அவர் பெயர், வெள்ளத்தொரச்சி. அவர் சொல்லும் கதைகளில் யாருக்கும் பெயர்கள் இல்லை.
அப்படியோர் அற்புதமான கதைசொல்லி. தன் வாழ்நாள் முழுக்க காட்டுக்கதைகளை மட்டுமே சொல்லி வந்தவர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தேவிப்பட்டணம் என்ற சிற்றூரில் நான் அவரைக் கண்டுபிடித்தேன். தனது ஐந்து பெண் குழந்தைகளோடும், ‘கிழவன்’ என்று அழைக்கப்படும் கணவனோடும் அவர் வாழ்ந்து வந்தார். கதைகளோடு மட்டுமே புழங்கி வந்ததால் அவருடைய இருபது விரல்களிலும் பூனை மயிரை விடவும் மிருதுவான ஊதா நிறப் பூஞ்சை படர்ந்திருந்தது. அவரிருக்கும் இடமெங்கும், மண்வாசம் என்று கொண்டாடப்படும், பழுப்பேறிய பழைய காகிதங்களில் வீசும் புழுக்க மணம் வீசிக் கொண்டிருந்தது.
வெள்ளத்துரைச்சி எனக்கு முதலில் சொன்ன கதை, துர்பாக்கிய இளம்பெண்ணைப் பற்றியது. சொல்லப்போனால், எல்லாக் காட்டுக்கதைகளிலும் துர்பாக்கியர்களே கதாநாயகர்கள். அவர்களின் இழிநிலை எப்படிச் சீரானது என்பதுதான் கதைக்கரு. வெள்ளத்துரைச்சி சொன்ன கதையில், அந்த இளம்பெண்ணின் துர்பாக்கியம், அவள் பிறப்பதற்கு முன்பே ஆரம்பித்துவிட்டது.
0
கதாநாயகியின் தாய், ஒரு வெகுளி. தாய் தந்தை இல்லாத பெண். அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்தவள். ஊர் உலகம் தெரியாதவள். இல்லையென்றால், சமையலுக்கு வைத்திருந்த மஞ்சளை எடுத்துத் தின்பாளா, சொல்லுங்கள்! பார்க்க அழகாக இருந்ததாம். அப்படியே தின்றுவிட்டாளாம்.
சரி, அவள்தான் அப்படி என்றால், அந்த மஞ்சளாவது சும்மா இருந்திருக்கலாம். அதுவொரு வில்லங்கமான மஞ்சள். நேராக, அவள் வயிற்றுக்குள் போய், கருவாக மாறிவிட்டது. மஞ்சளைத் தின்ற பாவத்திற்கு அந்தப் பெண் இப்பொழுது கர்ப்பம்.
இதை யாரிடமும் சொல்லவில்லை. ஊரில் இதை யார் நம்புவார்கள்? நீங்களும் நானும், கதை தானே என்று இதை நம்பலாம். ஊர்க்காரர்களுக்கு இது கதை என்று தெரியாதில்லையா? உடனடியாக, இந்தப் பெண்ணின் நடத்தையைத்தான் சந்தேகப்படுவார்கள். அதனால், அவள் யாரிடமும் சொல்லவில்லை. மறைத்து, மறைத்து வைத்து குழந்தையையும் பெற்றுக் கொண்டாள். அது ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தைதான் இந்தக் கதையின் கதாநாயகி.
யாருக்குத் தெரியுதோ இல்லியோ, அண்ணன்காரனுக்குத் தெரியவே கூடாது. என்ன செய்யலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தவள் கண்ணில், ஆளுயுர குத்துவிளக்குதான் தெரிந்தது. நெடுஞ்சாங்கிடையாக விளக்கின் முன் விழுந்தாள். ‘நீ தான் நாச்சியா காப்பத்தணும்!’
