அயோததிதாசரின் அவதானங்களில் மிக முக்கியம் என்று நான் கருதுவது, ‘வேஷம்’ என்ற கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கத்தைப் பேசும்போதே, அவர் நீண்ட நெடுங்காலத்து வரலாற்றைக் கற்பனை செய்ய ஆரம்பிக்கிறார். பெயரற்றவர்களை வரலாற்றுக் கதாபாத்திரங்களாக மாற்றுகிறார். குரலற்றவர்களின் சரித்திரத்தை எழுத முனைகிறார்.
*
வரலாற்றைக் கற்பனை செய்வது குறித்து ஏராளமாய் எழுதியிருக்கிறார்கள். ஆரம்பகால வரலாற்று ஆசிரியர்கள், குறுகிய நேரங்களையே கற்பனை செய்தார்கள். அதாவது, கடந்த காலம் குறித்த அவர்களது தேடல் மிக எளிமையாக இருந்தது. ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு காரியம், இதற்கு மேல் அவர்களால் எதையும் தேடித்தர முடிந்தது இல்லை. ஒரு வகையில் அந்நாட்களில் அவர்கள் கைக்கொண்டிருந்த வரலாற்று முறையியல்கள் அவர்களை இப்படித் தகவமைத்திருந்தன என்றுகூடச் சொல்ல முடியும்.
கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பயணக்குறிப்புகள், ஓலைச்சுவடிகள் என்று சொல்லப்பட்ட அத்தனைச் ‘சான்றுகளும்’ அவர்களுக்குச் சம்பவங்களையே (பானிபட் போர், சிப்பாய் கலகம்…) காட்டித்தந்தன. அச்சம்பவங்களோ உடனடியாக அவர்களை வரலாற்றுப் புருஷர்களிடம் கொண்டு போய் நிறுத்தின. போர்கள், உடன்படிக்கைகள், தானங்கள், படுகொலைகள், முடிசூடல்கள், திருமணம், கட்டட நிர்மாணங்கள் என்று வரலாற்றால் சம்பவங்களையும் புருஷர்களையும் தவிர்த்து வேறு எதையும் பேச முடியாமல் இருந்தது. அதாவது, அந்நாட்களில் வரலாறு முழுக்க பெயர்கள் மட்டுமே இருந்தன என்றார், ஜாக் ரான்சியர்.
நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ இந்த வகை வரலாற்று எழுதியலுக்கு மிகச் சிறந்த உதாரணம். விஜயாலய ஆதித்தனில் தொடங்கி மூன்றாம் ராஜராஜன் வரைக்கும் விவரித்து முடித்தால், சோழ தேச வரலாற்றை எழுதிவிடலாம் என்று அவர் நம்பினார். அவருக்கு வாய்த்த கல்வெட்டுகள் மற்றும் முறையியலின் பிடியில் அவர் முழுதாய் சிக்கிக்கொண்டிருந்தார். இந்த வகை வரலாற்றாசிரியர்கள், புருஷர்களையும் சம்பவங்களையும் கற்பனை செய்வதன்மூலம், ஏராளமான மர்மங்களையும் கண்டுபிடித்தார்கள் என்பது முக்கியம். மர்மங்களைக் கண்டுபிடித்தார்கள் என்றால், துப்பு துலக்கினார்கள் என்று அர்த்தம் அல்ல; துப்புகளற்ற நிகழ்ச்சிகளை ‘வரலாற்று மர்மங்கள்’ என்று பட்டியலிட்டார்கள்.
தமிழக வரலாற்றில் இதற்கு ஏராளமான உதாரணங்களை நாம் சொல்லமுடியும். பாரி போன்ற வேளிர்குலத்தலைவர்களின் படுகொலைகள், களப்பிர மன்னர்களின் ரிஷிமூலம், பல்லவர்கள் யார் என்ற விபரம், ஆதித்த கரிகாலனின் கொலை, யூசுப்கானின் இறுதி கணங்கள், கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட காரணம், பிற்காலப் பாண்டியர்களில் கடைசி ஐவரின் திடீர் மறைவு…இப்படி மர்மங்களை உருவாக்குவதுதான் அக்கால வரலாற்று வரைவியலின் பணியாக இருந்தது. ‘சம்பவங்கள், புருஷர்கள், மர்மங்கள்’ என்ற வலைப்பின்னல், வரலாறு என்ற அறிவியலை, துப்பறியும் நாவல்கள் எழுதுவதற்கான மூலப்பொருளாக மாற்றிய அவலத்தை அறிவியல் உலகம் தாமதமாகவே உணர்ந்து கொண்டது.
