‘அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூலின் இரண்டாம் பதிப்பை (சால்ட் பதிப்பகம்) வாசகர் ஒருவர் வாங்கியிருக்கிறார். அதன் பின்னட்டை வாசகத்தைப் பார்த்து அதிர்ந்து போய் அலைபேசியில் கூப்பிட்டார்.
‘சொல்லப்போனால், இரண்டு அயோத்திதாசர்கள்’ என்று எழுதியிருக்கிறீர்கள்?
ஆமாம் என்றேன்.
‘இரண்டு பேரா?’
‘ஆமா, ட்வின்ஸ்’ என்றேன்.
‘சார், பொய் சொல்லாதீங்க’.
‘யாரவது புத்தகத்தில் பொய் சொல்வார்களா? நிஜமாகவே ட்வின்ஸ் தான். அதுவும் சயாமி ட்வின்ஸ்’ என்றேன். அதன் பின், அவருக்கு சொன்ன விளக்கம் தான் இது.
“அயோத்திதாசர் ஒருவரல்ல, இருவர் என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பம் முதலே உண்டு. இரட்டையராகவே இருக்க வேண்டும். அதுவும் சயாமி இரட்டையராக இருக்க வேண்டும் என்பது என் ஆய்வு முடிவு.
பிறக்கும் போதே இடுப்புப் பகுதியில் ஒட்டிக் கொண்டு, முழுமையாகப் பிரியாமல் பிறந்தவர்களுக்கு சயாமி இரட்டையர்கள் என்று பெயர். இப்படிப் பிறக்கும் குழந்தைகள் தனித்தனியே பிரிக்கப்படும் பொழுது உயிர் பிழைப்பது அபூர்வம். ஆனால், அயோத்திதாசர்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டிருந்தனர்; இறுதி வரை உயிரோடும் இருந்தார்கள்.
பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது அதற்கு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்று பெயர் வைத்தது ஒரு அயோத்திதாசர். இவர் தீவிரமான பெளத்த உபாசகர். இவர் தான் ‘ஆதி வேதம்’ என்ற காவியத்தை எழுதுகிறார். ஆல்காட்டோடு நெருக்கமாகப் பழகியவர். இலங்கை சென்று பெளத்தராக மதம் மாறி வந்ததற்கு இவரே காரணம். இவருக்கு ஐரோப்பிய வழக்கங்கள் மீது பெருத அபிமானம் இருந்தது. பெரும்பாலும் ஒரு கனவானைப் போலவே நடந்து கொள்கிறவர் என்கிரார்கள்.
இவரது இரட்டையான இன்னொருவர் அப்படியே தலைகீழ். தனது பெயரைக் காத்தவராயன் என்று அழைத்துக் கொள்வதில் பிரியமுடையவர். பத்திரிகையின் பெயர் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்பதிலிருந்து ‘தமிழன்’ என்று மாறியதில் இவருடைய பிடிவாதம் இருந்தது என்கிறார்கள். பெளத்த தேடலுக்காக வட தமிழகமெங்கும் காடே மேடே என்று திரிந்தவர் இவர் தான். இவரே ‘நாரதிய புராண சங்கைத் தெளிவு’ என்ற ஏட்டுச் சுவடியைப் படித்தவர்.
கனவான் அயோத்திதாசருக்கும், காத்தவராய அயோத்திதாசருக்கும் அப்போதைக்கப்போது முட்டிக் கொள்ளும். ‘நூதன பெளத்தம், நூதன பெளத்தம்’ என்ற கட்டுரையை எழுதியவர் காத்தவராய அயோத்திதாசர் என்பது என் கணிப்பு. அதில் கேலி செய்யப்படுபவர் வேறு யாருமல்ல, கனவான் அயோத்திதாசர் தான்.
காத்தவராய அ.வுக்கும் கனவான் அ.வுக்கும் இது போல ஏராளமான முரண்பாடுகள் இருந்தன. அவற்றுள் முக்கியமானது. அவர்களின் பெளத்தம் பற்றிய கண்ணோட்டம். காத்தவராயர், தமிழுக்கும் பெளத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நம்பியவர். அதனால், ஏராளமான தமிழ் அற நூற்களுக்கு பெளத்த உரைகளை எழுத ஆரம்பித்தார். திருக்குறள் உரை, கொன்றை வேந்தன் உரை, ஆத்திச்சுவடி உரை போன்றவையெல்லாம் இவராலேயே எழுதப்பட்டன. அதே போல், இன்றைக்கும் தமிழர்களால் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள் பெளத்த விழாக்கள் என்பது இவரது ஆய்வு முடிவு. இதையெல்லாம் கனவான் அ. நமட்டுச் சிரிப்போடு கடந்து போனார் என்பது தான் உண்மை.