விளக்கு தன்னை இரண்டாகப் பிளந்து காட்டியது. தாராளமாய் ஒரு வளர்ந்த ஆள் உள்ளே போய் வரலாம். குழந்தையை எடுத்து அதனுள் வைக்க, விளக்கு மறுபடியும் மூடிக் கொண்டது. குழந்தை இப்படியே சில வருடங்களாக விளக்கிற்குள்ளேயே வாழ்ந்து வந்தது.
இதனிடையே அந்த ஊரில், உப்பு விற்க வந்த பெண்ணுக்கு அண்ணன்காரன் மேல் ஒரு கண். அதனால், தங்கை சமைத்து வைத்த சோற்றுப்பானையில் தினமும் கொத்து கொத்தாக தலைமுடியைப் போட்டு வைத்தாள். அண்ணக்காரன், சாப்பாட்டில் தலைமுடி இருப்பதைக் கண்டு தங்கையைத் திட்ட ஆரம்பித்தான். சில நாட்களாகவே அவள் சரியில்லை என்பதை அவன் எப்படியோ உணர்ந்திருந்தான். குழந்தை நடமாட்டம் இருக்கிற வீடு போல் இருக்கிறதே என்றொரு சந்தேகமும் உண்டு.
இன்னொரு நாள் சாப்பாட்டுச் சட்டி நடுவீட்டில் உடைந்து கிடைந்தது. அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று தங்கையை நோக்கி பாயந்தவனை உப்புக்காரிச்சிதான் தடுத்து நிறுத்தினாள்.
‘என்னைக் கட்டிக்கோ, நான் சமைச்சிப் போடுறேன்!’ எவ்வளவு எளிய காதல் கடிதம் பாருங்கள்!
மறுநாளே கல்யாணம் நடந்தது. ஒட்டுமொத்த வீட்டுப் பொறுப்பும் உப்புக்காரியிடம் வந்தது. மூன்றாம் நாளே, விளக்கிற்குள் பெண்ணிருப்பதை அவள் கண்டுபிடித்துவிட்டாள். அதும் அழகுப்பதுமையாய் இருப்பதைக் கண்டு விக்கித்துப் போனாள். இதை இப்படியே விட்டால் தன் இடத்திற்குத்தான் ஆபத்து என்பது அவளுக்கு உடனடியாக விளங்கியது. தாய்மாமன் இத்தனை அழகான பெண்ணைப் பார்த்தால் விட்டு வைப்பானா என்ன?
இதன் பின் கதையில் நடந்ததனைத்தும் ரத்தக்களறி. யாருக்கும் தெரியாமல், அந்த விளக்கை ஊருக்கு ஒதுக்குப்புறமாய் தூக்கிப் போனாள். வெம்மணலில் அவ்விளக்கைப் போட்டாள். வெக்கை தாளாமல் விளக்கைப் பிளந்து கொண்டு அழகுப்பெண் வெளியே வந்தாள்.
வந்தவளை கை வேறு, கால் வேறு, தலை வேறு என்று துண்டு துண்டாக வெட்டி எடுத்தாள் உப்புக்காரி. வெட்டி எடுத்தக் கைகளைக் கொண்டு போய், பருத்திமாறுக் கட்டுகளில் ஒளித்து வைத்தாள். கால்களை விறகுக் கட்டைகளோடு கட்டைகளாகப் போட்டு வைத்தாள். தலையை, ஊர் எல்லையிலிருந்த நந்தவனக் கிணற்றில் வீசினாள். முண்டத்தை மட்டும் விளக்கிற்குள் ஒளித்து வைத்தாள்.
நந்தவனத்தில் ஒரு கிழவியும் கிழவனும் இருந்தனர். கிழவியே தலை கிணற்றில் மிதப்பதை முதலில் கண்டுபிடித்தாள். அதை வெளியே எடுத்தால், அத்தனை அழகு முகம். ‘ஏன்த்தா உனக்கு இந்த கதி?’ என்று கேட்க, தலை ஆதியோடந்தமாய் தனது கதையைக் கிழவியிடம் சொன்னது. சொன்னதோடு தனது உடல் பாகங்கள் எங்கெங்கே உள்ளன என்று துப்பும் கொடுத்தது.