*
வரலாறு ஏன் மர்மங்களிடம் மயங்குகிறது என்ற கேள்வியை ஜாக் தெரிதா மிக லாவகமாகக் கையாண்டிருந்தார். ‘ஆவணக்காய்ச்சல்’ (The Archive Fever) என்ற தலைப்பில் அவரொரு புத்தகம் எழுதியுள்ளார். அப்புத்தகம், மனித இனம் பாரம்பரியமாக ‘ரகசியப்பெட்டி’ என்ற உருவகத்தை எவ்வாறு தொடர்ந்து தக்கவைத்து வருகிறது என்று விவரிக்க ஆரம்பிக்கிறது. ரகசியம் என்று நினைக்கிற அனைத்தையும் பெட்டிக்குள் பதுக்குவது தெரிதாவைப் பொறுத்த வரையில் மனிதர்களின் நனவிலிச் செயல்.
மோயீசனை ரகசியமாகப் பாதுகாக்க பெட்டியில் வைத்து ஆற்றில் விடுவது, அதே காரியத்தைக் கர்ணன் விஷயத்தில் குந்தி செய்வது, புத்தரின் போதனைகளைப் பாதுகாக்க அவற்றை மூன்று பிடகங்களில் அடக்கியது, வருடாவருடம் தெய்வத்தை வரவழைக்கும் ஆடை ஆபரணங்களை ஒரு பெட்டியில் வைத்து (சாமிப்பெட்டி) சாமி வீட்டில் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சியே நவீனகால ஆவணக்காப்பகங்கள் என்பது தெரிதாவின் யோசனை.
ரகசியங்கள் பாதுகாக்கப்படும் பெட்டி, மனித நினைவுகளின் ஸ்தூல வடிவமாக பரிணமிக்கின்றன என்கிறார். இதனால் அப்பெட்டியில் ‘புனித அதிகாரம்’ பெருகி வழிய ஆரம்பிக்கிறது. இனி அதைப் பெட்டி என்று சொல்வதைத் தவிர்த்து, பேழை அல்லது பிடகம் என்று அழைக்க ஆரம்பிக்கிறார்கள்.
தெரிதாவைப் பொறுத்தவரை ஆவணக்காப்பகம் அப்படியொரு நவீனப் பேழை. மனிதகுல ரகசியங்களும், நனவிலி ஞாபகங்களும் அடைத்து வைக்கப்பட்ட பேழை. புனித அதிகாரம் உறைந்திருக்கும் பேழை. வரலாற்றாசிரியர்கள் ஆவணக்காப்பகங்கள்மீது காட்டும் மோகத்தை, நனவிலி அதிகார வேட்கையாகவே மதிப்பிட வேண்டும் என்பது தெரிதாவின் முடிவு.
*
மரபான வரலாற்றுவரைவியல், மூன்று நெருக்கடிகளைச் சந்தித்தது. முதலாவது, அதனால் வரலாற்றுப் புருஷர்களை மட்டுமே உயிர்ப்பிக்க முடிகிறது; இரண்டாவது, கடந்த காலத்தைச் சின்னஞ்சிறு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே அதனால் விவரிக்க முடிகிறது; அதனால், ஏராளமான மர்மங்களையும் அது செய்கிறது; மூன்றாவதாக, புனைவைப் போல நம்பகத்தன்மையற்ற மொழி மூலமே அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில், மூன்றாவது நெருக்கடியைக் கடப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் முதலிரண்டு சிக்கல்களிலிருந்து வெளிவருவதற்கான யோசனையை Annales வரலாற்றுக் குழுவினர் முன்வைத்தனர்.
