top of page

அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)



சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டில் காத்து நிற்கையில் வெயில் லேசாய் உரைக்கத் தொடங்கிற்று. எப்பொழுதுமே ஊருக்குப் போகிற வழியில், பஸ்டாண்டில் காத்து நிற்பது கட்டாயமாகிப் போகிறது. அவனுடைய ஊருக்குப் போகிற பஸ் நேரம் அப்படி. பஸ்ஸ்டாண்ட் ரொம்பி வழிந்தாற்போல் சிலர் கூரைக்கப்பால் வெயிலிலும் நின்றிருந்தனர். வெக்கையில் முகமெல்லாம் காந்தத் தொடங்கியது. அழுத்தித் துடைத்துக் கொண்டான்.


பஸ் ஸ்டாண்டிற்குள் ஊர்முகம் ஏதாவது தெரிகிறதா என்று துழாவினான். உரம் வாங்கவோ, டீஸல் வாங்கவோ, விதை வாங்கவோ சினிமா பார்க்கவோ சங்கரன்கோவிலுக்குத்தான் வர வேண்டியதிருக்கிறது. ஊர் முனையிலிருக்கிற ரைஸ்மில் தவிர்த்து மற்றதெல்லாம் வீடுகளும் கோவில்களும்தாம். இப்பொழுது புதுசாய் நடுத்தெருவில் இரண்டு பலகாரக் கடைகள் முளைத்திருப்பதாய்ச் சொல்கிறார்கள். எந்தவொரு காரியத்திற்கும் ராயகிரிக்கோ அல்லது இங்கே சங்கரன்கோவிலுக்கோ வரவேண்டியதாகிறது. ஊர் என்றதும் இவனுக்கு ஞாபகம் வருவதெல்லாம் கருவேலங்காடுகளும், கீரைத் தோட்டங்களுமே. ஊருக்குத் தெற்கே தொடங்கி பரந்து விரிந்து கிடக்கும் கீரைத்தோட்டம். அதற்கும் அப்பால் பம்மிக்கிடக்கும் கருவேலங்காடு. விடியற்காலைப் பொழுதிலேயே இதெல்லாம் பார்க்கச் சொகமாயிருக்கும். மிதிக்கிற பாதையெல்லாம் நச்நச்சென்று மண் ஈரம் சொல்லும். கீரைத் தோட்டங்களைக் கடந்து கருவேலங்காடுகளை நெருங்குகையில் வீசுகிற மெல்லிய காற்று முகமெல்லாம் வியாபிக்கும்.


ஊர் என்றதும் அந்த மங்கிய பொழுதில் நிழல்களாய் நடந்து போகின்ற பாதைகளே இவனுக்கு முதலில் ஞாபகம் வரும். இவன் வந்துவிட்டானென்றால் சொல்லவே வேண்டாம். வடிவேல் தாத்தா அதிகாலையிலேயே எழும்பிடுவார். தாட்டு விரித்து மல்லாந்து படுத்துக் கிடக்கும் இவனுக்கும் துடியாய் முழிப்புத் தட்டும். கண்ணைக் கசக்கித் தடுமாறி கூடத்தில் நுழைந்தால் பாட்டி பல்பொடியோடு நின்றிருப்பாள். பழைய பேப்பரில் மடித்துத் தரும் பல்பொடியை வாங்கிக்கொண்டு முகத்தை அலம்பி முன்னறைக்குத் திரும்புவான். காப்பியோடு வருகிற பாட்டி டம்ளரை நீட்டி, ‘வெரசலாய் புறப்படுங்க’ என்று தாத்தாவை விரட்டுவாள். இவன் குடித்து முடிக்கும்வரை நின்றிருந்து, பின்வாங்கி, உள்மறைவாள்.


வடிவேல் தாத்தா ராத்திரி தீட்டி வைத்த கத்தியைப் பதம் பார்த்தபடிக்கு வெளியே வருவார். அதற்குள் பாட்டி வந்து இவனுக்குத் துண்டு எடுத்துத் தருவாள். இவன் எப்பொழுதும் போல், ‘எத்தனை குட்டி பாட்டி நிக்குது’ என்பான். அப்புறமாய் பாட்டி, இடைக்கு இடை தாத்தாவை வெரட்டியபடி விபரம் சொல்வாள்.


