top of page

அயோத்திதாசர் ஒவ்வாமை!




மருதன்

இனி வழக்கமான முறையில் வரலாற்றை எழுதவோ வாசிக்கவோ தேவையில்லை. அயோத்திதாசர் ஒருவர் போதும் என்று நீங்கள் சொல்வதுபோல் ஒரு தோற்றம் வருகிறது. ஒட்டுமொத்த சமூக அறிவியல் துறைகளுக்கும் மாற்றாக ஒரேயொரு ஆளுமையையும் அவர் சிந்தனைகளையும் முன்னிறுத்துவது எந்த வகையில் நியாயம்?


டி. தருமராஜ்

இந்தப் பிரச்சினையை கொஞ்சம் அறிவுபூர்வமாக அணுகலாம் என்று நினைக்கிறேன். அயோத்திதாசரின் ‘இந்திர தேச சரித்திரம்’ என்ற நூல், வரலாற்றுவரைவியலில் மிக முக்கியமான இடையீட்டைச் செய்கிறது என்பது நமக்குத் தெரியும். இந்தச் சமூகம் ஏற்கனவே பழகியிருக்கும் வரலாற்று ஓர்மைக்கு அப்பால் அது செயல்படுகிறது. இன்னும் குறிப்பாக, அது எழுதப்பட்ட முறையும், கோரும் அந்தஸ்தும் நமக்கு அதிகப் பரிச்சயமில்லை. ஆனால், அவரோ மிகத் தெளிவாக அதை சரித்திரம் என்றே அழைக்கிறார். இந்த நூல் மட்டுமல்ல, பெளத்தம் குறித்து, பண்பாட்டுச் செயல்பாடுகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளும் ‘சரித்திரம்’ என்றே தங்களை அழைத்துக் கொள்கின்றன. இதுவெல்லாம் ஒரு நூற்றாண்டிற்கும் முன்பு எழுதப்பட்டவை என்பதை மறந்துவிட வேண்டாம்.


இன்றைக்கு, அதை எதிர்கொள்கிற நமக்கு, அது தன்னை வரலாறு என்று கோருவதில் தொடர்ந்து சிக்கல் உள்ளது. இதையே இப்படியும் சொல்லலாம். அயோத்திதாசர், கட்டுரைகளில் வெளிப்படுத்தும் வரலாற்றுத்தன்மையை நமக்கு ஏனோ உணர முடியவில்லை.


இந்த இடத்திலேயே வரலாற்றை எழுதுகிற அவருக்கும், அதை வாசிக்கிற நமக்குமான இடைவெளி உருவாகுகிறது. ஒரு நூற்றாண்டு மட்டுமல்ல, இருவரது உணர்வுகளும் வேறு வேறு. நாம் ஏன் அவரை நம்ப மறுக்கிறோம்?


இந்த கேள்விக்கு ஒரே பதில் தான்: ‘வழக்கமான வரலாறு போல் அது எழுதப்பட்டிருக்கவில்லை’. இந்தச் சூழலில், அயோத்திதாசரையும் அவரது எழுத்துகளையும் கேலி செய்துவிட்டுப் பலரும் அகன்று விடுகிறார்கள். அதற்கு பெரிய புத்திசாலித்தனம் தேவை இல்லை. அப்படியொரு அம்மாஞ்சியாய் இந்தப் பிரச்சினையை விட்டுவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இந்தக் கேள்வியை அறிவுபூர்வமாக அணுகலாம் என்றே நான் ஆரம்பித்தேன். அந்த வகையில், அயோத்திதாசரின் எழுத்துகளில், நம்மால் வரலாற்றுத்தன்மையை உணர முடியாதது ஏன் என்று நான் கேட்க விரும்புகிறேன்.


ஒரு நூலை, வரலாற்றுப் புத்தகம் என்று நாம் எவ்வாறு உறுதி செய்கிறோம்? அதில் வெளிப்படும் வரலாற்றுத்தன்மையைக் கொண்டு. அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள், முடிவுகள், தர்க்க நியாயங்களையெல்லாம் மீறி, அப்பிரதியில் வெளிப்படும் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கங்களின் அடிப்படையில் நாம் இந்த முடிவிற்கு வருகிறோம். வரலாற்று நூற்களுக்கு அறிவியல் சார்ந்த தனித்துவ ஒழுக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒரு வரலாற்றுப் பிரதி அந்த வகையில்தான் ஆதாரங்களை அலசி ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட முடிவிற்கு வந்ததாக நம்மிடம் நிரூபிக்க வேண்டுமென்பது ஒரு ஒழுக்கம். எதை நிரூபித்தது என்பதை விடவும், எப்படி நிரூபித்தது என்பதே இங்கு கேள்வி.