*
வரலாற்றுப் புருஷர்களிடமிருந்து வரலாற்றைக் காப்பாற்றுவது எப்படி என்பதே கேள்வி. சின்ன சம்பவங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பது அடுத்த கேள்வி. இதற்காக Annales குழுவினர் முன்வைத்த கருதுகோள்கள் இரண்டு, புருஷர்களைத் தவிர்த்துவிட்டு சமூகங்களை வரலாற்று மாந்தர்களாகக் கற்பனை செய்ய முயற்சிக்கலாம்; அதே போல, சின்ன சம்பவங்களுக்குப் பதில் நீண்ட காலகட்டத்தைக் கற்பனை செய்யலாம்.
நீலகண்ட சாஸ்திரி பாணி வரலாற்றுக் கற்பனைகளிலிருந்து வெளியேறுவதே இதன் முதன்மை நோக்கம். தமிழக வரலாற்று வரைவியலைப் பொறுத்தவரையில் இதற்கான உதாரணமாக நொபுரு கரசிமாவின் சோழர்கால வரலாற்று வரைவியலைக் குறிப்பிட முடியும். சோழப் பேரரசர்களின் மெய்கீர்த்திகளிலிருந்து வெகுதூரம் விலகி, நில மானியங்களையும் தானங்களையும் உடைமை முறைகளையும் கவனப்படுத்துகிற கரசிமா, இதன் மூலம் சோழர் காலத்து சமூக ஊடாட்டத்தை விளங்கிக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்.
அதே போல, போர்களையும் கோவில் நிர்மாணங்களையும் தவிர்த்துவிட்டு, விளை நில முறைப்படுத்தல்களைக் கவனிப்பதன்மூலம் பல நூறு வருடங்களைக் கற்பனை செய்ய முடியும் என்று யோசித்தார். இந்த யுக்தி ஒரு வகையில் சாதகமான பலன்களையும் தந்தது.
சரித்திரம் என்பது அரசாட்சிகளுக்கு இடையிலான பூசலும் நட்பும் என்றிருந்த நிலை மாறி, வெவ்வேறு சமூகங்களுக்கு இடையிலான முரணும் இணக்கமுமே வரலாறு என்ற யோசனை வலுவடையத் தொடங்கியது. தமிழக வரலாற்றை இந்த முறையில் ஆய்வு செய்த இன்னொரு முக்கியமான ஆய்வாளர், டேவிட் லுட்டன். தெற்காசிய வேளாண்குடிகளைப் பற்றிய அவரது ஆய்வு, குடிகளின் இடப்பெயர்வும், நிலத்தைப் பண்படுத்தும் அறிவும், நீரைப் பாதுகாக்கும் தொழில்நுட்பமும் எவ்வாறு சமூக அதிகாரங்களாக உருவெடுத்தன என்பதைச் சுட்டிக் காட்டின. நபர்களை மையப்படுத்துவதிலிருந்து விலகி சமூகங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட வரலாறுகள், நூற்றாண்டுகள் அல்லது ஆயிரமாண்டுகளைத் தங்களது கற்பனைத்தளமாகக் கொண்டிருந்தன. இதன் இந்திய உதாரணம், ‘அடித்தள மக்கள் ஆய்வுகள்’ (Subaltern Studies) என்று சொல்ல முடியும்.
*
புருஷர்களிடமிருந்து குடிகளுக்கும், சம்பங்களிலிருந்து நீண்ட காலங்களுக்கும் என வரலாறு தன் கற்பனையைத் திருப்பினாலும், தெரிதா சொல்லும் ஆவணக் காய்ச்சலிலிருந்து அது இன்னமும் விடுபட்டிருக்கவில்லை. மீண்டும், அந்தப் புனிதப் பேழைகளே நினைவுகளின் சாட்சியமாகக் கொள்ளப்பட்டன. அதாவது, தத்தம் கடந்த காலத்தை ஏதாவதொரு எழுத்துப் பதிவாகக் கொண்டிருக்கும் குடிகளின் குரல்கள் மட்டுமே வரலாற்றின் காதுகளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தன. இத்தகைய எழுத்துப் பதிவுகளைக் கொண்டிராத குடிகள் அல்லது மக்கள் திரள்கள் குரலற்றவர்களாகவே வரலாற்றால் கணிக்கப்பட்டனர். அதாவது, அவர்களெல்லாம் ‘இருண்ட மக்கள்’! சாட்சியம் இல்லாதவர்கள்! இந்த நேரம், ஜாக் ரான்சியர் ‘வரலாற்றின் பெயர்கள்’ (The Names of History) என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் மிக முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியது.
