top of page

அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்



அயோத்திதாசர் மீது வாரி இறைக்கப்படும் அவதூறுகள் பெரும்பாலும் அவரது ஒரே ஒரு படைப்பையே குறிவைக்கின்றன. அது, ‘இந்திர தேச சரித்திரம்’! இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில், இதுவே அவரது ஆகச்சிறந்த கதையாடலும் கூட.


பத்ரி சேஷாத்திரி, வசுமித்ர போன்ற பலரையும் அக்கதையாடல் துன்புறுத்துகிறது. பதட்டமடைகிறார்கள்; அதைக் கேலியாகவும் கிண்டலாகவும் வெளிப்படுத்துகிறார்கள். அவதூறுகளைச் சொல்கிறார்கள். கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள். இந்தச் சூழலில், நானோ அவர்களை பெருங்கருணையோடு அணுக விரும்புகிறேன். ஏனெனில், அவர்கள் அடையும் துன்பத்திற்கு நாமும் அக்கதையாடலுமே காரணங்கள்.


வெளிப்பார்வைக்கு ஒரு புனைவைப் போலத் தோற்றமளிக்கும் ‘இந்திர தேச சரித்திரம்’ தமிழில் இது வரை புனைவில் கூட யாரும் கேள்விப்பட்டிராத புதிய வகைக் கதையாடல் உத்தியையும், சமூகப் பார்வையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதுவே அவர்களின் பதட்டத்திற்கான பிரதான காரணம். அதையே நான் இங்கு விவரிக்க விரும்புகிறேன்.


இதோ இப்பொழுது நான் இந்திர தேச சரித்திரத்தைக் கதையாடல் என்று அழைப்பதைக் கொண்டு, அவர்களில் சிலர், ‘அவரே கதை என்று ஒத்துக் கொண்டார்’ என்றுகூட கிளம்பி வர முடியும். அவர்களை நாம் பொருட்படுத்த வேண்டாம். அயோத்திதாசர் கையாளும் கதையாடல் உத்தியே இவ்வாறு அவர்களைச் சொல்லத் தூண்டுகிறது என்பதால் இதில் நாம் விசேஷமாகக் கவலைப்பட ஒன்றும் இல்லை. அவர்களது நோயை நாம் குணப்படுத்தலாம்.


*


அயோத்திதாசரைப் பற்றிய எனது முதல் உணர்வு, அவர் மையத்திலும் இல்லை, விளிம்பிலும் இல்லை என்பதாகவே இருந்தது. அவர் எங்கோ அப்பால் நின்று கொண்டிருப்பதாகவே எனக்குப் பட்டது (மையம், விளிம்பு, அதற்கும் அப்பால் நிற்கும் அயோத்திதாசர்). அடுத்து, அவர் ‘ஒடுக்கப்பட்டவர்’ பற்றித் தீட்டும் சித்திரம் ‘ஒடுக்கப்பட்டதாக’ இல்லை என்பதையும் என்னால் உணர முடிந்தது (ஒடுக்கப்பட்ட சரித்திரம்). அதே போல, இந்திர தேசம் என்ற பெயரில் அவர் விவரிக்கும் நிலக்காட்சியை யாரும் இங்கே பார்த்ததும் இல்லை; கேட்டதும் இல்லை என்பதையும் நான் குறித்துக் கொண்டேன் (இது பெளத்த நிலம்). மொத்தத்தில் எனக்கு என்ன தோன்றியது என்றால், அவர் நாம் கேள்விப்பட்டிராதவற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.


ஒரு உதாரணத்திற்கு, இந்திர தேச சரித்திரத்தில் அவர் உருவாக்கும் மூன்று கதாபாத்திரங்களை எடுத்துக் கொள்ளலாம். அதைக் கண்டவரும் இல்லை; பேசியவரும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்த இந்திய(ர) சரித்திரமே அம்மூவராலயே உருவாக்கப்படுகிறது. யதார்த்த பிராமணர், வேஷ பிராமணர், கல்லாக்குடிகள் என்று சொல்லப்படும் இவர்களில் யாரும் யதார்த்தமானவர்கள் இல்லை. அதாவது, இவர்கள் குறித்த நேரடியான அனுபவம் யாருக்கும் இல்லை. ஆனால், அயோத்திதாசர் இம்மூவரையும் விவரிக்கும் பொழுது அவர்களை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.