பாட்டி சொல்வதுபடி எளசான குட்டிதான் கறிக்கு லாயக்கு. அதில்தான் சத்து நிறைய என்பாள். புறப்படுகையில் அடையாளம் முதற் கொண்டு சொல்லி விடுவாள். காது மடலில் கோணலையோ அல்லது நடையையோ அல்லது முனகுகிற சப்தத்தையோ எதையாவது ஒன்றைப் பாட்டி வித்தியாசப்படுத்தியிருப்பாள்.


பாட்டி கூடப் பேசுவது இவனுக்கு இயல்பாகவே ரொம்பப் பிடிக்கும். பாட்டியோடு பேச முடிவது சாப்பிடுகிற சமயம் மட்டும்தான். இவனைத் தரையில் உட்காரவே விடாமல் தார்ப்பாயோ, பலகையோ எடுத்துப் போடுவாள். இவனுக்கு என்று தனியாய்ப் பத்திரப்படுத்துகிற எவர்சில்வர் தட்டைப் பெட்டியிலிருந்து எடுத்து வருவாள். சோறைப் பரப்பிக் கறியை வைத்து சாறை ஊற்றிப் பிசையச் சொல்லுவாள். சாப்பிடுகையில் கண்கொட்டாது பார்த்திருப்பாள். போய்ச் சேர்ந்த முதல் நாளில் பாட்டி மெதுவாய் சொல்லத் தொடங்குவாள். இவனும் அவள் சொல்லட்டுமென்று வழக்கத்தைவிட மெதுவாகவே சாப்பிடுவான்.


‘இந்த மொறைக்கு ஒண்ணு வளந்து கெடக்குது செயா. தாத்தாவ்க நீ வருவேன்ட்டுதான் அடிக்கனும்ப்ட்டு இருக்காக. போன மொறை வந்தப்ப அடிச்சமே அதுக்கு ஒட்டதான். ஆனாலும் தளதளண்டு நிக்குது. கீரையும், கண்டதுமா திங்குதா என்ன?’ என்றவாறு லேசாய்த் தொடங்கி வைப்பாள்.


இவனும் சிரத்தையாய்க் கேட்பான். ‘சின்னபயமக்க’ கல்லெறிஞ்சு வெரட்டியது, விக்கல்லபோற நாயொன்று வளைச்சது எல்லாமாய் விளக்கமாய்ச் சொல்லுவாள். இவனுக்கு சாப்பிட்ட நினைவே இல்லாமல் தட்டு காலியாயிருக்கும். காலியான பின்பும் இவன் உட்கார்ந்தபடியே கேட்டுக் கொண்டிருப்பான். பின்னர் பாட்டியே சொம்பில் தண்ணீர் முகர்ந்தபடி, ‘நாளைக்கி பன்னியடிச்சி வயிறு ரொம்ப சாப்டுவ, ராவுக்கு போறும்டா செயா’ என்று முடித்துவைப்பாள்.


இவனும் அன்றைக்குச் சீக்கிரமாய்த் தூங்கி வைப்பான். வடிவேல் தாத்தா கத்தியை இடுப்பில் சொருகி, பெரிய தடியொன்றைத் தூக்கியபடி வந்ததும், இவன் எழுந்து, நிலை இடிக்காமல் குனிந்து வெளியே வருவான். வடிவேல் தாத்தா வந்து புறப்படுகையில் பாட்டி மறுபடியும் தாத்தாவிடம் ஓடிச்சென்று, ‘வெளாட்டு காட்டிக்கிட்டு நிக்காம சீக்ரமா வந்துடுங்க’ என்றவாறு நாங்கள் மறையும் வரை நின்று பார்த்திருப்பாள்.


வடிவேல் தாத்தாவுக்கு முகம் மண்டிய மீசை. ஒவ்வொரு மயிரும் சுருண்டு கிடக்கும். எப்பொழுதும் கையால் ஒதுக்கி நீவிவிட்டவாறே இருப்பார். அவரோடு நடப்பதென்றால் இவனுக்குப் பிரியம். இருவரும் கொஞ்ச தூரத்திற்கு மெளனமாய் நடந்து செல்வார்கள். இவன் தாத்தாவோடு ஒட்டி நடப்பான். தாத்தாவோட கைகள் சில சமயம் இவன் மேல் உரசுகிறார்போல் படும். அப்பொழுதெல்லாம் இவனுக்கு ஏனோ சந்தோசமாய் இருக்கும்.