கிழவி, பல்வேறு தந்திரங்கள் செய்து, அந்த அழகுப் பெண்ணின் உடலை மீண்டும் முழுமையாக்கினாள். அன்றிலிருந்து நந்தவனத்தில் அழகழகான பூக்கள் பூக்க ஆரம்பித்தன. இது உள்ளூர் ராஜகுமாரனுக்குத் தெரியவந்தது. ‘யாரிது?’ என்று விசாரிக்க ஆரம்பித்து, அழகுப்பெண்ணைக் கண்டு மயங்கி திருமணமும் செய்து கொண்டான்.
திருமணத்திற்கு எல்லோருக்கும் அழைப்பு வந்தது. அவளுடைய தாய், தாய் மாமன், உப்புக்காரி, கதை சொன்ன வெள்ளத்துரைச்சி என்று எல்லோருமே போயிருந்தார்கள். போன எல்லா பெண்களுக்கும் சேலை எடுத்துக் கொடுத்தார்கள். வெள்ளத்துரைச்சிக்கு அரக்குக் கலரில் புடைவை கிடைத்தது.
உப்புக்காரியைக் கண்டதும் அழகுப் பென்ணுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ‘இவள் தான் என்னை அந்தப் பாடு படுத்தியது’ என்று ராஜகுமாரனிடம் கைகாட்டினாள்.
இவளைச் சும்மா விடக்கூடாது என்று நினைத்த ராஜகுமாரன், உப்புக்காரியின் தலையை மழிக்கச் சொன்னான். பின், கம்மாக்கரையில் கழுத்து வரை புதைத்து வைக்கும்படி ஆணையிட்டான். அன்றிலிருந்து, காலைக்கடனுக்காக கம்மாக்கரையில் ஒதுங்குகிறவர்கள், அவளுடைய தலையில்தான் குண்டியைத் துடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தான்.
மொட்டைத் தலையெங்கும் மலம் வழிந்தது. இதைக் கவனித்த அவளது கணவன், ‘என்ன இருந்தாலும் பெஞ்சாதி’ என்று சொல்லி, அவள் தலையை சுத்தமாக்க வேண்டி, துவைக்கும் கல்லில் மடேர், மடேர் என்று வீச, தலை சிதைந்து உப்புக்காரி இறந்துபோனாள். அதன்பின், எல்லோரும் சுகமாய் இருந்தார்கள்.
0
இந்தக் கதை மட்டுமல்ல, காட்டுக்கதைகள் என்று சொல்லப்பட்ட அனைத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத வன்முறை மிக இயல்பாய் விவரிக்கப்படுகிறது. நந்தவனத்துக் கிழவி, கிணற்றில் தலை மட்டும் கிடப்பதைக் கண்டுபிடிக்கும் காட்சியில் அத்தனை சுவராஸ்யமாய் சொல்லப்படும்.
வழக்கம் போல, வாளியை இறக்கி நீர் இறைக்கிற கிழவிக்கு கிணற்றிலிருந்து ‘மொட, மொடா’, ‘மொட மொடா’ என்றொரு சப்தம் கேட்கும். தனது கிழவனைக் கூப்பிட்டு ‘இப்படி இப்படி சத்தம் கேட்கிறது. என்னவென்று பார்’ என்று சொல்வாள் கிழவி. கிழவன் அவளை நம்பாமல், திட்டுவான். ‘உனக்கு கண்ணு அவிஞ்சு போன மாதிரி, காதும் தூந்து போயிருச்சு போல. இல்லாத சப்தமெல்லாம் கேக்கு!’
