(நீலம், செப்டம்பர் - 2024 இதழில் வெளியானக் கட்டுரை)
அயோத்திதாசரின் பெளத்தவயமாதலைப் பண்பாட்டு ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதில் ‘பண்பாட்டுச் சீரழிவு’ என்ற கருதுகோள் உள்ளுறைந்து நிற்பதாக அவர்கள் கருதுகின்றனர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களிடம் இத்தகையச் ‘சீரழிவுக் கருதுகோள்’ பற்றிய கண்டனங்கள் அதிகம். பண்பாடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்று பேசத் தொடங்கும் யாரையும் அவர்கள் சந்தேகத்தோடே பார்க்கிறார்கள்.
அயோத்திதாசர் பண்பாடு சீரழிந்திருக்கிறது என்றே எழுதுகிறார். அவரது ‘இந்திர தேச சரித்திரம்’, இந்த தேசமெங்கும் பரவியிருந்த பெளத்த தன்மம் வேஷ பிராமணர்களால் எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதையே விலாவரியாகப் பேசுகிறது. ஆதியிலே அமைதி இருந்தது. அந்த அமைதியை தொடர்ச்சியானக் கட்டுக்கதைகள் மூலம் வேஷ பிராமணர் உடைத்தெறிந்தனர் என்பதே அவரது பெளத்தவயமாதலின் ஆரம்பம். அவர் சீர்திருத்த வேண்டும் என்று நினைப்பதும் கூட இத்தகையப் பண்பாட்டு பேரழிவைத் தான் எனும் போது சீரழிவுக் கருதுகோளை எதிர்க்கிறவர்கள் பெளத்தவயமாதலையும் எதிர்க்கிறார்கள்.
சொல்லப்போனால், நாட்டுப்புறவியலின் வரலாறு சீரழிவுக் கருதுகோளிலிருந்தே ஆரம்பிக்கிறது. சீரழிவுப்பார்வை அவ்வளவு பழையது. வழக்காறுகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்ற ஐரோப்பிய பதட்டத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுக்க நம்மால் கேட்க முடிகிறது. (Alan Dundes, 2007, The Devolutionary Premise in Folklore Theory in Meaning of Folklore: The Analytical Essays of Alan Dundes, Utah State University Press, PP. 164-176) ஜெர்மானிய கிரிம் சகோதாரர்களிடமும், ஃபின்லாந்தின் ஜூலியஸ் க்ரோன், எலியாஸ் லோன்ரட்டிடமும், வழக்காறுகள் மீது வெளிப்பட்ட அக்கறைக்குப் பின் அவற்றை அழிவிலிருந்து மீட்க வேண்டும் என்ற வேட்கையே ஒளிந்திருந்தது. இவர்கள் மட்டுமல்லாது, ஹான்ஸ் நெளவ்மனாகட்டும், ஏ. பி. டெய்லராகட்டும், இன்னும் பண்பாடு பற்றி யோசிக்கக்கூடிய அத்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆய்வாளர்களும் வாய்மொழிப் பண்பாடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதைத் தீவிரமாக நம்பினர்.
வாய்மொழிப் பண்பாட்டின் அழிவைப் பற்றி பேசியவர்களிடம் இரண்டு பொதுக்குணங்கள் இருந்தன: எல்லா பண்பாட்டு வெளிப்பாடுகளும் தொடக்கத்தில் உன்னத வடிவைக் கொண்டிருந்தன என்பது ஒன்று; திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்டதால் அவற்றின் உன்னதம் சீரழியத் தொடங்கியது என்பது இரண்டு. இதில் ஆபத்தான மேட்டிமைவாதம் வெளிப்படுவதை ஆலன் டண்டிஸ் சுட்டிக்காட்டுகின்றார்.
