top of page

'அப்நார்மல்' மெடிக்கல் ரிப்போர்ட்



மதினிமார்களின் கதைகளுக்குப் பின்பு கோணங்கி 'வாக்கிய நோயால்' பாதிக்கப்பட்டிருந்தார். கண்ட கண்ட தண்ணியைக் குடித்ததினால் தான் அவருக்கு இப்படியொரு அவதி ஏற்பட்டதாய் அவரது வீட்டில் யோசித்தார்கள். ஆனால் உண்மையில் 'பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை தைரியமாகக் குத்திக்கொள்ள முன்வந்த 'ஜேம்ஸ் பிப்ஸ்' போன்றவொரு காரியத்தையே கோணங்கி செய்து கொண்டிருந்தார். மொழிக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக Structuralist என்ற ஸ்ட்ரக்சுரலிஸ்ட்கள் அன்றைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். மொழிக்குள் அகப்பட்டவர்கள் வெளியே வருவது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதால் நானெல்லாம் கோணங்கியையே உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் மொழியின் நோயை மடக்கு மடக்கு என்று குடித்து முடித்தார். எல்லோரும் நினைத்தது போல் அதற்கான தடுப்பு மருந்தை உடல் உருவாக்கிக் கொள்ளவே இல்லை. நோய் முற்றி, அதுவே கோணங்கி என்றானது. அவர் அந்த நோயோடே வாழ்ந்து வர வேண்டியது தான் என்று முடிவு செய்த மருத்துவர்கள் லண்டனுக்குப் பறந்து போனார்கள். நான் உண்மையிலேயே பதறிப் போனேன். ஒரு கோட்பாட்டிற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்கிற உத்தமர்களின் சகவாசம் கிடைத்ததற்காக அன்று நான் வடித்த கண்ணீர் அளந்து மாளாது. இப்படியுமா ஒரு மனிதன் இருக்க முடியும் என்று நான் வியந்து நின்ற பொழுது தான் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட Peter schalk, 'இதே தான்டே உங்க வழக்கம். தியாகம் உங்க இரத்தத்தில ஓடுது' என்று கட்டுரை எழுதி என்னைத் தேற்றினார். இதற்குப் பல வருடங்களுக்குப் பின், கோணங்கி 'பாழி' போன்றொரு நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்ட பொழுது எனக்கு அவரது ஆரோக்கியம் குறித்து மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டது.

நாவல் என்ற வடிவம் அவரை அந்நோயின் பிடியிலிருந்து வெளியே கொண்டு வந்து விடும் என்று நான் நம்பினேன். அதன் polyphony , dialogism, skaz, இன்னபிற சமாச்சாரங்கள் கோணங்கியை வாக்கிய நோயின் பிடியிலிருந்து வெற்றிகரமாய் மீட்டெடுக்கும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், அந்தோ பரிதாபம்! கோணங்கியின் நோய், பக்தினுக்கெல்லாம் மசிவதாக இல்லை. அது தன்னை சகல முறிவுகளுக்கும் தகவமைத்துக் கொண்டதாக தோன்றியது. அவர் தனது 'பாழி' நாவலோடு எப்பொழுதும் போல் வந்து சேர்ந்தார். முதல் முறையாக எனக்குக் கோணங்கியின் எழுத்து முறை பற்றி வேறொரு கோணத்தில் யோசிக்க வேண்டுமோ என்று தோன்றியது. இந்தக் கதை சொல்லல் வேறு மனநிலையை வேண்டுகிறது என்றால், ஒரு வாசகனாக அதையும் தான் கொடுத்து பார்த்துவிட்டால் என்ன? அதனால், பாழியை நான் வித விதமான முறைகளில் வாசித்துப் பார்க்கத் தொடங்கினேன். அதன் Non - linearityயைப் புரிந்து கொள்வோம் என்று ஒவ்வொரு முறையும் எந்தப் பக்கம் திறந்து கொள்கிறதோ அதிலிருந்து பாழியை வாசிக்கத் தொடங்கினேன். இந்த வாசிப்பு முறைக்கு Jorge Luis Borges தான் ஜவாப்தாரி. மணல் புத்தக டெக்னிக்! எனக்குள் இந்த யோசனை தான் இருந்தது. இதை வில்லுப்பாடல் மரபிலிருந்து கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு வருடமும், ஒரே ஊரில், ஒரே சாமிக்கதையை பாடிக்கொண்டே இருப்பார்கள்; மக்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பார்வையாளர் யாரும் எந்த வில்லடியையும் முழுசாய் கேட்பது இல்லை. வருவார்கள், போவார்கள், தூங்குவார்கள், விழித்தெழுவார்கள், இப்படியே ஒரு non-linear பார்வையாளராக இருப்பார்கள். கோணங்கியும் சொல்கதை மரபுகளில் ('வாய்மொழி மரபு' என்று சொன்னால் உடம்பில் பொரி பொரியாய் அலர்ஜி வரும்) ஆர்வமுடையவர் என்பதால் இந்த முறையில் அவருடைய பிரதியை வாசிக்கலாமா என்று முயற்சி செய்து பார்த்தாலென்ன என்று தோன்றியது. உடனடியாக அதனை செயல்படுத்தவும் படுத்தினேன். ஆனால் என் வேதாளம் மீண்டும் முருங்கைமரத்திலேயே தான் ஏறியது. வாய்மொழி மரபுகளில் நிகழ்த்தப்படும் கதைகளை அந்தப் பார்வையாளர்கள் தங்களது ஞாபகத்தில் ஏற்கனவே கொண்டிருக்கிறார்கள். யாருக்குமே அது புது கதை அல்ல. அந்த வருடத்தில் அந்த இடத்தில் நிகழும் அந்த நிகழ்வு மட்டுமே புதுசு.

எனவே, வாய்மொழி மரபுகளில் காணப்படும் non-linearity பின்னை நவீன non-linearity இல்லை என்பதை கொஞ்ச நேரத்திலேயே என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதற்கப்புறம், கோணங்கி, அடுத்த நாவல் எழுதும் போதும் நான் அந்த அடையாளம் தெரியாத அதிசயத்திற்காகக் காத்துக்கொண்டே இருந்தேன். ஆனால், அதிசயத்திற்கு சாதாரணர்களை அறவே பிடிக்காது போலும். நிற்க! என் போதாத வேளை, இப்பொழுது ஜெயமோகனின் முறை. கோணங்கி விழுந்த அதே மாதிரியான பள்ளத்தில் ஜெயமோகன் தானே போய் படுத்துக் கொண்டு நானும் வீழ்ந்தேன் என்றார். தமிழ் தான் எவ்வளவு கொடூரமான மொழி! இது காட்டுமிராண்டி மொழி என்று பெரியவர்கள் சொன்னது சரி தான் போல.


நவம்பர் 18, 2014

இந்தப் பதிவுக்கு ஜெயமோகன் எழுதிய பதில்:


அன்புள்ள தர்மராஜ் அந்த 'நாலைந்துபேரில்' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம் இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் 'ஆட்டமாட்டிக்' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம், உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு 'கிராஃப்ட்' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன் மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை, மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும், தத்துவமும், உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொன்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொண்டது. இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உள்ளது எப்படியானாலும ஓர் எச்சரிக்கையாகவே உங்களை எடுத்துக்கொள்கிறேன். நன்றி ஜெ





Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
WhatsApp Image 2023-08-01 at 3.07_edited
bottom of page