top of page

'அயோத்திதாசர்' - கடிதங்கள்
ஒளியாக வந்தாய் அன்புள்ள தருமராஜ், ஜெயமோகனின் "அம்பேத்கரும் அவரது தம்மமும்" என்ற கட்டுரையில் ஒரு வரி வரும், "விடுதலை செய்யும் அறிவு". இந்த ஒற்றை வரியை நான் பல நூறு முறை பல்வேறு இடங்களில் சொல்லிப் பார்த்திருக்கிறேன். "விடுதலை செய்யும் அறிவு”. இந்தச் சொற்கள் எனக்குள் பல்வேறு கேள்விகளைக் கொண்டு வந்தது. ஏதோ ஒரு உணர்வு என்னை கிளர்த்திக் கொண்டே இருந்தது. உண்மையில் "விடுதலை செய்யக் கூடிய அறிவு" என்ற ஒன்று உண்டா..? நான் அந்தக் கேள்வியை எப்போதும் கைவிட்டதில்லை. நாளும் பொழுதும் அதைக் கையில் வைத்துக் கொண்டே திரிந்தேன். "விடுதலை செய்ய வேண்டுமானால் நாம் அடிமைப் பட்டுள்ளோமா".? என்ற கேள்வியும் எழாமலில்லை. என் தாழ்வுணர்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு ஹிஸ்டீரியாவைப் போல சதா துரத்திக்கொண்டே இருந்தது. போதாக்குறைக்கு "படித்தால் வேலைக்குச் சென்றால் இந்த மனநிலை மாறிவிடும்" போன்ற சப்பைத்தனமான கருத்துக்களை ஒரு நாட்டாமையின் தோரனையுடன் சொல்லுகிறவைகள் ஒரு திரைக்காட்சியாக என் முன் ஓடும். நீங்கள் ஜெயமோகனின் நண்பர் என்பதால் அவருடைய ஆக்கங்களை குறிப்பிட்டுச் சொல்வதில் உங்களுக்கு பிரச்னை இல்லை என்றே நினைக்கிறேன், இருக்கும்பட்சத்தில் பொறுத்தருள வேண்டும். ஜெயமோகனின் "நூறு நாற்காலிகள்" என்ற கதையில் அவன் கலெக்டரான பின்பும் அவனை ஏதோ ஒன்று துரத்தும். அது என்ன.? அமெரிக்க கருப்பர்களுக்கு இந்தத் தாழ்வுணர்ச்சி இயல்பில் கலந்து விட்டது என்ற கருத்துகள் கிளம்பி பின் அது வரலாற்று ரீதியாக அப்படி இல்லை என்று நிரூபிக்கப்பட்டதாக செய்திகள் உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்தத் தாழ்வுணர்ச்சி பெரும்பாலான தலித்துகளுக்கு உண்டு. உங்களுக்கு எழுதும் கடிதத்தில் "தலித்" என்ற சொல்லாடலை எழுதலாமா என்று தெரியவில்லை. ஏனெனில் உங்களுடைய முன்னால் புத்தகத்தின் தலைப்பு அப்படி. அதற்கு மன்னிக்க. உங்கள் அயோத்திதாசர் நூலின் முன்னுரை வாசிக்க வாசிக்க என்னை தொந்தரவு செய்தது. வேறெந்த நூலின் முன்னுரையும் என்னை இப்படிப் படுத்தியது இல்லை. நான் அம்பேத்கரை மானசீகமாக நேசிப்பவன். அவரை அல்ல அவரது அறிவை தொழுபவன்.

ஆனால் அவரிடம் நீங்கள் ஏதோ இல்லை என்று சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் சீண்டப்பட்டேன். என் முழுச் சக்தியையும் திரட்டிக் கொண்டு வந்து உங்களுக்கு எதிராய் நிறுத்தினேன். நூலின் முதல் பகுதி 105 பக்கம் மட்டும் முடித்த நிலையில் இந்தக் கடிதம் உங்களுக்கு எழுதப்படுகிறது. 105 பக்கங்கள் முடிந்த பின் ஒரு குட்டி ஆசுவாசம். "கார்த்துல தீபம்" என்ற கட்டுரை வாசித்தேன். நானடைந்த கிளர்ச்சிக்கு எல்லையே இல்லை. நீங்கள் மறதி என்று சொல்கிறீர்கள். நான் நியாபகம் என்று சொல்கிறேன். நூற்றாண்டு நியாபகம். அதை வாசிக்க வாசிக்க என்னுள் ஒரு பரந்த நட்சத்திரப் பெருவெளி விரிகிறது. அங்கு என் கருத்த தோல் சற்றே தடித்திருக்கிறது. என் பரந்த தோள்களுடைய நெஞ்சு திமிராய் நிமிர்ந்திருக்கிறது. நெஞ்சகழ்ந்து பார்த்தால் அங்கே ஒரு தீப ஒளி விளக்கு சுடர்விட்டு எரிகிறது. "அண்ணாந்து மலையின் ஒளி விளக்கே" நான் இன்னும் காதல் வயப்படவில்லை. என் காதல் கொஞ்சம் fresh. நீங்கள் அறிவிலும் வயதிலும் பெரியவர். கல்லூரி பேராசிரியர். உங்களுக்கு இதைச் சொல்லலாமா என்ற குழப்பத்தில் இதைச் சொல்கிறேன். ஐ லவ் யூ *