வீடுகளைக் கடந்து கீரைத் தோட்டத்திற்குப் போகுமுன்தான் பன்றி அடைக்கிற குடில் இருக்கிறது. தாத்தாவும் அவனுமாய்க் குடிலை நெருங்கி அந்தப்புறமும் இந்தப்புறமுமாய் நின்று கொள்வர். தாத்தா குடிலை அடைத்த பலகைக் கதவை உயரத்தூக்குவார். அநேகமாய் அவர்கள் தேடிவந்த குட்டி குடிலில் இருப்பதில்லை. எப்போதாவது இருந்ததா என்று அவனால் ஞாபகப்படுத்த முடியவில்லை .


‘திருட்டு மூளி, வெவரமா அடைய வராம போயிருச்சிடே. நீ வர்ரத பார்த்திருக்குமோடா’ என்பார். இவன் வெட்கமாகச் சிரித்துக் கொள்வான்.


‘வாடே போகலாம்’ என்றவாறு கீரைத் தோட்டம் நோக்கி நடப்பார்.


இருட்டு காலெல்லாம் அப்பிக் கொள்வது போல் படுத்திருக்கும். இவனுக்குப் பாதையும் வரப்பும் மங்கிப் போகும். தாத்தா மட்டும் மாறாத நடையோடு முன்னால் போவார். ‘பாத்து வாடே, சின்னப்பயமக்க பேண்டு போட்டுருக்குக’ என்றவாறு திரும்பிப் பார்த்து, இவன் தடுமாறுவதைக் கண்டு, ‘பொறுடே வாறேன்’ என்பார். கிட்ட வந்து ஒரு கை நீட்டி இவனைப் பிடித்துக் கொண்டு நடப்பார்.


தாத்தாவின் கைப்பிடியில் இவன் கை ஒரு பாதுகாப்பை உணரும். தன்னைச் சுற்றி காவலானது போல் உணர்வான். கதகதவென்றிருக்கின்ற தாத்தாவின் கையைப் பற்றி கண்ணை மூடிக்கொண்டு நடப்பான். அந்தக் கதகதப்பை அவனால் அதற்கப்புறம் நினைவுபடுத்த முடிவதில்லை. கதகதப்புக்கும் அப்பால் எதுவோ ஒன்று இருப்பதாய் நினைத்துக்கொள்வான்.


இதற்குள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஏராளமான உருவங்கள் தூக்க கலக்கமாய் நடந்து போகும். சில உருவங்கள் இவர்கள் எதிரிலேயே வந்து சேரும். அப்பொழுதெல்லாம் வரப்பு மாறி வழி விடுவார்கள். இவனுக்கு வரப்பு மாறுவது ரொம்பப் பிடிக்கும். அதற்காகவே எதிரே யாராவது வரமாட்டார்களா என்று காத்திருப்பான்.


இதற்குள் கீரைத் தோட்ட மூலைக்கு இருவரும் வந்திருப்பர். தாத்தாவுக்குப் பன்றி அடைகிற இடமெல்லாம் ரொம்பவும் தெளிவு. இந்தக்குட்டி இங்கேதான் இருக்கணுமென்று அவருக்குள்ளேயே ஓர் நிச்சயம் இருக்கும். இவன் கையை விட்டு விட்டு, ‘இங்கன தான்டே பம்மிக்கிட்டிருக்கும். அப்படி மேக்கநின்னுக்க, பத்திரம்டே, இது மத்தது மாதிரில்ல. கொழுப்பெடுத்த மூதி. பொறைக் கிட்ட ரெண்டு கல்லு பொறுக்கிக்க…. என்னடே… நின்னுகிட்டியா?’ என்றபடி தாத்தா கம்பைத் தயாராய் உயர்த்தி, இடுப்புத் துண்டை அவிழ்த்து கயிறாய் முறுக்கி வைப்பார்.