உதாரணத்திற்கு, நீலகண்ட சாஸ்திரி, கே. கே. பிள்ளை போன்றோரின் வரலாற்று நூற்களில் சொல்லப்பட்ட தகவல்கள், முடிவுகள், தர்க்க நியாயங்களெல்லாம் பின் வந்தவர்களால் மறுக்கப்பட்ட பின்பும் அவை ‘வரலாற்று நூற்கள்’ என்ற அந்தஸ்தை இழந்து விடுவதில்லை. அவை தொடர்ந்து வரலாற்றுப்பிரதியாகவே வலம் வருகின்றன. பிரதி தொடர்ந்து வரலாற்றுப் பிரதியாக இருப்பதற்கு அது என்ன வரலாற்றை வெளிப்படுத்துகிறது என்பதை விடவும் அது வரலாற்றுத் தன்மையை வெளிப்படுத்துகிறதா என்பதே நமக்கு முக்கியம். வரலாற்றிற்கு மட்டுமல்ல, எல்லா வகையான அறிவியல் பிரதிகளுக்கும் இது பொது விதி. அவற்றில் வெளிப்படும் அறிவை விடவும், அறிதல் முறையையே நாம் கவனத்தில் கொள்கிறோம்.


அயோத்திதாசரின் சரித்திரப் பிரதிகளில் நாம் அடையும் துயரத்திற்கான காரணம் இப்பொழுது உங்களுக்கே விளங்கியிருக்கும். அதன் உண்மைகள் அல்ல, அந்த உள்மெய்களை அது அடையும் முறையியலே நமக்குப் பிரச்சினை. இன்னும் தெளிவாகச் சொன்னால், அதன் வரலாறு அல்ல நம் சிக்கல்; அதில் வரலாற்றுத்தன்மை இல்லை என்றே நாம் குழம்புகிறோம். இந்த நேரத்தில், நான் மீண்டும் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்: அயோத்திதாசரைக் கேலி மூலம் கடக்க நினைப்பவர்களுக்கு அவர் சொல்லும் வரலாறுதான் மண்டையைக் குடைகிறது. ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கு இத்தனை பிரம்மாண்ட வரலாறா?’ என்ற காழ்ப்பே அவர்களை ஆக்கிரமித்திருக்கிறது. அதனால் அவர்களிடம் கேலி தவிர வேறொன்றும் எழுவதில்லை.


ஆனால், என் எழுத்தும் அக்கறையும் அயோத்திதாசரின் எழுத்துகளில் வரலாற்றுத்தன்மையை உணர முடியாதவர்களுக்கு மட்டுமே. சொல்லப்போனால், வரலாற்றுவரைவியல் குறித்து நான் எழுப்புகிற அத்தனைக் கேள்விகளும் சந்தேகங்களும் அயோத்திதாசர் மீதான ஒவ்வாமையைக் களைவதற்கான முயற்சிகளுள் ஒன்று.


வரலாற்றுத்தன்மை தான் பிரச்சினை என்று தெளிவானதால், என்னுடைய விசாரணை, ‘யதார்த்தம் – புனைவு’ என்ற புள்ளிகளுக்கு நகர்கிறது.


இவ்விரண்டும் வெவ்வேறு தர்க்க முறைகளைக் கொண்டவை. யதார்த்தம், சான்றுகளால் தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது என்றால், புனைவு, கற்பனையால். ஆனால், இரண்டுமே தர்க்க முறைகள்தாம். சான்றுகளின் தர்க்கம், கற்பனைகளின் தர்க்கம்.