யதார்த்த பிராமணர் என்பவர் லட்சத்தில் ஒருவராக எப்பொழுதேனும் அதிசயமாகத் தோன்றக்கூடியவர் என்று அவர் எழுதும் போது, அதன் அர்த்தத்தை உங்களால் உணர முடிகிறது; ஆனால், அப்படியொரு நபரை நம்மில் யாரும் பார்த்ததில்லை. அதே போல, வேஷ பிராமணர்களை அவர் விளக்கும் பொழுது, நமக்கு உடனடியாக விளங்கி விடுகிறது. விளங்கிவிட்ட மறுகணம் உள்ளம் உவகையால் நிரம்புகிறது. ஆனால், அதை சாட்சிபூர்வமாய் நிரூபிக்கக் கேட்டால் யாராலும் முடிவதில்லை. இதே கதைதான், கல்லாக்குடிகளுக்கும். அவர்களை உங்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால், அறுதியிட்டு வரையறுக்க முடியாது.


அயோத்திதாசரின் கதையாடல் உருவாக்கத்தில் இதுவொரு முக்கியமான உத்தி. அவர் கல்லை எழுதுவதாய் இருந்தால், கல்லை எழுதுவதில்லை; அதன் கடினத்தன்மையையே எழுதிக் கொண்டிருக்கிறார். நேரடியான, ஸ்தூலப் பொருட்களை அல்ல; அவை தரும் உணர்வுகளையே அவர் வெளிப்படுத்த விரும்புகிறார். யதார்த்த பிராமணர், வேஷ பிராமணர், கல்லாக்குடி என்ற மூன்றிலும், யதார்த்தம் – வேஷம் – அறியாமையே அவர் எழுத விரும்புகிறார். அதையே, வெவ்வேறு சம்பவங்கள் மூலமாகத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், அவரது ஒட்டுமொத்தக் கதையாடலும், இத்தேசத்தில் யதார்த்தம் என்னவாக இருந்தது, அது எவ்வாறு போலி செய்யப்பட்டது, அதை நாம் அனைவரும் எவ்வாறு அறியாமல் இருந்தோம் என்பதையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தது.


சுருக்கமாகச் சொல்லப்போனால், அவரது கதையாடல், நேரடியாய் அனுபவிக்க முடிகிற விஷயங்களை விட்டுவிட்டு, அனுமானங்களால் அடுக்கப்பட்டிருக்கின்றது. ஊகங்கள்! நாம் உடனடியாக உணர முடிகிற ஊகங்கள். அனுபவங்களைக் கடந்த அனுமானங்கள். இத்தேசத்தின் தீண்டத்தகாதவர்கள் நாகரீகக் குறைவான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உங்களுக்குக் கிடைக்க முடிகிற நேரடி அனுபவமாக இருக்கும். அவர்கள் தூய ஆடைகளை அணிவதில்லை; உடலைச் சுத்தமாகப் பேணுவதில்லை; நல்ல உணவை உண்பதில்லை; பாலியல் ஒழுக்கத்தைப் பேணுவதில்லை; தீமை செய்வதற்கு அஞ்சுவதில்லை என்றெல்லாம் நமது கட்புல அறிவு சொல்வதைக் கடந்து, அதற்குப் பின்னாலிருக்கும் உண்மையை அவர் பேச ஆரம்பிக்கிறார். அதாவது, அவரது எழுத்து, அறிவின் போதையில் வெறும் கண்ணை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் நமது மடமையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. நான் ஏற்கனவே சொன்னதுபோல, ஒரு மரத்தை விவரிக்கும் பொழுது, நாம் பெரும்பாலும் தவறவிடும் அதன் குளுமையை உணரச் செய்யும் வண்ணமே அவரது கதையாடல் அமைந்திருக்கிறது.


இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை மீண்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நவீனத்துவத்தின் கல்வி, எழுத்து, சமத்துவம் போன்ற அடிப்படை கருத்தியல்களை ஏற்றுக் கொண்டிருந்த அயோத்திதாசர், சிந்தனையளவில் அதன் பாதகங்களை உணர்ந்திருந்தார் என்பது என் துணிபு.


