top of page

அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

Updated: Sep 26, 2023சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே இருக்கிறது.


இருப்பதெல்லாம் நரகத்தில். அதனால், நரகத்தைக் கற்பனை செய்வது எளிது. கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட பூமியை நினைத்துக் கொண்டால் போதும். உங்களுக்கு நரகம் கிடைத்து விடும். நரகத்தில் எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ். எண்ணெய்க் கொப்பரை, காதுகளில் ஊற்றப்படும் உருக்கிய ஈயம், ராட்சத சூட்டுக் கோல்… இப்படி, எல்லாமே மீ வகை. நரகம் என்ற கற்பனையைக் சிறிது நேரம் கூடுதலாக யோசித்தால், ‘எந்த உலகின் நரகம், இந்த பூமி!’ என்றே நீங்களும் கேட்பீர்கள்.


சொர்க்கம் அப்படி அல்ல. அங்கே அணுவும் அசைவதில்லை.


ஒன்றுமே நடக்காததைக் கற்பனை செய்வது கடினம். வெறுமையை அல்லது வெற்றிடத்தைக் கற்பனை செய்வது எப்படி? சொர்க்கத்தில் எந்த மெய்ப்பாட்டிற்கும் வழியில்லை. மெய்ப்பாடு இல்லை என்பதால், நாடகம் இல்லை; நாடகம் இல்லை என்றால் கவித்துவம் இல்லை.

எதையாவது கற்பனை செய்வதற்கு, இந்த மூன்று விஷயங்களும் அத்தியாவசியம் – மெய்ப்பாடு, நாடகம், கவித்துவம். ஆனால், இம்மூன்றும் அற்ற சொர்க்கத்தை நம் ஆட்களும் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதால் எனக்கு அதன் மீது மரியாதை உண்டு. மற்றபடி, சொர்க்கத்தை நான் நம்பவில்லை. என்னைப் பொறுத்தவரை, ‘சொர்க்கம், கற்பனையை மீறிய கற்பனை’.


சொர்க்கம் பற்றி சொல்லப்படும் தகவல்களை நினைவுபடுத்திப் பாருங்கள். அங்கே என்ன நடக்கும் என்பதை யாரும் நமக்குச் சொல்வதில்லை. அல்லது சொர்க்கம் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகம் கூட நம்மிடம் இல்லை. புராணங்களில் அளந்து விடப்படும் தேவலோகத்தை சொர்க்கத்துடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். அதில் நடக்கும் கதைகளையெல்லாம் கேட்டிருந்தீர்கள் என்றால், உங்களுக்கே தெரிந்திருக்கும். அது, கொஞ்சம் குளிரூட்டப்பட்ட நரகம், அவ்வளவுதான். நான் கேட்பது சொர்க்கத்தைப் பற்றி.


மொத்தத்தில், சொர்க்கம் குறித்து நமக்கு விளக்குவார் இல்லை. சொர்க்கம் பற்றிய கற்பனை அனைத்தும் சொர்க்கத்தின் எல்லை வரை மட்டுமே செல்கின்றன. அங்கே நாம் நிறுத்தப்படுகிறோம். சொர்க்க வாசல்! வாசலைக் கடந்து சென்று பார்ப்பதற்கு வழியில்லை. அதுவொரு புதிர். அந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அங்கே நமது மொழி கூட செல்லுபடியாகுமா என்பது சந்தேகமே! ‘அந்தப் பக்கம்?’, ‘என்ன இருக்கிறது?’ என்ற சொற்றொடர்களுக்கு சொர்க்கத்தில் அர்த்தமுண்டா என்றே தெரியவில்லை.


சொர்க்கம் என்ற கற்பனையின் மீது நான் மரியாதையை வளர்த்துக் கொண்டதற்கு இந்த ‘சொர்க்க வாசல்’ கதைகளே காரணம். நான் உங்களுக்குச் சொல்லப்போகிற கதை, வெறும் சொர்க்க வாசல் கதை மட்டுமல்ல; அது, ஜனநாயகப் பண்புகள் தொடர்பான தமிழ் விவாதத்தையும் உள்ளடக்கியிருந்தது. கற்பனையை மீறிய கற்பனையே என்றாலும், அதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும், சமத்துவம் இருக்க வேண்டும் என்ற உந்துதலும் விவாதமுமே சொர்க்க வாசல் கதைகளை நோக்கி என்னை ஈர்க்கின்றன.