பெரும்பான்மை மக்களின் ஸ்பரிசம் படாத பண்பாட்டில் பூரணம் மிளிர்வதாகவும், மக்களின் கரம் பட்ட நிகழ்வுகளில் மாசு படிந்துள்ளது என்றும் சொல்வது இனவெறிக்கு இணையானது என்று கூட கண்டனங்கள் எழுப்பப்பட்டன. மக்கள் ஒரு வழக்காறை திரும்பத் திரும்ப சொல்வதனால் தான் அதன் உன்னதம் அழிகிறது என்றால், இனி நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிக்கச் செல்லும் போது, ‘தயவு செய்து யாரும் கதைகளைச் சொல்லாதீர்கள், அவற்றின் பவித்ரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்!’ என்றே மக்களிடம் சொல்ல வேண்டும் என்று கூட கேலி செய்தார்கள்.
பண்பாடுக் கூறுகளின் ஆதி வடிவம் உன்னதமானது என்ற யோசனை, ஜூலியஸ் க்ரோனை ‘மூல வடிவ’ (Ur Form) தேடலுக்கு இட்டுச் சென்றிருந்தது. (Kaarle Krohn, 1971, Folklore Methodology formulated by Julius Krohn and Expanded by Nordic Researchers, translated by Roger L. Welsch, The University of Texas Press, Austin and London) இதன் படி எல்லா வழக்காறுகளுக்கும் ஒரு பூர்வ வடிவம் இருக்கிறது. அவ்வடிவம் உன்னதமாகவும் இருக்கிறது. அது, காலப்போக்கில் வெவ்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து பயணம் செய்த போது தனது தூய்மையை, சீர்மையை இழந்து விடுகிறது. இன்றைக்கு நாம் வழக்காறுகள் என்று பார்க்கக்கூடிய அனைத்தும் இவ்வாறு சீர்மை கெட்ட வடிவங்களே என்று க்ரோன் தீவிரமாக நம்பினார்.
இந்த நம்பிக்கையை நோக்கி அவரை சில அரசியல் காரணங்கள் உந்தித் தள்ளின என்பது தான் உண்மை. அவற்றில் முக்கியமானது, ஃபின்லாந்தின் தேசிய அடையாள உருவாக்கத்தில் ஏற்பட்ட மாபெரும் சிக்கல். தங்களது மொழி சார்ந்த, தனித்துவமான, சுயம்புவான அடையாளக்கூறுகளை ஃபின்லாந்த் மாதிரியான காலனிய நாடுகள் தேடிச் செல்லும் போது, இத்தகைய மூலவடிவத் தேடலே அவர்களின் ஒரே வாய்ப்பாக இருந்தது. நீங்கள் கண்கொண்டு பார்க்கிற அனைத்தும், காலனியத்தின் கறைபட்டுத் தெரிகிற போது, அறியாமலேயே நீங்கள் பூர்வத்தைப் பேச ஆரம்பித்து விடுகிறீர்கள்.
அதிலும், அடையாளங்களைத் தேடும் பயணத்தில் எல்லோரும் வரலாற்றிடமும் தொன்மத்திடமும் மயங்கிக் கிடப்பதற்கும் கூட அடையாளங்கள் தனித்துவமாகவும், சுயம்புவாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகளே காரணம். இதனாலேயே, ஃபின்னிஷ் தேசிய அடையாள உருவாக்கத்தில் தங்களுக்கான வழக்காறுகளைத் தேடிச் சென்ற க்ரோன், தனக்குக் கிடைத்த காலனியக் கறைபட்ட வடிவங்களிலிருந்து, உன்னத மூல வடிவத்தை உருவாக்கும் முறையியலொன்றை வடிவமைத்துக் காட்டினார். இதை, வரலாற்று நிலவியல் கோட்பாடு என்று அழைத்தார்கள்.
ஒரு பண்பாட்டுக் கூறு, வரலாற்றிலும் புவிப்பரப்பிலும் எவ்வாறு பயணம் செய்தது என்பதன் வரைபடமொன்றை உருவாக்குவது இதன் அடிப்படை. இப்படியான வரைபடத்தின் மூலம், அது தனது பயணத்தை ஆரம்பித்த இடம், காலம் எது என்பதையும், அப்பொழுது அது என்ன வடிவத்தில் இருந்தது என்பதையும் நம்மால் வரையறுக்க முடியும் என்று கருதினார்கள். அந்த வடிவமே அவ்வழக்காறின் தூய, உன்னத மூல வடிவம் என்று அறிவிக்க முயன்றார்கள்.
