top of page

ஆவுடையாள் கேட்ட பிச்சைநீண்ட இடைவெளிக்குப் பின், அம்மாவின் கனவுகளில் மரகதப் பச்சை நிற பாம்புகள் வரத் தொடங்கின. அம்மா எப்பொழுதுமே ப்ராய்டை நம்பியதில்லை. இந்த விஷயத்தில் யுங் பரவாயில்லை என்பார். அதனால், சங்கரன்கோவிலுக்குப் போனோம்.


அம்மாவுக்கு நாகசுனையை எட்டிப்பார்த்தால் போதும் என்று இருந்தது. அப்படியே வருகிற வழியில் ஆவுடையாள் காதிலும் விஷயத்தைப் போட்டு வரலாம்.


தரிசனமெல்லாம் முடிந்து, புத்து மண்ணையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தோம்.


நடையைத் தான் தாண்டியிருப்பேன். இல்லை. தாண்டக்கூட இல்லை. தாண்டுவதற்காக காலைத் தான் தூக்கியிருப்பேன்… என் காதில், ரகசியம் பேசுகிற மாதிரி ஒரு குரல்…


‘தருமராஜா… ஏதாவது குடுத்துட்டுப் போய்யா.’


யாரோ பொடதில அடிச்சா மாதிரி இருந்தது.


திரும்பினால், வயசான ஒரு அம்மா. நடையில் கையேந்தி நிற்கிறது.

‘ஏதாச்சும் குடுத்துட்டு போய்யா.’


என் பெயரைச் சொல்லிக் கேட்டதா?


உடனே திரும்பி கோவிலுக்குள் பார்க்கிறேன். அடுக்கடுக்காய் இருள். அங்கே என் பதட்டம் சிறு துளி ஒளியாக நடுங்கிக் கொண்டிருக்கிறது.


அகப்பட்ட பத்து ரூபாயைக் கையில் கொடுத்து விட்டு தலை தெறிக்க ஓடி வந்தேன். என்ன கொடுக்கனும்? யார் அந்த அம்மா? என் பெயர் சொல்லி எப்படி?


நான் சொல்லக் கேட்டதும் அம்மாவின் முகம் ஜிவுஜிவுவென்று மாறியது. என் கையை இழுத்துக் கொண்டு விறு விறுவென்று கோவிலுக்கு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தார்.


‘என்னம்மா ஆச்சு?’


’திரும்பிப்பாக்காம வேகமா நட!’ அன்றைக்கு நாங்கள் நடந்தது பேய் வேகம்.


*


‘இப்பவும் ஒடம்பெல்லாம் பதறுது. அது ஏதும் சங்கேதமோ! என்னிடம் எதையோ சொல்ல முயற்சிக்கிறார்கள். யார்? தெரியல. என்ன? தெரியல. ஆனா, என்னை அவர்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. பேர் சொல்லுச்சே….இந்த அமானுஷ்யத்தை எப்படி விளங்கிக்கிறது?’


தாசர் என் இடது கை மணிக்கட்டை இறுக்க அழுத்தி அமைதியாயிரு என்றார்.


ஆல்காட்டைப் பார்ப்பதற்காக அடையார் தியோசபிக்கல் சொசைட்டிக்கு வந்திருந்தோம். மெலிதாய் ரீங்கரிக்கும் ஐரோப்பிய அமைதியை அந்த வளாகத்தில் வலிந்து ஏற்படுத்தியிருந்தார்கள். மேடம் பிளாவட்ஸ்கி வளர்த்த பதினெட்டு பூனைகளும் முனகிய படி வலிக்காமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தன. அங்கு வைத்து தான் அவரிடம் அதைக் கேட்டேன்.

என்னை அமைதியாயிருக்கச் சொன்ன தாசரின் உள்ளங்கை ஈரம் பாரித்து இருந்தது.


இன்றைக்கு முக்கியமான சந்திப்பு இருக்கிறது. பெரிய அளவில் ஒரு பெளத்த மறுமலர்ச்சியை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும் என்பது ஆல்காட்டின் ஆசை. அதற்காக தாசரின் தலைமையில் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது பெளத்த மதம் மாறுவது அவரது திட்டம். தாசர் தான் இன்னமும் பிடியே கொடுக்காமல் இருக்கிறார். இதற்கு மேல் தாமதிப்பது நல்லதும் இல்லை. முடிவாக ஒரு பதிலை இன்றைக்கு சொல்லியே ஆக வேண்டும். அது நல்ல பதிலாக இருக்கட்டும் என்று மிரட்டுகிற தொனியில் கூட ஆல்காட் சொல்லியிருந்தார். எனவே தான் தாசர் பதட்டமாக இருந்தார்.