இந்த இடத்தில், கற்பனைகளின் தர்க்கம் குறித்து உலகளவில் நடைபெற்ற பல்வேறு உரையாடல்களை நான் உங்கள் முன் எடுத்து வைக்க ஆரம்பிக்கிறேன். ‘புனைவு, யதார்த்தத்தைப் பேசுகிறது’ என்று ஆதி முதல் நமக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை கடந்த ஒரு நூற்றாண்டாகத் தகர்ந்து கொண்டிருப்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். ‘யதார்த்தம், இன்னொரு மாபெரும் கற்பனை’ என்ற அறிவியல் முடிவை நான் உங்களுக்குச் சொல்வது இதன் தொடர்ச்சியாகவே.


இந்த முடிவை எட்டுவதற்கு, மொழியியலின் பங்களிப்பு மிக அதிகம். எல்லாவகையான மொழி வெளிப்பாடுகளையும் சங்கேதங்களின் ஒழுங்கமைப்பாக விளக்குகிறது மொழியியல். எந்த மொழியும் உண்மையைப் பேசுவதை விடவும், அங்கீகரிக்கப்பட்ட உத்தேசங்களைப் பேசவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று மொழியியல் நிரூபிக்கிறது. அந்தக் கணம், வரலாறு, அறிவியல், கவிதை, நாடகம், கதை என்ற வகைமை வேறுபாடுகள் அர்த்தமற்றுப் போகின்றன.


ஆனால், அதே நேரம் புனைவின் அழகியல் வேறு என்பதையும், அறிவியலின் அழகியல் வேறு என்பதையும் நாம் உணராமல் இல்லை. அந்த அழகியல்களை, அவற்றின் வகைமையோ அல்லது அவை வரிந்து கொண்ட முறையியல்களோ தீர்மானிக்கவில்லை என்ற புதிய தெளிவோடு நாம் பயணம் செய்கிறோம். அதாவது, ஒரு பிரதியில் உணரக்கூடிய வரலாற்றுத்தன்மையை இனிமேலும் அதில் பயிலும் முறையியல் தீர்மானிக்கத் தேவையில்லை என்பதே இந்த நூற்றாண்டில் நாம் அடைந்த வெற்றி.


உடனடியாக, அவசரக்குடுக்கைகள் போல, ‘இனி வரலாறுகளே எழுத முடியாது!’ என்ற முடிவிற்கும் நாம் வந்துவிடவில்லை. மாறாக, ஒரு பிரதியின் வரலாற்றுத்தன்மையைக் கண்ணை மூடிக்கொண்டு உணர வேண்டியத் தேவையில்லை; அதன் வரலாற்று அழகியலை நாம் விதவிதமான வழிகளில் உணரத் தொடங்கலாம் என்றே நான் சொல்ல விரும்புவேன்.


நீங்கள் குறிப்பிடுவதைப் போல, இது வரை எழுதப்பட்ட அத்தனையையும் அழித்துவிட்டு, புதிய வரலாற்றை செய்வோம் என்பதல்ல என் வாதம். அதே போல், அயோத்திதாசர் என்ற ஒற்றை ஆளுமையே எல்லாச் சமூக அறிவியல்களுக்கும் போதுமானது என்பதும் என் தரப்பு அல்ல. இப்படிச் சொல்வது ஒரு வகையில் வேடிக்கையும்கூட. ஏனென்றால், நானோ அயோத்திதாசரின் எழுத்துகளில் உணர வேண்டிய உள்மெய்யை நீங்களெல்லாம் உணரும்படிச் செய்வதற்கே இத்தனை மெனக்கிட்டுக் கொண்டிருக்கிறேன். பார்க்கப்போனால், ஒற்றை முறையியலைப் பிடித்துத் தொங்கும் பலரிடமும் பன் முறையியல்கள் இருக்க முடியும் என்பதே என் வழக்காக இருக்கிறது. நானல்ல, ஒற்றையைப் பரிந்துரைப்பது. அவரை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களே ஒற்றைக்குள் சிறைபட்டவர்கள்.


மருதன்

ஆவணங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படும் வரலாற்று முறையியலை நீங்கள் கேள்விக்கு உட்படுத்துவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. வாய்மொழி ஆதாரங்களைச் சந்தேகிப்பவர்கள் அதிகம் என்றாலும் அவற்றை ஏற்கவேண்டும் எனும் உங்கள் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் அயோத்திதாசரை ஏற்கும் ஓர் ஆய்வாளர் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் முற்றாகக் கைவிடவேண்டியிருக்குமா? இதுவரை எழுதப்பட்ட எல்லா வரலாற்றுப் பிரதிகளையும் அவற்றிலிருந்து திரட்டப்பட்ட அறிவு அனைத்தையும் அவர் கைவிடவேண்டியிருக்குமா?