மூல வடிவத் தேடலில் மேட்டிமைவாதம் வெளிப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. அது வழக்காறுகளின் நிகழ்காலத்தை ‘கொச்சை’ என்று எள்ளி நகையாடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில், வாய்மொழி வழக்காறுகள் மீதான அக்கறை முதன் முறையாக உருவானது என்றாலும், அந்த அக்கறை எழுத்துப் பண்பாட்டின் மீதான அதீதக் கவர்ச்சியில் உறைந்திருந்தது என்பதே உண்மை. அவர்களைப் பொறுத்த வரை எழுத்து, எந்தவொன்றின் ஆன்மாவையும் கறைபடாமல் பார்த்துக்கொள்கிறது. வாய்மொழிப் பண்பாட்டில் இத்தகைய ஏற்பாடுகள் இல்லை என்பதே அவர்களது சங்கடமாக இருந்தது. சீரழிவினால் பீடிக்கப்பட்டிருந்த வழக்காறுகளை மீட்டெடுக்கும் எழுத்து மரபாகவே அவர்கள் தங்களைக் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் நவீனத்துவத்தின் தூதுவர்களாக செயல்பட்டாலும், இன்னொரு பக்கம் ஆதி வடிவத்தின் காதலர்களாகவும் அவர்களால் வலம் வர முடிந்தது.
வழக்காறுகளின் மீது அக்கறை காட்டுகிற அயோத்திதாசரின் முறையியலும் இது போன்ற மேட்டிமைவாதத் தன்மை கொண்டதா என்ற கேள்வி இன்றைக்கு எழுப்பப்படுகிறது. அவர் பூர்வ பெளத்தம் என்று சொல்லும் அனைத்தும், பண்பாட்டின் மூலவடிவம் தானா என்பது முக்கியமானக் கேள்வி. இதன் மூலம், அவர் நிகழ்காலத்தை ஒட்டுமொத்தமாக மறுத்து விடுகிறாரா, ஒரு மாயாவாதக் கற்பனை உலகை (இந்திர தேசம்) கட்டுவதன் மூலம், பெரும் மயக்கத்தை உருவாக்குகிறாரா? அவருள் ஒலிப்பதும் இன்னொரு மேட்டிமைக்குரல் தானா என்பதை நாம் விவாதிக்க வேண்டும்.
சீரழிவுக் கருதுகோள் அயோத்திதாசரிடம் தொழிற்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. அவரைப் பொறுத்த வரையில் இந்த தேசத்தின் அத்தனைப் பண்பாட்டுக் கூறுகளும் பெளத்த சார்புடையவை. விழாக்கள், கொண்டாட்டங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், அறம் என அனைத்தும் பெளத்தர்களால் உருவாக்கப்பட்டவை. அவை, நாளடைவில் பல்வேறு பொய் விளக்கங்களுக்கு ஆட்பட்டு தத்தம் உள்மெய்த் தன்மையை இழந்து நிற்கின்றன. அதாவது, இயல்பு கெட்டு, பொய்த்தோற்றமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
யதார்த்தத்தை இழந்து விட்டோம் என்பதே அயோத்திதாசரின் பதட்டம். அந்த யதார்த்தமே ‘இலட்சணமும்’ என்பதால் நாம் உண்மையில் இலட்சணத்தை இழந்தோம் என்கிறார். அந்த யதார்த்தத்தை பெளத்த நெறி அறிந்த மக்களால் மட்டுமே அறிய முடியும் என்பது அவரது துணிவு. அயோத்திதாசரின் ஒட்டுமொத்த முறையியலும், இழந்த யதார்தத்தை மீட்டெடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அந்த யதார்த்தம் பகுத்தறிவு சார்ந்தது, உள்மெய்க்கு நெருக்கமானது. அதை மீறி வீணானக் கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதே அவரது குற்றச்சாட்டு. இந்தக் கட்டுக்கதைகளை வேஷ பிராமணர்களே தங்கள் சுயநலத்திற்காக உருவாக்கினார்கள் என்பது அவரது கணிப்பு.