இலக்கணத்தை விடவும் இலட்சணமே அடிப்படையானது என்று வாதிட்டதும்; எழுத்திலிருந்து வருவிக்கப்படும் பெளத்தத்தை விடவும் மக்களின் வாழ்க்கையிலிருந்து வருவிக்கப்படும் பெளத்தமே நிஜமானது என்று வலியுறுத்தியதும் இதன் சான்றுகள். அம்மன் வழிபாட்டையும், கார்த்திகை தீபத் திருவிழாவையும் அவர் பழகிய கண்களால் பார்ப்பதில்லை. அதாவது, அவற்றின் வெளித்தெரியும் இலக்கணத்தை அவர் புறக்கணித்து விடுகிறார்; அல்லது, அனாயாசமாகக் கடந்து விடுகிறார். கடந்து விட்டு, அவற்றின் இலட்சணத்தை நமக்கு விளக்க ஆரம்பிக்கிறார்.


இத்தேசத்தின் தாழ்த்தப்பட்டவர்களைப் பார்க்கும் பொழுதும், நவீனத்துவம் சொல்லித் தரும் கட்புல அறிவை அவர் பெரிதும் சிலாகிப்பதில்லை; அவற்றிற்கான நிவாரணங்களை இலவசக் கல்வி, நில மானியம் என்றெல்லாம் வலியுறுத்தும் அதே வேளையில், அவர்களின் மேன்மையான இலட்சணத்தையே நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அந்த வகையில், இந்திர தேச சரித்திரம் முழுக்க, இத்தேசத்தின் இலட்சணத்தையே அவர் எழுத விரும்புகிறார். இங்கே இலட்சணம் என்பது, அனுபவத்தைக் கடந்த உண்மை; மொழியின் மெளனம்.


அவரது கதையாடல், கொஞ்சம் கொஞ்சமாக மெய் நிலையைக் கடந்து மெய்நிகர் நிலையை அடையும் காரணமும் இதுவே. யதார்த்த பிராமணர், வேஷ பிராமணர், கல்லாக்குடிகள் என்று சொல்லப்பட்ட எல்லா ஆகிருதிகளும் மெய் வடிவங்கள் இல்லை; மெய்நிகர் வடிவங்கள். இலக்கணக்கூறுகள் அல்ல; இலட்சண வடிவங்கள்.


அயோத்திதாசரின் கதையாடலைக் கண்டு, பத்ரி சேஷாத்ரியும் வசுமித்ரவும் கிலி அடைவதற்கான முக்கியக் காரணம் இது. அவர்கள், தங்களது புன்கண்களால் மட்டுமே இச்சரித்திரத்தை வாசிக்க விரும்புகிறார்கள். அதனாலேயே, நேரடி அனுபவங்களைக் கேட்கிறார்கள்; சாட்சியங்களை வழங்கச்சொல்கிறார்கள்; சான்றுகளைப் பட்டியலிடக் கேட்கிறார்கள். நவீனத்துவத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று. அது வேறெதையும் விட மனிதனின் ஐம்புலனையே அதிகம் நம்பச் சொல்கிறது. அதிலும் மனிதனின் ஐம்புலனை மட்டுமே நம்பச் சொல்கிறது. அதனால், மொழியை அறுதியான அறிவுக் கருவியாக கருதச் சொல்கிறது.


அயோத்திதாசர், மொழியைக் கடந்துவிடும் லாவகத்தை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தும் பொழுது அவர்கள் பதட்டமடைகிறார்கள். தங்களின் கைகளிலுள்ள அவதூறுகளை அவர்மீது எறியத் தொடங்குகிறார்கள். கதையாடல்கள், இயல்பிலேயே அனுபவத்தை வெளிப்படுத்தும் உத்தி இல்லை என்பதை பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை.


ஒரு கதையாடலை விளங்கிக் கொள்ளும் வழிமுறை என்ன என்பதை நான் எனது ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறேன். மிகவும் குறிப்பாக, நேரடி அனுபவத்தைக் கடந்து மொழியின் சூட்சுமத்தை அணுகுவது எப்படி என்பதை தமிழ் எழுத்துகளின் அந்தரார்த்தத்தை எழுதுவதன் மூலம் நான் விளக்கியிருக்கிறேன்.