*


தமிழகத்து நோன்புகளில் நயினார் நோன்பும் ஒன்று. அதில், அன்ன ஆகாரமின்றி சித்திரபுத்திர நயினார் கதையைப் படிப்பது வழக்கம். அப்படிச் செய்தால், இறந்தபின் சொர்க்க வாசல் உங்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது ஐதீகம். சொர்க்க லோகத்திற்கான கடவுச்சீட்டு என்று வைத்துக் கொள்ளுங்கள். (நயினார் நோன்பு குறித்த மேலதிகத் தகவல்களுக்கு என்னுடைய ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ புத்தகத்திலுள்ள ‘விலக்கப்பட்ட கற்பனையும் புனிதப் பனுவல்களும்’ என்ற கட்டுரையைப் படிக்கலாம்.)


தற்காலத்தில் இந்தப் பிராப்தம் தமிழகத்தில் யாருக்கும் கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், தமிழகத்தில் நயினார் நோன்பு வழக்கொழிந்து போயிற்று. அப்படியானால், இப்பொழுதெல்லாம் சொர்க்கத்திற்குக் கடவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை அல்லது எல்லோரும் பெரியார் புண்ணியத்தில் நாத்திகராகிவிட்டனர் என்று நீங்கள் முடிவு செய்யவேண்டும். இன்னொரு கோணத்தில், கள்ளத்தோணியிலோ அல்லது கள்ளச்சீட்டிலோ சொர்க்கத்திற்குள் நுழைய முடிகிறது என்பதுகூட உண்மையாக இருக்கலாம். எப்படியோ, அந்தப் பழைய நயினார் நோன்பு முறை இன்று இல்லை என்பது மட்டும் உண்மை.


நயினார் நோன்பை சித்திரா பௌர்ணமி அன்று கடைபிடிக்கலாம். அதற்காகச் சொல்லப்படும் சம்பிரதாயங்கள் இலகுவானவை. யாரெல்லாம் நோற்க விரும்புகிறவர்களோ அவர்கள் மட்டும் அருகிலுள்ள பிள்ளையார் கோவிலில் கூடவேண்டும். அதாவது, யாருக்கெல்லாம் கற்பனையை மீறிய கற்பனை உலகத்திற்கு (சொர்க்கம்) கடவுச்சீட்டு வேண்டுமோ அவர்கள் மட்டும் வாருங்கள். இந்தக் கூடுகைக்கு நயினார் ‘கதை படித்தல்’ என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள். இனி, சித்திரபுத்திர நயினார் கதையைப் படித்து சிந்தியுங்கள் என்பதுதான் சம்பிரதாயம்.

இதற்காக சித்திரபுத்திர நயினார் கதையைப் பாடலாக எழுதி அச்சிட்டு வைத்திருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தை உண்ணாவிரதமிருந்து வாசித்து, சிந்தித்தால் சொர்க்க வாசல் திறக்கும் என்பது நாட்டுப்புற நம்பிக்கை.


இந்த இடத்தில் உங்களுக்குச் சந்தேகம் வருவது இயல்பு. ‘நயினார் கதையில் அப்படி என்ன விசேஷம்? அது என்ன அவ்வளவு முக்கியமான கதையா?’ என்றெல்லாம் உங்களுக்குத் தோன்றலாம். இதையெல்லாம்கூட விட்டுவிடலாம். அது எப்படி சொர்க்கத்திற்கான சாவியைப் புத்தகத்தில் கொண்டுபோய் வைக்கலாம்? அப்படியானால், சொர்க்கம் பாரபட்சம் உடையதா? எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் யாருக்கும் சொர்க்க வாசல் திறக்காதா? இந்தக் கேள்விகளை நாம் உதாசீனப்படுத்த முடியாது. சொர்க்கம் எல்லோருக்குமானதா அல்லது (எழுதப்படிக்கத் தெரிந்த) ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானதா என்ற கேள்விக்கு நாம் பதில் கண்டுபிடித்தே ஆகவேண்டும்.

இந்தக் கேள்விகளை நாம் மட்டுமல்ல, அந்தக் காலத்திலேயே நிறைய பேர் கேட்டிருக்க வேண்டும். சொர்க்க வாசலின் சாவி புத்தகத்தில் இருக்கிறது என்றால், அது எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்குச் செய்கிற அநீதி இல்லையா?


இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக, நாட்டுப்புறம் ஓர் உத்தியைக் கண்டுபிடித்திருக்கிறது. நயினார் நோன்பு என்ன சொல்கிறது? என் கதையை வாசித்து, சிந்திக்கிறவர்களுக்கு சொர்க்க வாசல் திறக்கும். இதில், புத்தகத்தை வாசிப்பதுதானே சிக்கல்? அதற்கு தனியே ஓர் ஏற்பாட்டை செய்தால் ஆயிற்று. இப்படித்தான் ‘கதை படிக்கிற’ கலைஞர்கள் உருவாக்கப்பட்டார்கள். இவர்களுக்குப் பெரிய எழுத்து கதைப் புத்தகங்களை வாசிப்பது மட்டும்தான் வேலை. நயினார் நோன்பின்போது ஒரு முழுப் பகலும், இறந்த வீடுகளில் இரவு முழுவதும் அவர்களுக்குக் கதை படிக்கிற வேலை இருந்தது.


‘கதை படிக்கிறவர்’ புண்ணியத்தில், புத்தகம் வாசிப்பதும் அதையே சிந்திப்பதும் வேறு வேறு காரியமாக மாறியது. வாசிப்பதற்குக் கலைஞர்கள் வந்தபின், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்கூட புத்தகங்களைச் சிந்திக்க முடியும்.


இதன்மூலம் வாசித்தல் என்பது வெறும் தொழில்நுட்ப அறிவு என்று முடிவாகிறது. எழுத்தறிவு பெற்றவர்களால் புத்தகங்களை வாசிக்க முடியும். அவ்வளவுதான். ஆனால், அதைச் சிந்திப்பதற்கு எழுத்தறிவு ஒரு அளவுகோல் அல்ல. யாராலும் சிந்திக்கமுடியும்.


கதை படிக்கிறவரின் வேலை, புத்தகங்களை ஒலி வடிவில் மாற்றித் தருவது. நயினார் நோன்பின்போது சித்திரபுத்திர நயினார் கதைப்புத்தகத்தை ஒலிப்புத்தகமாக மாற்றியே நோன்பிருந்தார்கள் என்பதுதான் வரலாறு. அந்த காலத்திலேயே தமிழில் ஒலிப்புத்தகங்கள் இருந்தன! நம் முன்னோர்கள்….


*


நோன்புக்காக இப்படியொரு ‘கதை படிக்கிறவரை’ ஒப்பந்தம் செய்வது மிக அவசியம். அவருக்குத்தான் வாசிக்கத் தெரிகிறது; அவரிடம்தான் புத்தகங்களும் இருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் கள ஆய்வு செய்தபோது, இவர்களுக்கு வழங்கப்பட்ட நாட்கூலி நூற்றைம்பது ரூபாய்.


‘கதை படிக்கிறவர்’ காலையிலேயே பிள்ளையார் கோவிலுக்கு வந்துவிடுகிறார். நோற்க விரும்பும் ஒவ்வொருவரும் தத்தம் வீட்டிலிருந்து, முறத்தில் உப்பு, புளி, மிளகாய், ஒரு படி நெல் கொண்டு வந்து வைக்கிறார்கள். பிள்ளையார் கோவில் பூசாரி ஒரு பக்கம் பொங்கல் இடுவதற்கான தயாரிப்புகளில் இறங்குகிறார். இன்னொரு பக்கம், நோன்பு ஆரம்பமாகிறது.

கதை படிக்கிறவரின் வேலை அந்தப் புத்தகத்தை வாசிப்பது மட்டும்தான். கதாகாலட்சேபம் மாதிரியோ, உபந்நியாசம் போலவோ, வில்லுப்பாட்டு போலவோ அவர் எந்த விளக்கமும் சொல்வது இல்லை. அதே நேரம், வாசிப்பு, இயந்திரகதியிலும் நடக்கவில்லை.