அத்தனை மெல்லிசாய் நடக்கிறதையும் கேட்டுவிடும் போலிருக்கிறது. முதலில் மெதுவாய் முனகல் வரும். தாத்தா இவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மறுபடியும் முன்னேறுவார், பக்கத்திலிருக்கிற பொறையிலிருந்து முனகல் உறுமலாகும். மேலும் நகர்ந்து தாத்தா வசதியாய் நின்று கொள்வார். இப்பொழுது உறுமல் இவனுக்கு அச்சம் தருவதாய் மாறும். தாத்தா அங்கிருந்தே, ‘கல்லெறிடே’ என்பார். இவனும் காத்திருந்தாற்போல் பொறுக்கிவைத்த கல்லைப் பொறையைப் பார்த்து விட்டெறிவான்.


வீலென்கிற வேகத்தோடு தாத்தா பக்கமாய் ஓடுகிறதுதான் கேட்கும். அதற்கப்புறம் மெல்லிய முனகல்களோடு தாத்தாவின் முறுக்கிய இடுப்புத் துண்டில் வாயிறுக்க தலைசாய்ந்திருக்கும். இவன் இன்னமும் பயத்தோடு அருகில் செல்வான். தாத்தாவின் துண்டு அதன் வாயில் இறுகியிருக்கும். முன்னங்காலால் அதன் கால்களைத் தரையோடு தரையாய் தேய்த்திருப்பார். அதன் உடல் மட்டிலும் துடித்துத் துவண்டு பின் சோர்வுறும்.


தாத்தா இவனைப் பார்த்து, ‘என்னடே பயமா? இப்படி வந்து இடுப்புலக் கவுறு முடிச்சிக் கெடக்கு. எடுறே’ என்பார்.


இவன் தாத்தாவின் இடுப்பை உணர்ந்து முடிச்சை உருவுவான். பருமனான சணல்கயிறு நீண்டு வரும். தாத்தா கயிறுகொண்டு வாயைக் கட்டுவார். அப்பொழுதெல்லாம் இவன் அவரது மூஞ்சியைப் பார்த்தவாறு நிற்பான். அந்த விடிகாலையிலும் தாத்தாவுக்கு முத்து முத்தாய் வியர்க்கும். நெற்றியில் நரம்புகள் தென்னிக்கொண்டு நெளியும். தடவிப் பார்த்தால் நளுக்புளுக்குனு இருக்குமோ என்று நினைப்பான்.


அதே கயிறைக் கொண்டு கால்களையும் கட்டி, கத்தியால் கயிறைத் துண்டிப்பார். கொண்டு வந்த கம்பை கால்களுக்கிடையில் புகுத்தி முன்முனையை இவனிடம் தருவார். ‘தூக்குடே இன்னிக்கு பாட்டிய பெசலாட்டு கறி வக்கச் சொல்வோம்’ என்று இவனைப் பார்த்துச் சிரிப்பார். அப்பொழுதும் நெற்றி நரம்பு நெளியும்.


அப்புறமாய் கிணத்துத் தரையில் அமர்ந்து பன்றியறுப்பது பார்க்கப் பிடிக்கும். பக்கத்தில் குத்த வைத்துப் பார்ப்பான். அப்பொழுது நன்றாக விடிந்திருக்கும். தாத்தா பன்றியைக் கிடத்தி மல்லாக்கப் படுக்கவைத்து குரவளையை நெறுக்கும்போது இவன் வேறு பக்கம் திரும்பிக் கொள்வான். உடம்பிற்குள் மறைந்திருந்த சப்தத்தையெல்லாம் துப்புகிறாற்போல் ஓர் வீறிப்பு. அதோடு சரி, தாத்தா கயிற்றை அவிழ்ப்பார். கால்களை விரித்து நடுவயிற்றில் கத்தி கொண்டு உரசத் தொடங்குவார். லேசாய் அங்கங்கே தோல் பிய்ந்துவரும். தோல் உரிந்த இடங்களில் வெள்ளைவெளேரென்று உடம்பு தெரியும். அதற்குள் பாட்டி கொண்டு வந்த மஞ்சளை மேல்லாம் பூசுவார். ஒரே ஒருமுறை லேசாய்த் தொட்டுப் பார்த்திருக்கிறான் இவன். கையெல்லாம் நெளுநெளுவென்று இவனுக்கு என்னவோ போலிருந்தது.