தமிழ், பெரும்பாலோர் சொல்வது போல, ஆரவாரமான சப்தங்களை எழுப்பும் மொழி (அரவம்) அல்ல; அது, அதன் அடியாளத்தில் ஒலிக்க இயலா மெளனங்களால் செய்யப்பட்டிருகிறது என்பதை மெய்யெழுத்துகள் கொண்டு நான் விளக்கியிருக்கிறேன். அப்படியான ஒலிக்கா ஒலிகளே ஒலிக்கும் சப்தங்களை ஒற்றுகளாகவும் சந்திகளாகவும் நின்று காப்பாற்றுகின்றன என்றும் எழுதியிருக்கிறேன். அந்த வகையில், மொழியே என்றாலும் அது மனித யத்தனத்தை மீறி, தனக்கான அனுமான விதிகளோடே செயல்படுகிறது என்றே நான் சொல்லியிருக்கிறேன்.


அதாவது, எந்தவொரு கதையாடலும் மனித யோசனையைக் கடந்து, நீங்கள் எதிர்பார்க்காத தளங்களுக்குள் பயணிக்கத் தொடங்குகிறது. பேசுகிறவரின் எழுதுகிறவரின் பிரக்ஞையைக் கடந்து, நனவிலிச் செயலுக்குள் ஒரு கதையாடல் நுழையும் தருணம் இது.


‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பயின்று வரும் மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனியுங்கள்.


எ-ங்-க்-அ -ள் வ்-ஆ- ழ் – வ் – உ- ம் வ்-அ-ள்-அ-ம்-உ-ம் …..


ஒலிக்கிற உயிர் ஒலிகள் அல்ல, தமிழின் மெய் மெளனங்களே அர்த்தத்தை உருவாக்குகின்றன என்பதை உங்களால் உணர முடிகிறதா? இதையே, மொழியின் மெய்நிகர் வடிவம் என்கிறோம். மொழி மனித எல்லையைக் கடந்து நிற்பதற்கான காரணமும் இதுவே. நனவு அல்ல, மொழி நனவிலியில் செயல்படும் சாதனம் என்பதும் இதனால் மட்டுமே.


அயோத்திதாசரின் கதையாடல் இந்தச் சூட்சுமங்களைப் பயன்படுத்திக் கொள்வதை நான் ஆரம்பத்திலேயே கண்டு கொண்டேன். அதனாலேயே அவரது கதையாடல்கள், அனுபவத்தை மீறி நிற்கின்றன; மனிதர்களைக் கடந்து செல்கின்றன; அறிவைக் கடந்து உணர்வைப் பேச ஆரம்பிக்கின்றன என்றும் சொல்கிறேன்.


*


கதையாடல் குறித்து ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. கதையாடல் என்பது எல்லா வகையான மொழிச்செயல்பாட்டிற்குமான பொதுப்பெயர். பேச்சு, இலக்கியம், அறிவியல், கலை, தத்துவம் என்று எல்லா வகையான மொழி வெளிப்பாடுகளையும் கதையாடல் என்று அழைக்க முடியும். இங்கே, Narrative என்ற ஆங்கில சொல்லிற்கு இணையாகக் கதையாடல் என்று பயன்படுத்திக் கொள்கிறேன்; ஆகவே, கதையாடல் பற்றிய அறிவியல், கதையாடலியல் (Narratology).


தொடக்க கால ஆய்வுகள், கதையாடல்கள் சமூக வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன என்றே நம்பிவந்தன. இலக்கியத் திறனாய்வுகளில் இதைப் பலரும் சொல்ல நீங்கள் கேட்டிருக்க முடியும் – இலக்கியம் உலகைப் பிரதிபலிக்கின்றது! இது மொழி பற்றிய பழைய மூடநம்பிக்கையிலிருந்து உருவான கருதுகோள் என்பதை உடனடியாகப் புரிந்து கொள்ள முடியும். மொழி, உலகைப் பிரதிபலிப்பது போல, இலக்கியமும் உலகைப் பிரதிபலிக்கிறது என்ற மூடநம்பிக்கை.


1996ல் கூட ஃப்ளூடர்னிக் என்பவர் தான் எழுதிய Towards a ‘natural’ Narratology என்ற கட்டுரையில், கதையாடல்கள் ‘நிஜ வாழ்க்கை அனுபவங்களை’ வழங்க வல்லவை என்றே எழுதுகிறார். அத்தோடு கூட, பால் ரிக்கோயர் எழுதிய Time and Narrative என்ற மூன்று தொகுதிகளால் அமைந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, ‘கதை சொல்வதன் மூலம், வாழ்க்கையை அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ளவே மனிதன் முயல்கிறான்; தான் மட்டுமல்லாது அந்தக் கதையைக் கேட்கும் பிறரும் அறிவார்த்தமாக விளங்கிக் கொள்ள’, என்று எழுதுகிறார். அதாவது, கதையாடல் என்பது, யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக்கூடியது; பூரணமான மனிதச் செயல்பாடு; கூடவே, அறிவுபூர்வமானது. இதுவே மரபான கதையாடலியல்.