அதே போல, உடலின் ஒவ்வொரு பாகத்தையும் கிழவி தேடி எடுத்து வரும் காட்சிகள் இன்னும் விறுவிறுப்பாகச் சொல்லப்படும். நவீனக் கதையாடல்களில் எழுத்து மூலமோ அல்லது காட்சி மூலமோ இச்சம்பவங்களை அருவருப்பும், சங்கடமும் இல்லாமல் விவரித்துவிட முடியுமா என்று தெரியவில்லை. டாரண்டினோ படங்களில் பீச்சியடிக்கும் ரத்தம் வேண்டுமானால் இந்த வகைச் சித்தரிப்புகளுக்கு அருகே வர முடியும். மற்றபடி, இவை அனைத்தும் சொல்கதை மரபில் காலங்காலமாய் பயின்று வரும் கதையாடல் உத்திகள்.
0
வெள்ளத்துரைச்சி இப்படித் தினம் தினம் எனக்குக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபொழுது தான் நான் ‘கதை என்று அங்கீகரிக்கப்படாத கதையொன்றை’ கேட்க நேர்ந்தது. அதாவது, ‘இது கதையல்ல என்று மறுக்கப்பட்ட’ கதை. என் வரையறையின் படி, நாட்டுப்புறக் கதைகளின் எதிர்த்தரவு.
இந்த எதிர்த்தரவை, எதிர்க்கதை என்று நினைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம். எதிர்க்கதை என்றால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நியமங்களைக் கேள்வி கேட்கும் தன்னுணர்வு பெற்ற கதைகள் என்று அர்த்தம். ஆனால், நான் கேட்ட அந்தக் கதைக்கு அப்படியான தன்னுணர்வுகள் எதுவும் இல்லை. தன்னையும் ஒரு மரபான சொல்கதையாக நினைத்தே அது எனக்குச் சொல்லப்பட்டது. அப்படிச் சொல்லப்பட்ட கணத்திலேயே, சொல்கதை மரபின் மிகச் சிறந்த கதைசொல்லிகளால் அது ‘கதையல்ல’ என்றும் மறுக்கப்பட்டது. நாட்டார் கதையின் இலக்கணங்களை அமைத்திப்படுத்தாத கதை என்பதால், அந்த நிமிடமே ஒதுக்கப்பட்ட கதை அது.
எந்தவொரு வழக்காறும், வழக்காறாக நிலைபெறுவதற்கு இத்தகைய சமூக அங்கீகாரம் மிக முக்கியம். யாராவது ஒரு நபர் ஆசைப்படும் காரணத்தால், எந்தவொரு கதையாடலும் வழக்காறு என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட முடியாது. அது, மீண்டும் மீண்டும் பலரால் வெவ்வேறு தருணங்களில் சொல்லப்பட வேண்டும். இதனால்தான், வழக்காறுகளை உருவாக்கியவர் இவர் என்று அறுதியிட்டு எதுவும் சொல்ல முடிவதில்லை. வழக்காறை வழக்காறாக மாற்றுவது தனி நபர் அல்ல; அதுவொரு சமூகச் செயல். இந்தச் சமூக அங்கீகாரமே ஒரு கதையாடலை வழக்காறாக ஸ்தாபிக்கிறது. அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட வழக்காறுகளையே நாட்டுப்புறவியல் ‘தரவு’ என்று அழைக்கிறது.
நான் என் கள ஆய்வில், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத கதையொன்றைக் கேட்டேன். சொன்ன மாத்திரத்தில் ‘இது என்ன கதை, இதெல்லாம் கதை இல்லை!’ என்று மறுக்கப்பட்ட ‘கதையை’ நான் சேகரித்தேன். நாட்டுப்புறவியலைப் பொறுத்த வரையில் அதற்குத் தரவு என்ற அங்கீகாரம் கிடையாது. அதனாலேயே நான் அதை ‘எதிர்த்தரவு’ என்று அழைக்க விரும்புகிறேன்.