பாட்டி தயாராய்ப் பெரிய பாத்திரம் கொண்டு வருவாள். தாத்தா கத்தியால் கீறி அப்புறமாய்த் துண்டங்களாய்ப் பாத்திரத்தில் நிறைத்து விடுவார். பாட்டி நடுவில் ‘பல்லு தேச்சியா செயா’ என்பாள். இவன் ஞாபகம் வந்து பொட்டலம் எடுத்துப் பல் தேய்க்கலாவான். பல் தேய்த்து, மறைவாய் ஒதுங்கியிருந்து, கால் கழுவி முடிக்கையில் தாத்தா, ‘போகலாமாடே’ என்பார்.


இந்தக் கறியைச் சமைப்பதிலும் தனிப்பக்குவம் வேண்டும். இவனும் எத்தனையோ முறை சாப்பிட்டு இருக்கிறான். ஆனாலும் பாட்டி வைக்கிற கறியிலுள்ள ருசி எதிலுமே வாய்த்ததில்லை. இவனுக்கு வெள்ளைவெளேரென்று, அசப்பில் பஞ்சாட்டம் கிடக்கிற கறியானால் உயிர். பரிமாறுகையில் பாட்டி இவனுக்காய்ப் பார்த்துப் பொறுக்கி வைப்பாள். இந்தக் கறியையே போட்டுப் பிசைந்து சாப்பிடுவான்.


இதே கறியைப் பாளையங்கோட்டையிலும் சாப்பிட்டிருக்கிறான்தான். இதற்கென்றே ஒருவர் ரொம்பவும் தடியாய் வருவார். அவரைப் பார்க்க இவனுக்கு ஏனோ பயமாய் இருக்கும். சனிக்கிழமைதோறும் இந்தக்கறிதான். காலையில் நாலு மணிக்கே அந்த ஆள் வந்து கதவைத் தட்டி ஓலைப்பெட்டியில் தருவார். அம்மா எழுந்து வாங்குவாள். அன்றைக்கெல்லாம் இவனுக்கு சந்தோஷமாய் இருக்கும். ஓயாமல் அடுக்களையோரமே சுத்துவான்.


எதுவுமே தெரியாதவன் போல் அம்மாவிடம் போய், ‘இன்னிக்குப் பன்னிக் கறியா?’ என்பான்.


அம்மா, ‘எறைஞ்சு பேசாதடா’ என்றபடி ஆமான்பாள். கூடவே ‘பன்னிக்கறி என்காதேடா’ என்பாள்.

ஏனென்க, அப்படித்தான் என்பாள். இவன் சந்தேகம் தோன்ற அப்பாவிடம் செல்வான். அப்பா தான் ‘அல்வாக்கறி’ என்று சொல்லித் தந்தார். இவனுக்குக் காரணம் புரியாவிட்டாலும் ‘அல்வாக்கறி’ என்ற வார்த்தை பிடித்துப்போக அதையே சொல்லலானான்.


இன்னமும் ஊர் பஸ் வந்தபாடில்லை. கூட்டம் அப்போதைக்கு அதிகமாயிடுச்சோ என்று சந்தேகம் கொண்டான். யாரிடமாவது கேட்கலாமா என்றவாறு காலடியிலிருந்த பையைத் தூக்கியபடி கீழிறங்கி வந்தான். காக்கி உடையோடு, ‘ராஜபாளையம், ராஜபாளையம்’ என்றிருந்தவரிடம் கேட்கலாமா என்று யோசித்தான். அவரைப் பலமுறை இதே பஸ்ஸ்டாண்டில் பார்த்திருக்கிறான்.

கிட்ட நெருங்கி, ‘துரைச்சாமியாபுரம் பஸ் எப்ப வரும்?’ என்றான்.


‘எந்தத் துரைச்சாமியாபுரம்?’


‘செவகிரி துரைச்சாமியாபுரம்’.


கொஞ்ச நேரம் யோசிப்புடன், ‘வந்திருக்கணுமே… இன்னும் வரலைனா அடுத்த பஸ்தான் பார்க்கணும். அதெல்லாம் வந்தாத்தான் கணக்கு’ என்றபடி, ‘ராஜபாளையம்… ராஜபாளையம்’ போய்விட்டார். இவனுக்குச் சங்கடமாய்த் தோன்றியது. மறுபடியும் வந்து கூரைக்கடியில் நின்றுகொண்டான்.