இந்தக் கோட்பாட்டை அரிஸ்டாட்டிலிலிருந்து காண்ட் வரை பலரும் சொல்லி வருவது மேற்கத்திய மரபு. அவர்களின் பெரும்பான்மை இலக்கியக் கோட்பாடு இந்த அடிப்படையிலேயே உருவாகி வந்தது. இன்றைக்கும் நமது இலக்கியவாதிகள், தங்களது படைப்புகள் நிஜ வாழ்க்கையை தரிசிக்க உதவுகின்றன; புதிய கண்ணோட்டத்தை வழங்குகின்றன; எழுத்தாளனான தங்களது உன்னத திருஷ்டியிலிருந்து உருவாகும் தெறிப்புகள் இவை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.


அதோடுகூட, அந்தக்கால கா.நா.சு.விலிருந்து இன்றைய ஜெயமோகன் வரை இலக்கியத்தை மதிப்பீடு செய்யும்போது, எழுத்தாளர்கள் மீதான தத்தம் அபிமானம், படைப்பாளிகளின் அகவுலகம், விருப்ப வெறுப்புகள் என்று கம்பி கட்டுவதன் காரணம், கதையாடல் முழுக்க முழுக்க மானுடச் செயல்பாடு என்று நம்புவதே ஆகும்.


இந்த மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் வேலையை ஆரம்பித்து வைத்தது ரோலண்ட் பார்த். கதையாடல்கள் குறித்து எழுதும்போது அவர்தான் முதன் முதலில் இந்தக் கருத்தை முன்வைத்தார்: ‘மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்ததை, தாங்கள் அனுபவித்ததைக் கதையாடல் வழியாக வெளிப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கலாம்; இதன்மூலம், ஒவ்வொரு முறையும் அவர்கள் பழைய பஞ்சாங்கத்தை எழுதுவதிலிருந்து தப்பித்து விடுகிறார்கள், தங்களைப் புதிய மனிதர் ஆக உணர ஆரம்பிக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கதையாடல் அவர்கள் விரும்புவதுபோல எதையும் வெளிக்காட்டுவதும் இல்லை; பிரதிபலிப்பதும் இல்லை.’


எழுதுகிறவனுக்கும் கதையாடலுக்குமான நம்பிக்கையற்ற உறவை பார்த் சொல்லும் விதத்தைக் கவனியுங்கள். எழுதும்போது, படைப்பாளி அடைகிற உன்னத உணர்வுகளை ஒத்துக்கொள்கிற பார்த், அது அந்த அளவில் மட்டுமே நின்று விடுவதையும், அதன் பின்னே கதையாடல் தன் போக்கில் செயல்படத் தொடங்குகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். இதன் பின்னணியிலேயே, அந்த உன்னத உணர்வை அடைந்த படைப்பாளி, அக்கணமே காணாமல் போகிறார் என்றும் (Author is dead), அதன் பின் இவ்வுலகில் எஞ்சுவது வெறும் கதையாடல் மட்டுமே என்பதையும் அவர் எழுதுகிறார்.


2016ல் Narrative and Becoming என்ற புத்தகத்தை எழுதுகிற Ridvan Askin, பார்த் குறிப்பிடும் இம்மூன்று விஷயங்களையும் எடுத்துக் கொள்கிறார்: கதையாடலின் வெளிப்படுத்தா தன்மை, எதையும் பிரதிபலிக்கா தன்மை, அதை எழுதும் படைப்பாளி தன்னை புதிய மனிதர் ஆக உணர்ந்த தன்மை. எந்தவொரு கதையாடலும் தன்னளவில் வெளிப்படுத்துவதற்கு எதையும் வைத்திருப்பதில்லை. அதே போல, அது இவ்வுலகைப் பிரதிபலிப்பதும் இல்லை. மூன்றாவதாக, கதையாடலோடு புழங்குகிற மனிதர் (படைப்பாளி என்றாலும் சரி, வாசகன் என்றாலும் சரி) ஏதோவொரு மாற்றத்தை அடைகிறார். அதாவது, இன்னொன்று ஆக ஆகிறார்.