0
வெள்ளதுரைச்சியின் கதைகள் தேவிப்பட்டணத்தில் மிகப் பிரபலம். சாதாரணமாக அதிகம் பேசாத வெள்ளத்துரைச்சி, கதை என்று வந்துவிட்டால் பிய்த்து உதறுவார். நான் ஒவ்வொரு நாள் இரவிலும் அவரது வீட்டில் வைத்து கதைகளைச் சொல்லச்சொல்லி ஒலி நாடாவில் பதிந்து கொண்டிருந்தேன். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வந்து குழுமி விடுகிற நிகழ்ச்சியாக அது மாறிக் கொண்டிருந்தது. ‘அந்தக் கதைய சொல்லு’, ‘இந்தக் கதையச் சொல்லு’ என்று பலரும் அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இப்படி நல்லபடியாய் போய்க் கொண்டிருந்த பொழுதுதான், ஒரு நாள் இரவில், வெள்ளத்துரைச்சி நீண்ட கதையொன்றைச் சொல்லி முடித்த இடைவேளையில், கூட்டத்திலிருந்த இன்னொரு பெண், ‘நானும் ஒரு கத சொல்றேன்’ என்றார்.
அவரையும் எனக்கு நன்றாகவே தெரியும். நான் தங்கியிருந்த வீட்டிற்கு எதிர் வீடு அவருடையது. பெயர், காளியம்மா. துடுக்காகப் பேசக்கூடியவர். ஊரில் வாயாடி என்று பெயர் வாங்கியிருக்கிறார். குரலும் கணீர் கணீரென்று ஒலிக்கும். அவருக்குப் பதின்ம வயதில் ஒரு பெண் இருந்தது, ஜான்சி. ஆண்களின் சட்டையைப் போட்டுக் கொண்டு ஆடு மேய்க்கப் போகும். அந்தப் பெண்ணை ‘ஏய், ஜான்சி….’ என்று காளியம்மா கூப்பிட்டால் ஆடு மேய்க்கிற கம்மாய் வரை கேட்கும். அப்படியொரு குரல் அவருக்கு.
காளியம்மா கூலி வேலைக்கெல்லாம் போவது இல்லை. கொஞ்சூண்டு நிலம் இருந்தது. மாடு, கன்றுகள் இருந்தன. அவரது வீட்டுக்காரர் கடுமையான உழைப்பாளி. நிலம் நீச்சு என்று மட்டுமே வாழ்பவர். அதனால், காளியம்மாவிற்கு பெரிதாய் உடலுழைப்பு எதுவும் இருக்கவில்லை. பக்கத்து வீடுகளில் பழக்கம் பேசுவது அவருக்குப் பிடிக்கும். வெள்ளத்துரைச்சி மட்டுமே பத்துப் பதினைந்து நாட்களாக கோலோச்சிக் கொண்டிருந்த காட்டுக்கதை சொல்லும் நிகழ்ச்சியில் அதிரடியாய் காளியம்மா நுழைந்தார்: ‘நானும் ஒரு கதை சொல்லிக்கிறேன், பதிங்க தம்பி!’
‘உனக்குக் கதை தெரியுமாக்கும்?’ என்றார் வெள்ளத்துரைச்சி.
‘ஏன் தெரியாது? நானும் ஒண்ணு சொல்லிக்கிறேன்!’
அவருடைய குரலை ஒலிப்பதிவுக் கருவியில் கேட்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை என்று எனக்கு விளங்கிவிட்டது. இந்த மாதிரியான சமயங்களில் நான் ஒலிப்பேழைகள் வீணாவது குறித்து அதிகம் கவலைப்பட மாட்டேன். கதைசொல்லி – கேட்பவர்களுக்கிடையே ஒரு சுமூக உறவு நிலவுவது எனக்கு முக்கியம். அதனால், படாரென்று ‘சொல்லுங்க, பதிஞ்சிரலாம்’ என்று சொல்லி விட்டேன். காளியம்மாவும் உற்சாகமாய் கதை சொல்ல ஆரம்பித்தார். இந்தச் சந்தடியில் நான் வெள்ளத்துரைச்சியை உன்னிப்பாய் கவனித்திருக்கவில்லை. அது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு அடுத்த அடுத்த நாட்களில் விளங்கியது. காளியம்மா கதை சொல்ல ஆரம்பித்தார்.