கதை கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் அவரை மறிக்கலாம். மறித்து, கதை குறித்து அபிப்பிராயங்களைச் சொல்லலாம். விளங்காத இடங்களுக்குச் சந்தேகம் கேட்கலாம். ஒத்துப்போகாத தருணங்களை ஆட்சேபிக்கலாம். ஆகா என்கலாம்; ஓகோ என்கலாம்; அதானே என்றுகூட ஆமோதிக்கலாம். அதே நேரம் யாராவது ஒருவர் சொல்லும் கருத்தில் உடன்பாடு இல்லையென்றால் மற்றவர்கள் உடனடியாக மறுக்கவும் செய்யலாம். இப்படியே அங்கேயொரு விவாதம் நடக்கிறது.


நோன்பில் சொல்லப்படும் ‘சிந்தித்தல்’ இப்படித்தான் அரங்கேறுகிறது. இப்படியே விவாதம் போய்க் கொண்டிருக்கிற வேளையில் யாராவது ஒருவர், ‘சரி, சரி கதையை வாசிக்கட்டும்’ என்று ஞாபகப்படுத்துகிறார்கள். கதை படிக்கிறவர் மீண்டும் புத்தகத்தை ஒலிப்புத்தகமாக மாற்றத் தொடங்குகிறார்.


சித்திரபுத்திர நயினார் கதை என்ற பெரிய எழுத்துப் புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று, சித்திரபுத்திர நாயனாரின் வாழ்க்கைச் சித்திரம்; இன்னொன்று, அமராவதி என்ற பெண்ணின் கதை.


சித்திரபுத்திர நயினார் கதையின் ஆரம்பமே, நயினார் நோன்பின் முக்கியத்துவத்தை விளக்குவதாகத்தான் அமைந்திருக்கிறது. நோன்பு கொள்கிறவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள், கொள்ளாதவர்கள் எவ்வளவு கேடுகெட்டவர்கள்; கொள்கிறவர்களுக்கு என்னென்ன நன்மைகள் வாய்க்கப்பெறும், மற்றவருக்கு என்னென்ன தீமைகள் என்று ஏறக்குறைய வெளித்தெரியாத மிரட்டலுடன்தான் அந்தப் பகுதி எழுதப்பட்டுள்ளது. நயினார் நோன்பிருந்து இப்பிரதியை வாசிப்பவர்களுக்கு சொர்க்கம் கிட்டும் என்ற உத்தரவாதமும் தரப்படுகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சடங்காக மாற்றப்படும் எல்லா பிரதிகளும் காட்டும் வாய்ஜாலம்தான் இது.

ஆனால், இரண்டாவதாக சொல்லப்படும் ‘அமராவதி என்ற பெண்ணின் கதை’ சுவாரஸ்யமானது. இந்தக் கதையில், சித்திரபுத்திர நயினார் கதைப் பிரதி தன்னைத்தானே விமர்சித்துக் கொள்கிறது. தான் வலியுறுத்தும் நோன்பையேகூட இந்தக் கதையின் மூலம் விவாதத்திற்கு உட்படுத்துகிறது. நயினார் நோன்பைக் கடைபிடிக்காதவர்களுக்கு என்ன கேடுகள் நிகழும் என்பதையே இந்தக் கதை சொல்கிறது என்றாலும், கடைபிடிக்காத பெண்ணாகச் சித்தரிக்கப்படும் அமராவதியின் பாத்திர வார்ப்பு, நோன்பையே கட்டுடைத்து விடுகிற தன்மையைக் கொண்டது.


நோன்பு என்பதை, பிரதியை வாசிப்பதும் சிந்திப்பதும் என்று சொல்கிற பட்சத்தில், அமராவதி கதையில்தான் அந்தச் சிந்தனை நடக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் பிசகினாலும், சித்திரபுத்திரனுக்கே எதிராகத் திரும்பக்கூடிய பிரதி இது.


அந்தப் பிரதியில் சொல்லப்படும் அமராவதியின் கதை இது:


செட்டியம்மை என்றும் அழைக்கப்படும் அமராவதி ஒரு சீமாட்டி. அவளிடம் கணக்கிட முடியாத செல்வம் இருந்தது. சுற்றம் சூழ வாழ்ந்து வந்தாள். அவளது ஒரே பொழுதுபோக்கு, தானதருமங்கள் செய்வது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதில் அவளுக்கு நிகர் யாருமில்லை. பிரச்சினை என்ன என்றால், நயினார் நோன்பு பற்றி அவளுக்குத் துளி அறிவும் இல்லை.