ஆதியிலே யதார்த்தம் இருந்தது. அதை வேஷ பிராமணியம் கட்டுக்கதைகளால் மறைத்தது. அந்த யதார்த்த ஞாபகங்களை நாம் இழந்து நிற்கிறோம். இழந்தவற்றை மீட்டெடுப்பதே நமது வேலைத்திட்டம் என்று அயோத்திதாசர் மொழிகிறார். இதனால் ஒவ்வொரு இந்திய விழாவையும், சடங்கையும், அதன் பின்னுள்ள நம்பிக்கைகளையும் அவர் கட்டுடைக்க ஆரம்பிக்கிறார்.
ஏறக்குறைய அவற்றைத் துகிலுறிகிறார் என்று சொல்ல வேண்டும். ஆடி மாதம் அம்மனுக்கு செய்யப்படும் சடங்குகளை ஆய்வு செய்யும் அவர், பல்வேறு பெயர்களில் அம்மன் அழைக்கப்பட்டாலும், வெவ்வேறு ஊர்களில் நடைபெறும் அம்மன் திருவிழாக்கள் அதனதன் சிறப்பியல்புகளோடு விளங்கின என்றாலும், அவ்வவற்றின் தனித்தன்மைகள் எனச் சொல்வதற்கு ஏராளம் இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு, தென்னிந்திய கிராமங்களில் நடைபெறும் அம்மன் திருவிழாக்களின் பொதுத்தன்மைகளை மட்டும் பட்டியலிட ஆரம்பிக்கிறார். இந்தப் பொதுத்தன்மைகள் அவருக்குக் கலப்படமில்லாத அம்மன் திருவிழாவொன்றைக் காட்டித் தருகிறது. ஏறக்குறைய வரலாற்று நிலவியல் கோட்பாட்டாளர்கள் உருவாக்க முனைந்த வழக்காறின் ‘மூல வடிவத்தை’ ஒத்தது இது.
அயோத்திதாசரின் எல்லா நாட்டுப்புறவியல் ஆயுவ்களும் இதே தொனியில் தான் செய்யப்பட்டிருந்தன. ஃபின்லாந்து ஆய்வாளர் ஜூலியஸ் க்ரோன் வடிவமைத்த மூலவடிவ ஆய்வை ஐம்பது ஆண்டுகள் கழித்து தமிழில் செய்ய ஆரம்பித்தாரோ என்றுகூட நமக்கு சந்தேகம் வருகிறது. ஆனால், அயோத்த்திதாசரின் ஆய்வுகள் மிக நுட்பமாக மூல வடிவத் தேடலிலிருந்து விலகி நிற்பதை நம்மால் மிக எளிதாக உணர முடிகிறது.
முதலில் அவர், ஒட்டுமொத்த வழக்காறும் சீரழிந்து போயிற்று என்பதை நம்பவில்லை. அவற்றிற்குச் சொல்லப்படும் விளக்கங்கள் அல்லது அவற்றின் மீது ஏற்றப்பட்டுள்ள நம்பிக்கைகளே கட்டுக்கதைகள் என்கிறார். எந்த இடத்திலும் அவர் அம்மனுக்கு செய்யப்படும் சடங்குகளில் இவையிவையெல்லாம் தவறானவை என்று சொல்லியிருக்கவில்லை. மாறாக, அச்செயல்களுக்கு தரப்படும் விளக்கங்களில் அறியாமை மலிந்துள்ளது என்கிறார். இன்னும் சுருக்கமாக அவரது கருத்தாக்கங்களிலேயே சொல்வது என்றால், பண்பாட்டு நிகழ்வுகளின் தற்கால இலக்கண ஒழுங்கமைப்பில் எந்தக் குறைகளும் இல்லை; ஆனால், அவற்றிற்கு இட்டுக்கட்டப்படும் இலட்சணத்தில் தான் கோளாறு.