இவன் நகன்று போயிருந்த சிறுபொழுதில் அந்த இடத்தை இன்னும் இருவர் ஆக்ரமித்திருந்தனர். நகன்று போகச் சொல்லலாமா என்றவன் ஏனோ பேசாமல் ஒதுங்கி நின்றான். ஏதோ நினைத்துக்கொண்டாற்போல் காலருகிலிருந்த பையைத் தொட்டுப் பார்த்தான். ஓரத்தில் வீங்கியபடி அல்வாப் பொட்டலம் கிடந்தது. வடிவேல் தாத்தாவுக்கு அல்வா ரொம்பவும் பிடிக்கும். திருநெல்வேலி அல்வா என்றால் விரும்பித் தின்பார். இதற்காகவே இவன் திருநெல்வேலி வந்து வாங்கி வருவான். எண்ணெய் ஒழுக ஒழுக வெள்ளைக் கண்ணாடித்தாளில் சுருட்டி அப்புறம் காக்கிக் கலர் உறையில் போட்டாலும் எண்ணெய் பையெல்லாம் ஒட்டத்தான் செய்கிறது.

முன்னெல்லாம் இவன் வீடு போய் நுழைந்ததும் பையைத் துழாவுகிற தாத்தாவை இப்பொழுது பார்க்க முடிவதில்லை. ரொம்பவும் மாறித்தான் போனார். அந்த நிகழ்ச்சிக்கப்புறம் அவரிடம் பழைய துடிப்பும் பதைப்பும் வேகமும் கொஞ்சங்கூட இல்லை.


போன முறைதான். இவன் போய் நுழைந்ததும் பையைத் திண்ணையில் வைத்துவிட்டு நடுமுற்றம் தாண்டிக் கூடத்திற்கு வந்தான். ஏதோ கைவேலையாய் இருந்தாள் பாட்டி. இவன் ‘பாட்டி’ என்று போய் நின்றதும் கொஞ்சம் திகைப்புத் தட்டிப் போனாள். பின் இவனை முகம் கழுவி கொள்ள வைத்து, காப்பி தந்து, இவன் காப்பி சாப்பிடுகையில்தான் தாத்தா வந்தார்.

‘வாங்க தாத்தா’ என்றபடிக்கு எழுந்து நின்றான்.


‘என்னடே இப்பத்தான் வர்றியா?’ என்கிற தாத்தாவின் பதிலை எதிர்பார்த்தவனுக்கு தாத்தாவின் கொஞ்ச நேரத் திகைப்பிற்குப்பின், ‘இப்பத்தான் வர்றியா செயா’ என்கிற பதில் வித்தியாசமாயிருந்தது. அதோடு சரி. தாத்தா அதற்கப்புறம் இவன் முன்னால் வரவே பயப்பட்டாற்போல் கூடத்திலேயே இருந்தார். இவன் எழுந்து கூடத்திற்குச் செல்ல, தாத்தா மெல்ல நகன்று திண்ணைக்குத் தாவினார். அதற்குமேல் அவனும் பேசாமலிருந்து விட்டான். இடையிடையே தாத்தாவும் பாட்டியும் அடுக்களையில் ஏதோ குசுகுசுக்கிற மாதிரியான சப்தத்தையே இவனால் கேட்க முடிந்தது.


என்னவென்று கேட்டுவிடுவது என்கிற முடிவில் இவன் ராத்திரி சாப்பிடுகையில் காத்திருக்க, வழக்கமாய்க் கூடவே இருக்கிற பாட்டியை அன்றைக்குக் காணவில்லை. எல்லாம் எடுத்து வைத்துச் சாப்பிடச் சொல்லிவிட்டு திண்ணைக்குப் போய்விட்டாள். இவனுக்கு இது மேலும் சங்கடத்தையே விளைவித்தது. சாப்பிட்டதாய்ப் பெயர் பண்ணிவிட்டுத் திண்ணைக்கு வந்து உட்கார்ந்தான். உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த தாத்தாவும் பாட்டியும் இவன் காலடி கேட்டு எதையோ மறைப்பதுபோல் பேச்சை நிறுத்தியது இவனுக்கு உள்ளூர பயம் தந்தது. தன்னைத் தைரியப்படுத்திக்கொண்டே தான் உட்கார்ந்தான்.