அவளுடைய வள்ளல் குணம் ஏழேழு உலகங்களுக்கும் பரவியது என்றார்கள். அப்படியானால் சித்திரபுத்திரனுக்கும் சொல்லியிருப்பார்கள், இல்லையா? அவனுக்கானால் ஆச்சரியம். இப்படியொரு பெண்ணா? அவளுடைய புண்ணியக்கணக்கை பார்க்க வேண்டுமே என்றான். அது ஒரு நீண்ட பட்டியல். அதைச் செய்தாள், இதைச் செய்தாள் என்று நுணுக்கி நுணுக்கி எழுதி வைத்திருந்தார்கள். எல்லாமே தருமங்கள்.


சித்திரபுத்திரனின் கண்கள் அப்பட்டியலில் எங்காவது நோன்பிருந்த கணக்கு இருக்கிறதா என்று சலிக்க ஆரம்பித்தன. ஏதாவது ஒன்று இருந்தால் போதும் என்று நினைத்தான். உடனடியாக சொர்க்கத்திற்கு அனுப்பிவிடலாம். அப்படி ஒரு குறிப்பும் இல்லை.


வந்ததே ஆத்திரம். இவளையா லோகத்தார் கொண்டாடுகிறார்கள்? இது என்ன அநியாயம்? இவளை உடனடியாக மேலே அழைத்துப் பாடம் புகட்ட வேண்டும். அது ஒட்டுமொத்த உலகத்துக்குமான பாடமாக இருக்கும் என்று முடிவு செய்தான் சித்திரபுத்திரன்.


உடனடியாக, எம தூதர்கள் அனுப்பப்பட்டனர். அமராவதியின் உயிரைப் பறிப்பது அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை. ஆனால், நடந்ததோ தலைகீழே. அமராவதியின் கொடைத் தன்மையை நேரில் கண்ட எமதூதர்களே மனங்கலங்கினர்; இவளையா கொல்வது என்று வெறுங்கையாய் திரும்பிவந்தனர்.


சித்திரபுத்திரனின் கோபம் உச்சத்திற்குச் சென்றது. வேறு இரு தூதர்களை அழைத்தான். இவர்கள் எதற்கும் அஞ்சாத மாபாதகர்கள். ‘நீங்கள் போய் இழுத்து வாருங்கள்’ என்றான்.

இவ்விருவரும் அமராவதியை மாடு முட்டி சாகடிக்கலாம் என்று திட்டமிட்டனர். அதன்படி ஒரு தூதன் மாட்டின் கொம்பில் போய் உட்கார்ந்து கொண்டான். இப்போது மாடு மிரண்டது. யாரைக் குத்திக் கொல்லலாம் என்று பார்த்தது. அந்த நேரம் பார்த்து, மிகச்சரியாக அமராவதி மாட்டின் அருகில் வந்து கொண்டிருந்தாள்.


மாடு மூர்க்கமாய் அவளை நோக்கிப் பாய்கிறது. அமராவதி அதைப் பார்க்கிறாள். இத்தனை ஆக்ரோஷமாய் ஒரு பசு வருகிறது என்றால், அதற்கு சரிவர உணவிடவில்லை என்றல்லவா அர்த்தம். ‘என் தொழுவத்து மாட்டிற்கு உணவளிக்காமல் விட்டேனா?’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அடுத்த கணம் அவள் உயிரைவிட்டாள். சொந்த மாட்டிற்கு உணவிடாத வள்ளல், என்ன வள்ளல்? அவளைக் கொல்லக் காத்திருந்த பசுவும், எமதூதர்களும் ‘ஙே’ என்று விழித்தனர். பழம் நழுவி பாலில் விழுவது போல, அமராவதி நழுவி எமலோகத்தில் விழுந்தாள். இத்தனை எளிதாக அவளைக் கொன்றிருக்க முடியும் என்று அவர்கள் நம்பவில்லை.


எப்படியோ, அமராவதி இறந்தாள். தூதர்கள் மகிழ்ந்தனர். உடனடியாக எமலோகம் அழைத்து வந்தனர். அவளைக் கண்ட சித்திரபுத்திரனுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டு, அவளை நரகத்தில் அடைக்கச் சொன்னான். சொர்க்கம் எதிர்பார்த்து வந்த அமராவதிக்கு அதிர்ச்சி.