எது சீரழிந்தது என்று வகைப்படுத்துவதில் க்ரோன் மாதிரியான நாட்டுப்புறவியலாளர்களுக்கும் அயோத்திதாசருக்கும் பெருத்த வேறுபாடுகள் இருந்தன. ஐரோப்பிய ஆய்வாளர்கள் அனைத்தும் சீர் கெட்டன என்கிறார்கள். அயோத்திதாசருக்கோ நிகழ்வுகளின் மீது பெரும் மரியாதை இருந்தது. அதிலும், பெருவாரியான மக்களிடம் புழங்கும் நிகழ்வுகளை அவர் கேள்விகளின்றி ஏற்றுக் கொள்கிறார். அந்த வழக்கத்தை எந்தவொரு புறக்காரணியும் மிக எளிதாக சீரழித்து விட முடியாது என்று அவர் நம்புகிறார்.
ஆனால், அவற்றிற்கான விளக்கங்களை திரிக்க முடியும். ஒவ்வொரு பண்பாட்டுக் கூறுக்குமான இலட்சணங்களையே வேஷ பிராமணியம் திரித்தது என்று சொல்வதன் மூலம், ‘சீரழிவுக் கருதுகோளின்’ இனவாதத்திலிருந்து அவர் வெகுதூரம் விலகி வந்து விடுகிறார். இந்நிலையில் அயோத்திதாசரின் முறையியலை மூலவடிவத் தேடல் கொண்ட நாட்டுப்புறவியலின் முறையியலோடு ஒப்பிடுவதை விடவும், பொதுமைகளை உருவாக்கும் முறையியல்களோடு இணைத்து யோசிப்பது சரியாக இருக்கும்.
பொதுமைகளை உருவாக்குவது பற்றி தத்துவம் மீண்டும் மீண்டும் விவாதித்திருக்கிறது. தனியன்களா பொதுமைகளா என்ற பிரச்சினையில், பொதுமையாக்கம் தனியன்களை உன்னத நிலைக்கு இட்டுச் செல்கிறது என்று சொல்கிறவர்கள் உண்டு. ஐம்புல அறிவைக் கடந்து, ஒரு பொருளின் அரூபத்தை அடையும் போது, அது கால, வெளிகளைக் கடந்த விழுப்பொருளாக மாறுகிறது. ஆங்கிலத்தில் sublation என்று அழைக்கப்படும் இச்செயல்பாடு பொருட்களின் மரியாதையை கணிசமாக மேம்படுத்துகிறது. ஒரு பொருளின் தனித்துவங்கள் அப்பொருளை உன்னத நிலைக்கு உயர்த்துவது இல்லை. மாறாக, பொருள்களின் பொது இயல்புகளே இதை சாத்தியப்படுத்துகின்றன.
பொதுமையாக்கம் என்பது அடிப்படையில் ஒரு அரசியல் செயல்பாடு. அயோத்த்திதாசரைப் பொறுத்தமட்டில், பொதுமைகளைத் தேடிக் கண்டடைவதன் மூலம் வட்டார வேறுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறார். அவற்றின் மீது அவருக்குக் கண்டனங்களும் இல்லை, வியப்புகளும் இல்லை. அவரது கவனம் முழுக்க, வெவ்வேறு வட்டார வெளிப்பாடுகளிலிருந்து உருவாக்கப்படும் பொதுமையின் இலட்சணத்தை வரையறுப்பதில் குவிந்திருக்கிறது. இதனால் வட்டார ஞாபகங்களுக்கு அவர் முக்கியத்துவம் தருவதில்லை. அவை, ஒன்றின் பலவடிவங்கள் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறார்.