டி. தருமராஜ்

அயோத்த்திதாசரின் சரித்திர எழுதுமுறையை ஊன்றிப் படித்தவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். அவர் பல்வேறு சான்றுகளை முன்மொழிகிறார். எழுத்து ஆதாரங்கள், கல்வெட்டு ஆதாரங்கள், தொல்லியல் சான்றுகள், நிகண்டு சான்றுகள், மருத்துவம் போன்ற அறிவியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், சொற்பிறப்பியல் சான்றுகள், கூடவே வாய்மொழிச் சான்றுகளும். அவர் உங்களுக்குத் தெரிந்த சான்றாதாரங்களையே தனது ஆய்வுகளில் பயன்படுத்துகிறார். ஆனால், நீங்கள் பரிச்சயப்படாத முறைகளில்.


நான் ஏற்கனவே சொன்னது போல, அவரது இந்திர தேச சரித்திரத்தில் சொல்லப்படும் சான்றுகள், முடிவுகளில் உங்களுக்கு சந்தேகங்கள் இல்லை; உங்கள் ஒவ்வாமை அனைத்தும் அவரிடம் பயிலும் முறையியல் குறித்தே; அதாவது, அவர் அந்த முடிவுகளுக்கு வரும் வழிமுறை பற்றியது. அந்த வழிமுறை, நமது பாரம்பரிய எழுத்துமரபில் தொழிற்படும் வாய்மொழி அறிவுப்பரவல் என்பதை யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை.


எழுத்தும் பேச்சும் ஒன்றிணைந்து பயணிக்கக்கூடிய தமிழ் மரபில், பழந்தமிழ் இலக்கிய – இலக்கண – அற நூற்களின் விளக்கங்கள் (உரைகள்) யாவும் வாய்மொழியாகவே வழங்கி வந்தன. பாராயணம் செய்யும் போதும், திண்ணைப்பள்ளிக்கூடங்களில் கற்றுத்தரும் போதும் இத்தகைய விளக்கங்கள், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. அயோத்திதாசரிடம் நீங்கள் முரண்வது, அவர் காட்டும் சான்றுகளில் அல்ல; அவர் சொல்லும் விளக்கங்களில். அந்த விளக்கங்களையும் தான் கற்ற ஆசிரியர்கள் சொல்லித்தந்தது என்றே அவர் தெரிவிக்கிறார். இப்பொழுது நீங்கள் சந்தேகப்படுவது, அயோத்திதாசர் என்ற தனிமனிதரின் வரலாற்று முறையியலை அல்ல என்பது விளங்குகிறதா? ஒரு பாரம்பரிய எழுத்துப் பண்பாட்டின் வாய்மொழி அறிவுத்தோற்றவியலையே நீங்கள் சந்தேகிக்கிறீர்கள். மேற்கத்திய அறிவுமரபையும், தமிழ் அறிவுமரபையும் நிறுக்கும் போது, உங்கள் துலாக்கோல் மேற்கே சரிகிறது.


இதனால், மேற்கா கிழக்கா, நீங்கள் எதைக் கைக்கொள்கிறீர்கள் என்பதல்ல என் கேள்வி. கிழக்கின் அயோத்திதாசரை ஏற்றுக்கொண்டு, இதுவரை எழுதப்பட்ட வரலாற்றைக் கைவிட்டு விடுங்கள் என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. அல்லது, வாய்மொழி வழக்காறுகளை மட்டுமே வைத்துக் கொண்டு, எழுத்து ஆதாரங்களைப் புறக்கணியுங்கள் என்றும் அர்த்தமில்லை.