அவரது கதையின்படி, ஒரு ஊரில் ஒரு அக்காவும் ஒரு தங்கையும் வாழ்ந்து வந்தனர். அக்காவை ஏழை வீட்டில் கட்டிக் கொடுத்தனர். தங்கச்சி பணக்கார வீட்டிற்கு வாக்கப்பட்டுப் போனாள். இரண்டு பேரும் ஒரே ஊரில்தான் குடியிருந்தனர். அக்கா வீட்டில் எதற்கெடுத்தாலும் பற்றாக்குறை; அதற்குத் தலைகீழ் தங்கச்சி வீடு, எல்லாமே எக்கச்சக்கம்.
ஒரு நாள், அக்காக்காரிக்கு தலையெல்லாம் ஈர். அதை உருவி எடுக்க, சிணுக்கோலி தேடினாள். இல்லை. அவள் வீட்டில் என்னதான் இருந்திருக்கிறது? உடனே, தனது சின்ன மகளை அழைத்து, தங்கச்சி வீட்டிற்குப் போய் சிணுக்கோலி வாங்கி வரச் சொன்னாள். மகளும் போனாள். தங்கச்சி என்ன நினைப்பில் இருந்தாள் என்று தெரியவில்லை. ‘ஆமா, அவளுக்கு இதே வேலையாப் போச்சு. சிணுக்கோலி இல்லனு போய் சொல்லுட்டி.’
அக்காக்காரியின் மகள் அதை அப்படியே வந்து சொல்லிவிட்டாள். அந்த நிமிடமே மனசொடிந்து போன அக்கா, வேகு வேகென்று வீட்டிற்குள் போனாள். சீலை ஒன்றை எடுத்தாள். அதை முறுக்கி, உத்தரத்தில் வீசினாள். கழுத்தில் சுருக்கிட்டுச் செத்துப் போனாள்.
‘அவ்வளவுதான் கத முடிஞ்சிருச்சி. எங்க பதிஞ்சத போட்டுக் காட்டுங்க கேப்போம்’.
பதிந்து கொண்டிருந்த நான் உட்பட அங்கிருந்த அத்தனை பேரும் திகைப்புடன் காளியம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
வெள்ளத்துரைச்சிதான் மெளனத்தைக் கலைத்தார். ‘அம்புட்டு தானா கத? மிச்சத்தையும் சொல்லு’.
‘மிச்சம் என்ன இருக்கு? அவ செத்துப் போனாள்ல. அவ்வளவுதான்.’
‘இந்தக் கதைய எங்க கேட்ட?’
‘எங்கயும் கேக்கல… நானாத்தான் சொன்னேன்!’
அடுத்த கணமே வெள்ளத்துரைச்சி இப்படிச் சொன்னார்: ‘இது கத கிடையாது!’
சுற்றியிருந்த எல்லோருமே வெள்ளத்துரைச்சியின் கருத்தை ஆமோதிக்கிற வகையில் ‘ஆமா, ஆமா’ என்றனர். காளியம்மாவிற்கு முகம் சுருங்கிப் போனது.
‘நீங்க போடுங்க தம்பி. இதுவும் கதை தானே!’ என்று ஏதோ சொல்லி சமாளித்தார். அன்றைய தினம், நான் அந்த கதையில்லா கதையை என் கையடக்க ஒலிப்பதிவுக் கருவியிலிருந்து அவர்களுக்குப் போட்டுக் காட்டினேன். தனது குரலைக் கருவியில் கேட்டு காளியம்மாவிற்கு அளவில்லா சந்தோசம். இந்தப் பிரச்சினை அத்தோடு முடிந்து விடவில்லை என்று எனக்கு அன்றிரவு தெரியாது.
அதன் அடுத்தடுத்த நாட்களில் நடந்த அசம்பாவிதங்களைக் கோர்வையாகச் சொல்ல வருமா என்று தெரியவில்லை. முயற்சிக்கிறேன்.
Comentarios