விவிலியம் என் நெஞ்சிற்கினிய நூல். அதில் புழங்குகிற மொழியை நான் அவ்வளவு காதலிக்கிறேன். விவிலியத்தை ஒரு ஆகப் பெரிய கவிதைத் தொகுதி என்றே சொல்வேன். அதன் வசனங்கள் ஒரு ஊற்றைப் போல என்னுள் சுரந்து கொண்டேயிருப்பதை நானே கண்டிருக்கிறேன். அந்த ஊற்றிலிருந்து ஒரு வரி மேலெழுகிறது. "அவர் என் மண்டைக்குள் சூரியனை உதித்தெழச் செய்தார்" என்னுடைய "அவரில்" அயோத்தி தாசருக்கும் இடமுண்டு. உங்களுக்கும் இடமுண்டு. இது அயோத்திதாசரின் நூல். அவர் ஒடுக்கப்பட்டோரின் முதல் கலகக் குரல். அதனால் இந்த நூல் எப்படி இருந்தாலும் பாராட்ட வேண்டும், என்ற வாதம் எனக்கு ஏற்புடையதல்ல. நான் அதை ஒரு போதும் செய்ய மாட்டேன். அப்படிச் செய்வது இந்த நூலைக் கீழ்மைப்படுத்துகிற நூதன முறை என்றே சொல்வேன். ஆக நான் இந்த நூலைப் பாராட்டுவதற்கான காரணங்களைச் சொல்கிறேன். இந்த நூலின் இரண்டாம் பகுதி கடுமையாக உள்ளது. அதில் செறிவான கருத்துகள் உள்ளதால் அப்படித்தான் இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்நூல் பெரிய விவாத தளத்தில் கொண்டு செல்ல வேண்டும். அப்போது அயோத்திதாசரை அணுகுவதில் உள்ள பிரச்சனையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். உங்கள் நூலிலுள்ள எழுத்து - Reading pleasure - மிகவும் காத்திரமாகவும் அடக்கமாகவும் அதே சமயத்தில் கவித்துவமாகவும் சூரத்தனமாகவும் இருக்கிறது. இந்த எழுத்து முறையை எங்கிருந்து வரித்துக் கொண்டீர்கள்.? இது உங்களுடைய அசாத்திய பலம் என்றே சொல்வேன். மொழி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி நெளிகிறது; குழைகிறது; ஆங்காங்கு திமிருகிறது; கட்டுரை மொழியும் கவித்துவ மொழியும் கதை மொழியும் ஒரே குதிரையில் ஏறி ஊர்பவனி வருகிறது. மறதி - ஞாபகம் என்ற சொற்களை வைத்து ஆடிய தர்க்க விளையாட்டு ஒரு தேர்ந்த தத்துவாசிரியனால் தான் முடியும் என்பது என் துணிபு. அந்த இடத்தில் நான் தருமராஜின் வேறொரு பரிமாணத்தைக் கண்டேன். முதல் பகுதியில் சாந்தமான மாணவனாக வியந்து வியந்து கதை கூறுபவனாக அறிமுகமாகிற நீங்கள் இரண்டாவது பகுதியில் அழுத்தமான அரசியல்வாதியாக கறார்த் தன்மையுடன் கேள்வி கேட்பவனாக உருமாறுகிறீர்கள். மூன்றாவது பகுதியில் ஒரு ஆசிரியனாக ஒரு எழுத்தாளனாக உங்கள் குரல் மாறுகிறது. உங்களுடைய தனிப்பட்ட ஆகிருதியை துலக்கமாக கண்டு கொள்ள முடிகிறது. ரவிக்குமார் எழுத்திலோ ஸ்டாலின் ராஜங்கம் எழுத்திலோ அரசியல் கறார்த் தன்மை இருக்குமேயொழிய கலைத் தன்மை குறைவாகவே இருக்கும். நான் அந்த இடத்தில் வேறொன்றை எதிர்பார்த்து ஏமாந்திருந்தேன். உதாரணமாக "பூர்வாசிரமம்" என்ற வார்த்தையை நான் முதன்முதலாக உங்கள் நூலில் தான் வாசித்தேன். "காலத்தினுள் அசையும் வேம்பு" - கவித்துவம். மேலும் ஒரு ஆசிரியன் இது இப்படித்தான் என்று சொல்பவன் அல்ல. இதை இப்படிச் சிந்தி என்று சொல்பவனே ஆசிரியன். "The war between brahmins and Buddhists is called indian history" - என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் கொண்டு வந்த ஒளி "பறைவதற்கும் பார்ப்பதற்குமான முரண் புரதானமானது" - என்ற வரியை படித்தவுடன் நூறு மடங்கு வெளிச்சம் கூடியது. சொற்களின் வெளிச்சம் மிகுந்த பரப்பு. அத்தனைக்கும் மேல் உங்கள் தமிழறிவு