‘தமிழும் இசையும்’ என்ற சிந்தனையை உருவாக்கித் தந்தவர், ஆபிரகாம் பண்டிதர். அவரது ‘கருணாமிர்த சாகரம்’ என்ற பிரம்மாண்டமான நூலுக்கு இணையாக இன்னொரு நூல் இது வரை எழுதப்படவில்லை. இனியும் எழுத முடியுமா என்று தெரியவில்லை.
கிறிஸ்தவப் பின்னணியில் வளர்ந்த ஆபிரகாம் பண்டிதர், பாரம்பரியமாக சித்த வைத்தியர். திருநெல்வேலிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை என்ற ஊரில் பிறந்தார். அதன் பின், தஞ்சாவூரில் குடியேறி இன்றைக்குக் கற்பனையே செய்ய முடியாத காரியங்களை இசை ஆராய்ச்சியில் ஒற்றை ஆளாகச் செய்து முடித்தார்.
பழந்தமிழ் இசைக்கான மூல ஆதாரங்களாக சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகாரத்தையும் கருத முடியும் என்பது ஆபிரகாம் பண்டிதரின் கருதுகோள். இதை அடிப்படையாகக் கொண்டு, மறைந்து போன தமிழிசையின் வேர்களை அவரால் கண்டறிய முடிந்தது. கருநாடக இசையே தென்னிந்திய இசை மரபின் ஆதர்சம் என்று பலரும் கருதி வந்த வேளையில், தமிழிசையின் தொன்மையையும் ஆழ அகலங்களையும் மீள் கட்டமைப்பு செய்தவர் அவர்.
ஆபிரகாம் பண்டிதரின் இசைப்பணி மூன்று சிறப்பியல்புகளைக் கொண்டது.
1. இலக்கியப் பனுவல்களிலிருந்து இசையின் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை மீட்டெடுக்க முடியும் என்ற ஆய்வுப் பொருளை அறிமுகப்படுத்தியவர் அவர். இந்தக் கருதுகோளையும், அதை அவர் செய்து காட்டிய விதத்தையும் இன்று நாம் ஒரு சிந்தனாப் பள்ளியாக வளர்த்தெடுக்க முடியும். அதற்கான முயற்சிகளை வீ.பா. க. சுந்தரம், அருட்சகோதரி பாஸ்டின், மம்மது போன்றவர்கள் செய்திருக்கிற சூழலில் இன்னும் ஏராளமான ஆய்வாளர்கள் இத்தளத்தில் பணி செய்வது தமிழ்ச் சிந்தனை மரபை மேம்படுத்தும்.
2. இரண்டாவது, ஆய்வுப் பணியோடு இணைத்து, தமிழிசையைப் பரவலாக்க அவர் தொடர்ச்சியாக இசை மாநாடுகளை, விழாக்களை நடத்தி வந்தார். இத்தகையப் பரவலாக்கம், அவரது மறைவிற்குப் பின் தொய்வடைந்தது அல்லது காணாமல் போனது. தமிழர்களின் இசை மரபை உலக இசை மரபுகளோடு ஒப்பிடுவதும், அதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதுமே ஆபிரகாம் பண்டிதரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
3. மூன்றாவதாக, அவருடைய ஆய்வுகளுக்குள் இழையோடும் 'சாதிக்கு முந்தைய தமிழ் சமூகம்’ என்ற கற்பனை வசீகரமானது. தமிழிசையின் தோற்றத்தை மீள் கட்டமைப்பு செய்யத் தொடங்கும் ஆபிரகாம் பண்டிதர் ‘குமரிக்கண்டம்' என்ற சாதியற்ற நிலப்பரப்பையும் அங்கு நிலவிய கலைப்பண்பாட்டுச் சூழலையும் ‘லட்சியவாதத்’ தன்மை கொண்டே கற்பனை செய்கிறார் என்றாலும், ‘தமிழ்’ என்ற நவீன அடையாள உருவாக்கத்தில் அவை மிக முக்கியமானத் தருணங்கள். அயோத்திதாசப் பண்டிதரின் ‘இந்திரதேசம்’ என்ற கட்டமைப்பிற்கு இணையான வலிமை கொண்ட கட்டமைப்பு ‘குமரிக்கண்டக்’ கதையாடல். ஆபிரகாம் பண்டிதர் மேற்கொண்ட இசையாராய்சியின் கருத்தியல் பின்புலமாகவே இதை நாம் கருத வேண்டும்.
ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முறையியல், பரவலாக்க செயற்திட்டங்கள், கருத்தியல் நிலைப்பாடு என்ற மூன்றையும் குறித்த ஆய்வுகளை ‘இனக்குழும இசையியல்’ (Ethnomusicology) என்ற பெயரில் முன்னெடுப்பது மிக அவசியம் என்று நினைக்கிறேன். அந்த வகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு இருக்கையொன்றை (இனக்குழு இசையியல் ஆய்வுக்கான ஆபிரகாம் பண்டிதர் இருக்கை) நிறுவுவதற்கானக் கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். இவ் ஆய்விருக்கை, இசையும் பண்பாடும் என்ற பொருண்மையில் ஆய்வுகளை மேற்கொள்ள பலரையும் உற்சாகப்படுத்தும். தமிழக முதல்வரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் இதனைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
*
ஆபிரகாம் பண்டிதரின் முறையியலைக் கவனத்தில் கொண்டீர்கள் என்றால் ஒரு விஷயத்தை அவதானிக்க முடியும். தமிழ் செவ்வியல் இசைக்கான மூல நூற்கள் கிடைக்காத சூழலில், பழந்தமிழர்களின் கூத்து வடிவங்கள் (சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படும் கூத்துகள்), இசைப்பாடல்கள் (சங்கப்பாடல்களும் இன்னபிறவும்) மூலம், அத்தகையதொரு செவ்வியல் மரபை மீட்டெடுப்பது தான் அவரது பிரதான முறையியல். அதாவது, மக்கள் மத்தியில் வழங்கி வந்த இசை வடிவங்களின் இலக்கியப் பதிவுகளிலிருந்து செவ்வியல் வடிவத்தை உருவாக்குதல்.
அப்படி உருவாக்கப்பட்ட இசை செவ்வியல் வடிவமாகத் தோன்றினாலும், மக்களிசையின் தாத்பர்யங்களைக் கொண்டிருக்கின்றன என்பது தான் விசேஷம். அதாவது, தொன்று தொட்டு செவ்வியல் இசை மரபில் நடைபெறும் ‘பண்பாட்டு நீக்கம்’ ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசையில் நிகழாமல் பார்த்துக் கொள்கிறார். தான் மீட்டெடுத்த இசை பண்பாட்டோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற காரணத்தினாலேயே அதற்குத் 'தமிழ்' என்ற முன்னொட்டையும் சேர்க்கிறார். அதாவது, ‘பண்பாட்டு ஏற்றம்’ நிகழ்கிறது. கருநாடக இசையில் நிகழும் பண்பாட்டு நீக்கத்திற்கு எதிரான செயல் இது.
இதே போன்ற ஆய்வு முறைகள் பல தேசங்களில் கடைபிடிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, தனது இலக்கியப் பாரம்பரியத்தில் எந்தவொரு எழுத்திலக்கிய காப்பியமும் இல்லாதிருந்த ஃபின்லாந்தியர்கள், வாய்மொழி மரபில் சிதிலமடைந்து கிடந்த பெருங்கதை வடிவத்தை செப்பனிட்டு, தங்களுக்கான செவ்வியல் காப்பியமான ‘காலேவாலா’ என்ற இலக்கியத்தை உருவாக்கிக் கொண்டனர் என்பது வரலாறு. எலியாஸ் லோன்ரட் என்ற ஃபின்னிய ஆய்வாளர் பயன்படுத்திய இம்முறையியலைக் குறித்து ஆயிரக்கணக்கான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாக, வரலாற்று நிலவியல் கோட்பாடு, வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு, பனுவலாக்கக் கோட்பாடு என்று பல்வேறு கருத்துருவாக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. காலேவாலா உதாரணத்தைக் காட்டிலும் சிக்கலான, அதே நேரம் வெற்றிகரமான காரியம் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்.
மக்களிசை, இலக்கணமற்றது; வடிவமற்றது; ஒழுங்கற்றது; கரடுமுரடானது என்ற பழைய நம்பிக்கைகளை நாம் இன்றும் பிடிவாதமாய் நம்பிக் கொண்டிருக்க அவசியமில்லை. அதாவது, நாட்டுப்புற வழக்காறுகள் கலை வடிவங்களின் குழந்தைப் பருவம் என்று மட்டுமே யோசிக்க வேண்டியத் தேவையில்லை. அவற்றை, மறந்து போன செவ்வியல் மரபின் சிதறுண்ட ஞாபகங்கள் என்றும் கூட நாம் கருத முடியும். அந்த வகையில், ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முறையியல் தனித்துவமானது.
இதே போன்ற ஆய்வு முறையியலை நான் இன்னொரு பண்டிதரிடம் பார்க்கிறேன் - அவர் அயோத்திதாசப் பண்டிதர். தமிழ் பெளத்தத்திற்கான மூல நூல் ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில், அவர் நாட்டுப்புற சடங்குகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்களிலிருந்து பெளத்தம் என்ற செவ்வியல் சமயத்தைக் கற்பனை செய்கிறார். அப்படியொன்றை நிர்மாணித்தும் காட்டுகிறார். இரண்டு பேரின் முறையியலும் ஒன்று. வரலாற்று மீட்டுருவாக்கம், வரலாற்று நிலவியல் கோட்பாடு, வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு, பனுவலாக்கம் என்று அனைத்தும் இணைந்த முறையியல்.
முத்தாய்ப்பாகச் சொல்லப்போனால், இம்முறையியல் சித்த வைத்திய மரபின் அடிநாதம் என்று சொல்ல வேண்டும். மனித உடலையும், அது புழங்கும் நிலத்தையும், அதன் வரலாற்றையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சித்த வைத்திய சிந்தனை முறையே இவ்விருவரிலும் செயல்படுகிறது. இரண்டு பேரும் சித்த வைத்தியர்கள் என்பது இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டுகிறது. ஆபிரகாம் பண்டிதர் பெயரில் இனக்குழும இசையியல் இருக்கையை முன்மொழிவதன் காரணம் இது தான்.
コメント