1999ல் ஞான. அலாய்சியஸின் ’அயோத்திதாசர் சிந்தனைகள்’ தொகுதிகளை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்டபோது இந்தக் கேள்விதான் முதலில் கேட்கப்பட்டது. கேள்வியாகக்கூட அல்ல, ஆறு. இராமனாதன் குற்றச்சாட்டாகவே வைத்தார். வழக்காற்றியல் ஆய்வுகளுக்கும் அயோத்திதாசருக்கும் என்ன சம்மந்தம்? இதை வெளியிட இவ்வளவு பணம் ஏன் விரயமாக்கப்படுகிறது? அயோத்திதாசர், தமிழ் எழுத்து – பேச்சு மரபின் அற்புதக் கண்ணி என்பதை அன்று அவரும் சரி,பிறரும் சரி உணர்ந்திருக்கவில்லை.


மருதன்

மார்க்சியம், Annales பள்ளி, சபால்டர்ன் போன்ற வரலாற்று முறையியலுக்கு மாற்றாக அல்லது அவற்றுக்கு அடுத்தகட்டமாக அயோத்திதாசரியத்தை நீங்கள் முன்னிறுத்துவது ஆச்சரியமூட்டுகிறது. இவையெல்லாம் உலகளவில் விவாதிக்கப்படுபவை, பின்பற்றப்படுபவை. இவற்றின் பங்களிப்புகளும் போதாமைகளும் விரிவாக அலசப்பட்டுள்ளன. அயோத்திதாசரின் வரலாற்றுப் பார்வை அவ்வாறு அலசப்பட்டதில்லை. போதுமான அளவுக்கு வளர்த்தெடுக்கப்படக்கூட இல்லை, அல்லவா?


டி. தருமராஜ்

அயோத்திதாசரிடம் வழங்கும் வரலாற்று முறையியல் என்று எதையும் நான் இங்கு பிரஸ்தாபிக்கவில்லை. ஆனால், அவரது சரித்திரம் எழுதுமுறையை இன்னும் கூடுதலாக விளங்கிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்றே தொடர்ந்து பேசுகிறேன்.


நீங்கள் குறிப்பிடுவது போல, மார்க்சிய, அனால்ஸ், சபால்டர்ன் வழிமுறைகளைத் தொடர்ந்து உலகளவில் நடைபெறும் வரலாற்றுவரைவியல் உரையாடல்களைப் பயன்படுத்தியே நான் அயோத்திதாசரை வாசிக்கிறேன். குறிப்பாக, வான் ஜான்சினா, கிளாட் லெவி-ஸ்ட்ராஸ், மிகைல் ஃபூக்கோ, ஜாக் தெரிதா, ஜாக் ரான்சியர், பியர் நோரா, எர்னஸ்டோ லாக்லவ், கில் டெலியூஸ் போன்றோரின் கருத்தாக்கங்கள் எனக்குத் துணைபுரிகின்றன. இதன்மூலம், அயோத்திதாசரை விளங்கிக் கொள்ள முடியுமா என்று முயற்சி செய்கிறேன். அதன் பலாபலன்களையே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.


தற்காலம், வரலாற்றுவரைவியல் குறித்து உலக அளவில் நடைபெறும் அனைத்து உரையாடல்களையும் சோதித்துப் பார்ப்பதற்கு அயோத்திதாசர் ஓர் உரைகல். இப்படியொரு சிந்தனையாளர் கிடைப்பது அரிதினும் அரிது. முப்பது வருடங்களுக்கு முன் பின்னை அமைப்பியல் சிந்தனைகள் விவாதிக்கப்பட்ட போது, தமிழிச் சூழலிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது காலம் கனிந்திருக்கிறது. முன்னர் செய்த தவறைச் செய்யாமலிருக்கவே, அயோத்திதாசர் போன்றொரு சரித்திறர் நமக்குத் தேவைப்படுகிறார்.


இப்படியொரு சூழல் சார்ந்த வாசிப்பையும் உரையாடலையும் முன்னெடுக்கும்போது, நாம் புதிய கருத்தாக்கங்களை உருவாக்கக்கூடும். அன்றைக்கு, இந்தக் கருத்தாக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கு உலகமே தமிழ் படிக்க ஆரம்பிக்கும் அல்லது நம்மை மொழிபெயர்க்க ஆரம்பிக்கும். தமிழால் இதைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தமிழ்தான் நம் சாதி இல்லையா?


