் பதினேழாம் நூற்றாண்டுக் கற்பனையைத் தமிழ்த் திரைப்படங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. ஆணும் பெண்ணும் காதல் மொழிகளை சாடை மாடையாய் பேசிக் கொள்ளும் இடமாகவே வயல்வெளிகள் பார்க்கப்படுகின்றன. எசப்பாட்டு பாடுவது, தெம்மாங்கு பாடுவது, பாலியல் சீண்டல்களைப் பரிமாறிக் கொள்வது என்று விவசாயமே கிளுகிளுப்பான வேலை என்ற பிரமை உருவாக்கப்பட்டுள்ளது.


ஆனால், நிஜத்தில் அது வலியையும் எரிச்சலையும் தரக்கூடிய வேலை. வயலில் வேலை செய்துவிட்டு வந்த ஆண்களும் பெண்களும் தத்தம் உடல் உபாதைகளுக்கு ஏதேதோ தைலங்களையும் எண்ணெய்களையும் தேய்த்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். நாற்று நடுகையிலும் களை எடுக்கையிலும் பெண்கள் தங்களுக்குள் நாட்டுப்புறக் கதைகளைச் சொல்லிக் கொள்கிறார்கள் என்ற தகவல் என்னை உற்சாகப்படுத்தியதற்கு இதுவும் ஒரு காரணம். அந்த நேரம் அவர்கள் எந்தக் கதைகளைச் சொல்லிக் கொள்கிறார்கள், அதை எப்படிச் சொல்லிக் கொள்கிறார்கள் என்று நான் தெரிந்து கொள்ள விரும்பினேன்.


*


ஆனால், காட்டுக்கதைகளை அவற்றின் இயல்பான சூழலில் சேகரிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவேயில்லை. தேடும் வழக்காறுகள் கிடைக்கவில்லை எனும்போது, ஏற்படும் மனவுளைச்சல் அசாதாரணமானது. நா.வானமாமலைக்கும் கி. ராஜநாரயணனுக்கும் கிடைத்த விஷயங்கள் நமக்கு ஏன் கிடைக்கவில்லை? அதோ அங்கிருக்கிறது, இங்கிருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தால், அது அங்கு இருப்பதில்லை. நாட்கள் செல்லச் செல்ல, இந்தப் பதட்டம் எதிர்காலம் குறித்த பயமாக மாறுகிறது. இவ்வாறு சேகரிக்கும் வழக்காறுகளைக் கொண்டே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அந்தத் திட்டம் தோற்றுப்போனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரோ தலையில் மண்ணள்ளிப் போட்டது போல் நெறுநெறுவென்று இருந்தது.


வழக்காறுகள் கிடைக்கவில்லை என்று கள அறிக்கை எழுத முடியாது. சிரிப்பார்கள். கள ஆய்வுக்குச் செல்லாமல் ஏமாற்றுகிறானோ என்று சந்தேகப்படுவார்கள். என்ன செய்வதென்று தெரியாமல், நாளெல்லாம் ஊரையே சுற்றி சுற்றி வந்தேன். கடைசிவரை, வயல்வெளிகளில் சொல்லப்படும் காட்டுக்கதைகளை என்னால் நேரடியாய்ப் பார்க்க முடியவில்லை. நடவு நடும் இடங்களுக்கு இரண்டொரு முறை சென்றும் பார்த்தேன். அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை என்னால் முழுமையாகக் கேட்க முடியவில்லை. என்னைப் பார்த்ததும் அவர்கள் பேச்சைக் குறைத்துக் கொள்கிறார்கள்; எனக்கும் ஓரளவுக்கு மேல் அவர்களை நெருங்கிச் செல்வதற்கு கூச்சமாக இருந்தது. மொத்தத்தில், நான் தேடிச் சென்ற வழக்காறுகள் எனக்குக் கிடைக்கவில்லை.


இந்த நேரம்தான், நான் வெள்ளத்துரைச்சியை அகஸ்மாத்தாய் சந்தித்தேன். வெள்ளத்துரைச்சி பிரம்மாதமானக் கதைசொல்லி. அவர் எனக்கு வயற்காடுகளில் சொல்லப்படும் ‘காட்டுக்கதைகளைச்’ சொல்கிறேன் என்றார். அவர் சொன்னக் கதைகளைக் கேட்டு நிஜமாகவே நான் மிரண்டு போனேன்.






Comments


bottom of page