மணிப்பூரில் நடைபெற்ற கேவலமான செயல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இல்லை, பிரதமர் அவர்களே! இதற்கு அவமானப்பட வேண்டியது ஒட்டுமொத்த நாடும் அல்ல. நீங்களும், உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் மதவாத அரசியலும்தான் இதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வெகுஜன அரசியலின் மிக மோசமான பக்கங்களை ஆரம்பித்து வைத்தது, பாரதிய ஜனதா கட்சியின் கேவலமான அதிகார ஆசை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்திய வெகுஜனத்தின் ஒரு பகுதியை அடாவடியான கும்பலாக வளர்த்தெடுக்க அவர்களுக்கு ஓர் உதாரண வெற்றி தேவைப்பட்டது. அதாவது, பெரும்பான்மை பலத்துடன் அராஜகத்தில், வன்முறையில் ஈடுபட்டால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை, அயோத்தி பாபர் மசூதியை இடித்துக் காட்டியதன் மூலம் பா.ஜ.க. இந்த நாட்டில் உருவாக்கியது. அதன் தொடர் விளைவுகளைத்தான் நாம் இன்றைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஜனநாயக அமைப்பு, உருவாக்கித் தரும் ‘வெகுஜனம்’ என்ற திரளுக்கு நிரந்தரமான ஓர்மை இருப்பதில்லை. இந்தியா மாதிரியான நாடுகளில் இது இன்னமும் மோசம். வனங்களில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளின் கூட்டத்திற்குக்கூட பிரக்ஞை இருப்பதாக ஒத்துக் கொள்ளலாம். அவை, ஒரே நேரத்தில் சப்தமிட ஆரம்பித்து, சொல்லி வைத்தாற் போல் ஒரே நேரத்தில் அமைதி காக்கும். ஆனால், ஜனநாயக வெகுஜனம் நிலை கொள்ளாதது. அதனால், ஆபத்தானது.
பா.ஜ.க.வின் வருகைக்கு முன்பு வரை ‘கவர்ச்சிகரமான’ தலைமைகளே இவற்றை நிர்வகித்து வந்தனர். அத்தகைய கவர்ச்சிக்கு மட்டுமே தலையாட்டக் கூடியவை இந்த வெகுஜனம் என்பது ஒரு வகையில் ஆபத்தானது என்றாலும், இன்றைய இந்துத்துவ கொடூரர்களைப் பார்க்கும்போது, ஒரு வகையில் கவர்ச்சி சரியானது என்றே நினைக்க வைக்கிறது.
வெகுஜனத்திற்கு யாராலும் அரசியல் தெளிவைக் கற்றுத்தர முடியாது என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை. ஏனென்றால், அது சுயமாய் சிந்திப்பதில்லை; அதுவும் ஏனென்றால், அதற்கு சொல்லிக்கொள்ளும்படியான சுயமே இல்லை. அது, கவர்ச்சிகர தலைமை முன்மொழியும் சுயத்தையே தன் அடையாளமாக நம்பி வந்திருக்கிறது. இத்தகைய நம்பகமற்ற வெகுஜனத்தை அரசியல்ரீதியாகக் கையாளுவதற்கு எல்லையற்ற நிதானமும், சக மனிதர் மீதான கருணையும் தேவைப்படுகிறது.
இதன் வெற்றிகரமான மாதிரி திராவிட வெகுஜன அரசியல். இந்த அரசியலுக்கு தீர்க்கமான எதிரிகள் இருந்தார்கள். சாதியும் மதமும். அதைவிடத் துல்லியமான பகைவர்கள் இருந்தார்கள், பிராமணர்கள். ஆனால், எந்தக் கட்டத்திலும் இவ்வெகுஜன அரசியல் மானுட துவேஷமாக மாறியதில்லை என்பதே இதன் வெற்றி. பிராமணர்கள், விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டார்களே தவிர, என்றைக்குமே வன்முறைக்கான இலக்காக மாற்றப்பட்டதில்லை. திராவிடர்களின் பின்னடைவிற்கும், வளர்ச்சிக்கும் பிராமணர்களே பெருந்தடைகளாக இருந்தனர் என்பதை தமிழ் வெகுஜனம் தீவிரமாக நம்பினாலும், தான் பெரும்பான்மை என்று அறிந்திருந்தாலும், எந்தவொரு கணத்திலும் அங்கே வன்முறை ஓர் ஆயுதமாகச் சித்தரிக்கப்பட்டதில்லை. திராவிட அரசியலின் தலைமைகளின் எல்லையற்ற நிதானமும், மானுட நேயமும்தான் இதற்குக் காரணமாக இருந்தன.
பிரதமர் அவர்களே, இந்த நிதானத்தையும் நேயத்தையுமே உங்கள் அரசியல் துச்சமென நினைத்தது. பெரும் மக்கள் சக்திக்கு வன்முறையை பழக்கப்படுத்திய காரியத்தை இந்துத்துவ அரசியலே செய்யத் தொடங்கியது. இதன் மூலம், சிறுபான்மை சமூகங்களின் மீது கட்டற்ற வெறுப்பை உங்களால் விதைக்க முடிந்தது. அவ்வெறுப்பை வன்மையாய் வெளிப்படுத்துவதில் நியாயம் இருப்பதாய் நம்ப வைத்தது நீங்கள் செய்த கேவலம். அதிகார ஆசைக்காக, மிக இழிவானக் காரியமொன்றை செய்து விட்டவர்கள் நீங்கள்.
1990களிலிருந்து பாதுகாப்பு உணர்வின்றி, சதா பதட்டத்தோடு இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் வாழும்படி நேர்ந்ததை நீங்களோ உங்கள் சகாக்களோ பொருட்படுத்தவில்லை. இந்தச் சிறுபான்மை என்பதில், மதச்சிறுபான்மையை மட்டும் நான் குறிப்பிடவில்லை. எல்லாவித சிறுபான்மையும் – சாதியில், மொழியில், பண்பாட்டில், நிறத்தில், பால் அடையாளத்தில், வரலாற்று உணர்வில், கருணையில், நீதியில், ஒழுக்கத்தில், கலையில் பெரும்போக்குடன் ஒத்துப் போக முடியாத எல்லா மனிதர்களையும் நான் குறிப்பிடுகிறேன்.
அச்சிறுபான்மையின் உறுப்பினராகவே நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு உருவாக்கித் தந்த வெகுஜனத் திரளின் மீது அவநம்பிக்கையை விதைத்தீர்கள், பிரதமரே! ஒவ்வொரு கணத்தையும் ஏமாற்றத்தோடும், பதட்டத்தோடும் வாழும் படி எங்களை நிர்பந்தித்தீர்கள்! இன்றைக்கு, அப்படி நிகழ்ந்த ஓர் அராஜகத்திற்கு தலைகுனியும் போது, ஒட்டுமொத்த மக்களையும் அவமானத்திற்குள் தள்ளுவதற்கு நிச்சயமாய் உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நினைக்கிறேன். இது, ஒட்டுமொத்த இந்தியாவின் அவமானம் அல்ல! ஓர் அரசியல் கட்சிக்கு நேர்ந்த அவமானம். அதை நீங்கள் இந்தியா என்று மடைமாற்றும்போது, இன்னமும் நீங்கள் தவறை உணர்ந்து திருந்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
உங்களை நினைத்து வெட்கத்தில் தலைகுனிகிறோம், பிரதமரே!
Comments