மருதன்

அயோத்திதாசரை நீங்கள் குறிப்பாக யாருக்குப் பரிந்துரைப்பீர்கள்? அவர் யாருக்கானவர் என்று நினைக்கிறீர்கள்?


டி. தருமராஜ்

அறிவியலையும் அரசியலையும் இணைத்து யோசிக்க விரும்பும் அத்தனை இளையவர்களுக்கும் நான் அயோத்திதாசரைப் பரிந்துரைப்பேன். எழுத்தின் மூலமும் சிந்தனையின் மூலமும் வெகுஜனத் திரளிடம் உரையாட விரும்பும் அனைவருக்கும் அயோத்திதாசரின் எழுத்துகள் ஓர் உதாரணம்.

அவரிடமிருந்து புதிய பார்வைகளை நம்மால் தருவிக்க முடியும். உதாரணத்திற்கு, நாட்டுப்புற பழக்கவழக்கங்கள் குறித்த அவரது அணுகுமுறை எனக்கு ஏராளமான கருத்தாக்கங்களைப் புதிதாய் உணர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது. அன்றாட வாழ்வின் பண்பாட்டுத் தகவல்களுக்குத் (இனவரைவியல் மூலம்) தரப்படும் முக்கியத்துவத்தை, அத்தகவல்களின் பொதுக்குணங்களுக்கும் தருவதன் மூலம், ‘வெகுஜன’ அசைவுகளைக் கண்டுணர முடியும் என்பதை நான் அவரது அம்மன் வழிபாட்டு ஆய்வுகளில் உணர்ந்து கொண்டேன். அதே போல, சமயங்களின் பரிணாம வளர்ச்சியில், பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஏக தெய்வ வழிபாடு உருவாகும் என்பதற்கு மாறாக, ஏக தெய்வ வழிபாடு சிதறுண்டு பல தெய்வ வழிபாடாக உருமாறும் என்ற அயோத்திதாசரின் கருத்து, பண்பாட்டில் அழிவதும், நீடிப்பதும்,உருமாறுவதும்,வேறுபடுவதும் குறித்து புதிய பார்வைகளை எனக்கு வழங்கியது.


மருதன்

அயோத்திதாசரின் பூர்வ பௌத்தத்தை அம்பேத்கரின் நவயானத்தோடு ஒப்பிடலாமா? பௌத்தம் இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் எனும் ஏக்கத்தில் பிறந்த யுடோபிய கோட்பாடு என்று அவர்களுடைய பௌத்தத்தை அழைக்கலாமா?


டி. தருமாராஜ்

அம்பேத்கரின் நவாயானா,முழுக்க முழுக்க நவீனத்துவத்துள் தோய்ந்த அரசியல் சமய நடவடிக்கை. அது, கண்ணுக்குப் புலப்படும் வகையில் நிகழ்த்தப்படும் புரட்சிகர செயல். காலனியச் சிந்தனை, பெளத்தம் குறித்து கட்டியெழுப்பிய ‘பகுத்தறிவுச் சமயம்’ என்ற மாயத்தோற்றத்திலிருந்தே அது உருப்பெறுகிறது. நிறுவன அமைப்பே அதன் பலம். அம்பேத்கர் மிகப்பெரிய நிர்மாணி. அவரது, இடவொதுக்கீட்டுக் கொள்கைகள் இதை உங்களுக்குத் தெரிவிக்கும்.


அயோத்திதாசரோ இந்தத் தேசத்தின் பண்பாட்டு சூட்சுமங்களை அறிந்தவர். அதிலும் குறிப்பாக, பெளத்தம் பற்றி கட்டப்பட்ட பொய்க்கதைகளை நன்கு உணர்ந்தவர். அதே முறையியலைக் கொண்டு பெளத்தம் பற்றிய மெய்க்கதைகளைப் பரப்ப அவர் விரும்பினார். சமயம், ஒரு வெகுஜன அரசியல் விளைவு. வெகுஜன அரசியலைத் தனது எதிர் முகாமிலிருந்து கணிக்கிற நபராக அவரை நான் பார்க்கிறேன். அவரது பூர்வ பெளத்தம், லட்சியவாதம் அல்ல; அதை இந்தத் தேசமே ஒழுகுவதாக அவரால் நிரூபிக்க முடிந்தது.





Comentarios


bottom of page