புருஷர்களை மட்டுமல்ல, குடிகளைப் பற்றி வரலாறு எழுதப்படும் பொழுதும் ‘பெயர்களை’ அல்லது ‘கீர்த்திகளை’ மட்டுமே வரலாறு கவனப்படுத்துவது ஏன்? பெயரற்றவர்களின் அல்லது கீர்த்தியற்றவர்களின் சரித்திரத்தை எழுத வரலாறு என்றைக்கு முன்வரும் என்பதே ரான்சியரின் கேள்வி. அதாவது, குரலற்றவர்களின் குரல் ஒலிக்கும் சரித்திரத்தை எழுதும் முறையியல் என்ன? அடித்தளமக்கள் ஆய்வுகளின் மீது காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பீவாக் எழுப்பிய கேள்விகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
குரலற்றவர்களின் குரலைப் பதிவு செய்ய விரும்பும் ஆய்வாளர் மிகத் தீர்க்கமான சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. முதலாவது, அவர் பெயரற்றவர்களின் வரலாற்றை எழுதுவதே தன் கடமை என்று உணர வேண்டும். அதற்காக, நீண்ட காலங்களைக் கற்பனை செய்வதற்கு முன்வர வேண்டும்; மூன்றாவதாக, எழுத்து ஆவணங்களுக்கு வழங்கப்படும் ‘புனித அதிகாரம் நிரம்பிய பேழை’ என்ற அந்தஸ்தைக் குரலற்றவர்களின் வாய்மொழிப்பதிவுகளுக்கும் வழங்க முன்வர வேண்டும். இம்மூன்று கருதுகோள்களையும் ஏற்றுக்கொள்கிற நபர்கள் சரித்திரத்தை அல்ல, சரித்திறத்தை எழுத ஆரம்பிக்கிறார்கள்.
*
அயோத்திதாசரின் எழுத்துகளில் ‘வேஷம்’ என்ற கருத்தாக்கம் செயல்படும் விதங்கள் ஆச்சரியமானவை. முதன்மையாக, பிராமணர் – பறையர் என்ற சாதிகளின் தோற்றத்தைப் பற்றிப் பேசும் பொழுது ‘வேஷ பிராமணர்’ என்று வெளிப்படையாகவே எழுதுகிறார். யதார்த்த பிராமணர் போல வேஷமிட்ட புருசீகர்கள், ‘புனித அதிகாரத்தைக்’ கைப்பற்றுவதை ‘வேஷ பிராமணம்’ என்று குறிப்பிடுகிறார்.
அதற்கு சற்றும் குறையாமல், அம்மை என்ற பெருநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றிய ஒளவை என்ற யதார்த்தத்தை மறைத்துவிட்டு காலந்தோறும் பெருகிய அம்மன்களுடைய வடிவத்தை, நான் ‘வேஷம்’ என்று சொல்வதாகவே எடுத்துக் கொள்வேன். யதார்த்த அம்மன் வேறு, வேஷ அம்மன் வேறு.
அதே போல, யாரோ ஒரு பெயரற்ற புத்த பிட்சு கண்டுபிடித்த விளக்கு எரிக்கும் நுட்பத்தை, சிவனின் ஜோதி வடிவம் என்ற வேஷமிட்டு மறைத்ததை விளக்குவதே அவரது, ‘கார்த்துலத் தீபத் திருவிழா’ கட்டு. இன்னும் தெளிவாக, புத்தரின் வெவ்வேறு யதார்த்த வடிவங்களை அலங்காரங்கள் மூலமும் புனைகதைகள் மூலமும் சைவ – வைணவ தெய்வ வேஷமிட்டு மறைத்ததை இந்திர தேச சரித்திரம் முழுக்க எழுதிச் செல்கிறார். இப்படியாக, ‘வேஷம்’ அவரது பல்வேறு கட்டுரைகளிலும் திரும்பத் திரும்ப இடம்பெறும் கருத்தாக்கம்.