மிரட்டவே செய்கிறது. இதுவரை தமிழகத்தில் எந்த தலித் எழுத்தாளர்களிடமும் இல்லாத ஒரு மொழி உங்களிடம் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த நூலை வாசித்து முடித்த பின் ஒரு இனம்புரியா விடுதலையுணர்வை என்னைச் சுற்றிலும் விரவியிருப்பதைக் காண்கிறேன். இனி ஆயுதம் இல்லை என்பதைக் குறித்தோ இழந்ததை குறித்தோ கலங்கத் தேவை இல்லை. இந்த நூலில் அயோத்திதாசரின் மாபெரும் உருவைக் குறித்த ஒரு எளிய சித்தரிப்பு ஒரு வரியாக மாறி என்னுள் இறங்கி விட்டது. "ஒடுக்கப்பட்டவனின் சுயத்தை இத்தனை வலிமையாய் வேறு யாரும் கற்பனை செய்திருக்கவில்லை" "எங்களுடைய குறுவாள் வரலாற்றில் தொலைந்து போனது" - என்ற வரி இந்த புத்தகம் வாசித்து முடிக்கும் வரையிலும் என்னுள் எழும்பிக் கொண்டே இருந்தது. மேலும் ஒரு கவிதை. அதன் சாரம் இப்படித்தான் இருக்கும். உன் அறிவை எங்க வச்ச..? "பூர்விகத்துல" இந்தப் புத்தகம் குறித்து பலவிதங்களில் கடிதம் எழுதிப் பாராட்டலாம் அல்லது உரையாடலாம் என்று தோன்றுகிறது. உங்களது பரந்த அறிவு மிரட்டவே செய்கிறது. என்னுடைய ஊர் பெரியகுளம். ஊரில் இருந்திருந்தால் உங்கள் கல்லூரிக்கு ஓடி வந்து non official மாணவனாகச் சேர்ந்திருப்பேன். அப்பா எங்களுக்கு சிறுவயதில் ஒரு விஷயம் சொல்லித் தந்தார். அதை அவர் எங்கே படித்தார் என்று தெரியவில்லை. இப்போது நினைக்கையில் என்னுள்ளம் பரவசக் கொந்தளமடைகிறது. அது என் ஞாபகத்தில் அடியாழத்திலிருந்து மெல்ல மேலெழும்பி உச்சியையடைந்து ஒரு சூரியனைப் போல் ஜ்வலிக்கிறது. தலைக்குள் சூரியன். அப்பா சொல்லித் தந்த விஷயம் இது தான். குரு என்றால் என்ன.? கு - இருள் ரு - நீக்குபவர் இருளை நீக்குபவர் ; ஒளியைக் கொண்டு வருபவர். இப்படிக்கு மனோஜ் குமார். * நன்றி, மனோஜ். 'அயோத்திதாசர்' நூல் நிறைய பேருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது என்பதைத் தொடர்ந்து கேள்விப்படுகிறேன். ஆங்காங்கே, உதிரி உதிரியாய் எழுதியவர்கள் சிலர்; நேரடியாய் என்னிடம் பேசிச் சொன்னவர்கள் பலர். அந்தப் புத்தகத்தில் நான் சித்தரிக்கும் அயோத்திதாசரின் உருவம் எனக்குள் நானே உருவாக்கிக் கொண்டது. சுமார் இருபது வருடங்களாக அவரது எழுத்துக்களோடு பயணம் செய்து கொண்டிருக்கிறேன். எனது வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல நண்பர்களும் இந்த இருபது ஆண்டுகளில் பல முறை என்னை எச்சரிக்கை செய்திருக்கின்றனர் - போதும் வா! எத்தனை நாட்களுக்குத் தான் அவரையே பேசிக் கொண்டிருப்பாய்? ஆனால், அயோத்திதாசரிடம் நான் அடையும் ஆசுவாசத்தை அவர்கள் என்றைக்குமே அடைய மாட்டார்கள்; அவர்களுக்கு அப்படியொன்று தேவையும் இல்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன். என் நண்பர்கள் சொன்னதும் ஒரு வகையில் சரி - ஆய்வுலகில் ஒரு நபரோடு தேங்கிப் போவது பெருஞ்சாபம். ஆனாலும், என் வருடங்களைப் பணயம் வைக்க நான் துணிந்ததற்கு ஒரே ஒரு காரணம் தான் - 'இந்த முறை இல்லையென்றால், இனி இல்லை' என்ற நெருக்கடி! ஆனாலும் அந்த சாபம் என்னை சதா துன்புறுத்திக் கொண்டிருந்தது. அதனாலும் தான், எதிர்பார்க்காத தருணங்களிலெல்லாம் நான் அயோத்திதாசரிடமிருந்து தூர விலகி நின்று கொள்வதை அந்தப் புத்தகத்தை திரும்பத் திரும்ப