கனவான் அ., பெளத்தம் அறிஞர்களின் மதம் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதனால், பெருவாரியான மக்கள் பெளத்தர்களாக இருக்க முடியாது என்பதை அவர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். பூர்வ பெளத்தர்கள் மட்டுமே நிஜமான பெளத்தர்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இது காத்தவராய அ. வை பெருமளவில் காயப்படுத்தியது என்பதை தமிழன் இதழில் வெளிவந்த கட்டுரைகளிலிருந்து நம்மால் உணர முடிகிறது.
இது குறித்து சயாமி இரட்டையர்களுக்கிடையே சதா விவாதம் நடந்து வந்ததாய் செவி வழிச் செய்திகள் சொல்கின்றன. காத்தவராயரின் பெளத்த கட்டுரைகள் ஆகப்பெரிய அறிவு மரபை மலினப்படுத்துவதாக கனவான் அ. சத்தம் போடுவாராம். இத்தகைய தருணங்களில் கனவான் அ. வுக்கு இன்னொரு பெளத்த அறிஞரான லட்சுமி நரசுவின் ஆதரவும், மார்க்சிய அறிஞரான சிங்காரவேலரின் ஆதரவும் இருந்தது என்கிறார்கள். திரு.வி.கல்யாணசுந்தரரும் கூட சில கூட்டங்களில் கனவான் அ. வை ஆதரித்துப் பேசியிருப்பதாக தெரிய வருகிறது.
ஆனால், காத்தவராய அயோத்திதாசர் இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டு கொஞ்சமும் அசரவில்லை. பெளத்தம் தமிழர்களின் மதம் என்பதை நிரூபிப்பதே தனது வாழ்நாள் கடமையென்று அவர் சொல்லி வந்திருக்கிறார். தனது உடன்பிறந்தான் என்றாலும் கனவான் அயோத்திதாசர் இது விஷயமாக செய்யக்கூடிய அனைத்திற்குமான கண்டனத்தையும் அவர் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார்.
கனவான் அ. பெளத்த சமயத்தை ஒரு பிரிவினருக்கான மதமாகச் சிறுமைப்படுத்துவதை தான் எவ்வகையிலும் ஆதரிக்க முடியாது என்பதில் காத்தவராயர் உறுதியாக இருந்தார். பெளத்தம் அனைவருக்கும் பொதுவான மார்க்கம்; அதை அறிஞர்களின் சமயம் என்றோ அல்லது பறையர்களின் மதமொன்றோ சொல்வது அபவாதம் என்பதை மீண்டும் மீண்டும் அவர் சொல்லி வந்தார். இதையே அவர் இறுதி மூச்சு உள்ள வரை சொல்லிக் கொண்டிருந்ததார்.
ஒவ்வொரு முறை கனவான் அ. வோடு முரண்பாடு தோன்றும் போதும், அவர் சொல்லக்கூடிய விஷயம் ஒன்றே ஒன்று தான் என்பதைக் கூட இருந்தவர்கள் ஞாபகமாய் சொல்கிறார்கள். எல்லாவகையான வாதப்பிரதிவாதங்களும் முடிந்த பின்பும் ஒரு தீர்க்கமான முடிவை எட்ட முடியாமலே போகுமாம். கனவான் அ. தனது பிடிவாதத்தை தளர்த்தவே மாட்டேன் என்று வீம்பு பண்ணுவாராம். அப்பொழுதெல்லாம் காத்தவராயர் சொல்வது ஒன்றே ஒன்று தான் என்கிறார்கள்.
‘தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்ட நாம், பெருஞ்சமூகத்தோடு உரையாடுவதற்கு பெளத்தம் ஒன்றே எஞ்சியிருக்கிறது. அம்மன் வழிபாடு பற்றியும், கார்த்திகை தீபம் பற்றியும், தீபாவளி பற்றியும் பேசும் போதெல்லாம் நாம் சொல்வது ஒரே ஒரு விஷயம் தான். அவை, பெளத்த பண்டிகைகள் என்று மட்டுமே சொல்லவில்லை; அதைக் கொண்டாடும் உங்களுக்கும் எங்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பதையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்!’
இதைக் கேட்ட பின்பு, கனவான் அ.வும் சரி, லட்சுமி நரசுவும் சரி, சிங்கார வேலரும் சரி, திரு.வி. க.வும் சரி வாயடைத்து நிற்பார்களாம்.”
Comments