எப்போதும் முழுமையான பதிலைச் சொல்லமுடியாத சில கேள்விகள் இருக்கின்றன.
அவற்றில்,இளையராஜாவின் பாடல்கள் ஏன் உங்களுக்குப் பிடித்திருக்கின்றது எனும் கேள்வி முக்கியமானது.
நமது நினைவில் ராஜா உருவாக்கி வைத்திருக்கின்ற அதிகாரத்தையும்,காலத்தின் ப்ரக்ஞையை கலையின் ஒரு வடிவம் எவ்வாறு பூர்த்திசெய்கிறது என்பது குறித்தும் இந்த கல்குதிரையில் டி.தருமராஜ் எழுதியுள்ள இளையராஜா குறித்த கட்டுரை முழுமையாக விளக்க முற்படுகிறது.
பொதுவாக,கலைவடிவங்களை விளக்க முற்படும்போது நேரிடுகின்ற தன்வயமாகிவிட்ட புரிதலுக்கு எவ்வித இடமுமளிக்காமல்,ஒரு வாசகனையோ அல்லது ரசிகனையோ தன்னோடு இயைந்து பயணிக்கச் செய்கின்ற நல்வாய்ப்பையும் இதில் உருவாக்கியிருக்கிறார் தர்மராஜ்.
ஒரு வெகுஜன உரையாடலைப் போல தொடங்குகின்ற கட்டுரை, ராஜா இசைமீதான ரசனையின் உச்சங்களைத் தொட்டு மேலெழுந்து,கடைசி இரண்டு முழுப்பக்கங்களில் ராஜா எனும் மனிதனை அகற்றிவிட்டு அவரது இசை உடலியை முழுவதுமாக அதில் செயல்படுகின்ற காலத்தின் வழியாக அளக்க முற்படுகின்ற வசீகர பயணம் நிகழ்ந்தேறுகிறது.
இந்த கடைசி சன்னத பக்கங்களில் ஓரிடத்தில்கூட ராஜாவின் பெயரே வராத அளவில் முழுக்க முழுக்க ராஜாவின் இசையால் லேமினேட் செய்யப்பட்டிருக்கும் காலத்தின் மீதுள்ள மிகமெல்லிய ஞாபகபடலத்தை உரித்து ஆராய முயல்கிறது.
எப்போதும்போல ஒரு கலையை விளக்கிமுடிக்கும்போது ஏற்படுகின்ற வெறுமையை எதிர்கொள்ள நேரிடும் தருணத்தில், இக்கட்டுரையின் கடைசிவரியான" அதனால்தான் அவர் இசைஞானி " எனும் வரி அதை ஒரு மானுடதளத்திற்கு நகர்த்திவருகின்ற அதேவேளையில் இஃதொரு அமானுட செயல்தான் எனவும் எண்ணவைக்கிறது.
Comments