இனி நாம், வேஷமிடும் நிகழ்வு நடந்ததாக அவர் கற்பனை செய்யும் தருணங்களை யோசித்துப் பார்ப்போம். எதுவுமே ஒற்றைச் சம்பவம் அல்ல. அனைத்தும், நீண்ட காலம் நடைபெறும் அனாமதேய நிகழ்ச்சிகள்.
யதார்த்த பிராமணர் போல வேஷமிடும் புருசீகர்கள் பன்னெடுங்காலமாக திரும்பத் திரும்ப அதைச் செய்து வேஷமே உண்மை என்று நிறுவுகிறார்கள். அந்த ஒவ்வொரு முறையும் பெளத்தர்கள் ‘இவர்கள் பொய் சொல்கிறார்கள்!’ என்று பறைந்தபடியே இருக்கிறார்கள். ஒளவைக்கு அம்மன் வேஷம் போட்டதுகூட ஒரு நாளில் நடந்தது அல்ல. அது, பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஒன்று. அதே போல, கார்த்துல தீபம் சிவனின் வடிவம் என்ற வேஷமும் எந்தவொரு அரசாட்சியிலோ ஆண்டிலோ நடந்த காரியம் அல்ல. அயோத்திதாசர் விவரிப்பதுபடி, இவையனைத்தும் நீண்ட நெடிய கால எல்லையில் நடந்தேறிய அசம்பாவிதங்கள்.
அதே போல, இந்நீண்ட சம்பவங்களில் கலந்து கொள்ளும் யாருக்கும் இயற்பெயர்கள் இல்லை என்பதையும் கவனியுங்கள். யாரந்த யதார்த்த பிராமணர் என்றால், பெயர் இல்லை; யாரந்த முதல் வேஷ பிராமணர் என்பதற்கும் பெயர் இல்லை; யாரந்த ‘பறைந்த பெளத்தர்’ என்பதற்கும் பெயர் இல்லை. இதற்கு மாறாக, புத்தருக்கோ ஆயிரம் நாமங்கள். அதாவது, ஆயிரம் பெயரிருந்தும் இயற்பெயர் இல்லா நிலை. அதே போல, ஒளவை என்ற அம்மைக்கும் ஆயிரம் பெயர்கள். அயோத்திதாசரின் சரித்திறத்தில் ஒன்று, அனாமதேயர்கள் இடம் பெறுகிறார்கள் அல்லது ஆயிரப்பெயரிகள் இடம் பெறுகிறார்கள். இயற்பெயரற்றவர்களே அவரது கதாபாத்திரங்கள்.
மூன்றாவதாக, இச்சரித்திறத்தில் இடம்பெறும் அத்தனை பேரும் குரலற்றவர்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்களைப் பற்றிய ரகசியங்கள் ‘புனித அதிகாரம் நிரம்பிய ஆவணப்பேழைகளில்’ பாதுகாக்கப்படவில்லை. ஆவணக்காப்பகத்தைப் பொறுத்த வரையில் இவர்கள் குரலற்றவர்கள். இவர்களின் ஞாபகங்கள், இத்தேசத்தின் வாய்மொழி மரபுகளில், சடங்குகளாக, திருவிழாக்களாக, சம்பிரதாயங்களாக, மரபான அறிவுத்தொகுதிகளாக மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன. காலனிய அறிஞர்களின் தொடர்பால் பெளத்தத்தை அறிந்து கொண்டாலும், அதன் மெய் அர்த்தத்தை அவர் குரலற்றவர்களின் ஞாபகங்களிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறார்.
*
வரலாற்று வரைவியல் என்ற அறிவியலில் நிகழ்ந்த எந்தவொரு விவாதத்தையும் அயோத்திதாசர் அறிந்திருக்கவில்லை. புருஷர்களின் வரலாற்றிலிருந்து விலகி சமூகத்தின் வரலாற்றையும், அதிலும் குரலற்றவர்களின் வரலாற்றை எழுத வேண்டும் என்ற எந்த உரையாடலையும் அவர் அறிந்திருக்க நியாயமில்லை. அதே போல, சின்னஞ்சிறு சம்பவங்களை அல்ல, நீண்ட நெடிய காலத்தை எழுதுவதே மெய் வரலாறு என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை, சொல்லிக் கேட்டதும் இல்லை. பெயரற்றவர்களின் வரலாற்றை எழுதுவதே தீர்க்கமான அரசியல் செயல்பாடாக இருக்க முடியும் என்பதையும் அவர் அறிவுபூர்வமாக முடிவு செய்திருக்கவில்லை. ஆனால், நவீன வரலாற்றியல் மேற்கொண்ட அத்தனை விஷயங்களையும் அவரது எழுத்துகள் பிரதிபலிக்கின்றன; அது எப்படி?