‘…அம்மன் பாலபருவம் ஆதலின் வாலை என்றும், சகலமும் தெரிந்தவள் என்பதால் அவ்வை என்றும், இளந்தேகம் உடையவள் என்பதால் பச்சையம்மன் என்றும், அதி ரூபமுடியவள் என்பதால் வடிவுடையம்மன் என்றும்… பல்பெயர் இட்டு சேரிகள் தோறும் அம்மன் கோவில் கட்டி வைத்து, அக்கட்டிடங்கள் வீதியில் இருக்கும் என்றால் திருவீதி அம்மன் என்றும், மத்திய எல்லைக்குள் இருக்கும் என்றால் எல்லம்மன் என்றும், கழிகளின் ஓரங்களில் இருக்கும் என்றால் திருகழி அம்மன் என்றும், முல்லை நிலத்தில் இருக்கும் என்றால் துளிர்கானகத்தம்மன் என்றும் பெயர்களை வைத்து…’ (அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுதி 1, பக்.34-35) அழைத்தனர் என்பதே அம்மன்களின் வட்டார வேறுபாடுகளுக்கு அவர் தரும் விளக்கம். இவை அனைத்தும் அம்மன்களின் புற அலங்காரங்கள் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். இதற்கும் ஆடி மாதம் அம்மனுக்கு விழா எடுப்பதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இதற்கு மாறாக அவர் வரிசைப்படுத்தும் பொதுத்தன்மைகள் கவனத்திற்குரியவை. அம்மன் பூரணமடைந்த ஆடி மாதம் பெளர்ணமிக்கு பத்து நாட்களுக்கு முன், காப்புக்கட்டி விழா தொடங்குகிறது. பத்தாம் நாள் குடிமக்கள் யாவரும் புதுப்பானைகள் கொண்டு பொங்கல் வைக்கின்றனர். இக்காலங்களில் கொன்று தின்னாமை என்ற நோன்பையும், மூவிரதங்களையும் கடைபிடித்தனர். தேகத்தால் பிறருக்குத் தீங்கு இழைத்தவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தார்கள். அன்னதானம், ஆடைதானம் வழங்கினார்கள். நாவைக் காக்காமல் பிறரைச் சொல்லால் குத்தியவர்கள், தங்கள் நாக்கில் அலகிட்டு பரிகாரம் வேண்டினார்கள். பிறரைக் கெடுத்தவர்கள், தங்கள் குற்றபாரம் தாங்காமல் தம்மிடமிருக்கும் பொருட்களை பிறருக்கு விநியோகிக்க ஆரம்பித்தார்கள் (பக். 35-36). இதையெல்லாம் பட்டியலிடும் அயோத்திதாசர் அம்மன் விழாவின் இலட்சணம் என்று சொல்வது மிக எளிமையானது.
‘எங்கெங்கெல்லாம் மழை குறைந்து புழுக்கம் தோன்றுகிறதோ, அந்தந்த இடங்களில் பதின்மூன்று வகை வைசூரியும், மூன்று வகை பேதியும் உருவாகி, மனிதர்களைக் கொள்ளை கொள்கிறது. இதற்குக் கண்ணுக்குத் தோன்றாத சாமளை என்னும் சிறு புழுக்கூட்டங்களே காரணமாய் இருந்தன. அப்புழுக்கூட்டங்கள் அகலுவதற்கு வேப்பிலை, கற்பூரப்புகை, மட்டிப்பால் புகை, அவுரிப் புகை இவைகளை வீடுகள் மற்றும் வீதிகள் எங்கும் கமழச் செய்து, மனிதர்களின் நாசியிலும் நாவிலும் புழுக்கள் நுழைந்து கொள்ளை கொள்வ்தால், பல தானியங்களை உப்பிடாமல் அவித்து, பச்சரிசி மாவு இடித்து, அதில் வேப்பிலையைக் கலந்து, அனைவரையும் சாப்பிடும் படி தானம் செய்தனர். இதனால் உள்ளுக்குள் நுழைந்த புழுக்கள் அகன்று சுகமடையவும், வெப்பம் உருவாக்கிய கொள்ளை நோயிலிருந்து காக்கவும் புத்தி சொன்னவள் என்பதால் அவ்வையை மாறி ஆத்தாள் என்று கொண்டாடி வந்தனர்.’ (பக். 33)
எல்லா வட்டார வேறுபாடுகளையும், அவற்றிற்கு சொல்லப்படும் விதவிதமான தொன்மக் கதைகளையும் தவிர்த்து விட்டு, அப்பண்பாட்டுக் கூறின் பொதுத்தன்மைகளை மட்டுமே வைத்துக் கொண்டு, அயோத்த்திதாசர் உருவாக்கிக் காட்டும் இலட்சணம், சடங்குகளில் தொழிற்படும் மீவியல்புகளை அடியோடு மறுத்து விடுகிறது. மாறாக, அவற்றிற்கு மிக இயல்பான வாழ்க்கைத் தருணங்கள் உருவாக்கப்படுகின்றன. அம்மனுக்குத் திருவிழா எடுப்பதன் காரணம் வைசூரி, பேதி போன்ற கொள்ளை நோய்களிலிருந்து காத்துக் கொள்வது என்றால், தீபாவளி அன்றே நல்லெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது, கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாளே விளக்கு கண்டுபிடித்த தினம் என்று சொல்லப்படும் விளக்கங்கள் அனைத்தும் அத்திருவிழாக்களின் மீது படிந்துள்ள மாயாவாதக் கற்பனைகளை விலக்கி விடுகின்றன.