‘ஆல்காட்டிற்கு இன்றைய நாள், நல்ல நாள் இல்லையோ’ என்று நான் சிரித்தேன். ஆமாம் என்பது போல் என் மணிக்கட்டில் மீண்டும் ஒரு அழுத்து அழுத்தினார்.


எங்களைப் போல இன்னும் சிலரும் கூட ஆல்காட்டை சந்திக்க அங்கே காத்திருந்தனர். எல்லோரும் தூய ஆடைகளையே அணிந்திருந்தனர். எல்லோருக்கும் இரண்டிரண்டு பெரிய காதுகள் இருந்தன. அதை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கேட்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். இதனிடையே ஆல்காட் தயாராகி விட்டார் என்றும் இன்னும் சில நிமிடங்களில் அவரைச் சந்திக்கலாம் என்றும் ஒரு சிப்பந்தி சொல்லி விட்டுப் போனார்.


தாசர், ‘அமானுஷ்யம், பூனையைப் போன்றது.’ என்றார். ‘அது எப்பொழுதும் சீமாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு தங்களை ஓவியம் என்றே சொல்கிறது. இந்துக்கள் என்பாரின் கோவில்களில் கலா ரூபங்கள் இருப்பதாகவும், அதுவே இந்த தேசத்தின் ஆன்மா என்றும் நெடுங்காலமாகச் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்த ஆன்மா கல்படிவமாக இறந்து போயிருக்கிறது. அதற்கு உணர்ச்சிகள் இல்லை. என்றைக்கு அது மனிதர்களுக்குள் பாரபட்சம் பார்த்ததோ அன்றைக்கே அது தனது கலைத் தன்மையை இழந்து விட்டது.’


அந்த நேரம் நீலகிரித் தைல வாசனையொன்று எங்களைக் கடந்து போனது. யார் என்று நாலாபக்கமும் பார்த்தோம். யாருமில்லை. வெறும் வாசனை தான் போயிருக்கிறது.

‘ஆனால், சங்கரங்கோவில் வாச நடையில் எனக்குள் நிகழ்ந்த பரவசம் உண்மை தானே? ஆவுடையாள் தானே என்னை அழைத்தாள்? மை போன்ற இருட்டிலிருந்து அந்தக் குரலைக் கேட்டேனே நான்’. இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது மூக்குத்தி அணிந்த பெண் முகமொன்று எனக்குள் வெட்டி மறைந்தது.


‘ஆமா, ஆவுடையாள் தான் உன்னை அழைத்தாள்!’ இதில் என்ன சந்தேகம் என்பது போல தாசர் பார்த்தார்.


‘அது ஆவுடையாள் தான் என்றால், அவள் என்னிடம் என்ன கேட்க விரும்பினாள்?’


’பிச்சை’ என்றார் தாசர். எனக்குக் கோபம் கோபமாக வந்தது. பெளத்தர்கள் கலை வடிவங்களை குறைத்து மதிப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அது இவ்வளவு கேவலமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த விஷயத்தை இவரிடம் ஆரம்பித்திருக்கக் கூடாது. தவறு என்னுடையது தான். விட்டால் ‘…பிச்சை புகினும் கற்கை நன்றே..’ என்று கூட அவர் சொல்லத் தொடங்கலாம். ஆனந்த கூமாரசாமி இந்நேரம் எங்கிருப்பார்? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கூட இந்த வளாகத்தில் தானே இருக்க வேண்டும்!


அந்த நேரம் ஆல்காட் வருவதற்கான பரபரப்புகள் எழும்பத் தொடங்கின. சிப்பந்திகள் உயிர் பெற்று எழுந்தார்கள். 18 பூனைகளும் அவரை வரவேற்க ஓடின. ’வா, போய் விடலாம்' என்று தாசர் என் கைகளை இழுத்துக் கொண்டு கிளம்பினார்.


‘ஆல்காட்டை பார்க்க வேண்டாமா?’