ரித்வான் அஸ்கினைப் பொறுத்தவரையில் எல்லாக் கதையாடல்களும் ‘ஆகுதலோடு’ தொடர்புடையவை. என்னுடைய அயோத்திதாசர் நூலைப் படித்தவர்களுக்கு இந்த ‘ஆகுதல்’ என்ற கருத்தாக்கம் பரிச்சயமானது. பெளத்த சமயத்தைக் கடைபிடிக்கும் வழிமுறை என்னென்ன என்று கேட்கிறபோது, அயோத்திதாசர் சொல்கிற பதிலை, ‘ஆகுதல்’ என்றே நான் வரையறுத்திருந்தேன்.

வழக்கமாய், சமயவாதிகள் முன்வைக்கும் மாறுதலுக்கு (conversion) முற்றிலும் மாற்றான வழிமுறை ஆகுதல் (becoming). இந்த ஆகுதல் என்ற கருத்தாக்கத்தை நான் டெலியூஸிடமிருந்து எடுத்துக் கொண்டிருந்தேன்.


அஸ்கினும் கதையாடலின் ஆக்கும் தன்மையை டெலியூஸிடமிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். அயோத்திதாசரின் பெளத்தமயமாதல் போல, கதையாடலும் மனித யத்தனத்திற்கு அப்பாற்பட்ட செயல். அதாவது, எந்தவொரு கதையாடலும் நாம் காலம்காலமாய் நம்பிக் கொண்டிருப்பது போல, அறிவால் நிகழும் காரியமல்ல. அது வாசகனின் பிரக்ஞை சார்ந்த விஷயமில்லை; எல்லா கதையாடல்களும் மனிதர்களின் நனவிலிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், அதன் விளைவுகளை உங்களால் என்றைக்குமே அறுதியிட முடிவதில்லை.


ஒர் உதாரணத்திற்கு, நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் நூலையும், கல்கியின் பொன்னியின் செல்வனையும், அரு. ராமனாதனின் வீரபாண்டியன் மனைவியையும் வரலாறு என்று ஒத்துக் கொள்கிற நனவிலி மயக்கம் தமிழர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். ஒரு வரலாற்று நூலையும், வரலாற்றுப் புதினத்தையும் ஒரு சேர வாசிக்கிற மனிதன், வரலாறும் புதினமும் வேறு வேறு வகைமைகள் என்று அறிந்திருந்தாலும், அவனால் இரண்டையும் ஒரு சேர எதிர்கொள்ள முடிகிறது. வேறு வேறு வகைமை என்ற அறிவையும் கடந்து, அவ்விரு கதையாடல்களும் அவனுக்குள் உருவாக்கும் உணர்வுகள் வேறு வேறானவை அல்ல.


கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளுக்கும் சு. வெங்கடேசனின் வேள்பாரி கதையாடலுக்கும் நம்மிடம் வேறுபாடுகள் இல்லையே ஏன்? இன்னும் சொல்லப்போனால், ராகுல சாங்கிருத்யாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை நூலுக்கும், ஆர். பாலகிருஷ்ணனின் ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் கங்கை வரை நூலுக்கும் என்ன வேறுபாடு சொல்ல முடியும்? இறுதியாக நான் இப்படியும் கேட்க முடியும் – அயோத்திதாசரின் இந்திர தேச சரித்திரத்திற்கும் எங்கெல்ஸின் The Origin of the Family, Private property and the State நூலுக்கும் ஏதாவது வேறுபாட்டைச் சொல்ல நீங்கள் விரும்புகிறீர்களா?


நான் மேலே குறிப்பிடும் அனைத்தும் கதையாடல்களே. நம்மை இன்னொன்றாக மாற்றி வடிவமைத்துக் கொண்டிருக்கும் கதையாடல்கள். அவை அனுபவங்களை அல்ல, அதனைக் கடந்த உணர்வுகளையே நம்மிடம் கடத்துகின்றன. அவற்றிலிருந்து நாம் அறிவுபூர்வமான விஷயங்களை அல்ல, நம்மை மாற்றியமைக்கும் விஷயங்களையே உள்வாங்கிக் கொள்கிறோம். இக்கதையாடல்கள் அனைத்தும் எழுதியவர்களாலோ அல்லது வாசகர்களாலோ பூரணமாகத் தீர்மானிக்கப்படுவதில்லை.