எது, இத்தகைய சரித்திறம் எழுத அவரை உந்தித் தள்ளியது என்பதற்கு என்னிடம் ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கிறது – அது, அவர் நம்பிய, முன்னெடுத்த சமத்துவ அரசியல். இவ்வுலகில் எல்லோரும் சமம் என்று அவருக்கிருந்த பிடிவாதம்.
அயோத்திதாசர் ‘எல்லோரும் சமம்’ என்ற உலகப்பார்வையைக் கொண்டிருந்தார் என்பதைச் சிலர் அவநம்பிக்கையோடு நோக்கலாம். ஆனால், நான் இப்படிச் சொல்வதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
இதற்காக, அவர் முன்மொழியும் ‘வேஷம்’ என்ற கருத்தாக்கத்தை நான் இன்னும் விரிவாக்க விரும்புகிறேன். அவரைப் பொறுத்தவரையில் இன்றைக்கு நீங்கள் பார்க்கிற பிராமணர்கள், நிஜத்தில் பிராமணர்களே இல்லை; அவர்கள் வேஷமிட்டவர்கள்! இன்றைக்கு நீங்கள் பார்க்க முடிகிற பெளத்தர்கள், நிஜத்தில் பெளத்தர்களே அல்ல; அவர்கள் நூதன பெளத்தர்கள், அதாவது வேஷ பெளத்தர்கள்! இன்றைக்கு நீங்கள் பார்க்கிற பறையர்கள் யாரும் பறையர்களே அல்ல; ஏனெனில், அவர்களில் சிலரோ பூர்வ பெளத்தர்கள், பிறரோ வேஷ பிராமணர்களால் ‘பறையர்’ என்று அழைத்துக் கொள்ளும்படி தூண்டப்பட்டவரகள். அதன்படி, இன்றைக்குப் பார்க்கிற பறையர்கள் அனைவரும் ‘வேஷ பறையர்கள்!’
கட்புல நிஜத்தை ‘வேஷம்’ என்று அழைக்கும் அயோத்திதாசர், இன்னொரு பக்கம், என்றைக்குமே மீட்கமுடியாத பூர்வ பெளத்தரையும் பூர்வ பிராமணரையும் பூர்வ பறையரையும் கற்பனை செய்வதைக் கவனியுங்கள். அதாவது, அவரது கருத்துப்படி, யதார்த்தம் அல்லது மெய், ஆதியிலே இருந்தது. அதை வரலாற்றுக் காரணங்களால் தவறவிட்டோம் என்று அவர் சொல்வதாக நான் வருவித்துக் கொள்கிறேன். அந்த வகையில், யதார்த்தத்தை ‘மெய்’ என்றும், வேஷத்தை ‘பொய்’ என்றும் அவர் அழைக்கும் பொழுது இந்த உலகம் பொய் வடிவங்களால் செய்யப்பட்டிருக்கிறது என்ற முடிவிற்கு நாம் வரவேண்டும்.
*
இதை நான் இன்னமும் விளக்க வேண்டும். ‘சாதி’ என்ற சமூகக் காரணியை எடுத்துக் கொள்ளுங்கள். அயோத்திதாசரின் எழுத்துகள்படி, இன்றைய பிராமணர்கள், பொய் பிராமணர்கள்; இன்றைய பறையர்கள், பொய் பறையர்கள்; இன்றைய நாயக்கர்கள் (நியாயமாய் அளக்கிறவர்கள்), பொய் நாயக்கர்கள்; இன்றைய ரெட்டிகள் (ஒரு பொருளுக்கு இரட்டிப்பாய் பண்டம் பரிமாறுகிறவர்கள்), பொய் ரெட்டிகள். இப்படியே, இன்றைக்கு சொல்லப்படும் எல்லா சாதி அடையாளங்களும் பொய்களே, வேஷங்களே என்று நாம் விரிக்கமுடியும். அவரே சொல்வது போல, ஆதியில் இவையனைத்தும் தொழிற்பெயர்களாகவே இருந்தன. அதனை, வரலாற்றின் வெவ்வேறு தருணங்களில் நிகழ்ந்த அசம்பாவிதங்களால் நாம் நிரந்தரமாய் தொலைத்திருக்கிறோம். அதுவும், இனி மீட்டெடுக்க முடியாதபடிக்குத் தொலைத்திருக்கிறோம்.