வாசிப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். மையம், விளிம்பு அதற்கும் அப்பால் நின்றது உண்மையில் நானே தான். அயோத்திதாசர் புத்தகம் தருகிற உளக்கிளர்ச்சிக்கு என்னுடைய மனப்போராட்டங்கள் மிக முக்கியக் காரணம். நான் என் குழப்பங்களுக்கு, சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு நேர்மையாய் இருக்க விரும்பினேன். அதன் மூலமே அயோத்திதாசரின் குழப்பங்களையும் சந்தேகங்களையும் கேள்விகளையும் என்னால் உணர முடியும் என்று நம்பினேன். சொல்லப்போனால், அயோத்திதாசர் என்ற நூலை எழுதுவதற்கு முன், எனக்குள் அயோத்திதாசர் என்றவொரு Biopic ஓடிக்கொண்டிருந்ததை நான் நிறைய முறை உணர்ந்தேன். ஒரு விஷயத்தை சிறுகதையாக, நாவலாக, திரைப்படமாக, இசையாக, ஓவியமாகக் கற்பனை செய்து பார்க்கும் பொழுது அடைகிற கோணங்களை எந்தவொரு ஆய்வு முறையியலும் உங்களுக்குத் தந்து விடாது. அயோத்திதாசர் குறித்து நான் அப்படித்தான் செய்தேன். அவர் குறித்து என்னிடம் எழுதப்படாத சிறுகதைகள் உண்டு. எடுக்கப்படாத முழு நீளத் திரைப்படம் உண்டு. ஒரு கட்டத்தில் அவர் எழுதியிருக்ககூடிய கவிதையொன்றை என்னால் இன்றைக்கு எழுதி விட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது. இதுவே, இரண்டாம் பகுதியில் நான் விவரிக்கும் 'திரும்ப எழுதும்' முறையியல். இது முழுக்க முழுக்க என்னுடைய உருவாக்கம். இந்த முறையியலை நானே வடிவமைத்தேன். அயோத்திதாசரிடம் எனது இருபது வருடங்களை இழந்தேனோ என்று சந்தேகம் கொள்பவர்களுக்கு எனது பதில் இது தான் - நான் ஒரு புதிய அறிவியல் முறையையே இதன் மூலம் கண்டுபிடித்தேன்! இப்படி அயோத்திதாசர் குறித்து எழுத ஆரம்பித்த எதையும் நான் நிறுத்தியதாக வரலாறு இல்லை. எது எதுவோ சொல்ல வந்து என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்களது வாசிப்பு அனுபவப் பகிர்வு தொடர்ந்து எழுதுவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது. அந்தப் புத்தகம், ஒரு கலைப்படைப்பைப் போல திரும்பத் திரும்ப படிப்பதற்கான சாத்தியங்களை தன்னுள்ளே கொண்டது. அதன் மடிப்புகள் அக்குணம் கொண்டவை. இத்தனை மடிப்புகள் அதனுள் உருவாக வேண்டும் என்பதற்காக, நான் என்னுடைய எழுதும் பாணியையே கூட மாற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். அந்த மூன்றாவது பகுதி, ஒரு முன்னோட்டம் மட்டும் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். எனது அடுத்த நூலை (ஜல்லிக்கட்டு பற்றியது…) எழுதிக் கொண்டிருக்கும் பொழுது இந்த மூன்றாவது பகுதிக்கான உந்துதலை நான் உணர்ந்தேன். சொல்லப்போனால், வெளிவரவிருக்கும் அந்த நூலிலிருந்து தெறித்து விழுந்த ஒரு சிறு கல் இது. இதுவே இத்தனைக் கொண்டாடப்படுகிறது என்றால், அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்றே நான் இப்பொழுது யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

1 view0 comments

Recent Posts

See All

தேவேந்திரத் தன்னிலை...

மாற்று வரலாற்றுவரைவியலில் கடந்தகால சம்பவங்களை அல்லது நிகழ்வுகளைக் கற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாய், பூர்வ பெளத்தர்களை ‘பறையர்கள்’ என்று சொல்லி இழிவுபடுத்தினார்கள் என்பதை நிரூபிக்க விர

Commenti


bottom of page