‘அவர் காத்திருப்பார். வா, போகலாம்'


*


நாங்கள் சங்கரன்கோவிலுக்கு வந்த போது சித்திரை தேரோட்டம் நடந்து கொண்டிருந்தது. தேரிழுக்க ஆட்கள் பத்தவில்லை. தேரை இழுத்து நடு ரோட்டில் நிறுத்தியிருந்தார்கள். பக்தர்கள் அலைகடலென திரள வேண்டுமென்று மைக் செட் அறைகூவிக் கொண்டிருந்தது.


‘தேர் இழுக்கப் போகிறோமா? கோவிலுக்குள் போகிறோமா?’


‘இரண்டும் இல்லை. வேறொரு இடத்திற்கு’, என்று தாசர் நடக்கத் தொடங்கினார்.


அவர் என்னை சங்கரன்கோவிலின் சேரிக்கு அழைத்து வந்திருந்தார். இப்பொழுது காந்தி நகர் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அங்கு சின்ன பிள்ளையார் கோவில் ஒன்று இருந்தது. ஆனால், ஆள் அணக்கமே இல்லை. தூரத்தில் ஒரு ஆள் மட்டும் தனது வேட்டியை அவிழ்த்து சூரியனுக்குக் காட்டிக் கொண்டிருந்தார்.


‘அமானுஷ்யம் இங்கே தான் சுழன்று கொண்டிருக்கிறது.’ என்றார் தாசர். ‘இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும். கோவில் தேர் நிலைக்குத் திரும்பி விட்டது என்று தெரிந்ததும், இங்கே பத்திருபது மார்பளவு மனிதர்கள் ஒன்றாய்க் கூடி ஒரு சடங்கு செய்யத் தொடங்குவார்கள்.’


‘மார்பளவு மனிதர்களா?’


‘ம். முழு உடலோடு யாரையும் அந்தச் சடங்கில் அனுமதிப்பதில்லை.’


‘மீதி உடலை என்ன செய்வது?’


‘வீட்டில் விட்டு விட்டு வர வேண்டியது தான். ஏறக்குறைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மாதிரி வர வேண்டும்.’


‘அந்தச் சடங்கில் இந்தச் சமூகத்தின் பேரான்மாவை மெல்ல மெல்ல அவிழ்க்கத் தொடங்குவார்கள். அப்பொழுது அதிலிருந்து பெருகும் போதத்தை நிழலில் உலர வைத்து, நெற்றியில் பூசிக் கொள்வார்கள். பின் சூரியன் மறையத் தொடங்கும். சித்திரைச் சந்திரன் பூரணவாசியாக துலங்கிக் கிளம்பும். அவ்வளவு தான் சடங்கு. எல்லா பெரிய கோவில்களின் சந்தடிகளும் அடங்கிய பெரு வெளியில் தான் இந்தச் சமூகத்தின் ஞானம் தளும்பி நிற்கிறது.’


‘இது ஏன் இப்படி அந்தரங்கமாக நடக்க வேண்டும்?’


‘அனந்தனும் சிதம்பரனும் தான் அந்தரங்கம். இங்கே நடப்பது பகீரங்கம்.’


*

அம்மாவின் கனவுகளில் அதன் பின் பாம்புகள் வரவில்லை. ‘பாத்தியா, யுங் சொன்னது தான் சரி.’


‘அன்னைக்கி என்னிய பேர் சொல்லிக் கூப்பிட்டது யாரு? ஏன் அங்க இருந்து ஓடி வந்தோம்?’


‘அந்த ஆவுடையா தான். உன்ன பிச்ச கேட்கா’


‘என்ன சொல்ற நீ?’


‘வரிசயா உனக்கு மூத்தது எல்லாம் ஒண்ணொன்னா செத்துப் போயிருச்சுப்பா. அதான் நீ பொறந்ததும் அவட்ட கொண்டு போயி போட்டுட்டேன். ‘இது உன் புள்ள, நீயே காப்பாத்து’ ன்னு. காப்பாத்திட்டாள்ள! அப்புறம் ஒரு படி தவுடு குடுத்து உன்னய பிச்சையா வாங்கிட்டு வந்தேன். ரெண்டு வயசு வரைக்கும் உன்ன ‘பிச்சயானு' தான கூப்புடுவோம். இப்ப வந்து அதத் திரும்பக் கேட்டா, தருவனா நான்?’


எனக்கு இப்போது இருப்பதெல்லாம் ஒரே ஒரு சந்தேகம் தான்.


அயோத்திதாசர் பெண் தானோ?Comments


bottom of page