மானுட யத்தனங்களை மீறி, உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, மனிதர்களின் நனவிலிகளில் செயல்படுவதையே கதையாடல் என்று அழைக்கிறோம் என்கிறார், ரித்வான் அஸ்கின். இந்த வரையறையை முன்வைக்கும் அவர், ஒவ்வொரு கதையாடலும் ‘ஆகுதலையே’ கவனப்படுத்துகிறது என்கிறார். டெலியூஸின் கருத்தாக்கங்களிலிருந்து இக்கோட்பாட்டை உருவாக்கும் அவர், இதனை ‘அதீதக் கதையாடலியல்’ (Differential Narratology) என்றும் அழைக்க விரும்புகிறார்.


அயோத்திதாசரின் இந்திர தேச சரித்திரத்தையும் நான் ‘அதீதக் கதையாடல்’ என்றே வகைப்படுத்த விரும்புகிறேன். இவ்வகைக் கதையாடல்கள், தமது வகைமையில் கவனத்தைச் சிதறவிடுவதில்லை. இந்தியாவில் சாதியின் தோற்றத்தையும், வேஷ பிராமண எதேச்சதிகாரத்தையும் வரலாறு என்ற அறிவியல் சொல்லும் ஆகாவழி முறையியல்களோடு உங்களில் யாராலும் எழுதிவிட முடியாது.


இன்னும் உறைக்கிறார் போல் சொல்ல வேண்டுமானால், மூலதனத்தை எழுதிய மார்க்ஸ், ‘பண்டம்’ என்ற உற்பத்தி உருவாக்கத்தை மனிதகுல வரலாற்றிலிருந்து என்ன முறையியலில் வடிவமைத்தாரோ அதற்குக் கொஞ்சமும் சளைக்காத முறையிலேயே ‘தீண்டாமை’ என்ற சமூகக் கொடுமை இந்திய வரலாற்றில் எவ்வாறு உருவானது என்று அயோத்திதாசர் எழுதிச் செல்கிறார்.

நான் திரும்பத் திரும்ப சொல்வது போல, எந்தக் கதையாடலும் சம்பவங்களின் தொடர்ச்சியைப் பேசுவதில்லை. அச்சம்பவங்களுக்குக் காரணமான உணர்வுகளையே உங்களுக்குக் கடத்த விரும்புகின்றன. அதாவது, நான் ஏற்கனவே சொன்னது போல, கல்லை விவரிக்க விரும்பும் கதையாடல் அதன் கடினத்தன்மையையே (Stony of the stone) எழுதிக் கொண்டிருக்கிறது.


*


அயோத்திதாசர் சென்ற நூற்றாண்டில் நமக்குக் கொடுத்துச் சென்ற முக முக்கியமான கொடை, இந்தக் கதையாடல் வடிவம் என்றே நான் சொல்வேன். அவர் இந்திர தேச சரித்திரத்தை மாற்றி அமைக்க விரும்பவில்லை; அதை வாசிக்கும் நபர்களையே மாற்றியமைக்க விரும்பினார். அதை வாசிக்கிற ஒவ்வொரு ‘தீண்டத்தகாத’ நபரும் தன்னை உண்மையைப் பகர்கிற நபராக ஆக்கிக் கொள்வதற்காக எழுதப்பட்ட சரித்திறம் அது. அதை வாசிக்கிற, ஆண்டைகள் தங்களது வேஷத்தை எண்ணி வெட்கப்படுகிற நபர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்வதற்காக எழுதப்பட்ட கதையாடல் அது.


தமிழ்க் கதையாடலியலின் மிக முக்கியமான சான்றுகளை விட்டுச் சென்ற பிரதி என்றே, இந்திர தேச சரித்திரத்தை மதிப்பிட வேண்டும். அதை விடுத்து, அக்கதையாடலின் நேர்மை, அதை எழுதியவரின் நேர்மை, அதில் சொல்லப்படும் சம்பவங்களுக்கான சான்றுகள், அதிலிருந்து தருவிக்கப்படும் அறிவு என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பவர்களை வேஷ அறிவியலாளர்கள் என்றோ கல்லாக்குடிகள் என்றோ புறக்கணித்துவிட்டு நான் மேற்செல்ல விரும்புகிறேன்.


எனது அக்கறையெல்லாம், அயோத்திதாசரை முன்வைத்துத் தமிழின் அதீதக் கதையாடலியலை வரையறுப்பது மட்டுமே!








Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page