வட்டார நிகழ்வுகளை சேகரிக்க ஆரம்பித்து, அவற்றிற்கிடையேயான பொதுத்தன்மைகளை அடையாளம் கண்டு, வட்டாரத் தனித்தன்மைகளுக்கு பன்முக அங்கீகாரத்தை வழங்கி விட்டு, அவற்றின் மீது படிந்துள்ள தொன்மக் கசடுகளை வன்மையாகக் கண்டித்து, பொதுத்தன்மைகளுக்கு வாழ்க்கை சார்ந்த காரணகாரியங்களை அடுக்குவதன் மூலம், மாபெரும் விழிப்பை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த விழிப்பையே நான் பெளத்தவயமாதல் என்று அழைக்கிறேன்.
பெளத்தவயமாதலின் மிக முக்கியமான கூறுகள் என்று சிலவற்றை நாம் பட்டியலிட முடியும். ஒன்று, வட்டாரத்தன்மைகளை மட்டுப்படுத்துதல்; இரண்டு, தொன்மங்களை நிராகரித்தல்; மூன்று, பண்பாட்டுப் பொதுமைகளை அடையாளம் காட்டுதல்; நான்கு, அறிவியலை இலட்சணமாக அங்கீகரித்தல்; ஐந்து, இலட்சண விளக்கங்களுக்கு எழுத்து ஆதாரங்களை முன்வைத்தல்.
வாய்மொழிப் பண்பாட்டுக் கூறுகளுக்கு எழுத்து மரபிலிருந்து இலட்சணங்களை உருவாக்குதல், மேட்டிமைத்தனமாகப் பார்க்கப்படும் என்றாலும், அயோத்த்திதாசர் சொல்லும் எழுத்துப் பண்பாடு மேட்டிமை குணமுடையது அல்ல. அவர் முற்றிலும் புதிய, மாற்று எழுத்துப் பண்பாட்டை பேசுகிறவராகவும், முன்மொழிகிறவராகவும் இருக்கிறார். வெகுவாகக் கற்பனை செய்யப்படும் வாய்மொழி - எழுத்துமொழி இடைவெளி அவரது மாற்று எழுத்துப் பண்பாட்டில் வெளிப்படுவது இல்லை. அம்மனை அவ்வையாகவும், திருவள்ளுவரை நாயனாராகவும் அவர் விளம்பரம் செய்வது தமிழின் வாய்மொழி - எழுத்துமொழி பிணைப்பை இன்னும் அதிகமாகவே உறுதி செய்கிறது.
இலட்சணத்தை அறிவதே அயோத்திதாசரின் பெளத்தவயமாதல். இலட்சணம் என்ற அறிவியல் சார்ந்த விளக்கங்களை நாம் இழந்து விட்டோம் என்பதையே அவர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். பெளத்த தன்மத்தை அறிந்தவர்கள் மட்டுமே இப்பகுத்தறிவை இன்னமும் காப்பாற்றி வருகிறார்கள் என்று பேசுகிறார். பூர்வ பெளத்தர்கள் என்று அழைக்கப்படும் இம்மக்களிடம் இத்தகைய இலட்சணங்கள் அறிவார்த்த ஞாபகங்களாக ஏட்டுப்பிரதிகளில் உறைந்திருக்கின்றன என்கிறார். அதை எல்லா மக்களுக்கும் பரப்புவதே தன்னுடைய வேலை என்றும் சொல்கிறார்.