ஜாக் லெக்கன் சொல்வது போல, ஆதியிலே இருந்தது Imaginary register (தூய கற்பனை); நாம் ஒவ்வொருவரும் கண்ணாடிப் பருவத்தில் (mirror stage) அனுபவித்த உண்மை இது. அது வெறும் ஞாபகமாக மட்டுமே நம்மிடம் தேங்கியிருக்கிறது. அந்த ஞாபகத்தை நிஜம் என்று நம்பியே நாம் இன்றளவும் சாதிக்கு யதார்த்தம் உள்ளது என்று பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், சாதிக்கான யதார்த்தத்தை நாம் பன்னெடுங்காலத்திற்கே முன்பே தொலைத்துவிட்டோம். இன்று நம்மிடம் காணப்படுவதனைத்தும் ‘பொய்’ சாதி அடையாளங்கள் மட்டுமே.
அப்படியானால், எல்லாச் சாதிகளும் தத்தம் மெய் அடையாளங்களுக்குத் திரும்பி விடுவதுதான் ஒரே சாத்தியமா என்றால், லெக்கன் சொல்வதைத்தான் பதிலாகச் சொல்ல வேண்டும். அந்த ஆதி நிலையை அடைவதற்கான ஏக்கம் எல்லோரிடமும் இருக்கிறது. அதை மீட்டெடுக்க முடியாது என்பது தெரிந்திருந்தும் திரும்பத் திரும்ப வரும் ஏக்கம். ஆனால், அந்தக் கண்ணாடிப் பருவத்தைக் கடந்து நாமெல்லாரும் மொழியின் வழியே உருவாக்கப்பட்ட குறியீட்டுத் தளத்தில் வாழும்படி தகவமைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நிஜம்.
அந்த வகையில், ஆதியிலே தொழிற்பெயர்களாக விளங்கிய சாதி ஓர்மையை யாராலும் திரும்ப மீட்டெடுக்க முடியாது என்பதே உண்மை. ஏனெனில் எல்லாச் சாதி அடையாளங்களும் வேஷங்கள் அல்லது பொய்கள். பிராமணர் முதல் பறையர் வரை எல்லாமே விதவிதமான வேஷங்கள் மட்டுமே. வரலாறு நம்மீது படியச்செய்த வேஷம். சொல்லப்போனால், ஆவணக்காப்பகத்தில் படிந்திருக்கும் தூசி போல. ரகசியம் இருப்பதாய் நம்பப்படும் பேழை அது.
இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பேழையில் எதுவுமில்லை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அதை யாரும் யாருக்கும் சொல்லிக் கொள்வது இல்லை. அதுதான் பேழையின் ரகசியமும். சாதி, பொய் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை யாரும் யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இல்லை என்பதைச் சொல்லாமல் இருப்பதுதான் சாதிப் பேழையின் ரகசியம்.
அயோத்திதாசர் ‘வேஷம்’ என்ற கருத்தாக்கத்தின்மூலம் இந்த ரகசியத்தையே அம்பலப்படுத்துகிறார். அதாவது, சாதி என்பது பொய் என்று தெரிந்தும் அதை வெளிச்சொல்லாமல் காக்கும் ரகசியத்தைப் போட்டுடைப்பது.
‘வேஷமே’ அயோத்திதாசரின் உச்சபட்ச அரசியல் கருத்தாக்கம் என்று நான் சொல்வேன். நீங்கள் பார்க்கும் எல்லாச் சாதிய அடையாளங்களும் வேஷம். அதைவிட்டு, பெளத்தராக முயலுங்கள் என்பதே அவரது அரசியல் நிலைப்பாடு. பெளத்தர் ஆகுங்கள்!
Comentários