தாத்தா இவனருகில் சங்கடத்துடனே உட்கார்ந்திருப்பது இவனுக்குத் தெரிந்தது. இவன் வெளிப்படையாகவே கேட்டான்.


‘என்ன நடந்திச்சு பாட்டி. ஏன் உம்முன்னு இருக்கிய?’


‘ஒண்ணுமில்லடா. எப்பவும் போலத்தான்…’ என்று சொல்லத் தொடங்கிய பாட்டி அதற்கு மேல் தைரியமற்று, சேலைத்தலைப்பால் வாயைப் பொத்தி மௌனமாய் அழலானாள். கண்ணீர் திரண்டு புரண்டு சுருக்கங்களை நனைத்துப்போனது.


‘என்ன வெசயம் பாட்டி, ஏதும் ரகசியமா? ஒண்ணுமில்லை செயாங்குறீய, பெறவு என்னதுக்கு அழுறீய?’


ஒரு கணம் அழுகையை நிறுத்தியவள், கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டாள். பின் துடிக்கிற உதடுகளைக் கடித்தபடி, ‘பன்னியெல்லாம் செத்துப் போச்சுடா’ என்று சொல்லி உடைந்து அழுதாள்.


இவன் பக்கத்தில் தாத்தாவும் லேசாய் விம்முவது கேட்டு ஆச்சரியப்பட்டான். தாத்தாவுமா? ஆச்சரியம் நிலை கொள்ளாமல் தாத்தாவின் தோளைத் தொட்டு, ‘நீங்களுமா தாத்தா அழுறீய?’ என்றான்.


தாத்தா அதற்காகவே காத்திருந்தாற்போல் ‘ஆசையாட்டு வந்த புள்ளைக்கி கறியடிச்சுப் போடாத பாவியாய்ட்டன்டே…’ என்றபடி பொலபொலவென்று கண்ணீர் உதிர்க்கத் தொடங்கினார்.


தாத்தாவின் நெற்றி நரம்பு இப்பவும் தென்னிக் கொண்டு நெளிந்தது. இவன் மெள்ளத் தாத்தாவை இழுத்து மாரில் சாய்த்துக் கண்களைத் துடைத்து விட்டான். தாத்தா நிறுத்துவதாய்க் காணோம். அவர் விம்மவிம்ம நெற்றி நரம்பு நெளிந்து… இவன் ரொம்பவும் மெல்லிசாய் தாத்தாவின் நெற்றியில் முத்தமிட்டான். அப்படியே ‘அழாதிங்க தாத்தா பன்னிக்கறிக்காட்டு நான் வரல்ல…’ என்றபடி மேலும் மேலும் முத்தமிட்டான். நெளிந்த நரம்பு நளுக்புளுக்கென்று இவன் உதடுகளில் துடித்தது.


இப்ப நினைத்துப் பார்த்தாலும் இவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. உள்ளுக்குள்ளேயே மறுகிப் போகிறான். ‘ஏன் அப்படிச் செய்தோம்’ என்று இவனுக்கு விளங்கவே இல்லை. தாத்தாவைத் தவிர வேறு யாரையும் அப்படி முத்தமிடவும் இவனால் முடியாது என்பதும் இவனுக்குத் தெரியும். தென்னிக்கொண்டு நெளிகிற நரம்பு இன்னமும் இவன் உதட்டில் ஊர்வதாய் உணர்ந்தான். பஸ்ஸ்டாண்ட் முழுசாய் வெயிலில் படுத்துக் கிடந்தது. இன்னும் ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டும். இவனுக்கு எரிச்சல் மேலிட அப்படியே ஓரமாய் சுவரில் சாய்ந்து, பையை இடுக்கியபடி உட்கார்ந்து கொண்டே தூங்கத் தொடங்கினான்.



*

(நான் எழுதி வெளியான முதல் கதை. 1987ல் எஸ். வி. ராஜதுரை நடத்திய ‘இனி’ இதழில் வெளியானது)







0 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page