அவரது பெளத்தம், தமிழிலக்கிய ஏடுகளில் பொதிந்துள்ள இலட்சணம் என்ற அறிவை அடிப்படையாகக் கொண்டது. அந்த அறிவின் வெளிச்சச்த்திலேயே அவர் நாட்டுப்புற சடங்குகளுக்கும் விழாக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் விளக்கங்களை எழுதுகிறார். அந்த வெளிச்சத்தை அடையும் முறையியல் பொதுமைகளை உருவாக்குவதில் அடங்கியுள்ளது. பெளத்தவயமாதல் என்பது எல்லா நிகழ்வுகளுக்குமான அறிவார்ந்த விளக்கங்களை அடைவது என்றால் அதை இனியும் ஒரு சமயமாக, மதமாகக் கருதுவது நியாயமா என்றொரு கேள்வியை நாம் கேட்க வேண்டும். அதாவது, ஒரு சமூகம், அம்மன் வழிபாடு என்பது கொள்ளை நோய்களுக்கான மருத்துவ முறை என்ற இலட்சணத்தை உணர்ந்து கொண்டதும் பெளத்தவயமாதலுக்கு ஆட்ப்டுகிறது என்கிறார் அயோத்திதாசர். அப்படி ஆட்பட்ட சமூகம், மேற்கொண்டு அத்தகைய சடங்குகளை, சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை எந்த மனநிலையோடு அணுகும் என்பதை நம்மால் யூகிக்க முடியவில்லை. அவர் வெளிப்படுத்தும் இலட்சணங்களை உள்வாங்கிக் கொண்ட சமூகத்தில் அம்மன் பற்றிய வீண் பயங்கள், கண்மூடித்தனமான நம்பிக்கைகள், அம்மனின் அருள்வாக்கு பெறும் சடங்குகள் போன்றவை தொடர்ந்து இடம்பெறுமா அல்லது அம்மன் என்பது அவ்வையின் வரலாற்று ஞாபகம் என்ற தெளிவு ஏற்படுமா என்று கேட்டால், அயோத்த்திதாசர் தெளிவு ஏற்படும் என்றே வலியுறுத்துவார். அப்படியானால், அவரது பெளத்தவயமாதல் என்ற இலட்சண மீட்டெடுப்பு, வழக்காறுகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து, பூரண பகுத்தறிவை நோக்கி நகர்த்துகிறது என்று சொல்ல வேண்டும்.
இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்றால், நமக்கு எழக்கூடிய இன்னொரு முக்கியமானக் கேள்வி, இந்தப் பகுத்தறிவுச் செயல்பாட்டை பெளத்தவயமாதல் என்று அழைப்பதன் காரணம் என்ன? இந்தக் கேள்வியை நான் இப்படிக் கேட்பேன் - இலட்சணம் என்ற மாட்டை ஏன், அயோத்திதாசர், பெளத்த மரத்தில் கட்டி வைத்தார்? தான் கற்பனை செய்யும் பூர்வத்திற்கு பெளத்தம் என்ற பெயரை அவர் வழங்கியிருக்காவிட்டால், அவரது இந்திர தேச சரித்திரம், இன்னுமொரு தேசிய அடையாள உருவாக்கப் பிரதியாக வாசிக்கப்பட்டிருக்கலாம். வேஷ பிராமணர் நீக்கம், இலட்சண மீட்டெடுப்பு, மாற்று எழுத்து மரபு என்று வேறொரு பண்டிதரை சந்தித்திருக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கும். பெளத்தம் என்ற ஒற்றைப் புள்ளிக்குள் அவரது ஒட்டுமொத்த அறிவியக்கமும் சுருங்கிப் போயிருக்காது.
Comentários