‘சரி, எமலோகத்து வரவு செலவுகள் நமக்கெங்கே தெரியும்? நாம் செய்த தானதருமங்கள் போதவில்லை போலும்’ என்று மனதிற்குள் சமாதானம் சொன்னாள். எனவே எல்லா தண்டனைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள். இதோ முடிந்துவிடும், அதோ முடிந்துவிடும். இன்றைக்கு சொர்க்கத்துக்கு அனுப்புவார்கள். நாளைக்கு அனுப்புவார்கள் என்று இருந்தவளுக்கு, நாளுக்கு நாள் தண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்தது கண்டு சந்தேகம் வந்தது. தனக்கு மட்டுமே இப்படி விசேஷ தண்டனைகள் தரப்படுவதன் காரணம் என்ன? அமராவதி நேரடியாகவே கேட்டு விட்டாள்.


‘சித்திரபுத்திரனே, நான் செய்த தானதருமங்கள் பத்தலையா?’


‘என்ன பத்தலையா?’


‘எனக்கு மட்டும் ஏன் இந்த நரக வேதனை? நான் வாழ்நாள் முழுவதும் தானங்கள் செய்தேனே! அதில் ஒன்று கூடவா என்னைக் காப்பாற்றவில்லை? சொர்க்கத்திற்குள் செல்ல முடியாத பாவியா நான்?’


‘தானதருமங்கள் செய்தால் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்று யார் சொன்னது?’


‘அதுதானே உலக வழக்கம்!’


‘அமராவதியின் வழக்கம் என்று சொல். உலக வழக்கம் வேறு மாதிரி.’ என்ற சித்திரபுத்திரன் கடைசியில் உண்மையைப் போட்டு உடைத்தான்.


‘என்னை நினைத்து ஒரு நாளும் நீ நோன்பிருக்கவில்லையே, ஏன்?’


*


நான் கள ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, கதையை இந்த இடத்தில் நிறுத்தினார்கள். நிறுத்தி,


‘இது அநியாயம் இல்லையா?’


இந்த இடைமறித்தல் எல்லோருக்குமே தேவைப்பட்டது. கை கால்களை நீட்டி நெட்டி முறித்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை. ஐந்து காசுக்கு விற்கப்படும் ‘ஆரஞ்ச்’ மிட்டாயை வாயிலிட்டு குதப்பினார்கள். அப்புறம் மெல்ல மெல்ல ஒவ்வொருவராய் பேச ஆரம்பித்தனர்.


‘சித்திரபுத்திரனுக்கு என்ன அப்படியொரு கர்வம்? அந்த அம்மா, வேணும்னேவா இருந்துச்சி. அதுதான் எனக்கு யாருமே சொல்லலைனு சொல்லுதே. பின்ன எதுக்கு இந்தக் கர்வம்?’


‘சாமிகள்ல சிலது, தலக்கனம் ஏறிப்போயிதான நிக்கி?’


‘அமராவதிய அப்படி பண்ணியிருக்க வேணாம்.’


‘ஊர்ல எத்தன திருடன் இருக்கான். அவனுக்கெல்லாம் சாவு வராது. இது மாதிரி ஆட்களதான் அள்ளிட்டு போவாக.’


‘அவ எவ்வளவு தானம் பண்ணியிருந்தா, உயிரப் பறிக்க வந்தவனே முடியலனு போயிருப்பான்?’


‘அப்பவே, சித்திரபுத்திரனுக்கு தெரிஞ்சிருக்க வேணாவா? இவ சாதாரண பொம்பள இல்ல… கொடையில் மிஞ்சினவ…’


‘அவளும், சித்திரபுத்திரன கும்பிட்டிருக்கலாம்…’


‘அவளுக்குத் தெரிஞ்சிருந்தா, மாட்டேன்னா சொல்லப்போறா…?’


‘அவ தானம் பண்ற விஷயத்ததான் விலாவரியா எழுதியிருக்கே… யார் யாருக்கு செஞ்சிருக்கா? என்னென்ன செஞ்சிருக்கா? எல்லாந்தான் நோட்ல எழுதியிருக்கே…’


‘பின்ன என்ன கோவம் சித்திரபுத்திரனுக்கு?’


‘சாமிக எதுக்கு கோவப்படும், சிரிக்கும்னு நாம கண்டமா?’


‘கர்வம்தான். என்னைய கலந்துக்காம, நீ எப்படி சொர்க்கத்துக்கு போவனு பாக்குறேன்…’


இப்படியே ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டிருந்த பொழுதுதான் அந்த வயதான பெண் இப்படிச் சொன்னது: ‘அவஞ் செஞ்சதுல என்ன தப்பு? அவதான் காசிருக்குற தைரியத்துல இருக்கான்னா, எல்லாரும் அப்படி இருக்க முடியுமா? சொர்க்கம்னு வந்துட்டா அது எல்லாருக்கும் பொதுதானே! துட்டு உள்ளவன் தானம் பண்ணி போயிரலாம்னா, கஞ்சிக்கு செத்த நீங்களும் நானும் என்ன பண்றது? இருக்கிறவ தானம் பண்ணலாம்; இல்லாதவன்? அப்ப, அது சரியில்லல்ல. நோன்பு புடிக்கிறதுக்கு ஏழை, பணக்காரன் வித்தியாசம் கெடையாது. சொர்க்கம்னு வந்துட்டா, அதுக்கு ஒரு வழிதான் இருக்கனும். ஏழைக்கொரு வழி, பணக்காரனுக்கு ஒரு வழியா?’


அந்தச் சபை மீண்டும் அமைதியானது.


‘அதான் முத்தம்மா போட்டு உடச்சிட்டால்ல. கதய படிச்சு முடிங்க’. அந்தப் பெண்ணின் பெயர் முத்தம்மா என்று தெரிந்து கொண்டேன்.


*


அன்றைய கள ஆய்வுக்குப் பின் நான் சித்திரபுத்திர நயினார் கதையைப் பார்க்கும் பார்வையே மாறிப்போனது. தமிழியல் என்ற பெயரில், இக்கதை சமணப்பிரதியா பெளத்தப்பிரதியா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவர்களை நினைத்து எனக்கு சிரிப்பாய் வந்தது.


இல்லாத ஒன்றில்கூட (சொர்க்கம்), வெறும் கற்பனையான ஒன்றில்கூட எல்லோருக்கும் பொதுவான விதிமுறைகள் சொல்லப்பட வேண்டும் என்ற கறார்தன்மை எனக்கு வியப்பையே அளித்தது. ‘பொது’ என்ற கருத்தாக்கத்தின் இன்னொரு பரிணாமத்தை நான் அன்றைக்கு விளங்கிக்கொண்டேன்.

அத்தோடு மட்டுமல்லாது, இந்த நாட்டுப்புற வழக்கம் எனக்கு வேறு சில விஷயங்களையும் துலக்கிக் காட்டியது.


பிரதிகளை வாசிப்பது வேறு; சிந்திப்பது வேறு. (பிரதிக்குள் எதுவும் பொதிந்து வைக்கப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய உண்மை. வாசித்து, சிந்திக்கும்போதே ஒவ்வொரு பிரதியிலும் அர்த்தம் உருவாகிறது.)


வாசிப்பது, கைத்தொழில். சிந்திப்பது, அரசியல். (இன்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் ‘வாசிப்பின்பம் வழங்கும் எழுத்து’ என்பதுதான் எத்தனை அபத்தம். வாசிப்பின்பம் என்பது ஒரு பிரதி காட்டும் ஜாலம் மட்டுமே. அதில் கணித சூத்திரம் கடந்து எதுவும் இல்லை. இந்த ஜாலத்தை நிகழ்த்துவதற்கு மனிதன் தேவையில்லை. ஓர் இயந்திரத்தால்கூட தீவிர வாசிப்பின்பம் நல்கும் எழுத்தை எழுத முடியும்.)


தன்னையே கட்டுடைத்துக்கொள்கிற பிரதியே சிந்திக்க வைக்கிறது. (சித்திரபுத்திர நயினார் கதைப்பாடலில் இடம்பெறும் ‘அமராவதி கதை’போல, தன்னையே தலைகீழாக்கும் பகுதிகள் கொண்ட பிரதியே, அரசியல் பிரதி. அந்த வகையில் ஒரு பிரதி, தன்னை மீறிய உரையாடலை உருவாக்க வேண்டும். அந்த உரையாடல், அப்பிரதியையே கட்டுடைக்கும் தன்மை கொண்டிருக்க வேண்டும்). தன்னையே குலைத்துக்கொள்கிற பிரதியே சிந்திக்கும் பிரதியாகிறது.


Comments


bottom of page